நண்பன் – திரைவிமர்சனம்

அந்தா இந்தான்னு நண்பன் படத்தப் பாத்தாச்சு. சரி. ரொம்பப் பேச்ச வளக்காம நம்ம விமர்சனத்துக்குள்ள குதிப்போம்.

நண்பன் படம் 3இடியட்ஸ்-ங்குற இந்திப் படத்தோட தமிழ்ப் பதிப்புன்னு எல்லாருக்கும் தெரியும். நான் 3இடியட்ஸ் படம் வர்ரதுக்கு முன்னாடியே அதோட மூலமான புத்தகத்தையும் படிச்சிருக்கேன்.

புத்தகம் எனக்குப் பிடிச்சிருந்தது. அதுனால இந்திப் படத்தையும் பாத்தேன். அதுவும் பிடிச்சிருந்தது. குறிப்பா அமீர்கானின் நடிப்பு + திரைக்கதை.

தமிழ்ல மொதல்ல யார் கதாநாயகன்னு பிரச்சனை. சிவாஜி-எம்.ஜி.ஆர், கமல்-ரஜினி மாதிரி சூர்யா-விஜய் சண்டை. கடைசில விஜய் நடிச்சிருக்காரு. ஷங்கர் இயக்கீருக்காரு.

இந்தப் படம் பாக்குறதுக்கு முன்னாடி கடந்த ரெண்டு மூனு ஷங்கர் படங்கள் எனக்குப் பிடிக்கலை. ஒரு மாதிரி அலுப்புத்தட்டுற மாதிரியே இருந்தது. திரும்பத் திரும்ப மலைய பெயிண்ட் அடிக்கிறது. ரோட்டைப் பெயிண்ட் அடிக்கிறது. ஆனா நல்ல ஆழமான கதை இல்ல. விஜய் படங்கள் கன்னாபின்னா மசாலாவாகி ஒரு அலர்ஜி உண்டானதும் உண்மை.

இதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு விமர்சனத்தைப் பண்ணனுமே. சரி. முழு விமர்சனமா பண்ணாம பிடிச்சது பிடிக்காததுன்னு பிரிச்சி எழுதீர்ரேன். அவங்கவங்களுக்குப் பிடிச்சத எடுத்துக்கோங்க. 🙂

பிடிச்சது
1. எல்லாருமே பொருத்தமா நடிச்சிருக்காங்க. குறிப்பா ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஸ்ரீகாந்துக்கு அப்பாவா நடிச்சவரு ரொம்பவே நல்லா கலக்கீருக்காங்க.

2. விஜய், ஒங்க படங்கள் நடுநடுவுல டீவியில வந்தாக்கூட மாத்தீருவேன். ஒங்க அலட்டல் நடிப்பு பிடிக்காமத்தான். ஆனா இந்தப் படத்துக்கு என்ன வேணுமோ அதச் சரியா செஞ்சிருக்கீங்க. கொஞ்ச நாளைக்கு மசாலாவை விட்டு வெளிய வாங்களேன். அடுத்த ரெண்டு படங்களையும் நெனச்சா பயமாத்தான் இருக்கு. துப்பாக்கிதானே அடுத்தது? ஷங்கர் சரியாத்தான் சொல்லீருக்காரு. விஜயைப் பிடிக்காதவங்களுக்கும் இந்தப் படத்துல பிடிக்கும்னு. ஏன் அப்படி? விஜயைப் பிடிக்காதவங்களுக்கு என்னென்ன காரணங்களால பிடிக்காதுன்னு அவருக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. அதுனால அந்தக் காரணங்களையெல்லாம் படத்துல சேக்கவே விடல. இந்த மாதிரி கதைகள் உள்ள படங்கள்ள கொஞ்சம் நடிங்க. ஒங்க ரசிகர்கள் எங்கயும் போக மாட்டாங்க. அதே நேரத்துல நீங்களும் பொது நீரோட்டத்துல கலக்கலாம்.

3. சத்யராஜ், கலக்கீட்டீங்க. பொம்மன் இராணி நல்லாவே பண்ணீருந்தாரு. ஒங்களோட பழைய படங்கள்ள நீங்க நல்லாவே நடிச்சிருந்தீங்க. வயசானப்புறம் கொஞ்சம் பிடிக்காத மாதிரி லூட்டி அடிச்சீங்க. ஆனா இந்தப் படத்துல எல்லாத்துக்கும் சேத்து வெச்சு நல்லா நடிச்சிருக்கீங்க. முகபாவங்கள் அட்டகாசம். பொம்மன் இராணி மொகத்துல ஒரு எரிச்சல்தான் எப்பவும் இருந்தது. ஒங்க மொகத்துல எரிச்சலும் கடுப்பும் கலந்து பொருத்தமா இருந்தது. இனிமே வயசுக்கேத்த பாத்திரங்கள்ள நடிங்களேன். நாங்களும் ரசிப்போம். 🙂

