உடைந்தது எத்தனை சிலம்புகள்?

சிலப்பதிகாரத்துல கண்ணகி வழக்குரைக்கும் காதையில் உடைந்தது எத்தனை சிலம்பு?

இந்தக் கேள்வியக் கேக்கும் போது நமக்கு ரொம்ப லேசாயிருக்குற மாதிரிதான் இருக்கும். ஆனா என்னை ரொம்பவே குழப்பிய கேள்வி. ஒரு உரையில்லை. ரெண்டு உரையில்லை. நாலு உரைகளை ஆராய்ஞ்சு பாத்துட்டேன். ஆனா உறுதியா இதுன்னு எந்த உரையாசிரியரும் குறிப்பிடவே இல்லை. சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவைன்னும் ஒரு நூல். அதையும் பாத்துட்டேன்.

கடைசியில் இளங்கோவடிகள் கிட்டயே கேட்டுரலாம்னு முடிவு பண்ணி அவர் எழுதுன வரிகளைப் புரட்டிப் பாத்தேன். அதுல புரிஞ்சதுதான் இந்தப் பதிவு.

எல்லாருக்கும் புரியனும்ல. அதுனால நம்மளே கணக்குப் போட்டுப் பாத்திருவோம்.

மொத்தம் எத்தனை சிலம்புகள்? நாலு சிலம்புகள். ரெண்டு கண்ணகியோடது. ரெண்டு கோப்பெருந்தேவியோடது.

அதுல கோப்பெருந்தேவியோட ஒரு சிலம்பத்தைத்தான் வஞ்சிப்பத்தன் ஆட்டையப் போட்டது. அது என்னாச்சுன்னு யாருக்குமே தெரியாது. வஞ்சிப்பத்தனோடயே அந்தச் சிலம்பும் காணாமப் போச்சு. சரி. நம்மளும் கழிச்சிக் கட்டீருவோம்.

இப்ப எத்தன சிலம்புகள் மிச்சமிருக்கு? மூன்று சிலம்புகள். யார் யார் கிட்ட அந்த சிலம்புகள் இருக்குன்னு பாக்கலாம்.
#முதல் சிலம்பு கண்ணகி கிட்ட இருக்கு
#ரெண்டாவது சிலம்பு கோவலன் கிட்ட இருக்கு (விற்பதற்காக)
#மூன்றாவது சிலம்பு வஞ்சிப்பத்தன் கிட்ட இருக்கு (இது கோப்பெருந்தேவியின் சிலம்பு)

வஞ்சியின் சூழ்ச்சியால் மேலே சொல்லப்பட்ட மூன்று சிலம்புகள்ள ரெண்டாவது சிலம்பும் மூன்றாவது சிலம்பும் அரண்மனைக்குப் போயிருது.

இப்படி ரெண்டு சிலம்புகள் அரண்மனையில் இருக்க, மிச்சமிருப்பது கண்ணகி அரசவைக்கு வரும் போது கொண்டு வந்த முதல் சிலம்புதன்.

அந்த முதல் சிலம்பத்தைத்தான் ஊர் முழுக்கப் பாக்குது. கண்ணகி ஆவேசத்தோடு நடந்து வரும் போது முதல்ல சிலம்புதான் மக்கள் கண்ணுல படுது. அடுத்து அந்தச் சிலம்பைக் கொண்டு வரும் கண்ணகி கண்ல படுறா.

”செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம் பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்தது”

இது ஊர் மக்களின் கூற்று. சிலம்பு ஒன்றைக் கையில் ஏந்தின்னு இளங்கோ தெளிவாகவே சொல்லியிருக்காரு.

சரி. சிலம்போட கண்ணகி அரண்மனைக்குள்ள போயாச்சு.

தான் யார்னும் வந்த விவரத்தையும் சொல்லீட்டு அடுத்து கண்ணகி சொல்றா, “நல் திறம் படராக் கொற்கை வேந்தே, என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே!”

இதுக்கு என்ன பொருள்? தன்னுடைய காற் சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது எனச் சொன்னாள்.

சொன்னாள். அவ்வளவுதான். உடைச்செல்லாம் காட்டலை. ஆகா இந்தக் கட்டம் வரைக்கும் மூன்று சிலம்புகளும் முழுசாத்தான் இருக்கு.

கண்ணகி சொன்னதும் மன்னன் சும்மாயிருந்தானா? இல்லை. அவனும் சொன்னான். என்ன சொன்னான்?

“எங்களுடைய சிலம்புல இருக்குறது முத்துக்கள் (யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே).”

சொன்னதோட அவன் நிக்கலை. அங்க இருந்த ஒருத்தனைக் கூப்பிட்டு கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைக் கொண்டு வா என்கிறான். அது கைக்கு வந்ததும் அவன் அந்தச் சிலம்பை ஒன்னும் பண்ணல. அப்படியே கண்ணகி முன்னாடி வைக்கிறான். நீதி வழுவா நெடுஞ்செழியன். உன் போல் ஒரு மன்னர் எம் காலத்தில் காணத் தகுமோ!

எடுத்துப் பாத்து கண்ணகியே சோதிச்சு முடிவு பண்ணட்டும்னு விட்டுர்ரான். சிலம்பை விட நீதி பெரியது. அதைத்தான் அவனும் காப்பாத்த விரும்பினான்.

”’யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே; தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப”

அவனே கண்ணகி முன்னால் வைத்தான். வேலைக்காரனை விட்டு வைக்கச் சொல்லலை. ஆக மொத்தத்துல பாண்டியன் நெடுஞ்செழியன் எந்தச் சிலம்பையும் உடைக்கவில்லை.

இதுவரைக்கும் மூன்று சிலம்புகளும் முழுசா இருக்கு. நமக்கும் ஒரு குழப்பமும் இல்லை.

அடுத்த வரியில்தான் சிலம்பு உடையறதப் பத்திச் சொல்றாரு இளங்கோவடிகள்.
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே; தருக
எனத் தந்து தான் முன் வைப்ப
கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே
இந்தக் குறிப்பிட்ட வரிகளில்தான் சிலம்பு உடைக்கப்பட்டதே வருகிறது.

