டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 1

“ராகவன், டி.வி.எல்.எஸ் பஸ்ல ஏறி உக்காந்ததும் பாட்டு போடுவாங்க. ஒன்னும் புரியாது. ஆனாலும் ஏதோ மாதிரி நிம்மதியிருக்கும். பாட்டு மாதிரியும் இல்லாம வசனம் மாதிரியும் இல்லாம ஒருவிதமா நல்லாருக்கும்ல.”

கல்லூரி காலங்கள்ள ஒரு தோழி இப்படிச் சொன்னதுதான் இந்தப் பதிவு எழுத உக்காந்ததும் நினைவுக்கு வந்தது. அந்தத் தோழிக்கும் பிறந்த ஊர் தூத்துக்குடிதான். அவர் ஒரு அதிதீவிர விசுவாசி. தூத்துக்குடியில் நிறைய கிருத்துவப் பிள்ளைகள் ரெண்டாம் மொழியா பிரெஞ்ச் எடுத்துப் படிப்பாங்க. அந்தத் தோழியும் பள்ளியில் பிரெஞ்ச் படிச்சவர்தான். ஆனா பையன்கள் பெரும்பாலும் படிப்பது தமிழ்தான்.

தோழி சொன்னது கந்தசஷ்டி கவசம் பத்தி. இந்தப் பாட்டைச் சுட்டுதான் “பதினெட்டு வயது. இளமொட்டு மனது”ன்னு சூரியன் படத்துல தேவா பாட்டு போட்டிருப்பாரு.

இவ்வளோ பிரபலமான பாட்டை இப்ப பல பாடகர்களும் பாடி கேசட்/சிடி வெளியிட்டிருக்காங்க. ஆனா மொதமொதல்ல பாடியது சூலமங்கலம் சகோதரிகள். அதுதான் இன்னமும் பிரபலமாவும் தரமாகவும் இருக்குது.

சீர்காழி கோவிந்தராஜன் கூட கந்தசஷ்டி கவசத்தைப் பாடியிருக்கிறார். ஆனால் சஷ்டிகவசம் என்றால் அது சூலமங்கலம் பாடியது என்பது நிலைபெற்று விட்டது.  சூலமங்கலம் சகோதரிகள் சென்னை தொலைக்காட்சிக்காக சஷ்டிகவசமும் கந்தகுரு கவசமும் கச்சேரி செய்து ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை சென்னை தொலைக்காட்சி நிலையம் டீவிடீகளாக வெளியிடலாம்.

நம்மள்ள நெறைய பேர்கிட்ட கந்தசஷ்டி கவசம் சின்னபுத்தகமாக பையிலயோ பெட்டியிலோ வெச்சிருப்போம். சென்னைல காலைல ரயில்ல போறப்போ பெண்கள் சிலர் சஷ்டி கவசத்தை வாசிக்கிறதையும் பாத்திருக்கேன்.

இதெல்லாம் சரி. இந்த அளவுக்குப் பிரபலமான சஷ்டி கவசத்தை எழுதுனது யாரு? அடிக்கடி சஷ்டி கவசம் கேக்குறவங்களுக்கோ படிக்கிறவங்களுக்கோ தெரிஞ்சிருக்கும். ஏன்னா அதுல ஒரு வரியில அவரோட பேரும் வருது.

”பாலன் தேவராயன் பகர்ந்ததை” என்ற வரியில் பாடிய தன் பெயரை தேவராய சுவாமிகள் குறிப்பிட்டிருக்காரு.

சின்ன இடைத்தகவல். இனிமே இந்தப் பதிவு பேச்சுத் தமிழ்ல இருக்காது. ஆகையால எல்லாரும் சீட் பெல்ட்டை மாட்டிக்கோங்க. 🙂

நண்பர் நாகா சொக்கனுடைய வாசிப்பு ஆழமானது மட்டுமல்ல. அகலமானதும் கூட. அவரே ஒருமுறை “யாரிந்த பாலன் தேவராயன்? எந்த நூற்றாண்டு?” என்று ஆர்வமாகக் கேட்ட போதுதான் அவரைப் பற்றிச் சிறிய பதிவு போட வேண்டும் என்று தோன்றியது. உடனே அந்தக் கிருத்துவத் தோழி சொன்னதும் நினைவுக்கு வந்தது.

