தாவியது நடந்தான் கடந்தான்

நல்ல உரையாடல் என்பது மிக்சர் சாப்பிடுவது போல. சுவையான காராபூந்திகளுக்கும் ஓமப்பொடிகளுக்கும் நடுவில் முந்திரிப்பருப்புகளும் சுவையூட்டும்.

நண்பர் நாகாவோடு உரையோடும் போது அகப்பட்ட முந்திரிப்பருப்புதான் இந்தப் பதிவு.

கும்பகருணனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சற்றே விலகி ஒரு கேள்வியைக் கேட்டார் நண்பர் நாகா.

அனுமன் ஒரு படலம் முழுக்கக் கஷ்டப்பட்டுக் கடலைத் தாண்டறார், ஆனா திரும்பி வரும்போது ரெண்டே பாட்டுல திரும்பிடறார் … அங்கே கம்பரோட மேதைமை தெரியுது (வந்த வேலை முடிஞ்சது, அடுத்த நடவடிக்கையைப் பார்ப்போம், நோ வளவளா!)

ஆனா, விபீஷணன் ராவணனால் துரத்தப்பட்டதும் ஜஸ்ட் லைக் தட் ஒரே பாட்டுல கடலைத் தாண்டி வந்துடறானே, அது எப்படி? அனுமன் பெருமை குறைபடறமாதிரி தெரியலையா?

அது நிஜமாவே தாண்டச் சிரமமான (100 யோஜனை தூரம்) கடலா?

இதுதான் அவர் கேட்ட கேள்வி. எப்படிச் சிக்கிக்கொண்டிருக்கேன், பார்த்தீர்களா?

ஆனால் நாமெல்லாம் மலை தின்று கடல் குடித்தவர்களாயிற்றே. இப்படியான முந்திரிப்பருப்பு கேள்விகளை விட முடியுமா?

சரி. இந்தக் கேள்விகளுக்கு என்ன விடை?

இராமாயணத்தில் கடலைக் கடந்தது செல்வது என்பது மிகமிக முக்கியமான கட்டம். ஏனென்றால் கடலைக் கடந்தால்தான் சீதையைக் காப்பாற்ற முடியும்.

நாகா கேட்ட கேள்வியை நான் கொஞ்சம் விளக்கமாகக் கேட்கிறேன்.

சீதையைத் தேடிப் போகும் பொழுது அனுமன் கடலைத் தாண்டுகிறான். அதற்கு 94 பாடல்களோடு தனிப் படலமே பாடியிருக்கிறார் கம்பர்.

இதன் பொருள் என்ன? அந்தக் கடலைத் தாண்டுவது என்பது அனுமனோடு வந்த எவருக்கும் ஆகின்ற செயலாக இருக்கவில்லை. அனுமன் ஒருவேனே கடலைத் தாண்ட முடியும் என்று சாம்பவன் எடுத்துச் சொல்ல அனுமனும் தாண்டுகிறான். ஆக அந்த இடத்தில் அது மிகப்பெரிய வேலை.

சரி. அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்கும் சென்றாகி விட்டது. சீதையைப் பார்த்தாகி விட்டது. இராவணனைப் பார்த்துப் பேசியாகி விட்டது. இலங்கை நகருக்கும் தீவைத்தாகி விட்டது.

அடுத்து திரும்ப வேண்டியதுதானே. ஆனால் அதற்கு இரண்டேயிரண்டு பாட்டுகள்தான்.

சரி. போன வேலை முடிந்தது. அதனால் விரைவாகத் திரும்பி விட்டார். அதனால் திரும்பவும் கடலைத் தாண்டி வந்ததனான பெரிய வேலையை வளவளாவென விளக்காமல் சட்டென்று முடித்து விட்டார் கம்பர்.