கண்ணகி முன்னாடி இப்ப அந்தச் சிலம்பை வெச்சாச்சு. இப்ப அந்த மூன்று சிலம்புகளும் எங்கங்க இருக்குன்னு பாத்துக்குவோம். கணக்கு விட்டுப் போகக் கூடாதுல்ல.
#முதல் சிலம்பு கண்ணகி கைல. அவளே கொண்டு வந்தா.
#ரெண்டாவது சிலம்பு கண்ணகி முன்னாடி. இதுவும் கண்ணகியோடதுதான். தன் அரசியின் சிலம்புன்னு நெனச்சு பாண்டியன் கண்ணகி முன்னாடி வைக்கிறான்.
#மூன்றாவது சிலம்பு கோப்பெருந்தேவி காலிலோ அல்லது அந்தப்புரத்திலோ இருக்கிறது. ஏன்னா ”தருக” என்று ஆள் விட்டு ஏவித்தான் ரெண்டாவது சிலம்பைக் கொண்டு வந்தான். ஆகையால் அது கோப்பெருந்தேவி காலில் இல்லை.

ஆக மூன்றாவது சிலம்பு இதுவரைக்கும் பத்திரமா எங்கயோ இருக்கு. கோப்பெருந்தேவியோட ரெண்டுசிலம்புகளுமே உடையலை. செம்மை செய்றதுக்காக வந்த ஒரு சிலம்பை வஞ்சிப் பத்தன் ஒளிச்சி வெச்சிக்கிட்டான். இன்னொன்னு கோப்பெருந்தேவியின் அந்தப்புரத்தில் இருக்கு. பின்னாடி அரண்மனையே தீப்பிடிச்சு எரியும் போது அந்தச் சிலம்பும் எரிஞ்சு போயிருக்கலாம்.

அப்போ குழப்பத்தில் இருப்பவை கண்ணகியோட  ரெண்டு சிலம்புகள்தான். அதுல ஒன்று அவள் கையில். இன்னொன்று அவள் முன்னால்.

இளங்கோவடிகளின் வரிகளை நல்லாக் கவனிக்கனும்.

தான் முன் வைப்ப
கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப
இதுதான் அந்த வரிகள்.

அப்படியே அதோட பொருளைப் பாத்தா, “பாண்டியன் அந்தச் சிலம்பைக் கண்ணகி முன் வைக்கவும், கண்ணகி எடுத்து உடைக்க”ன்னு வரும்.

அவன் சிலம்பை எடுத்து வெச்சான். அவ எடுத்து சிலம்பை உடச்சா.

கண்ணகி ரெண்டு சிலம்புகளையும் உடைச்சான்னு சொல்லலை. ஏன்? அவளுடைய கையில் இருக்குற சிலம்பை உடைச்சி மாணிக்கத்தைக் காட்டுவதால கோவலன் நிரபராதின்னு காட்ட முடியாது.

மன்னன் கிட்ட இருக்குற சிலம்புல மாணிக்கம் இருக்குன்னு நிரூபிச்சிட்டாலே மன்னன் தவறு செய்தவன்னு ஆயிரும். ஆகையால் அதைத்தான் கண்ணகி முதலில் உடைத்திருக்க வேண்டும். இன்னொரு விதமாகச் சொன்னால் அதை மட்டுந்தான் கண்ணகி உடைத்திருக்க வேண்டும்.

இன்னொன்றை உடைக்கத் தேவையே வரல. இதுல இருக்குற மாணிக்கத்தப் பாத்ததுமே பாண்டியன் நெடுஞ்செழியன் உயிரை விட்டுர்ரான். மானஸ்தன். (யார் யார் டி.என்.ஏவையெல்லாமோ தூண்டுறாங்க. இவனோட டி.என்.ஏயைத் தூண்டக் கூடாதா?)

இதுக்கப்புறம் சிலம்புக்கு என்னாச்சுன்னு ஒரு வரி கூட எழுதலை இளங்கோ. மதுரை எரியுது. மதுராபுரித் தெய்வம் வருது. கண்ணகி முருகனுடைய மலையான திருச்செங்கோடு போறா. அங்க குன்றக் குரவர்கள் பாக்குறாங்க. அப்ப வானத்துல இருந்து தேர் வருது. அதுல ஏறிப் போறா.

ஆனால் இரண்டு சிலம்புகளை உடைத்தாள் கண்ணகின்னு வெளிப்படையாச் சொல்லவும் இல்லை. அதுக்கான தேவையும் கதையில் இல்லை.

ஆக ஒடஞ்சது கண்ணகியோட ஒரு சிலம்புதான். அதுவும் கோவலன் விக்கிறதுக்காக கொண்டு போன சிலம்பு. கண்ணகி கிட்டயே இருந்த இன்னொரு சிலம்பு கண்ணகியிடமே இருந்ததுன்னு நம்ம நெனச்சுக்கலாம். இது என்னோட கருத்து.

இது தொடர்பா ஒங்க கிட்ட வேற கருத்து இருந்தா தயவு பண்ணிச் சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கிறேன். 🙂

நன்றி,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இலக்கியம், சிலப்பதிகாரம், தமிழ் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

27 Responses to உடைந்தது எத்தனை சிலம்புகள்?

  1. amas32 says:

    அவையில் கோப்பெருந்தேவியின் சிலம்பும் உடைக்கப்ப் பட்டது என்றே நினைத்திருந்தேன். விளக்கத்துக்கு நன்றி 🙂
    amas32

    • anonymous says:

      illeenga ma!
      that was the “karunanidhi” version of chilapathikaaram:)
      But the actual epic talks only of one chilambu broken!

      சினிமாவில், முதல் சிலம்பை பாண்டியன் வாங்கி உடைப்பான், முத்து தெறிக்கும்!
      இரண்டாம் சிலம்பையும் அவனைக் கண்ணகி உடைக்கச் சொல்லுவா! ஆனா இப்போ மாணிக்கம் தெறிக்கும்!

      இதோ இதையும் உடைக்கிறேன்-ன்னு சொல்லி, தன் கைச் சிலம்பையும் உடைப்பா…மாணிக்கமே தெறிக்கும்!

      So in cinema…all 3 chilambus out!
      only 1 remained with poRkollan

      One more movie came in later days…=சிலம்பு!
      பொற்கொல்லனிடம் மிஞ்சிப் போன இந்த ஒத்தைச் சிலம்பைத் தேடிப் போறா மாதிரி ஒரு புனைவுக் கதை….

