டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 3

இந்தப் பதிவின் முந்தைய பதிவு இந்தச் சுட்டியில் உள்ளது.

திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்திலொரு கடற்கரை ஊர். தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது திருச்செந்தூர். “சீர்கெழு செந்திலும்” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். சீரலைவாய் என்று தொல்காப்பியம் முதலான நூல்கள் குறிப்பிடுகின்றன.

ராஜா ரவிவர்மா வரைந்த முருகன் ஓவியம்

ஊர்களில் செம்மையான ஊர் செந்தூர். அந்தச் செந்தூரிலே செம்மையான இல்லம் செந்தில். அந்த இல்லத்தில் குடியிருந்து வருகின்ற விருந்தினர்களை வாழ வைக்கின்றவனுக்குச் செந்திலாண்டவன் என்று பெயர். இந்தப் பெயர்கள்தான் பழைய பெயர்கள்.

இப்பொழுதெல்லாம் திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் என்று எழுதக் காண்கிறோம். அப்படி எழுதுவது செந்தில் என்ற அழகான பெயரை மறைப்பது போலத்தான் தோன்றுகிறது.

திருச்செந்தூர் கோயிலுக்கும் ஒரு சோதனை வந்தது. டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்குமான வியாபர அரசியல் போட்டியில் டச்சுக் கொள்ளையர்கள் திருச்செந்தூரில் இறங்கி கோயிலைச் சிறைப்பிடித்து அதைப் போர்ப்பாசறையாக மாற்றிவிட்டார்கள்.

அப்போது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் சார்பாக வடமலையப்பப்பிள்ளை என்பவர் டச்சுக்காரர்களிடம் கோயிலை விட்டுப் போகுமாறு கூறினார். ஆனால் டச்சுக்காரர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே வெளியேற முடியும் என்று கூறிவிட்டார்கள்.

அதனால் போர் உண்டாகும் சூழ்நிலை ஏற்படவும், அவசர அவசரமாக டச்சுக்காரர்கள் திருச்செந்திலாண்டவனின் உற்சவ மூர்த்தியை எடுத்துக் கொண்டு கப்பலில் கிளம்பிவிட்டார்கள்.

கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் பயந்த டச்சுக்காரர்கள் சிலையை கடலில் தூக்கிப் போட்டு விட்டு தப்பித்தனர்.

அப்போது வடமலையப்பப் பிள்ளையின் கனவில் சிலை கடலில் கிடப்பதாக முருகன் கூறினாராம். அவரும் ஆட்களை அழைத்துக் கொண்டு கடலில் தேட முருகனின் சிலை கிடைத்ததாம்.

அப்படி கடலுக்குள் இறங்கி முருகனை எடுத்து வந்த அன்பரின் பெயர் சூசை. ஆம். அவர் ஒரு கிருத்துவர். முத்துக்குளிக்கும் மீன் பிடிக்கும் தொழிலில் இருந்த அவரால்தான் முருகன் சிலை நமக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த அன்பர் சூசையைப் பற்றி திருச்செந்தூர் கோயிலில் குறிப்பும் கற்பனை ஓவியமும்  இருக்கிறது. முன்பு நானே கண்டிருக்கிறேன். இப்பொழுது அந்த ஓவியமும் குறிப்பும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கிருத்துவரின் பெயர் திருக்கோயில் வரலாற்றில் இடம் பெற்றது போல ஒரு வைணவ அடியாரின் பெயரும் திருச்செந்தூர் கோயிலோடு தொடர்புடையது.

உடலெங்கும் நாமம் தரித்த வைணவரான பகழிக்கூத்தருக்கும் வந்தது வயிற்றுவலி. அவர் நாடியதும் செந்திலைத்தான். வலி நீங்கிட திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் இயற்றினார்.  அந்த நூலோடு கோயிலுக்குச் சென்ற அவரை வைணவர் என கோயில் பூசாரிகள் தடுத்து விரட்டினர்.