தேவாரம் திருவாசகம் போன்ற பக்தி நூல்களை விடவும் ஓசைமுனி அருணகிரியின் திருப்புகழை விடவும் எளிய தமிழில் இருப்பது சஷ்டிகவசம். அதை அருளிய தேவராய சுவாமிகளைப் பற்றித் தெரிந்த விவரங்களோடு இன்னும் பல தகவல்களைத் தேடினேன். தேடிய விவரங்களை உங்களுக்குத் தருகிறேன்.

பொதுவாகவே கடவுள் நம்பிக்கை அற்றுப் போவதற்கு ஒரு இழப்பு/துயரம் போதுமானதாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அத்தகைய கொடிய துயரத்தைத் தாண்டிவந்திருக்கிறார்கள். அப்படித் தாண்டி வந்தவர்கள் தாண்டுவதற்கான வழியை மற்றவர்களுக்குச் சொல்லியும் வைத்திருக்கிறார்கள்.

அப்பரடிகளுக்கு வயிற்றுவலி.
பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுக்கு வெப்பு நோய்.
அருணகிரிநாதருக்குத் தொழுநோய்.
பகழிக்கூத்தருக்கு வயிற்றுவலி.

அந்தக்காலத்தில் வயிற்றுவலி மிகப்பெரிய மருத்துவப் பிரச்சனையாக இருந்திருக்கிறது போல. இந்தத் துன்பங்கள் எல்லாம் இறையருளால் நீங்கப்பெற்றன. துன்பம் நீங்கிய அடியாரோ இறைத்தொண்டு செய்தனர். மன்னரோ அடியார்க்கான தொண்டு செய்தனர்.

இவையெல்லாம் பழைய நிகழ்வுகள்தான். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட நிகழ்வுகளையும் உலகம் கண்டிருக்கிறது.

தேவராயசுவாமிகளும் பாம்பன் சுவாமிகளும் இவ்வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். இப்படி நாம் அறிந்தவை குறைவு. அறியாதவை இன்னும் எத்தனையெத்தனையோ.

தேவராயசுவாமிகள் என்று நாம் போற்றுகின்றவரின் இயற்பெயர் தேவராயன். 19 நூற்றாண்டைச் சேர்ந்த இவரது சொந்த ஊர் வல்லூர். நல்ல வசதியான கணக்குப்பிள்ளை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் வீராச்சாமிப் பிள்ளை. தாயார் பெயர் தெரியவில்லை. நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் இருந்து பிறந்தவர் தேவராயன்.

வல்லூரிலேயே தமிழும் கணக்கும் பயின்றார். பிறப்பு ஓரிடம். செல்வம் தேடுவது ஓரிடம் என்னும் பொதுமொழிக்குத் தேவராயனும் விலக்காகவில்லை.

இருபது வயதிலேயே பெங்களூர் சென்று கணக்குப்பிள்ளை தொழிலில் நல்ல செல்லவமும் சேர்த்திருந்தார் தேவராயர்.

பெங்களூரின் தட்பவெட்பநிலை. அருகில் பெற்றோர் இல்லாத நிலை. கணக்குத் தொழியில் கொழிக்கும் செல்வம். இருபது வயது. இவையனைத்தும் ஒருவர் கெட்டுப்போவதற்குப் பலவிதங்களில் காரணமாக இருக்கும். ஆனால் தேவராயனிடம் இவையனைத்தும் தமிழார்வத்தைத் தூண்டின. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தமிழ் வாசிப்பில் செலவழித்தார்.

இவ்வாறாக இயல்பாக இருந்த தமிழார்வம் ஒரு மாமேதையின் பெங்களூர் வரவால் மிகவும் தூண்டப்பட்டது. தூண்டிய விளக்கிற்கும் தூண்டப்பட்ட விளக்கிற்கும் பேரொளி கொடுத்த நல்ல வரவு அது.