      ஆனா சொதப்பிருச்சி!
      திரைக் கதை அவ்ளோ சரியில்லை! நேதாஜி டைரக்ஷன்…முரளி, கே.ஆர்.விஜயா எல்லாம் நடிச்சி இருப்பாங்க! எம்.எஸ்.வி இசை…
      நேதாஜி நல்ல கலைஞர் தான்! நல்லாப் பாட்டெல்லாம் எழுதுவாரு! ஆனா படம் ஓடலை!

      அந்தக் கதையை இன்னும் துல்லியமா, விறுவிறுப்பா எடுத்து இருந்திருக்கலாம்!

  2. kavinaya says:

    நல்ல அலசல். உங்க நடையில் படிக்க நல்லாயிருக்கு. நன்றி.

  3. Dhana says:

    ethavathu pratchanaina public propertya erikanumnu indraiya talaimuraiku solli koduthathe Kannagi than!!

    • anonymous says:

      no dhana!
      what abt hanuman or “lord” anjaneya? – wasn’t he the 1st person to cholli koduthufy this public property damage?:)

    • anonymous says:

      illa dhana;
      she didnt burn public property! itz like sepoy mutiny during independence! meerut station burning!

      மொத்த ஊரான மதுரையே எரித்தாள் என்பதெல்லாம் பின்னாளில் dramatic hype!
      மதுரையே எரிச்சா, சாம்பல் மேடா-ல்ல போயிருக்கும்?

      ஆனா அடுத்த நாளே, பாண்டியனின் புள்ள, வெற்றிவேல் செழியன், மக்கள் எல்லாம் எப்படி, அடுத்தடுத்த வேலையைப் பாக்குறாங்க?:)

      இந்த வெற்றிவேல் செழியன் தான், சேரன் செங்குட்டவன் அமைத்த கண்ணகி கோட்டச் சிலையை, பின்னாளில் களவாடுவான்! அப்படியொரு அப்பா-இப்படியொரு பையன்! நற்றிணைப் பாடலில் இதெல்லாம் வரும்!
      —-

      மதுரையே எரிக்கலை!

      நீதி தவறிய அரண்மனை மட்டுமே எரிந்தது-ன்னு மூல நூல் வரிகளைப் பார்த்தால் தெரியும்!

      அதுவும், அரண்மனைக்குள் மறவோர் சேரி மட்டுமே!
      அதுவும், “பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
      மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
      தீத் திறத்தார் பக்கமே சேர்க”-ன்னு கண்ணகியே சொல்லுவா!

      That too no loss of life;
      Prostitute women and many people flee the place and gather in front of palace and talk about the incident; This is well documented in the epic!
      Even royal animals like elephants & horses, flee and gather outside the palace! No loss of life!

      விசாரணையே இல்லாமல், பட்டப் பகலில் தூக்குத் தண்டனை, அத்தனை அமைச்சர்கள், மறவர்கள் பார்த்திருக்க….
      ஒருவர் கூட நீதி உரைக்கவில்லை!
      அதான், அரண்மனைப் பொறுப்பில் உள்ள மறவர் சேரி மட்டும் எரிகிறது!
      —-

      மொத்த வாழ்க்கையும் ஏற்கனவே தொலைத்துவிட்ட ஒரு பொண்ணு, தன் காதல் கணவனை, பலர் முன்னிலையில் அசிங்கப்படுத்தி, நீதிமான்கள் பார்த்திருக்க, கீண்டு இருப்பதைப் பார்த்தா எப்படித் துடிக்கும்? தன் இறுதி நம்பிக்கையும் போச்சு-ன்னா, அவ எப்படி அரற்றுவா? “உணர்ந்தால்” தான் அந்த வலி தெரியும்!

      She doesn’t goto every house like “Lord” Hanuman and puts fire on the houses!
      She just swears an oath – out of helplessness!
      Will a mere oath invoke fire? – thatz a different story; But the character of kannagi is very immaculate!

      இது “அறச் சீற்றம்” மட்டுமே!
      No arson, looting and public damage!

      • anonymous says:

        sorry, one small correction dhana
        that song abt vetri vel chezhiyan stealing the kannagi statue is from aka naanooru, not natRiNai…
        and he is the brother of the dead king pandiyan nedunchezhiyan…

        just was reading aka naanooru 149;
        konja naaLa lotsa kannagi thoughts…want to see the movie, but no bandwidth here

        that girl kannagi wud not even complain in her misery..
        all she wanted was his understanding/speaking to her; she holds onto her faith that he is always a nice guy (which is true)
        no writing post/poem etc to ward off loneliness; dunno how she survived those years without even expressing herself..

        reading her now, via elango again…
        hmm…very intricate girl pola

        which current day heroine can best potray kannagi?:)

  4. anonymous says:

    சிறப்பான தகவல்கள் கொண்ட பதிவு!

    மூலநூல் வரிகளைக் கொண்டே, படிப்படியாக அறிய முயலும் நல்ல முயற்சி!
    வழக்குரை காதையை அப்படியே கண் முன்னே விரித்துக் காட்டும் பதிவு இது!

    இளங்கோவின் காப்பியம், ஒவ்வொருத்தருக்கு, ஒவ்வொன்னைத் தூண்டும்!
    உங்களுக்கு, சிலம்புகளின் எண்ணிக்கை பற்றிய கேள்வியைத் தூண்டி இருக்கு! (பல நாளாய்)

    இதான் காப்பியத்தின் “தூண்டல்”!
    ஒரு காப்பியத்தின் வெற்றியே = அதன் வரிகளில் இல்லை! வரியும் தாண்டி, உள்ளத் தூண்டலில் தான் இருக்கு!
    —-

    கண்ணகி சிலம்பும், பாண்டிமாதேவி கோப்பெருந்தேவி சிலம்பும்…வெளிப்பார்வைக்கு ஒன்னே போலத் தான் இருக்கு!

    அதான், பொற்கொல்லன், கோவலனின் கைப்பொருளைப் பார்த்த மாத்திரத்தில் ஆட்டையப் போட முயன்றான்! ஒன்றே போல் தோற்றம் அளித்த சிலம்புகள்!

    ஆனா, கண்ணகி வந்து வழக்காடும் போது தான் – சிலம்புகளின் வேறுபாடு – முத்துடை அரி, மணியுடை அரி என்ற பேச்சே கதையில் எழுகிறது!