இராவணனுக்கும் வீடணனுக்கும் இடையில் பிரச்சனை வருகிறது. வீடணன் இலங்கையை விட்டு கடலுக்கு இந்தப் பக்கம் இருக்கும் இராமனிடம் சரணடைகிறான். வீடணனும் கடலைத் தாண்டித்தான் வந்தான். ஆனால் அதற்கு ஒரேயொரு பாடல்தான்.

ஏதோ யாராலும் செய்ய முடியாத செயலாகப் பார்க்கப்பட்ட கடலை வீடணனும் அவனைச் சேர்ந்தவர்களும் மிகமிக எளிதாகக் கடந்து வந்து விட்டார்களே. இது அனுமனுடைய பெருமைக்குக் குறைவு ஆகாதா?

இதுதான் மையக் கேள்வி.

முதலில் நாம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதல் ஆளாக அனுமன் கடலைக் கடந்தான்
அடுத்து வீடணன் கடந்து சரணடைய வந்தான்
அடுத்து இராமனும் இலக்குவனும் வானரப்படைகளோடு கடலைக் கடந்து இலங்கைக்குப் போரிடப் போனார்கள்.

அனுமன் – குரங்கு
வீடணன் – அரக்கன்
இராமன் – மனிதன்

மூவருமே வெவ்வேறு உயிரினங்கள். அந்தந்த உயிரனங்களின் திறமைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். மட்டுப்பட்டவர்கள்.

அனுமனால் தவ்விக் கடலைக் கடக்க முடிந்தது. ஆனால் இராமனால் அது முடியாது. அவனால் கங்கையைக் கூடத் தவ்விக் கடக்க முடியாது. அங்கும் குகனின் படகுதான் தேவைப்பட்டிருக்கிறது.

ஆள் மீது அம்பெய்து கொன்றான் என்ற வலிமை உண்டு. ஆனால் அந்த அம்புகளால் கடல் மேல் பாலம் கட்டவில்லை. வானரத் தச்சனாகிய நளன் பாலத்தை அமைக்கிறான்.

வீடணனோ அரக்கன். நினைத்த போது நினைத்த இடத்திற்கு நினைத்த உருவத்தில் செல்லும் வல்லமை உண்டு. இந்தக் கடலைக் கடப்பதெல்லாம் அவனுக்கு பொரியுருண்டை தின்பது போல. வீடணன் என்ன? மாரிசனே கடலை மிக எளிதாகத் தாண்டி வந்தவன். அவன் மட்டுமல்ல பொதுவாகவே அரக்கர்களுக்கு அது மிகமிக எளிய வேலை.

சூர்ப்பனகை அடிக்கடி இலங்கைக்கும் தண்டகாரண்யத்துக்கும் இடையே shuntting அடித்தவள்தானே.

இராவணனுக்கு மற்ற அரக்கர்கள் அளவுக்குக் கூட சிரமப்பட வேண்டாம். வலவன் கடவா வானவூர்தி உண்டு. நினைத்த நேரத்தில் நினைத்த பேர்களை ஏற்றிக் கொண்டு நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் அந்த வானூர்திக்கு உண்டு.

அனுமனை கடவுளாகப் பார்க்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படிக் கடவுளாக பார்த்து விட்டதால் அனுமன் செய்ததை மற்றவர்கள் செய்தால் ஏற்பது கடினமாக இருக்கும்.

ஆனால் அடிப்படையை புரிந்து கொண்டால் கடலைக் கடந்த அனுமனின் சாதனை புரியும்.

இராமனால் அது கூட முடியாது. குரங்கு தவ்வித் தாவிக் குதித்து கடந்து விடுகிறது. மனிதன் நடந்து கடந்து செல்ல பாலம் தேவைப் படுகிறது.

அதனால்தான் அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்லும் படலத்துக்கு “கடல் தாவு படலம்” என்று பெயர் வைத்தான் கம்பன்.

வீடணனைப் பற்றிப் பார்த்தோம். அவன் இராமனிடம் சரணடைய வரும் போது கம்பன் வரிகளைக் கவனியுங்கள்.

அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்
குரங்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர்க்
கரைக்கண் வந்து இறுத்தனர் என்ற காலையில்
பொருக்கென எழுதும் என்று எண்ணிப் போயினார்

அரக்கனும் – வீடணனும்
ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும் – அவன் அமைச்சர்கள் நால்வரும்
குரங்கு இனத்தவரொடும் மனிதர் – இராமனும் இலக்குவனுமாகிய மானிடர்கள் குரங்குகளோடு
கொள்ளை நீர்க் கரைக்கண் வந்து இறுத்துனர் என்ற காலையில் – கடலின் அக்கரையில் வந்துளார்கள் எனும் பொழுது
பொருக்கென எழுதும் என்று எண்ணிப் போயினர் – விரைவாகப் போகவேண்டும் என்று எண்ணி அப்படியே போயினர்

கடைசி வரியை நன்றாகப் பாருங்கள். விரைவாகப் போக வேண்டும் என்று எண்ணினார்கள். எண்ணியதுமே எண்ணியபடி விரைவாகக் கடலைத் தாண்டிப் போய் விட்டார்கள்.

அவ்வளவுதான். அவ்வளவு லேசு அவர்களுக்கு.

குரங்காகிய அனுமன் கடலைத் தாவினான்.
மனிதனாகிய இராமன் பாலத்தில் நடந்தான்.
அரக்கனாகிய வீடணன் நினைத்ததுமே அப்படியே கடந்தான்.

சரி. முதற் கேள்வி முடிந்தது. இரண்டாவது கேள்வி?

நூறு யோசனை தூரம் என்பது மிகப் பெரிய தூரமா?

கம்பன் பாடல்களைப் படிக்கும் பொழுது நூறு யோசனை தொலைவு என்பது பெரிய தொலைவாக எனக்குத் தெரியவில்லை.

ஏனென்றால் இலங்கைக்குத் தாவுவதற்காக மகேந்திரமலையில் ஏறுகிறான் அனுமன். அங்கிருந்தே அவனுக்கு இலங்கையின் அக்கரையும் நகரின் மதிற்சுவர்களும் நன்றாகத் தெரிகின்றன.

கடலின் இக்கரையிலிருந்தே இலங்கைக் கண்ட அனுமனின் ஆர்ப்பரிப்பைப் பாருங்கள்.

கண்டனன் இலங்கை மூதூர்க் கடிபொழில்கனக நாஞ்சில்
மண்டல மதிலும்கொற்ற வாயிலும் மணியின் செய்த
வெண்தளக் களபமாட வீதியும்,பிறவும் எல்லாம்
அண்டமும்திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான்

இன்னும் கடலையே தாண்டவில்லை. ஆனாலும் பொன்னால் ஆன மதிற்சுவர்களும், வாயிலும், வீதிகளும் இன்னும் பிறவும் அவனுக்குத் தெரிந்தன.

அடுத்து சேது பந்தனப் படலம். நளனின் மேற்பார்வையில் பாலம் கட்டப்படுகிறது. அந்தப் பாலத்தின் நீள அகலங்களை ஒரு பாடலில் சொல்கிறார் கம்பர்.

யோசனை ஈண்டு ஒரு நூறு உற
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை

நீளம் – யோசனை ஒரு நூறு உற = நூறு யோசனை தொலைவு
அகலம் – ஐ இரண்டின் அகலம் = பத்து யோசனை தொலைவு

அதாவது ஒரு மடங்கு அகலம். பத்து மடங்கு நீளம். இப்படியொரு அளவுகள் கொண்ட பாலம் மிகமிகப் பெரியதாக இருக்க வாய்ப்புகள் குறைவே என்று நான் கருதுகிறேன்.

இது குறித்து உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இலக்கியம், கம்பராமாயணம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

18 Responses to தாவியது நடந்தான் கடந்தான்

  1. jaghamani says:

    ஆனால் நாமெல்லாம் மலை தின்று கடல் குடித்தவர்களாயிற்றே. இப்படியான முந்திரிப்பருப்பு கேள்விகளை விட முடியுமா?

