டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 2

இந்தப் பதிவின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு பிற்காலக் கம்பர் என்றே பெயர். தமிழ் நூல்களை இவர் தேடித் தேடி வெளிக்கொண்டு வந்த ஆர்வம்தான் பின்னாளில் உ.வே.சாவிற்கு ஓலைச்சுவடி தேடத் தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது.

தெருத்தெருவாக பிச்சையெடுத்து உண்ணும் ஒருவருக்குத் தண்டியலங்காரம் என்னும் நூலறிவு உண்டு என்பது அறிந்து அவர் பின்னால் சென்று தண்டியலங்காரம் கற்றார் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணாக்கர்கள் யாரென்று பட்டியல் தருகிறேன். பாருங்கள்.
மாயூரம் வேதநாயகம்பிள்ளை
உ.வே.சுவாமிநாத ஐயர்
பூவாளூர் தியாகராசச் செட்டியார்
சவுரிராயுலு பிள்ளை
வல்லூர் தேவராசப்பிள்ளை (இவர்தான் நாம் குறிப்பிடும் தேவராயசுவாமிகள்)

மீனாட்சி சுந்தரம்பிள்ளை(இடது) முத்துக்குமரப்பிள்ளை(வலது)

இப்படிப் பலப்பல ஆலமரங்களை உருவாக்கிய தாய் ஆலமரம்தான் தமிழ் பெரிய பாட்டனாரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.

இவரும் ஆறுமுக நாவலரும் ஒருகாலத்தவர் என்பர். ஒரு மார்கழியில் விடியற்காலையில் வைகையாற்றில் இருவரும் நீராடினார்களாம். அப்போது மார்கழிக் குளிரைக் குறித்து “பனிக்காலம் கொடியது” என்றாராம் ஆறுமுக நாவலர்.

அதற்கு நாவலரின் கருத்தை ஒட்டியே “பனிக்காலம் மிகவும் நல்லது” என்றாராம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. புரியவில்லையா?

பனிக்காலம் = பனிக்கு + ஆலம்

ஆலம் என்றால் நஞ்சு. பனிக்கு நஞ்சு மிகவும் நல்லது. அதாவது கொடிய பனியை விட நஞ்சு நல்லது என்று பொருள்.

இது செவிவழிச் செய்திதான் என்றாலும் நினைவு கொள்வதற்குத் தக்க சுவையான செய்தி.

இங்கனம் புகழ் மிகுந்த தன்னுடைய ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் சரித்திரத்தை நூலாகவே எழுதி வெளியிட்டிருக்கிறார் தமிழ்த்தாத்தா உ.வே.சா.

பெங்களூரிலிருந்த தமிழன்பர்கள் அழைப்பின் பேரில் அங்கு சென்றார் தமிழ் பெரிய பாட்டனார். அவரைத் தன்னுடனேயே தங்க வைத்து விருந்துவகை செய்தார் தேவராயன்.

கற்றுக் கொடுப்பதற்கு நல்ல ஆசானும் கற்றுக் கொள்வதற்கு நல்ல மாணவனும் இருந்தால் அவ்விடத்தில் சிறந்த அறிவு வேள்வி நடக்கும். அதுதான் நடந்தது. தமிழ் பெரிய பாட்டனாரிடம் மொழியின் வளமும் இலக்கணமும் கற்றார் தேவராயன்.

கடினமான யாப்பருங்கல காரிகை கற்பதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பு நடத்தலாம் என்று ஒரு சொலவடை உண்டு.

ஆனால் தேவராயன் மிக எளிதாக யாப்பருங்கல காரிகை என்னும் செய்யுள் இலக்கண நூலைக் கற்றார்.

கற்றதனால் ஆய பயனாக சிறந்த செய்யுட்களையும் இயற்றினார். அந்தச் செய்யுட்களில் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் கருத்துப்படி திருத்தங்களும் செய்தார்.

மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு உழைக்கத் தெரிந்த அளவுக்குப் பிழைக்கத் தெரிந்திருக்கவில்லை. அவரை அப்படிப் படைத்த பிழைக்குத் திருத்தம் செய்ய முருகன் விரும்பியதாலோ என்னவோ தேவராயனை அவருக்கு மாணாக்கராக்கினார்.