    அது வரை கதாசிரியர், இதையெல்லாம் கதையின் போக்கில் காட்டவில்லை!

    * கொல்லன் பழுது பார்த்தது….அரசியின் ஒரு சிலம்பா? இரண்டு சிலம்புகளுமேவா? = தெரியாது!
    * கொல்லன் மன்னனிடம் திருப்பிக் குடுத்த சிலம்பு(கள்), அரசியிடம் போச்சா? இல்லை அதிகாரிகளிடம் தான் இன்னும் இருக்கா? = தெரியாது
    * சிலம்புச் சோதனை! அதைப் போட்டு ஒடைச்சாத் தான் தெரியுமா? சிலம்பைத் திருகிப் பார்க்க முடியுமா? பார்த்தா உள்ளே என்ன இருக்கு-ன்னு தெரியாதா? ஏன் கண்ணகி ஒடைச்சா? = தெரியாது

    கதையின் போக்குக்கு, இத்துணை நுண் தகவல்கள் தேவையில்லை-ன்னு இளங்கோ முடிவு கட்டி விட்டார் போலும்! ஏன்?
    —-

    ஏன்னா சிலப்பதிகாரம் = ஒரு நாட்டிய நாடகம்!
    “உரை இடை இட்ட, பாட்டுடைச் செய்யுள்!”
    நடுநடுவே வசனம் போல் உரைநடை வரா மாதிரி இருக்கும்! ஆனா செய்யுளும் வரும்!

    இப்படி ஒரு புதுமை, தமிழில் அப்போது இதுவே முதன் முறை!
    அதுவும் அரசர்களையோ, தெய்வங்களையோ கதாநாயகர்களாய் வைக்காது, பொது மக்களை கதாநாயகர்களாய் வச்சி, ஒரு நாடகம்-காப்பியம்!

    ஒரு நாடகத்தில், திரை விலகியதும், வேகமான காட்சிகள் தான் முக்கியமே தவிர….நுண் தகவல்கள் அல்ல!
    அதையே இளங்கோவும் செய்கிறார்!

    அதே சமயம், திரை போட்டு, திரை திறப்பதற்கு நடுவில்….இரு sceneகளின் நடுவில்…music/comedyன்னு நிரப்புவது போல்….பல தகவல்கள் நிரப்புகிறார்! அதுவும் உரைநடை போல் நடையில்!
    உரை – இடை இட்ட – பாட்டுடைச் செய்யுள்!

    அப்படி வருவது தான் தமிழிசை, பண் பற்றிய குறிப்புக்கள், இன்னும் பலப்பல நுண் தகவல்கள்!
    —–

    சிலம்பு பற்றி இதே போல நடுவே குறிப்பு குடுக்க, இளங்கோ-க்கு அவகாசம் இல்லை!
    கதையின் திருப்பம், சூடு பிடித்து விட்டது…இனி திரை போடறது-ன்னா, அது அரண்மனை எரியும் போது தான்!

    அதான்…
    எது எதற்கோ நுண்தகவல் குடுக்கும் கதாசிரியர்….
    பேரிலேயே “சிலப்பதிகாரம்”-ன்னு வச்சிட்டு,
    சிலம்புக்கு மட்டும் நுண் தகவல் குடுத்தாரில்லை!

    Thatz the beauty & speed of the drama!

  5. anonymous says:

    //
    #ரெண்டாவது சிலம்பு கண்ணகி முன்னாடி. இதுவும் கண்ணகியோடதுதான். தன் அரசியின் சிலம்புன்னு நெனச்சு பாண்டியன் கண்ணகி முன்னாடி வைக்கிறான்.

    #மூன்றாவது சிலம்பு கோப்பெருந்தேவி காலிலோ அல்லது அந்தப்புரத்திலோ இருக்கிறது. ஏன்னா ”தருக” என்று ஆள் விட்டு ஏவித்தான் ரெண்டாவது சிலம்பைக் கொண்டு வந்தான்.

    ஆகையால் அது கோப்பெருந்தேவி காலில் இல்லை
    //

    🙂
    நிறுத்தி நிதானமாகச் சுவைபட வாசித்துள்ளீர்கள்!

    * Repairக்கு போனது அரசியின் இரண்டு சிலம்புகளுமேவா? இல்லை ஒற்றைச் சிலம்பா?

    * கொல்லன், திருப்பிக் குடுத்த சிலம்பு(கள்), அரசி காலில் ஏறி விட்டதா? இல்லை, அதிகாரிகளிடம் தான் இன்னும் இருக்கா?

    * பொதுவா ஒத்தைச் சிலம்பு அணியும் வழக்கம் பெண்களிடம் இல்லை!
    எனவே கோப்பெருந்தேவி, ரிப்பேராகி வந்த இரண்டு சிலம்புகளையும் அணிந்து இருந்தாளா? இல்லை ஒன்றை மட்டும் தனியாக அந்தப்புரத்தில் வைத்திருந்தாளா?

    இதற்கெல்லாம் சிலப்பதிகாரத்தில் இருந்து விடை கண்டுபுடிப்பது மெத்த கடினம்!:)

    நாடகம் ஓடும் வேகத்தில்,
    இளங்கோ தரும் ஒரே Hint = “தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப”

    • Murali tharan says:

      கோப்பெருந்தேவியோட சிலம்பு repair பார்க்க போயிருக்காது. அது கொல்லன் திருடியிருப்பான். இது இளங்கோவே சொல்லியிர்ப்பார். ” பொய்த்தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி கோப்பெருந்தேவிக் கல்லதை இச்சிலம்பு”. கொல்லனும் ” கோவில் சிலம்பு கொண்ட கள்வன் கல்லென் பேரூர் ” என சிலம்பு திருடப்பட்டது என்பான். மன்னனும் ” தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு கன்றிய கள்வன் கையதாகின் ” என்பார் . (கொலைக்களக்காதை) இதுல இருந்து என்ன தெரிந்து சிலம்பு repair service க்கு போகல திருட்டுச் போய்ருக்கு.

  6. anonymous says:

    //தருக எனத் தந்து, தான் முன்வைப்ப//

    தருக என
    = இதை மன்னன், அரசியிடம் கேட்டானா? இல்லை பணியாளர்களைக் கேட்டானா? = உறுதியாத் தெரியலை!
    —–

    *Case1:
    பணியாளர்களிடம் கேட்டிருந்தால்?