4. ஸ்ரீகாந்த், இது ஒங்க படமா, விஜய் படமான்னு நடுநடுல சந்தேகம் வந்துக்கிட்டேயிருந்தது. இத நீங்க பாராட்டாதான் எடுத்துக்கனும். மூனு பேர்லயும் ஓரளவுக்கு காலேஜ் மாணவர் மாதிரி இருந்தது நீங்கதான். சில காட்சிகள் அட்டகாசம். குறிப்பா அப்பாவோட பேசும் காட்சி. நான் அழலை. ஆனா அழாம இருக்க பாடுபட்டேன். என்னையும் என்ன பண்றன்னு வீட்ல கேட்டுப் படிக்கப் போடல. எங்கப்பாம்மாவுக்குத் தெரிஞ்ச படி செஞ்சாங்க. அதைத் தப்புன்னும் சொல்ல முடியல. அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். கதைப்படி ஒங்க விஷயத்துல ஒங்கப்பாவா நடிச்சவரும் நல்லா நடிச்சு அந்தக் காட்சியை ரொம்ப அழகா கொண்டு வந்துட்டீங்க. எங்கேயும் எப்போதும், வாகை சூடவா படத்தில் சில காட்சிகள், 7ம் அறிவின் ஆரம்பக் காட்சிகளில் இருந்த அழுத்தம் அந்தக் காட்சியில். இளையராஜா ஒரு வாட்டி மலேசியா வாசுதேவன் கிட்ட சொன்னாராம். “நீ நெறைய பாட்டு பாடீருக்க. ஆனா பூங்காற்று திரும்புமா பாட்டு மட்டுமே போதும் நீ யாருன்னு உலகத்துக்குச் சொல்ல”. அது மாதிரி இந்த ஒரு படம் உங்களுக்கு நல்ல படமா அமைஞ்சிருக்கு.

5. ஷங்கர், இந்தப் படம் ஒங்க படம்னு எப்படி தெரியுமா கண்டுபிடிக்க முடியும்? ரெண்டே ரெண்டு பாட்ட வெச்சித்தான். மத்தபடி கதைக்கு என்ன வேணுமோ அதச் செஞ்சிருக்கீங்க. இந்தப் படத்துலயாவது பிரம்மாண்டத்தை விட கதை படத்துக்குத் தேவைன்னு புரிஞ்சதா? அடுத்த படத்துல சுதாரிங்க. இல்லைன்னா மக்கள் சுதாரிச்சுக்குவாங்க.

6. மனோஜ் பரமஹம்சா, காமிராவை எங்கய்யா வெச்சுப் படம் எடுத்தீங்க. அழகான காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் பளிச் பளிச். ஒரு காட்சியில நடுவுல இலியானாவும் மற்ற பெண்களும் வண்ணத்துப்பூச்சி மாதிரி துணியை ஆட்டுறப்போ மேல இருந்து படம் பிடிச்சது அழகு. அதே மாதிரி பாம்பன் பாலம் அட்டகாசம்.

7. சத்யன், உங்க நடிப்பு வழக்கம் போலதான். ஆனா அந்த மேடைப் பேச்சு. சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு. வீட்டுக்கு வந்து ரெண்டு மக்ரூன் போட்டதுக்கு அப்புறந்தான் சரியாச்சு. 🙂 அதே மாதிரி ஒங்க பாத்திரத்தை இன்ன குறிப்பிட்ட இனம்னு காட்டாம பொதுவாக் காட்டீருந்ததும் நல்லாயிருந்தது. இந்த விஷயத்துல இந்திப் படத்து மேல எனக்கு விமர்சனம் இருந்தது. தமிழில் ஷங்கர் அந்தக் குறையைச் சரி செஞ்சிருந்தது நல்லாயிருந்தது.

8. வசனங்கள் நல்லாயிருந்தது. மதன்கார்க்கியின் வகுப்பறை வசனங்கள் நல்லா எல்லாருக்கும் புரியுற மாதிரி இருந்தது.

பிடிக்காதது
1. இந்தப் படத்தோட மிகப்பெரிய பலவீனம் ஹாரிஸ் ஜெயராஜ். அஸ்கலஸ்க பாட்டு கேக்குறப்போ நல்லாயிருக்கு. ஆனா இந்தப் பாட்டெல்லாம் நிக்காது. வந்த வேகத்துலயே போயிரும். 7ம் அறிவுலயும் சொதப்பல். இதுலயும் பெருசா ஒன்னுமில்ல. என்னாச்சு? வெளிநாட்டுப் பாட்டுகளைக் கேக்குறதுக்குப் பதிலா பழைய பாட்டுகளைக் கேளுங்க. நெறைய மெட்டுகள் கிடைக்கும். மெல்லிசை மன்னர் மெட்டுகளை இசைஞானி பாவனையில இசைப்புயலோட இசைக்கோர்ப்போட குடுத்தாலே ஐநூறு அறுநூறு படங்கள் ரொம்பச் சாதாரணமா பண்ணலாம். இதையெல்லாம் நான் சொல்லலாமா?