பெங்களூர் பயணம் முடிந்து தமிழ் பெரிய பாட்டனார் திருச்சீராப்பள்ளி திரும்பும் நாளும் வந்தது. கல்விக் கொடை தந்த ஆசானுக்குச் செல்வக் கொடை அளிக்க விரும்பினார் தேவராயன்.

ஐயாயிரம் வெள்ளைப்பொற்காசுகளும் அழகான பட்டாடைகளும் தந்து ஆசானை வணங்கினார்.

கணக்குப்பிள்ளை தொழிலை மறந்து தமிழ்த்தொண்டில் ஆழ்ந்திருந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு இந்தப் பரிசு மிகப்பெரிய பரிசு. இன்றைக்கும் இந்த அளவு பரிசு மிகப்பெரிய பரிசுதான்.

தன்னுடைய மாணவனை உளமார வாழ்த்தினார் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. பேரும் புகழும் பெற அவர் வாழ்த்திய வாழ்த்துதான் இன்றும் நாம் தேவராயசுவாமிகளை நினைவில் வைத்துப் பார்க்கும் பெருமையைக் கொடுத்தது என்று சொல்வதும் சரியே.

ஆசான் கிளம்பிச் சென்ற பின்னர் பெங்களூரில் கணக்குப்பிள்ளை தொழிலையும் தமிழ்த்தொண்டையும் தொடர்ந்து செய்தார் தேவராயன். பெங்களூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் யாருக்கேனும் தெரிந்திருக்கலாம். பெங்களூர் நண்பர்கள் இதுகுறித்து விசாரித்து விவரம் தந்தால் நன்று. 🙂

இளம் வயதிலேயே கல்வியும் செல்வமும் அள்ளக்குறையாமல் சேர்ந்தவருக்கு வயிற்றில் வலியும் சேர்ந்தது.

பெங்களூரின் மிக நல்ல மருத்துவமனையில் சிறப்பான மருத்துவர்களின் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் வயிற்று வலி தீரவேயில்லை.

செல்வத்தை அள்ளியள்ளிக் கொட்டினாலும் வயிறு சொன்ன பேச்சு கேட்கவில்லை. வலியும் குறையவில்லை.

தன்னுடைய திறமை வேலை செய்யாத பொழுது ஆண்டவனை நினைத்துப் பார்ப்பதுதானே நமது செயல்! அப்பரும் பகழிக்கூத்தரும் ஆதிசங்கரரும் கொண்ட வயிற்றுவலியை நினைத்துப் பார்த்தார்.

அப்பேர்ப்பட்ட பெரியவர்களுக்கு ஆண்டவன் இறங்கி வந்து அருள்வது உண்டு. ஆனால் தம்மைப் போன்றவர்களுக்கு இறைவன் உதவுவானா என்று ஒரு ஐயம்.

வலிக்கும் சந்தேகத்துக்கும் இடையில் தவித்த தேவராயனது மனது ஒரு முடிவுக்கு வந்தது. ஆம். இனிமேலும் வலியினால் உண்டாகும் வேதனையோடு வாழ்வதில் பயனில்லை என்று முடிவு கட்டி தன்னுயிரை மாய்க்க எண்ணினார்.

இருபதுகளில் ஒருவருக்கு வரவேண்டிய எண்ணமா இது! அந்தோ! தேவராயனுக்கு வந்தது. தமிழ்க்கடவுளான முருகன் குடிகொண்ட திருச்செந்தூர்க் கடலில் மூழ்கி இறக்கத் திட்டம் கொண்டு பெங்களூரிலிருந்து கிளம்பினார்  தேவராயன்.

ஆனால் இறைவன் எண்ணம் வேறுவிதமாக இருந்தது. திருச்செந்தூருக்குச் சாவைத் தேடிச் சென்ற தேவராயனை சஷ்டி வரவேற்றது. சஷ்டித் திருவிழாவைக் கொண்டாடி விட்டு உயிரை விடலாம் என்று தற்கொலையை ஆறு நாட்களுக்குத் தள்ளிப் போட்டார் தேவராயன்.