    அவர்கள் போய், கொண்டு வந்திருப்பார்கள்….ஆனா எங்கிருந்து?

    அரசாங்க அதிகாரிகள் கிட்ட இருந்தா? = அப்படீன்னா, ஒற்றைச் சிலம்போ (அ) இரட்டைச் சிலம்போ கொண்டு வந்து குடுத்து இருப்பார்கள்!

    ஒற்றைச் சிலம்பு மட்டுமே Repairக்கு குடுத்திருந்தா, அதை ஒருத்தர் கொணர,
    இன்னொருத்தர் அந்தப்புரத்துக்குப் போயி, ரெண்டாம் சிலம்பையும் கொணர்ந்து வந்து குடுத்து இருக்கணும்!

    இதுக்கெல்லாம் அம்புட்டு நேரம் இருந்ததா? அதுவும் இங்கே கண்ணகி கதறி உலுக்கும் காட்சியில்? நாடகம் போகும் வேகத்தில்….
    —-

    *Case2:
    அரசியிடம் கேட்டிருந்தால்?

    #தருக என = அரசியே தருக! எனத் தென்னவன் கேட்க
    #தந்து = அவளும் தந்து (தன் காலில் உள்ள சிலம்புகளைக் கழற்றித் தந்து)
    #தன் முன் வைப்ப = அதை, தென்னவன், தன் முன்னே (ஒரு மேசை/மேடையில்) வைப்ப

    #கண்ணகி = இந்த பேதைப் பெண்
    #அணி மணிக் காற்சிலம்பு உடைப்ப = அந்த ரெண்டில் ஒன்னை எடுத்து உடைக்க
    (எது-ன்னு தெரியாது! பார்க்க ஒன்னே போல் இருக்கு!)
    #மன்னவன் வாய் முதல் தெறித்தது “மணியே”! = மன்னன் மேல் பட்டுத் தெறித்தது மாணிக்கப் பரல்கள்!
    —-

    கண்ணகி எடுத்த முதல் சிலம்பே, தெய்வாதீனமா, அவளோடதாவே வந்துருச்சி!
    திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை! முருகா!

    இல்லீன்னா….
    முன்னால் இருந்த இரண்டு சிலம்புகளில், ஒரு சிலம்பை எடுத்து உடைக்க, அதில் பாண்டிய முத்து தெறிச்சி, கண்ணகி ஒரு நிமிடம் தலை குனிஞ்சி இருக்கணும்!

    அப்பறமா, இருஇரு…அவசரப்படாதே-ன்னு, அடுத்த சிலம்பும் எடுத்து, அதையும் உடைச்சி, அப்பறம் தான் மாணிக்கம் தெறிச்சி இருக்கும்!

    ஆனா, தெய்வம், அந்தப் பேதைக்கு, அந்த ஒரு நிமிட ஐயுறவையும் குடுக்க விரும்பல!
    முதல் சிலம்பு எடுத்து உடைக்கும் போதே, “மன்னவன் வாய் முதல் தெறித்தது மணியே”….

  7. anonymous says:

    “தருக எனத் தந்து” = My personal choice is = Case 2
    —-

    சிலம்பின் நாடக வேகத்தில்….இளங்கோவின் நேரடியான வரி இல்லாததால்….
    இப்படி case by case ஆகத் தான் அணுகிப் பார்க்க வேண்டி இருக்கு!

    உரை நூல்-ன்னு பார்த்தா….
    1. அரும்பத உரையாசிரியர்
    2. அடியார்க்கு நல்லார்
    – நீங்க அடியார்க்கு நல்லார் உரை வாசிச்சி இருக்கீகளா? முடிஞ்சா கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் வாசிச்சிப் பாருங்க! பல தமிழிசைக் குறிப்புகள் கொட்டிக் கிடக்கும்!

    அண்மைக் காலங்களில் வந்த பல உரைநூல்கள், கதைநூல்கள்…
    குறிப்பா கலைஞர் கருணாநிதியின் நூல்…அதில் இளங்கோ சொல்லாததையெல்லாம் இவரா ஏத்திச் சொல்லுவாரு!
    சமய ஆட்கள் தான், சிலப்பதிகாரத்தைத் திரிக்கிறாங்க-ன்னா, சமயத்தை எதிர்த்த பகுத்தறிவு ஆட்களும், அதையே செஞ்சா எப்படி?:)

    வேணாம்…இதைக் கேட்கப் போயித் தான், தி.கழகத்தில் எனக்கு வம்பே வந்துச்சி!
    ஏதாவது ஒரு கட்சி சார்பா இருக்கவே எனக்குத் தெரிய மாட்டேங்குது! இங்கனயும் கோவம், அங்கனயும் கோவம்….நிலைப்பாடு எதுவும் இல்லாம, தமிழைத் தமிழா அணுகவே முடியாதா என்ன? முருகா!
    —-

    உரைக்கு வருவோம்…
    அண்மைக் கால உரைகளில், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய உரை = நல்ல உரை

    ஆனா நாட்டாரும், இதை அவ்வளவு ஆழமா விளக்கலை! பணியாளர் கிட்ட சொல்லி, கொண்டு வரச் சொல்கிறான்-ன்னே அவர் உரையில் சொல்கிறார்!

    May be! But “தருக எனத் தந்து” can mean either officers or the queen herself!
    My vote is for case 2: Queen!

    • anonymous says:

      கலைஞர் கருணாநிதி, “பகுத்தறிவா” இருக்கட்டுமே-ன்னு நினைச்சி, விஜயகுமாரி (கண்ணகி) கையில் தீப்பந்தம் குடுத்து, மதுரையை எரிக்கச் சொல்லுவாரு!:)

      முருகா! இதைப் பார்த்துத் தான் தனா அப்படிச் சொல்லுறாங்களா?-ன்னு தெரியல:))
      —-

      இன்னோரு பக்கம், ஆன்மீகத் தல புராணங்கள்…
      கண்ணகி மதுரைய எரிச்சிட்டு, திருச்சி/பெரம்பலூர் வந்தா! சிறுவாச்சூர் பத்ர காளியா ஆயிட்டா! மந்திரவாதியை அழிச்சா-ன்னு அவரவர் புருடாணங்கள்!