    ரச்னையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    • GiRa ஜிரா says:

      ரசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி 🙂

  2. எப்பவும் போல அருமையான விளக்கம். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வெகு தூரமில்லையே. மனிதன், வானரம், அரக்கன் இவர்களுக்குள்ள திறமையின் வித்தியாசத்தை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    amas32

    • GiRa ஜிரா says:

      இராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் தொலைவு குறைவுதான். ஆனா குமரன் பின்னூட்டத்தைப் படிச்சீங்களா? ஒரு யோசனைங்குறது 80மைல் தொலைவாம். அப்போ இக்கரைக்கும் அக்கரைக்கும் நடுவுல ரொம்பவே தொலைவு. எங்கயோ இடிக்குது!

  3. Natarajan says:

    அனுமன் கடல் தாண்டி போய் ஒரு வேளை அங்கு அன்னை இல்லாது போயிருந்தால் கடல் தாவும் படலம் பாடப்பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. ராமரும், கடல் தாண்டும் படலுமும் சிறப்பு பெறுவது அன்னை இருப்பதால் தான். அனுமனின் பராக்கிரமம் கடல் தாண்டுவதை விட சஞ்சவி பர்வதத்தை கையில் தாங்கி கடலை தாண்டுவதில் தான் உச்சம் அடைகிறது. ஆனால் இந்த இடத்தில் ஏன் கம்பர் இவ்வளவு பாடல் வைத்திருப்பார் என எண்ணும் போது, கடலை தாண்டியவுடன் அனுமன் அன்னையை சந்திப்பான் என்பதாலேயே இத்துணை build up!

    • GiRa ஜிரா says:

      உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன். சஞ்சீவி மலை பத்தியும் எழுதனும்னு நெனச்சேன். ஆனா பதிவு பெருசா போகவும் விட்டுட்டேன். நீங்க மிகச்சரியா எடுத்துக் கொடுத்தீங்க.

  4. யோசனை என்ற நீள அளவிற்கு தற்கால அளவுகளில் பலவிதமாகக் கூறப்பட்டாலும் குறைந்தபட்சமாகக் கூறப்படுவது 8 மைல் என்பது. அதன் படி பார்த்தால் 80 மைல் அகலம், 800 மைல் நீளம் கொண்டது சேதுபந்தன ‘அணை’. (பாலம் இல்லை; அணை என்றே சங்கப் பாடல்களும், ஆழ்வார் பாசுரங்களும், நீங்கள் தந்துள்ள கம்பரின் இராமாவதாரப் பாடலும் கூறுகின்றன – ஆனால் எப்படியோ அது பாலம் என்ற ஒரு புரிதல் வந்துவிட்டது). ஒரு அணை இவ்வளவு அகலமாகத் தேவையா என்பது நல்ல கேள்வி தான்.

    • GiRa ஜிரா says:

      கம்பர் அணை என்றே குறிப்பிட்டிருக்கிறார். பாலம் என்ற சொல்லை பழைய இலக்கியங்களில் படித்த நினைவும் இல்லை.

      அணை அடைக்கவும் உதவும். கடக்கவும் உதவும். உண்மை.

      நீங்க சொல்ற படி பாத்தா இக்கரைக்கும் அக்கரைக்கும் நடுவுல 800மைல் தொலைவு இருக்கு. அதாவது 1287கிமீட்டர் தொலைவு.

      அவ்வளவு தொலைவுன்னா சென்னைல இருந்து மகாராஷ்டிராடிரால அவுரங்காபாத்துக்கே போற தொலைவு. இந்தப் பக்கம்னா ஒடிஷால கட்டாக் வந்துரும்.