அப்படித் தள்ளிப் போட்டதுதான் செந்தூர் முருகனின் அருட்கொடையை நமக்கு அள்ளிப் போட்டது.

இந்தப் பதிவு தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

15 Responses to டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 2

 1. மீண்டும் சஸ்பென்ஸ் உடன் முடித்து உள்ளீர், அருமை எதிர் பார்க்கிறோம் அடுத்த பதிவை

  • GiRa ஜிரா says:

   சஸ்பென்ஸ் இருந்தாலும் எல்லாம் happy ending தான். 🙂

 2. அருமை ஜிரா..தகவல்கள் அமர்க்களம்..

  • GiRa ஜிரா says:

   தகவல்கள் எல்லாம் அங்கங்க கெடைக்கிறதுதான். அதுக்கு முருகனுக்கும் தகவல்களைப் பதிந்து வைத்த அன்பர்களுக்கும் நன்றி சொல்லித்தான் ஆகனும். 🙂

   எல்லாருக்கும் நன்றி 🙂

 3. சக்கர நாற்காலி பற்றி ஒரு பதிவில் பெயரில் இருப்பது வாழ்வில் இருப்பதில்லை என எழுதினேன்.
  [ http://erodenagaraj.blogspot.in/2009/08/blog-post.html ]

  கோரா என்று பெயர், நல்ல அழகிய மனிதர்-எழுத்து 🙂

  ராகவஞ்சி எனப் பிடி, இனியதொரு ஆண். 🙂

  பனிக்கு மட்டுமல்ல, கோடைக்காலம் நல்லது என்றும் தோன்றியது. கோடைக்கு, ஆலின் நிழல் நல்லது. வெயில் காய என வறுபடும் பிறவிக்கு, சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா சிஷ்யா: குருர் யுவா என்னுமாப்போலே, தாபத்ரய வெயிலற, நிழல் தரும் வான் தருவும், எம் குல குருவும் தரும் ஞானமே கரை சேர்க்கும்.

  மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்ற பெயரை மீண்டும் மீண்டும் படித்தேன்.

  • GiRa ஜிரா says:

   உங்கள் பதிவைச் சென்று படிக்கிறேன். 🙂

   கோடைக்காலம் நல்லது. அட்டகாசம். உண்மைதான் கோடைக்கு ஆலம் நல்லதுதான். ரசித்தேன். 🙂

 4. mayooresan says:

  மிக்க நன்றி அண்ணா. வழமை போல அருமையான பதிவு.

  இங்கே ஆறுமக நாவலர் எனப்படுபவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழிறிஞரோ?

  • GiRa ஜிரா says:

   ஆமாம். ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்து தமிழறிஞரேதான். அந்தக் காலத்தில் தமிழறிஞர்கள் ஒருவரையொருவர் மதித்திருக்கின்றார்கள். இப்பொழுது? ம்ம்ம்ம்.

 5. Pingback: டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 3 « GRagavan’s Weblog

 6. stavirs says:

  தன்னுடைய திறமை வேலை செய்யாத பொழுது ஆண்டவனை நினைத்துப் பார்ப்பதுதானே நமது செயல்!

  Isnt that lovely … I take it back u have reached your mark in this post.

 7. kavinaya says:

  மிக அழகாகச் சொல்லுகிறீர்கள். மிக நன்றி!

 8. kavinaya says:

  பிற்காலக் கம்பரைப் பற்றி நீங்கள் சொன்னது சரியே. மறந்துதான் விட்டோம், ‘வசதியாக’ 😦 மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களை வணங்கிக் கொள்கிறேன்.

  • GiRa ஜிரா says:

   தமிழ் இலக்கியங்கள் இன்னைக்குக் கிடைக்க அவர்தான் ஆணிவேரா இருந்திருக்காரு. மீனாட்சி சுந்தரம்பிள்ளை புகழ் ஓங்குக! 🙂

 9. nparamasivam1951 says:

  4 வருடம் முன்பு வந்துள்ளது. நான் படிக்கவில்லை. இப்படி அழகான பதிவை மிஸ் செய்துவிட்டேனே.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s