      ஆன்மீகம் பண்ண அக்குறும்பையே தான் கலைஞரும் பண்ணாரு:)
      —-

      அதுக்குத் தான் எப்பமே மூலநூலுக்கே போய்ப் பார்த்துக்கிடணும்-ன்னு அடிக்கடி சொல்லுறது!

      இளங்கோவடிகள் யாத்த, அழகுத் தமிழ்க் காவியம்!
      அது, பல ஆண்டுகளா ஒழுங்காத் தான் இருந்துச்சி! ஆனா எப்போ சமயம் உள்ளாற வம்படியா நுழைஞ்சுச்சோ, அவரவர் ஒட்டி ஒட்டிக் கதையே மாத்திப்புட்டானுங்க:((

  8. anonymous says:

    But, I would like to “critically examine” my viewpoint also!
    “தருக எனத் தந்து” = எப்படி அரசி-ன்னு உறுதியாக் கொள்ள முடியுது?
    —-

    1) பணியாளர்கள்-ன்னா “கொணர்க”-ன்னு சொல்லி இருக்கலாமே! அவங்களும் போய்க் கொண்டாந்து இருப்பாங்க!
    “தருக”-ன்னு சொல்வதால், தன் முன்னே உள்ள அரசியிடம், நேரடியாக் கேட்பது போல் இருக்கு!

    இதே பாண்டியன், “கொணர்க” என்கிறான்! ஆனா வேற இடத்தில்!
    “கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு” என

    பொற்கொல்லன் போய்ச் சொல்ல, பொய் சொல்ல…
    அப்போ பாண்டியன் சொல்லும் வரிகள் இவை!
    அவனைக் கொன்று, சிலம்பை இங்கே கொணர்க-ன்னு ஆணையிடும் மன்னன்!

    * அப்போ அருகே சிலம்பு இல்லை = அதனால் “கொணர்க”!
    * இப்போ சிலம்பு, இவ காலிலேயே இருக்கு = அதனால் “தருக”!
    —–

    2) அரசி, repair செய்து வந்த காற்சிலம்புகளை, சபையில் அணிந்து இருந்தாள் என்பதற்கு என்ன அத்தாட்சி?

    இதுக்கு, வரீசையாக் கதையைப் படிக்கணும்…

    # மன்னனோடு அவளுக்கு ஊடல்! அதான் அதைத் தணிக்க, சிலம்பு குடுத்துச் சரிக்கட்ட நினைக்கிறான் தென்னவன்…ஆராயாமலேயே “கொணர்க”…
    அந்த இன்ப அவசரம்…துன்ப அவசரமாய் முடிந்து விட்டது:( முருகா!

    # ஊடல் தீர்ந்து விட்டது! சிலம்பு குடுத்தாச்சு! அதனால் அவனோடு அரசவைக்கு உடன் வருகிறாள்!

    # அன்று காலை, சபைக்குப் புறப்படும் முன் அரசிக்கு ஏதோ கெட்ட கனவு! அதைத் தென்னவனிடம் அரசவையிலும் காதோரமாய்க் கிசுகிசுக்கிறாள்!

    ஆக…
    ஊடல் தீர்ந்த அரசியின், காலில் சிலம்பு இருக்கு-ன்னு கொள்வது பொருத்தமே!
    அவள் காலில் இருந்ததால், மன்னனும், “தருக” என்றான்!

    தருக என
    தந்து
    தன் முன் வைப்ப
    கண்ணகி, அணி மணிக் காற் சிலம்பு உடைப்ப
    மன்னவன் வாய் முதல் தெறித்தது மணியே!
    —-

    Again…
    This is only my “inference”:)
    But there are no “explicit” lines by Elango! – Thatz bcoz of the speed of the drama!
    Going by the speed & court scene, i think, this wud be more appropriate! – Alternate explanations are very welcome!

  9. anonymous says:

    பதிவில் இராகவன் ஆய்ந்து சொன்னதைத் தொகுத்து….

    ஆக மொத்தம் 4 சிலம்புகள்!
    1 = கொல்லன் பதுக்கி வைத்துக் கொண்டது (முத்து)
    1 = கண்ணகி உடைத்தது (மாணிக்கம்)
    —-

    1 = கண்ணகி கையில் இருந்த சிலம்பு (மாணிக்கம்);
    இது என்ன ஆனது? அப்பறம் வீசி எறிந்து விட்டாளா?

    1 = எதிரே வைக்கப்பட்ட இன்னொரு சிலம்பு (முத்து);
    இது என்ன ஆனது? அரண்மனையோடு எரிந்து உருகி விட்டதா?

    சிலம்புகளுக்கு என்ன ஆனது-ன்னுல்லாம் காட்ட, நாடக வேகமும் உணர்ச்சியும் இடங்குடுக்கவில்லை!
    அதனால் இளங்கோவும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை!

  10. anonymous says:

    இன்னோன்னு சொல்லணும்-ன்னு நினைச்சேன்…

    சிலம்பைத் திருகிப் பார்த்து, முத்தா? மாணிக்கமா?-ன்னு நிரூபிச்சி இருக்கலாமே? ஏன் போட்டு ஒடைச்சா?

    முதற்கண் சிலம்பு என்னும் அணிகலனைத் திருகிப் பார்க்க முடியுமா? முடியும்!
    பொற்கொல்லன் பார்த்து இருக்கான்! அவனுக்கு அது “மாணிக்கம்”-ன்னு தெரிஞ்சே இருக்கு! இருந்தும் ஏமாத்துறான்!:(

    இதை இளங்கோவே நேரடியாக் காட்டுறாரு! No need to do an “inference”
    கோவலன் குடுத்த சிலம்பை, அக்கு வேற ஆணி வேற, ஆராய்ஞ்சிப் பார்க்கிறான் கொல்லன்!