ஆனால் முருகன் அவருக்கு முத்துமாலையைப் பரிசளித்து அவர் பெருமையை ஊரறியச் செய்தாராம். அதற்குப் பின்னர் பகழிக்கூத்தரை கோயிலுக்குள் விடாமல் தடுக்கும் திராணி எவருக்கும் இல்லாமல் ஆனது.

சரி. நாம் வயிற்று வலியால் துன்பப்படும் தேவராயனை மறந்து விட்டோம். அவருக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கலாம்.

செந்தூரில் முருகக்கடவுளின் திருமுகத்தைப் பார்த்ததுமே உடல் வலியை மறக்கச் செய்யும் அளவிற்கு ஒரு நிம்மதி தேவராயனை அடைந்தது.

கோயில் மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார். வலி வருத்தியது. ஆனால் அதைத் தாங்கும் திடத்தை திருச்செந்தில் தந்தது. அதுவரை கற்ற தமிழ் பொங்கிப் பெருகிக் கவசங்களாக வெளிவந்தது.

முதலில் பாடியது திருச்செந்தூருக்கான கவசம். இப்படி ஆறு நாட்களில் ஆறுபடை வீடுகளுக்கும் கவசங்கள் பாடிவிட்டார் தேவராயன்.

பாடிய கவசங்களில் எழுத்துகள் கூடக்கூட வயிற்றுவலி குறைந்து கொண்டே வந்தது. ஆறாவது கவசம் பாடி முடித்த பின்னர்தான் வயிற்று வலி முழுவதும் நீங்கி விட்டது என்பதே தேவராயருக்குப் புரிந்தது.

அந்த ஒரேயொரு நொடிதான் கந்தனின் கருணையை நினைத்துப் பார்த்தார் தேவராயன். பட்டும் பகட்டும் மறந்து காவி கட்டிக் கொள்ள அவருக்கு அந்த ஒரு நொடியே போதுமானதாக இருந்தது.

துறவை நாடியவர்கள் எல்லாம் உண்மையான துறவிகளா? இல்லை. இன்றைக்கு பார்க்கிறோமே.. பெங்களூருக்கும் மதுரைக்கும் இடையே ஓடியொளிந்து கொண்டிருக்கும் போலித் துறவிகளை. எதையோ மனதில் வைத்துக் கொண்டு துறவு வேடம் நாடிய பொய்யர்களை விட்டுத்தள்ளுவோம்.

ஆண்டவனிடத்தில் உண்மையான அன்பு எழுந்த பிறகு வாழ்வியலில் இருந்த பற்று தேவராயனுக்கு நீங்கி விட்டது. வெறும் வல்லூர் தேவராயனாக இருந்தவர் தேவராய சுவாமிகள் ஆனார்.

ஒரு மனிதனுக்கு இளம் வயதிலேயே நல்ல அறிவைக் கொடுத்து செல்வம் கொழிக்கும் தொழிலைக் கொடுத்து… அதுவும் போதாமல் மாபெரும் தமிழறிஞர் ஒருவர் வழியாகத் தமிழும் கற்றுக் கொடுத்து…அத்தோடு வயிற்று வலி என்னும் துன்பத்தையும் கொடுத்தானே முருகன்! ஏன்?

இளம் மூங்கிலில் சூட்டுக் கோலால் ஓட்டை போடுவார்கள். அது மூங்கிலுக்கு வலியைத்தான் கொடுக்கும். ஆனால் அதற்குப் பிறகு அந்த மூங்கிலிலிருந்து பிறக்கும் ஓசையனைத்தும் இசையாகி விடுகிறதே. அப்படித்தான் தேவராயசுவாமிகளைப் பற்றியும் நினைக்க வேண்டியிருக்கிறது.

சரி. ஆறு கவசங்கள் என்று பார்த்தோம். இந்த ஆறு கவசங்களைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டாமா!