      இந்தத் தொலைவு உண்மைன்னா, இராமேஸ்வரத்துல இருந்து அனுமான் கடலைத் தாண்டலை. இராமேஸ்வரத்துல இருந்துதான் தாண்டினார்னா இப்ப இருக்கும் இலங்கைக்குத் தாண்டலை.

      அதேபோல அனுமான் கால் பட்ட மகேந்திரமலை எங்கயிருக்குன்னும் தெரியலை.

      இதப் பத்தி உங்க கருத்து என்ன?

  5. அருமையான அலசல் ராகவன்!

    • GiRa ஜிரா says:

      நன்றி நாகா. இந்த அலசலுக்கும் தூண்டுகோல் நீங்கதான. 🙂

  6. very lovely analysis and writing, very proud of u

  7. kavinaya says:

    நல்ல கேள்வி; நல்ல பதில் 🙂 நமக்குக் கேள்வியும் கேட்கத் தெரியாது, பதிலும் சொல்லத் தெரியாது 🙂 ஆனால் ரசித்து வாசித்தேன் 🙂

  8. ஹைய்யோ!!!!!!!!! எப்படி…….. இப்படி…..!!!!!

    ஒரு யோஜனை என்பது சுமார் 10 மைல் என்று எங்கோ(?!!) வாசிச்ச நினைவு.

    பத்து யோஜனை அகலமுன்னா….. ஐயோ! அது மகா பெருசுல்லையா?

  9. கொஞ்சம் அடிமடியிலேயே கைவைக்கிற கேள்விகளா கேக்குறேன்…ராமாயணத்துல வர்ற இலங்கை தான் இன்றைய இலங்கையா?

    தேடுவதற்கு செல்லும் வாணரங்களுக்கு சுக்ரீவன் சொல்லும் route-ஏ பிரமிப்பா இருக்கும். சோழர்காலத்துல அவ்வளவு cartographic துல்லியம் வந்துருச்சா? நிச்சயமா அது வால்மீகி-ல இருக்காதுனு நம்பலாம் (றேன்)

    அதுனால கம்பர் காலத்துல (ராஜராஜனுக்கு இருநூறு வருடம் கழித்து) இலங்கை (ஈழம்) பத்தி நல்ல பரிச்சயம் உண்டு.

    அப்படி இருந்தும் இலங்கையை city-state போல தான் சித்தரிக்கிறார். வால்மீகி காலத்து புரிதல அவ்வளவு தான் இருக்குமோ?

    அதுனால இந்த நீள-அகல அளவுகளை ‘ஒரு கிள்ளி உப்போ’ட எடுத்துக்கலாம்.

    • GiRa ஜிரா says:

      இப்பிடியொரு கேள்விய என்னப் பாத்துக் கேட்டுட்டீங்களே 🙂

      கம்பனையும் வால்மிகியையும் ஆராய்ஞ்சவங்க ரொம்பப் பேரு.

      நான் என்னோட புரிதலைச் சொல்றேன்.

      வால்மிகியோ கம்பனோ காட்டும் இலங்கை இன்றைய இலங்கையாக இருக்க வாய்ப்புக்குறைவு.

      ஒருவேளை அது இன்றைய இலங்கைதான் என்று எடுத்துக் கொண்டால், ராமன் ராமேஸ்வரத்தில் இருந்து பாலம் கட்டவில்லை. கம்பனும் வால்மிகியும் சொன்ன அளவுகளின் படி அணை(பாலம்)யின் நீளமே கிட்டத்தட்டா 1300 கிமி.

      ஆக ராமேஸ்வரம் குறித்தான கதையும் இன்றைக்குச் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் சேது சமுத்திரப் பாலமும் பொய்.

      ராமேஸ்வரத்தில் இருந்துதான் இலங்கைக்குப் போனார்கள் என்றால், அந்த இலங்கை வேறு இலங்கை.

      வால்மிகியும் சரி, கம்பனும் சரி, இலங்கையை சிங்கப்பூர் போன்ற நகர நாடாகத்தான் வருணிக்கிறார்கள்.