உ.வே.சா அவர்கள் தமிழ்த்தாத்தா என்றால் இந்த மாமேதை தமிழுக்குப் பெரிய பாட்டனார். இன்றைக்கு உ.வே.சாவைக் கொண்டாடும் உலகம், அவருக்குத் தமிழ் கற்பித்த இந்த மாமேதையை வசதியாக மறந்து விட்டது. யார் அவர்?

காவிரிக்கரை தந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்தான் தமிழ் பெரிய பாட்டனார். இவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டால்தான் தமிழுக்குப் பெரியவர்கள் செய்த தொண்டுகளும் நமக்கெல்லாம் தெரியவரும்.

இந்தப் பதிவு தொடரும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

24 Responses to டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 1

 1. ரொம்ப நல்லா இருக்கு ராகவன். தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன். நானும் ஒவ்வொருமுறையும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் பொழுதும் பாலன் தேவராயனுக்கு மனத்தால் நன்றி பகர்வேன். அவர் யார் என்று தெரிந்து கொண்டு செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே! 🙂

  amas32

  • GiRa ஜிரா says:

   அந்த எண்ணத்தினால்தான் தேவராய சுவாமிகளை அறிமுகப்படுத்த இந்தப் பதிவு. நீங்கள் தொடர்ந்து படித்து கருத்திடுவது ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. 🙂 உக்கமும் தட்டொளியும் தந்து என்று ஆண்டாள் பாடுவது போல ஊக்கமும் மகிழ்ச்சியும் தந்து கருத்தேலோர் எம்பாவாய் 🙂

 2. stavirs says:

  I have read it so many times and have also memorised it, but I had no idea who wrote it until now ! thanks for the informative post. Yes it should continue, waiting for that.. and one on the kandhar anubudhi as well.

  • GiRa ஜிரா says:

   கந்தர் அநுபூதிக்கு ஏற்கனவே எழுதியாச்சே. ஆனா அதைக் கொஞ்ச செம்ம செய்யனும். சின்னச் சின்ன நகாசு வேலைகள் தேவைப்படுகின்றன.

 3. அடுத்த பாகத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் 🙂

  • GiRa ஜிரா says:

   நானுந்தான் 🙂 அதுல மீனாட்சிசுந்தரம் பிள்ளையோட பழைய ஃபோட்டோ கூட வருது.

 4. அடடா.. நேத்து தான் “வந்தாளே மகராசி” கேட்டாக.. முருகனை பாட எந்த சுலோகம் சொல்லனும்னு..! நாம தான் அதிலே சுத்தமாச்சே.., ஆனாலும் எளிதில் மனசுக்கு வந்தது சஷ்டி கவசம் தான்..! நானே பாக்கெட் சைஸ் புக் வைச்சிருக்கேன்.
  இதோ நீங்க வந்துட்டீங்க. அபயத்பாந்தவனாக..! கேள்வி மேல கேள்வி கேப்பவருக்கு எல்லாம் தெரிஞ்சிகிட்டு பதில் சொல்றதுதானே வசதி. நீங்க எழுதுங்க படிச்சி பரீச்சைக்கு தயாராகுறேன். ரொம்ப நன்றி.. நீங்க தொடர்ந்து நேரமில்லாத நிலைமையிலும் எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கு.

  • GiRa ஜிரா says:

   அந்த சின்ன சைஸ் புக் வெறும் பேப்பரும் அச்சும் கெடையாது. அது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கெல்லாம் யாரும் தரவு காட்ட முடியாது. ஆண்டவன் உத்தரவுக்கு எந்தத் தரவு இருக்கு? அப்படித்தான் சஷ்டி கவசமும். சரியா? 🙂

 5. அருமையான விவரங்கள் ஜிரா 🙂

  • GiRa ஜிரா says:

   நன்றி 🙂 விவரங்கள் பல இடங்களில் தேடியது. இவ்வளவு பெரிய மனிதர்களைப் பற்றிய தகவல்கள் சரியாகத் தொகுக்கப்படாதது நமக்கெல்லாம் இழப்பே. 😦

 6. அருமையா ஆரம்பிச்சு, முக்கியமான இடத்தில “தொடரும்” போட்டீங்க. அடுத்த பாகத்தை சீக்கரம் வெளியிடுங்க. நன்றி!