இந்தப் பதிவு தொடரும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 3

 1. stavirs says:

  இளம் மூங்கிலில் சூட்டுக் கோலால் ஓட்டை போடுவார்கள். அது மூங்கிலுக்கு வலியைத்தான் கொடுக்கும். ஆனால் அதற்குப் பிறகு அந்த மூங்கிலிலிருந்து பிறக்கும் ஓசையனைத்தும் இசையாகி விடுகிறதே.

  Only you can come up with such comparisons that can make us understand the point much better. The information about the susai is commendable. There is a similar story with Perumal too, except he was taken by a muslim queen, and then she hid the statue in her bedroom. I can tell u the rest, but u can do a better job in finding this out and writing it 🙂

  • Kumaran says:

   I am sure Ragavan knows this incident already. 🙂

   • GiRa ஜிரா says:

    எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா? 🙂 எல்லார் கிட்ட இருந்தும் விவரங்களைத் தெரிஞ்சுக்கனும் குமரன் 🙂

  • GiRa ஜிரா says:

   இது நான் மட்டுமே சொன்ன எடுத்துக்காட்டா என்று தெரியவில்லை. இதற்கு முன் எங்கேயும் படித்திருந்தாலும் இருக்கலாம்.

   துலுக்க நாச்சியாரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

 2. மேலும் பல விடயங்கள் செந்தில் நாதனைப் பற்றி

 3. rramanathan says:

  தமிழுக்கு தொண்டாற்றிய தூண்களை பற்றி சிறு மணல் துகள்களான எங்களை போன்றோர்களுக்கு இந்த பதிவு ஒரு வரப்ரசாடம் வாழ்க வளர்க

 4. kavinaya says:

  திருச் செந்திலானைப் போலவே மிக அழகான பதிவு. மிக்க நன்றி!

  • GiRa ஜிரா says:

   நன்றி அக்கா 🙂

   யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால் பிளாக்மேல் மயல் போய் வோர்ட்பிரஸ் உணர்வீர் நான் மேல் பதிவிடுவேன் இனியே இனியே 🙂

 5. Kumaran says:

  என்னுடைய மேலாளர்களில் ஒருவர் இன்று அலுவலகப் பிரச்சனை ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ‘Where there is adversity there is opportunity’ என்றார். நீங்கள் சொல்வதும் அப்படித் தான் இருக்கிறது. இறை நம்மைப் பண்படுத்தத் தரும் சோதனைகளும் வேதனைகளும் கடைசியில் நன்மையிலேயே முடிந்தாலும் அந்த நேரத்தில் நோவதும் நொந்து கொள்வதும் இருக்கத் தானே செய்கிறது?!

  இந்த இடுகையில் ஆறு கவசத்தையும் தேவராய சுவாமிகள் தான் இயற்றினார் என்று எனக்கும் புரிகின்ற மாதிரி சொல்லிவிட்டீர்கள். நான் தான் அவக்கரப்பட்டு முதல் இடுகையின் போதே அதனைக் கேட்டுவிட்டேன். 🙂

  • GiRa ஜிரா says:

   உங்கள் மேலாளர் சொன்னது உண்மைதான். என்னுடைய வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் இதைத்தான். முருகனுக்கு நான் என்றென்றைக்கும் எப்பொழுதும் நான் நன்றி சொல்லிக்கொண்டேயிருந்தாலும் போதாது.

   // நான் தான் அவக்கரப்பட்டு முதல் இடுகையின் போதே அதனைக் கேட்டுவிட்டேன். 🙂 //

   அவசரமெல்லாம் இல்லை. தமிழில் முதலெழுத்து அ என்று சொன்னால், மொத்தம் எத்தனை எழுத்துகள் என்று கேட்கும் அறிவாளிக் குழந்தையைப் போல் நீர் 🙂

 6. Pingback: டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 4 « GRagavan’s Weblog

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s