    போற்றரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன்:
    மத்தக “மணியொடு” வயிரம் கட்டிய
    சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
    பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி….
    (மதுரைக் காண்டம் – கொலைக் களக் காதை)
    —–

    கண்ணகியும், இப்படித் திருகிக் காட்டி இருக்கலாம்!
    ஆனா….அவ உள்ளம் பதுறன பதறுக்கு…இப்படியெல்லாம் மெள்ளத் திருகிக்கிட்டு இருக்க முடியுமா?
    Speed of Drama Unfolding!
    அந்தச் சிலம்பு இனி இருந்தென்ன? போயென்ன? அதான் ஒரே ஒடையா ஒடைச்சா…

    இன்னிக்கி, சனநாயக நாட்டில் கூட, பெண்ணுரிமை பேசும் மன்றங்களில் கூட…..ஒடைக்க முடியாது! பவ்யமாத் தான் காட்டணும்!
    ஆனா, விசா எதுவும் இல்லாம, பின்புலங்கள் ஒன்னுமில்லாம, இன்னோரு நாட்டுக்கு வந்து, அந்த நாட்டு மன்னன் கிட்டவே….ஒரு பொண்ணு இந்த விசிறு விசிறுகிறாள்-ன்னா….
    —–

    //அறிவு அறை போகிய, பொறி அறு நெஞ்சம்
    இறை முறை பிழைத்தவன் வாயிலோயே//

    அடிங்க….திமிரு புடிச்சவளே…எங்க முதலமைச்சர்/மன்னரையா இப்படிப் பேசுற?-ன்னு அந்தக் காவலனும் தடுத்தான் இல்லை!

    //தேரா மன்னா, செப்புவது உடையேன்//
    நாக்கை அடக்கிப் பேசுடீ….கையைக் காட்டிப் பேசாதே-ன்னு எல்லாம் அந்த மன்னவனும் தடுத்தான் இல்லை!

    அந்தத் தென்னவனின் நீதி மன்றம் எப்படி இருக்கு-ன்னு பார்த்துக்கோங்க!
    யாரும் வந்து, மன்னனையே உலுக்கி, நீதி கேட்கும் அளவுக்கு….

    தென்னன் தமிழ்!
    —–

    அச்சோ…மணி 4:15am…flu இறங்காம, ஏதோ புரண்டு கொண்டிருக்கும் போது….யதேச்சையா இந்தப் பதிவைப் பார்த்தேன்….என்னமோ தெரியல liked it very much! romba nalla irunthuchi..
    sorry, bye…..

    • anonymous says:

      உம்ம்ம்ம்
      இந்தத் தளத்தின் மேல் முகப்பு நல்ல இருக்கு!

  11. anonymous says:

    //கண்ணகி முருகனுடைய மலையான திருச்செங்கோடு போறா..அங்க குன்றக் குரவர்கள் பாக்குறாங்க//

    குரவர் or குறவர்??

  12. anonymous says:

    //கண்ணகி முருகனுடைய மலையான திருச்செங்கோடு போறா. அங்க குன்றக் குரவர்கள் பாக்குறாங்க//

    முருகனுக்கு எதிராப் பேசுறேன்-ன்னு தப்பா எடுத்துக்கலீன்னா ஒன்னு சொல்லட்டுமா?

    நேத்தே சொல்லணும்-ன்னு நினைச்சேன்…
    சொல்ல வேணாம்-ன்னு தான் பாக்குறேன்…ஆனா சுபாவம் அப்படி…தமிழ்-ங்கிறதால மறைக்காமச் சொல்லத் தோனுது….தவறுன்னா மன்னியுங்கள்!

    இது திருச்செங்கோடு அல்ல!

    //கண்ணகி முருகனுடைய மலையான திருச்செங்கோடு போறா//

    மலை = முருகன் மலை தான்!
    ஆனா திருச்செங்கோடு அல்ல! திருச்செங்குன்றூர்!

    சில பின்னாள் உரைகாரர்கள் திருச்செங்கோடு-ன்னு தவறா எடுத்துக்கிட்டாங்க!
    நம்ம திருச்செங்கோடு பவானி/ஈரோடு பக்கம்…மதுரை/திருச்சிக்கெல்லாம் மேலே
    ஆனா இளங்கோ சொல்வது, மதுரையின் மேற்குத் திசை மலைகள்…

    கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
    “மேல் திசை” வாயில் வறியேன் பெயர்கு’ என
    நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி

    நம்ம திருச்செங்கோடு, வெறும் பாறைக் குன்று!
    பெரு மலை, அடர்ந்த கொன்றை மரங்கள், பேரியாறு (முல்லை-பெரியாறு), குன்றக் குறவர்கள், சேரன் செங்குட்டுவன் சந்திப்பு – இதெல்லாம் சேர நாட்டின் = திருச்செங்குன்றூர்

    நெடியோன் மார்பில் ஆரம் போன்று
    பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
    —–

    திருச்செங்குன்றூர் = சேரன் தலைநகர் வஞ்சி (கொடுங்கோளூர்) க்கு அருகில்!
    இன்னிக்கி கண்ணகி கோட்டம்-ன்னு சொல்லுறோமே, குமுளி பக்கம், border area…அது! (முல்லை) பெரியாறு ஓடும் காடுகள்..
    சித்திரா பெளர்ணமிக்கு பூசை வைக்கும் போது, இரு மாநிலத்துக்கும் தகராறு வருமே! அந்த இடம்!

    இந்த மலை = முருகன் மலை தான்!
    சுருளியாண்டவர் கோயில்

    அருவியோரமா….இந்த முருகன்…செல்லம்…ரொம்ப அழகா இருப்பான்! அம்மா அப்பா சின்ன வயசில் அழைச்சிக்கிட்டு போன ஞாபகம் இன்னும் இருக்கு!

    ஆனா, இந்த முருகனுக்கும் மேல, மலை மேலத் தான் கண்ணகி கோட்டம்…பாழடைஞ்ச கோயில்-ன்னுல்லாம் யாரோ சொல்ல…அங்கெல்லாம் போக வேணாம்-ன்னு அம்மா சொல்லிட்டாங்க! கண்ணகியைப் பாக்கவே முடியல:(

    அந்த மேற்கு சேர-பாண்டி மலைகளும், அடர்ந்த காட்டு அருவியும், என் முருகனும்…காணாத கண்ணகியும்…
    எப்பவாச்சும் நல்ல துணையோடு சென்று பாக்கணும் போல இருக்கும்!
    திருச்செங்குன்றூர் முருகா!

    இந்த வலைப்பூ பார்த்ததில், நிறைய எழுதிட்டேன்…தவறுகள் இருப்பின், மன்னிக்கவும்!

  13. உங்க சிபாரிசு படியே வேங்கடசாமி நாட்டார் வாங்கியாகி விட்டது..! இப்போது தான் ஆரம்பித்துள்ளேன். மிக தெளிவான நடைமுறை “நடை”.. நன்றி உங்கள் தமிழுக்கு ராகவன் சார்.!!