2. பாடல் காட்சியமைப்புகள். வழக்கமா ஷங்கர் படம்னா ஒவ்வொரு பாட்டோட காட்சியமைப்பும் அப்படி மனசுல நிக்கும். ஆனா இதுல…. ம்ஹூம். ஷங்கர் படங்களோட பாட்டுகளுக்குப் பரம விசிறியா இருந்தவன் நான். என்னால இப்ப ரசிக்க முடியல. கொஞ்சம் மாத்தி யோசிங்க. சற்குணம் மாதிரி இயக்குனர்கள் வெறும் பட்டிக்காட்டை வெச்சுக்கிட்டே அழகழகா பாட்டுகள் குடுக்குறாங்க.

3. இலியானா… என்னம்மா நீ. இப்பிடியா தேஞ்சு தேவட்டையா இருக்குறது. ஏதாச்சும் சாப்புட்டு ஒடம்பத் தேத்தப் பாரும்மா. அவ்வளவுதான் நான் சொல்வேன்.

4. பர்மிய மொழி என்ன மலையாளம் மாதிரி இரிஞ்ஞோ அறிஞ்ஞோ குஞ்ஞுமோன்னு வசம் இப்பத் தேவையா? நாட்டுல என்ன நடக்குதுன்னே ஒங்களுக்கெல்லாம் தெரியாதா?

5. ஷங்கர், ஒங்களுக்குக் கருப்பா இருக்குறவங்க மேல என்ன வெறுப்பு? சிவாஜி படத்துல நீங்க + சுஜாதா கலந்து கட்டுன அந்த அங்கவை சங்கவை நகைச்சுவை வக்கிர உச்சம். அதே மாதிரி திரும்பவும் பண்ணீருக்கீங்களே. கருப்புன்னா ஏதோ அசிங்கம்னே உருவகப் படுத்துற ஒங்களோட மனநிலை குரூரம். கொடூரம்.

6. படம் ரொம்ப நீளம். இந்தியிலும் நீளம்தான். தமிழ்ல கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். விறுவிறுப்பே படத்துல இல்ல. கொஞ்சங்கூட இல்ல. சில நல்ல அழுத்தமான காட்சிகளைத் தவிர மத்த காட்சிகள் சவசவன்னு போகுது. தியேட்டர்ல பாதி கூட நெறையல.

7. ஜீவா, நீங்களும் படத்துல இருக்கீங்கள்ள. ஷங்கருக்கு ஒங்க மேல என்ன ஆத்திரம்னு கேளுங்க. காமிராவ ஒரு குறிப்பிட்ட பக்கத்துல வெச்சு ஒங்களோட வலதுகாது எப்பவோ கிழிஞ்சிருக்குன்னு தெளிவாக் காட்டீட்டாரு. அதுவுமில்லாம நீங்க நடிச்சு நான் திரையங்கத்துல பாக்குற மொதப்படமும் இதுதான். அடுத்த படம் நல்லாப் பண்ணிக்கலாம். கோ படம் ஓடுனதுக்கான காரணங்கள்ள நீங்க ஒரு காரணந்தான்னு புரிஞ்சிருச்சா?

சரி. எல்லாம் சொல்லியாச்சு. படத்தோட வெற்றி எப்படியிருக்கும்னு என்னோட கருத்தைச் சொல்றேன். சுமாரான வெற்றியாக வாய்ப்புள்ளது. மாபெரும் வெற்றீன்னு சொல்லிக்கனும்னு ஆசைன்னா சொல்லிக்கலாம். ஆனா அப்படி ஆகுமான்னு எனக்குத் தோணலை.

ஆனா விஜய் எந்த மாதிரி படங்கள்ள நடிச்சா பொதுமக்களுக்குப் பிடிக்கும்னு இந்தப் படம் தெளிவாச் சொல்லீருச்சு.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to நண்பன் – திரைவிமர்சனம்

  1. படம் நல்ல தான் இருந்தது, இந்தி படத்தைபோலவே. இந்தி படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி பிரதி எடுத்தது போல இருந்தது! சத்யராஜ் பாத்திர படைப்பு மட்டும் கொஞ்சம்மே கொஞ்சம் மாற்றம் போல. ஸ்ரீகாந்த் நடிப்பு அருமை. SJ.சூர்யாவை மறந்தீடீங்கபோல, ஒரு கட்சியானாலும் நல்லா தான் “அப்பா, அப்பான்னு” கதறி இருந்தார்.

    படம் வெற்றிதான்னு நினைக்கறேன்.

    விமர்சனத்துக்கு நன்றி!

  2. மிகச் சரியான விமர்சனம். விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்பு அடக்கி வாசிச்ச மாதிரி இதில் விஜய் அடக்கி வாசித்திருப்பதால் ரசிக்க முடிகிறது. ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மூவரும் சரியாக பொருந்தி நடித்திருக்கிறார்கள். இலியானா அவ்வளவு சுரத்தாக இல்லை. ஒரு சில அபத்தங்கள் ஒரிஜினலிலும் இதிலும் பொது. உதாரணத்துக்கு ALL IS WELL சொன்னால் வயிற்றில் இருக்கும் குழந்தை உதைப்பது

  3. Samudra says:

    நல்ல அழகான விமர்சனம்..எல்லாவற்றையும் அலசியுள்ளீர்கள்..

Leave a reply to Samudra Cancel reply