செந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும்

செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். தமிழ்நாட்டில் இருக்கும் திருமணமான ஒன்றரைக் கோடி ஆண்களின் அப்பாவிப் பிரதிநிதி அவன். குடியிருந்த கோயிலுக்கும் அவனைத் திருமணம் செய்து கொண்டு வந்தாளே மகராசிக்கும் இடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் ஆணடிமைவாதி.

பாவம். அந்த செந்தில்நாதனுக்கும் டீவி விளம்பரத்தில் தோன்றும் இளைஞர்களுக்கும் வரும் பிரச்சனை வந்தது. அவனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவனுடைய வந்தாளே மகராசி வழக்கம் போலவே தவறாக முடிவு செய்து ஒரு கருப்புச்சட்டையை வாங்கி வந்தார். டீவியில் வரும் விளம்பர மாடல்களின் எச்சரிக்கையையும் மீறி அந்த கருப்புச் சட்டையை அணிவிக்கப்பட்ட ஒரு ராகுகாலத்தில் செந்தில்நாதனுக்குப் பொடுகுப் பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

முதல்நாள் ஆட்டி வைத்த இட்டிலி மாவு அடுத்த நாள் காலையில் புளிக்கவில்லை என்றால் ஒரு குடும்பத்தலைவி எந்த அளவு அதிர்ச்சி அடைவாளோ, அதே அதிர்ச்சியை இரண்டு பெண்மணிகளும் அடைந்தார்கள்.

ஆண்களுக்கு எதையும் ஒழுங்காகச் செய்யத் தெரியாது என்று உலகத்தில் எல்லா பெண்களும் நினைப்பது போலத்தான் குடியிருந்த கோயிலும் வந்தாளே மகராசியும்  செந்தில்நாதனைப் பற்றி நினைத்தார்கள்.

மகன் தலையில் ஒழுங்காக எண்ணெய்யே தேய்ப்பதில்லை என்று கோயிலும் ஒழுங்காக ஷாம்பு போட்டுக் குளிப்பதில்லை என்று மகராசியும் முடிவுக்கு வந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் எழுந்த செந்தில்நாதனுக்கு காப்பி எவர்சில்வர் கிண்ணத்தில் வந்தது. அவசரத்தில் குடிக்கப் போனவனுக்கு அது காப்பி அல்ல நல்லெண்ணெய் என்ற அதிர்ச்சி உண்மை புரிந்தது.

“தலைல தேய்ச்சுக்க. தலைல ஈரப்பசையே இல்லாமத்தான் பொடுகு வருது.”

அன்னையின் ஆணையில் முதன்முறையாக தலை மேல் கொண்டான் செந்தில்நாதன். நல்லெண்ணெய் தலையேறிய பிறகுதான் காப்பியே கொடுக்கப்பட்டது.

குளிக்கப் போகும் போது செந்தில்நாதன் கையில் துவையல் கிண்ணத்தை நீட்டினார் கோயில்.

“இப்பத்தான் குளிக்கப் போறேன். வந்து சாப்புடுறேம்மா.”

“இது சட்டினி இல்ல. செம்பருத்தி இலை ஊற வெச்சி அரைச்சிருக்கிறேன். தலைல எண்ணெய்ப் பிசுக்கு போக நல்லா தேச்சுக் குளி”.

வழுவழுப்பான செம்பருத்தியிலை தலையிலும் முடியிலும் கையிலும் உடம்பிலும் ஒட்டிக் கொண்டு கடல்பசு போல வழுவழுவென உழண்டான் செந்தில். எவ்வளவு குளித்தாலும் வெண்ணெய்யை மேலே தடவிக் கொண்டது போல உடம்பை நெளித்தான்.

ஒருவழியாக வெளியே வந்தவனிடம் நேராக வந்தாள் மகராசி.

“ஷாம்பு போட்டுக் குளிச்சீங்களா?”

“இல்லையே. அம்மா செம்பருத்தியிலைய அரச்சுக் குடுத்தாங்க. அதத்தான் தேச்சுக் குளிச்சேன்.”

“அதானே பாத்தேன். எங்க நான் வாங்கி வெச்ச ஷாம்பு ஒங்க கண்ணுலயே பட்டிருக்காதே.”

“என்ன ஷாம்பு?”