    அனானிமஸ் “முருகா”.. !! இப்படி நீங்க ரெண்டு பேரும் இனிய தமிழில் இசைபட.. சுவைபட.. உள்ளம் இனிக்க.. தமிழ் பாடுவது கண்டு “மகிழ்ந்தேலோர் எம் பாவாய்”..!

  14. உரையாசிரியர்கள் துரோகிகள். அவர்கள் பணம் பண்ணுவதற்காக, மூலபாடத்தைச் சிதைப்பது, முற்போக்கை புகுத்துவது, இலக்கியச் சிந்தனையை மறப்பது போன்ற இழிவான காரியங்களைச் செய்கிறார்கள்!
    உதாரணத்திற்கு, புணர்ச்சியின்றி எழுதி மூலபாடத்தைக் கெடுக்கிறார்கள் முட்டாள்கள். வருங்கால மாணவர்கள் புணர்ச்சி விதிக்குப் பாடம் தேடினால் எப்படிக் கிடைக்கும்?!

    அப்படித்தான், அந்த காலத்திற்குச் சென்று சிந்திக்காமல், தன் சொந்த கருத்துகளை புகுத்துகிறார்கள். விட்டால்,
    பென்னி குயிக் கட்டிய அணைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செங்குட்டுவன் அடிக்கல் நாட்டினார் என்பார்கள்.

    அப்படித்தான்,
    நெடுவேள்குன்றம் முருகன்மலை ஆகி, முருகன்மலை திருச்செங்கோடு ஆகிவிட்டது. அவர்களை நம்பாமல், தாங்களே ஆய்வு செய்திருப்பது தனிச் சிறப்பு!
    தெளிந்தேன். வாழ்த்துகள்!

    உங்களை எப்படித் தொடர்பு கொள்வது?!
    உங்கள் அலைபேசி எண்களை, எனது மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா?!

  15. மடையன் says:

    கேயாரெஸ்ஸை நெடுநாட்களாக ட்விட்டரில் காணாமல் அவரது பழைய கீச்சுக்களை அசை போட்டபோது இந்த இழை சிக்கியது

    அவருடைய பழைய தளங்களின் பதிவுகளில் உங்கள் பெயர் பார்த்து Twitter ல் தொடர்ந்தேன்

    அருமையான தேடலைத்தூண்டும் பதிவு..

    தொடரட்டும் தங்கள் பணி.

    மடையன். @emraaj

  16. Victor Johnson says:

    அருமை.

    இலக்கியத்தைப் படிக்கத் தூண்டும் ஆர்வத்தை வளர்க்கிறது.

  17. திரா லோரா says:

    வாழ்த்துக்கள்.

    கல்லூரியில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் படித்தது.

    தங்களது நல்ல ஆய்வு.

    மகிழ்ந்தேன்.

    மீண்டும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

    நன்றி, ஐயா.!

    👍

  18. அபிஷேக்.சி says:

    கயவாகு மன்னனிடம் ஒரு சிலம்பு போகும் என்ற வரிகள் சிலப்பதிகாரத்தில் வருமே ஐயா…அதை வைத்து பாருங்கள்…..உங்கள் பதிவு அருமை ஐயா…

  19. Rajiv gandhi says:

    மதுரை அரசி முத்து சிலம்பு வைத்திருக்கிறாள், கண்ணகி மாணிக்க பரள் சிலப்பு வைத்திருக்கிறாள், பொற்கொல்லன் திருடும் நோக்கில் இருந்தால் அந்த கண்ணகி சிலம்பை தான் திருட வேண்டும், ஆனால் கண்ணகி சிலம்பு திருட பட வில்லை, முத்து கல்லில் மதிப்பு மிக மிக குறைவு, அரச சபையில் பொற்கொல்லின் ஊதிய ரீதியாக பார்த்தால் அதன் மதிப்பு மிக குறைவு அப்ப அவன் எப்படி திருட முடியும் ?

    உதாரணமாக தங்க நகை கடையில் மேலாளர் வெள்ளி காசு திருடிய போல் தெரிகிறது, தங்கத்தை சொன்னால் அவருக்கும், அவர் தரம் மற்றும் அவர் வாங்கும் ஊதியத்திற்கும் ஓர் அர்த்தம் இருக்கும்

    இது மூழுக்க மூமுக்க அரசரின் கவன குறைவு தான் பொற்கொல்லனுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது

  20. Rajiv gandhi says:

    மதுரை அரசி முத்து சிலம்பு வைத்திருக்கிறாள், கண்ணகி மாணிக்க பரள் சிலப்பு வைத்திருக்கிறாள், பொற்கொல்லன் திருடும் நோக்கில் இருந்தால் அந்த கண்ணகி சிலம்பை தான் திருட வேண்டும், ஆனால் கண்ணகி சிலம்பு திருட பட வில்லை, முத்து கல்லில் மதிப்பு மிக மிக குறைவு, அரச சபையில் பொற்கொல்லின் ஊதிய ரீதியாக பார்த்தால் அதன் மதிப்பு மிக குறைவு அப்ப அவன் எப்படி திருட முடியும் ?

    உதாரணமாக தங்க நகை கடையில் மேலாளர் வெள்ளி காசு திருடிய போல் தெரிகிறது, தங்கத்தை சொன்னால் அவருக்கும், அவர் தரம் மற்றும் அவர் வாங்கும் ஊதியத்திற்கும் ஓர் அர்த்தம் இருக்கும்

    இது மூழுக்க மூமுக்க அரசரின் கவன குறைவு தான் பொற்கொல்லனுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது

    கம்மாளனை கலங்க படுத்துவதே இதன் நோக்கம் என்று தெரிகிறது பாண்டிய அரசபையில் முக்கால் வாசி புலவர்கள் கம்மாளர்களே உதாரணமாக புலவர்களின் பெயரில் வெண்கண்ணார், கண்ணார், கொல்லன், என்ற பெயர்கள் இருக்கும்

    இதை எழுதியவன் சேர நாட்டை சேர்ந்த இளங்கோவடிகள், அவனது நண்பன் சீதலை சாத்தனர் சமண மற்றும் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள், ஏன் மற்றவர்கள் இருக்கும்போது இவர் இவருவர் முனைப்புடன் ஏன் ஏழுத வேண்டும் சற்று சந்தித்து பார்க்க வேண்டும்

Leave a reply to anonymous Cancel reply