 7. அருமையான தவகல், இவர் பெங்களூர்ல வேலை செய்தார் என்பது புதிது

  • GiRa ஜிரா says:

   இப்பதானே பெங்களூர் கர்நாடகத்தின் தலைநகரம். அப்போ மெட்ராஸ் பிரெசிடென்சியில் ஒரு ஊர்தானே.

 8. .// ஆனா மொதமொதல்ல பாடியது சூலமங்கலம் சகோதரிகள். அதுதான் இன்னமும் பிரபலமாவும் தரமாகவும் இருக்குது.//

  உண்மைதான் ஜீரா. சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் என்றாலே எம் எஸ் எஸ் அம்மாவும், திருப்பாவை என்றாலே எம் எல் வியும் தான் மனசுலே வர்றாங்க. வேற யார் பாடிக் கேட்டாலும் மனசு அவ்வளவா லயிக்கறதில்லையாக்கும்.

  எல்லாம் கேட்டுப்பழகின தோஷம் போல:-)))))

  இந்தக் காது இருக்கே….. சொன்ன பேச்சைக் கேக்காது:-)

  • GiRa ஜிரா says:

   அதேதான் டீச்சர். இந்த விஷயத்துல கண் கொஞ்சம் தாரளம். ஆனா காது ரொம்பவே கறார். சொன்ன பேச்சைக் கொஞ்சமும் கேக்காது 🙂

 9. Kumaran says:

  ஆறு படைவீடுகளுக்கும் சஷ்டி கவசம் இருப்பது தெரியும்; அவற்றையும் ஓரிரு முறை படித்திருக்கிறேன். அந்த ஆறையும் எழுதியவர் தேவராய சுவாமிகள் தானா இராகவன்?

  • GiRa ஜிரா says:

   கூடல் குமரனையும் நம் பதிவுக்கு நாடல் செய்த தேவராயசுவாமிகளுக்கும் முருகனுக்கும் நன்றி 🙂

   அறியாவிடைக்கு விடையென அறியாய் விடையேறும் பெம்மான் மகனை அறிவிடை வைத்துப் பாடிய அறிவார் பெருந்தேவராயரே. 🙂

   • Kumaran says:

    அந்த ஆறையும் எழுதுவர் தேவராய சுவாமிகள் தான்னு சொல்றீங்களா அவர் இல்லைன்னு சொல்றீங்களா? புரியலையே இராகவன்.

    சும்மா என் பேரைப் பாத்தவுடனே இப்படியெல்லாம் எழுதுனா எனக்கு புரிஞ்சிரும்ன்னு நினைக்காதீங்க. கூடவே உரையும் தந்தால் தான் புரியும். 🙂

   • kavinaya says:

    //அறியாவிடைக்கு விடையென அறியாய் விடையேறும் பெம்மான் மகனை அறிவிடை வைத்துப் பாடிய அறிவார் பெருந்தேவராயரே.//

    எனக்கே புரிஞ்சிருச்சே. குமரனுக்கு புரியலைன்னா அது ச்சும்மாதானே குமரன்? 🙂

    • GiRa ஜிரா says:

     குமரனுக்குப் புரியாம இருக்குமா? இன்னும் கடினமான செய்யுள் நடைல குடுத்திருந்தா அவருக்கு டக்குன்னு புரிஞ்சிருக்கும். இது எளிமையா இருக்குல்ல. அதான் கொஞ்சம் யோசிச்சிட்டாரு 🙂

  • GiRa ஜிரா says:

   ஆமா ஆமா. ஆறையும் அவரேதான் எழுதுனாரு.

   தமிழும் வடமொழியும் கற்ற ஒங்களுக்குப் புரியுற மாதிரி என்னால எழுத முடியலையேஏஏஏஏஏ 😦

 10. dr.k jayashree moorthy says:

  மிகஅருமை ராகவன்

 11. nparamasivam1951 says:

  அருமையாக உள்ளது. மகா வித்வான் பிள்ளை அவர்கள் நீங்கள் தொகுத்தால் நன்றாக இருக்கும்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s