“இப்ப இதான் லேட்டஸ்ட் ஷாம்பு. இத போட்டுக் குளிச்சா சரியா ஏழு நாள்ள பொடுகெல்லாம் சரியாப் போயிரும். Some people cant come to trend and still stuck in past. ஊர்ல உலகத்துல புதுசா என்ன நடக்குதுன்னே தெரியாம மேனேஜர் ஆயிட்டீங்க. காலவோட்டத்துல கலந்து எப்பவும் டிரெண்டியா இருக்கனும்னு எப்போ புரியப் போகுதோ! இன்னும் ராஜராஜாசோழன் ஆட்சியிலேயே இருங்க. எனக்கென்ன.”

செந்தில்நாதனுக்குப் புரிந்து விட்டது. இன்னைக்கு சண்டே அல்ல சண்டை என்று.

ஒருவழியாக சமாதானமாகி அடுத்தநாள் அந்த ஐநூறு ரூபாய் ஆர்கானிக் ஷாம்புவை போட்டுக் குளிப்பதாக சரணடைந்தான் அப்பாவிக் கணவன்.

சண்டை முடிந்த சண்டே முடிந்து திங்களும் வந்தது. காலையில் குளிக்கப் போகும் முன் கோயில் ஒரு கிண்ணத்தில் எதையோ நீட்டினார்.

”வெந்தயத்த ஊற வெச்சு அரச்சிருக்கேன். இதத் தேச்சுக் குளி.”

மறுபேச்சு பேசாமல் அதைக் கையில் வாங்கியவன், குளியலறையில் ஒரு ஓரமாக வைத்து விட்டு மனையாள் மனவிருப்பப்படி ஆர்கானிக் ஷாம்புவைப் போட்டுக் குளித்தான்.

கிண்ணத்தில் அப்படியே இருந்த வெந்தயத்தைப் பார்த்த குடியிருந்த கோயிலின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. தன்னுடைய அப்பாவி மகனின் கையாலாகாத பெண்டாட்டிதாசத்தனத்தைப் பற்றி கோவம் வந்தது. தன் கணவன் தனக்கடிமை என்று உணர்ந்திருந்த அந்த அம்மைக்கு தன் மகன் அவனுடைய மனைவிக்கடிமை என்று புரியாமல் போனது.

அவருடைய அறச்சீற்றத்தின் விளைவு அன்றைய சமையலில் தெளிவாகத் தெரிந்தது. தனக்கும் தன் கணவனுக்கும் மட்டும் சோறும் ரசமும் வைத்து விட்டு மகனை மார்டனாக பிட்சா ஆர்டர் பண்ணச் சொல்லி விட்டார்.

சேனைக் கிழங்கு புளிக்குழம்பு சாப்பிட்ட வாய்க்கு சீஸ் பஸ்ர்ட் பீட்சா பிடிக்கவில்லை. பூண்டுக் குழம்பை நல்லெண்ணெய் ஊற்றித் தின்னவனுக்கு கார்லிக் பிரட் வாயைக் கெடுத்தது. சட்டினி வகைகளைத் தொட்டுத் தொட்டு விழுங்கியவனுக்கு ஜாலப்பீனோ சீஸ் டிப் ருசிக்கவில்லை. அந்த அளவுக்கு சமைத்து அவன் வாயை வளர்த்து வைத்திருந்தார் குடியிருந்த கோயில்.

அன்னையைப் போலொரு தெய்வமில்லை என்பதை அவசர அவசரமாகத் தெரிந்து கொண்டு தூங்கப் போகுமுன் காலையில் தலையில் தேய்த்துக் குளிக்க எதையாவது குடுக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

அன்றிலிருந்து செந்தில்நாதனின் குளியல் முறை மாறியது.

காலை எழுந்து நல்லெண்ணெய் தலையில் தேய்த்து ஊற வைத்து பிறகு வெந்தயமோ செம்பருத்தியிலையோ பூங்காங்காயோ, எது கிண்ணத்தில் வருகிறதோ அதைத் தேய்த்து குளிப்பான். பிறகு அந்த ஐநூறு ரூபாய் ஆர்கானிக் ஷாம்புவைப் போட்டுக் குளிப்பான். பீச் பழச்சாறு, திராட்சைரசம், லாவெண்டர், பாதாம் எசென்ஸ், அன்னாசிப்பழம் என்று பலவிதங்களில் ஆர்கானிக் ஷாம்பு பாட்டில்களின் நிறங்களும் மணங்களும் மாறிக் கொண்டேயிருந்தன. அதன் பின்னர் தலையில் ஹேர் வேக்ஸ் தேய்த்துக் கொண்டு நாளைக் கடத்துவான்.