      வால்மிகி வடக்கு. தெற்கு பற்றிய புரிதல்கள் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் கம்பர்? இலங்கை பற்றிய புரிதல் சங்க காலத்திலேயே உண்டு. சிலப்பதிகாரத்திலேயே கயவாகு பற்றிக் கேள்விப் படுகிறோம்.

      இவைகளை வைத்துப் பார்க்கையில் அந்த இலங்கை இந்த இலங்கை அல்ல. அதுதான் இது என்றால் வால்மிகி ஏதோ புரிதல் குழப்பத்தில் தவறான தகவல்களைத் தந்துள்ளார்.

      இதுதான் என் புரிதல்.

  10. beingbalaji says:

    நல்ல பதிவு…
    எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும்…
    உங்களுக்கு மெயில் பண்ணலாமா? 😉

  11. anonymous says:

    முன்பே சொல்ல நினைத்தது; ஆனா பலரும் வந்து சென்று, அடங்கிய பின், ஒவ்வொன்றாய்ச் சொல்லலாம் -ன்னு காத்து இருந்தேன்…

    தாவினான் – நடந்தான் – கடந்தான் என்ற அழகான சொல்லாய்வு!
    கம்பனின் சொல் அடர்த்தியும், சூழலுக்கேற்ற சொல் தேர்வும், நீங்கள் சொல்லிக் கேட்பதில் ஒரு சுகம்!
    —————

    யோஜனை – யோசனை என்னும் தூர அளவு பற்றிய பேச்சு;
    1 yojana = 9 miles approx
    என்ற அர்த்த சாத்திர அளவை மட்டுமே வைத்துப் பலரும் கணிப்பது வழக்கம்;

    அப்படீன்னா 90 மைல் அகலம், 900 மைல் நீளம் -ன்னு,
    அத்தனாம் பெரிய பாலமா? உலகிலேயே இல்லை;
    கம்பன் சொல்வது பொய்/ அதீதக் கற்பனை போலத் தோன்றும்!

    ஆனா yojana has different measurements in different contexts & different ages/times
    அதில் ஒன்று 4 கூப்பிடுகள் = 1 யோசனை
    அதாச்சும், உயரமான இடத்திலிருந்து கூப்பிட்டால், ஒலி கேட்கும் தூரம் = 1 யோசனை; இன்றைய velocity of sound என்றும் கொள்ளலாம்!
    —————

    1 yojana = longest distance traveled by sound of a call from a tall place;
    sound velocity = 300 meters/sec or 1050 ft. (approx)

    அப்போ…
    10 யோசனை அகலம் = 300 x 10 = 3000 meters
    100 யோசனை தூரம் = 300 x 100 = 30 km

    இப்போ, பாட்டை வாசியுங்கள்:
    யோசனை ஈண்டு ஒரு நூறு உற = 30 km
    ஐ இரண்டின் அகலம் அமைந்திடச் செய்ததால் அணை = 3 km

    இப்போ, அணையின் அளவு, ஓரளவு பிடிபடுகிறது அல்லவா?
    Believable measurements
    = from Dhanushkodi to Talai Mannar
    = 3 km stretch & just 30 km long, curved travel path by sea
    கம்பன், காரணம் இல்லாமல், பொய் சொல்லத் தேவையே இல்லை!

    சேதுப் “பாலமே” அல்ல! அது ஒரு “அணை”
    Dam மேலே குறுக்கால, ஒத்தையடிப் பாதை ஓடுமே, அது போல;
    அதை Bridge ஆக்கி, புனிதம் என்ற பேரில், இக்கால அரசியலே அதிகம்:(
    எனினும், இலக்கியத் தரவுகள் = அது ஓர் “அணை” மட்டுமே

    http://in.answers.yahoo.com/question/index?qid=20110806055036AAFqr5I

Leave a reply to GiRa ஜிரா Cancel reply