இதனால் நல்ல பலன் தலை மேல் வந்தது. தலையிலிருந்த பொடுகுத் தொல்லை நீங்கியது புதிதாக உருவாகியிருந்த சொட்டைகளில் தெளிவாகத் தெரிந்தது.

ஆர்கானிக் ஷாம்புதான் சொட்டைக்குக் காரணம் என்று குடியிருந்த கோயிலும் கண்டதையும் அரைத்துத் தேய்பதுதான் காரணம் என்று வந்தாளே மகராசியும் வழக்கம் போல நினைத்துக் கொண்டார்கள்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை and tagged , , , , , . Bookmark the permalink.

33 Responses to செந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும்

 1. anusuya says:

  //தன் கணவன் தனக்கடிமை என்று உணர்ந்திருந்த அந்த அம்மைக்கு தன் மகன் அவனுடைய மனைவிக்கடிமை என்று புரியாமல் போனது.// Its true to every home nice Gira after a loooong gap 🙂

 2. நல்ல பதிவு..கிட்டத்தட்ட இதே டாபிக்கை அசைப்போட்டுக்கொண்டிருந்தேன் மனதில்…

  • GiRa ஜிரா says:

   நீங்க அசை போட்டீங்க. அது எப்படியோ எனக்குக் கேட்டு நான் பதிவு போட்டுட்டேன் 🙂 ஒங்கள மாதிரியே நானும் கதை எழுதத் தொடங்கீட்டேன். 🙂

 3. hahahahahha loved the comedy 🙂 remembered something during the lines about new trends and managers 🙂

 4. senthilnathan is catching up 🙂 keep writing 🙂

 5. valaiyakam says:

  வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

 6. ஹ ஹா!!! நல்ல நடை. அருமையா எழுதறீங்க. ரசித்தேன். வழுக்கை தான் ஒரே தீர்வு போல. 🙂

  • GiRa ஜிரா says:

   செந்தில்நாதனைப் பொருத்தவரையில வாழ்க்கை வழுக்காம இருக்கனும்னா வழுக்கையும் ஒரு தீர்வுதான் 🙂 எந்தரோ செந்தில்நாதலு அந்தரிகி வந்தனமு 🙂

 7. I thoroughly enjoyed reading..
  //முதல்நாள் ஆட்டி வைத்த இட்டிலி மாவு அடுத்த நாள் காலையில் புளிக்கவில்லை என்றால் ஒரு குடும்பத்தலைவி எந்த அளவு அதிர்ச்சி அடைவாளோ// classic..

  • kavinaya says:

   நானும் இதே வரியைத் தான் சொல்ல வந்தேன். மொத்தத்தில் கதை ஹாஹா 🙂 Welcome back Gira!

   • GiRa ஜிரா says:

    நன்றி கவிநயாக்கா 🙂 எப்படி இந்தப் பதிவுக்கு வந்தீங்க? தமிழ்மணத்துல வந்ததா? 🙂

    • kavinaya says:

     அட, அதிசயமா ‘அக்கா’! 🙂 தமிழ்மணம் என்னை ஒதுக்கிட்டதால் நானும் அங்கே போறதில்லை! என் பக்கத்துக்கு வந்து பாருங்க தம்பீ! ‘அடிக்கடி நுகரும் வலைப்பூக்களி’ல், உங்கள் பூவும் அடக்கம் 🙂

    • GiRa ஜிரா says:

     இப்பல்லாம் அம்மான்னோ தங்கச்சின்னு கூப்டா கோவிச்சுக்கிறாங்க. அதான் அக்கான்னாச்சு. 🙂

     நானும் ரீடர்ல ஒங்க பதிவுகளைப் படிச்சுக்கிட்டுதான் இருக்கேன் 🙂

   • kavinaya says:

    அம்மான்னு கூப்பிட்டா நான் கோச்சுக்க மாட்டேன் 🙂 எனக்கு ரொம்பப் பிடிச்ச சொல். என் பதிவுகளையும் வாசிக்கிறதுக்கு நன்றி! உங்க profile படம் அழகனோட அழகா இருக்கு 🙂

 8. எதைச்சொல்ல எதைவிட?

  //முதல்நாள் ஆட்டி வைத்த இட்டிலி மாவு அடுத்த நாள் காலையில் புளிக்கவில்லை என்றால் ஒரு குடும்பத்தலைவி எந்த அளவு அதிர்ச்சி அடைவாளோ, அதே அதிர்ச்சியை இரண்டு பெண்மணிகளும் அடைந்தார்கள்.//

  எப்படி? எப்படிய்யா இந்தமாதிரி உதாரணங்கள் வ்ந்து விழுது?

  ஹைய்யோ ஹைய்யோ :-))))

  கோவிலும் மகராசியும்……. சொற்கள் சூப்பர் போங்க!

  • GiRa ஜிரா says:

   வாங்க டீச்சர் வாங்க 🙂

   எல்லாரும் அந்த இட்டிலிமாவைக் குறிப்பிட்டு சொல்லீருக்கீங்க. இதுலருந்து இட்டிலி மாவு பல பெண்களோட வாழ்க்கையில “கொலவெறி ஆட்டம்” போட்டிருக்குன்னு தெரியுது. 🙂

 9. எந்த ஜிரா ? … அந்த ஜிராவா? தூத்துக்குடி ஜிராவா?

 10. எங்கங்க போனீங்க? நல்லா இருக்கீகளா?

  • GiRa ஜிரா says:

   இங்கயேதான் சார் இருக்கேன் 🙂 நீங்க எப்படியிருக்கீங்க? இன்னும் எழுதுறீங்களா? எந்த வலைப்பூவில் எழுதுறீங்க? ரொம்ப நாள் கழிச்சி சந்திச்சதுல மகிழ்ச்சி. இனிமே அடிக்கடி சந்திச்சிக்கலாம் ஒங்க/என்னோட வலைப்பூக்களில் 🙂

 11. GiRa ஜிரா says:

  // தருமி Says:
  June 3, 2012 at 10:46 am edit

  கட்டாயமா ..
  எந்த ’ஊர்ல’ இருக்கீங்க ? //

  “தருமி”கு சென்னை 🙂

  • kavinaya says:

   சொல்லவே இல்லை! வந்து பார்த்துடுவேன்னு பயமா? 🙂 ம்… அடுத்த தரம் விட மாட்டோம்ல!

   • GiRa ஜிரா says:

    சமீபத்துலதான் வந்தேன். அடுத்து இந்தியா வரும்போது சொல்லுங்க. ஒரு பதிவர் சந்திப்பு போட்டிருவோம். 🙂

 12. ஆஹா ஆஹா. என்னே ஒரு இன்பம்…
  நம்மளைப்போல ஒருத்தன் கஷ்டபடுறான்னு…. அதும் பொண்டாட்டிகிட்டே … நினைக்கிறப்பவே இதயம் துள்ளுது. ..

  //ஆண்களுக்கு எதையும் ஒழுங்காகச் செய்யத் தெரியாது என்று உலகத்தில் எல்லா பெண்களும் நினைப்பது போலத்தான் //… அதையும் ஒரு நொடிப்போடதான் சொல்வாக..!

  சரி…, நீங்க கதை சொல்லி ஆறுதலடையிறீங்க ..
  நான் அத படிச்சி…… :-))) எஸ்கேப் பூ…!!

 13. ஜிரா, இதைத்தான்யா இத்தனை வருசமா எதிர்பார்த்தோம், எங்கேயா போயிருந்தே?

  • GiRa ஜிரா says:

   இங்கயேதான் இருக்கேன் 🙂 சின்ன இடைவெளி. இனிமே அடிக்கடி எதாச்சும் எழுதுவேன் 🙂 நீங்களும் ஒன்னும் எழுதுறதில்லையா? ஏன்?

 14. arul says:

  naatla 80% gens nilamai ithu thaan

 15. என் தலை போலானது என்று சொல்லலாம் போலிருக்கு.

 16. Pingback: செந்தில்நாதனும் மாமியார் வருகையும் | மாணிக்க மாதுளை முத்துகள்

 17. Pingback: செந்தில்நாதனும் மாடித்தோட்டமும் | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s