சீஸ்ரீதிரு அரங்கத்தின் ஒரு மாலை நேரம்

பயணத் திட்டப்படி இப்போ நாம இருக்குறது ஸ்ரீரங்கம். அங்க நடந்ததைச் சொல்றதுக்கு முன்னாடி ஸ்ரீரங்கம் என்னும் பேரைப் பத்திக் கொஞ்சம் பாக்கலாமே.

சீரங்கமா? ஸ்ரீரங்கமா? அரங்கமா? திருவரங்கமா? எது சரி? எது தவறு? இந்த விவாதம் இலக்கியவாதிகளுக்கு அல்வா சாப்பிடுறது மாதிரி.

இதப் பத்தி நெறைய விவாதங்களும் சண்டைகளும் ஏற்கனவே நடந்திருக்கு. இன்னைக்கு அந்த ஊரோட பேர் ஸ்ரீரங்கம். பஸ்ல கூட ஸ்ரீரங்கம்னுதான் எழுதியிருக்கு. எல்லாப் பெயர்ப்பலகைகள்ளயும் ஸ்ரீரங்கமே தான்.

ஆனா எனக்குத் தெரிஞ்சு எந்த வைணவ ஆழ்வாரும் ஸ்ரீரங்கம்னு பாடலை. அரங்கம்/திருவரங்கம் தான்.

அதுக்குக் காரணம் இருக்கு. ரங்கன் என்னும் பேரைத் தமிழ் இலக்கணப்படி அரங்கன்னு எழுதுறதால ஸ்ரீரங்கம் என்னும் ஊர் அரங்கம்னு அழைக்கப்படலை.

Image

அரங்கம் என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பெரிய பொருள் உண்டு. பொதுவாக பழைய தமிழில் இறைவன் இருப்பிடங்களைச் சொல்லும் போது கோட்டம், அம்பலம், அரங்கம் என்றுதான் பெயர்கள் இருக்கும். இந்த இடங்கள் பொதுவான இடங்கள்.

அம்பலத்தில் ஆண்டவன் ஆடுகின்றான் என்றால் என்ன பொருள்? எல்லாருக்கும் பொதுவானது அந்த ஆட்டம். அது போலத்தான் அரங்கம். எல்லாருக்கும் பொதுவானதொரு அரங்கத்தில் இறைவனாகப் பட்டவன் இருக்கிறான்.

அரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பதால் அரங்கன். இதில் இன்னொரு விவரமும் இருக்கிறது. அரங்கம் என்பது என்ன? மேடை/மேடு. அந்த மேட்டில் நடக்கும் கூத்து எல்லாருக்கும் பார்க்க ஏதுவாகிறது. காவிரியாற்றுக்கு நடுவில் ஒரு மேட்டில்தான் அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறான்.

இப்படி உண்டான அரங்கம் என்னும் பெயரோடு சிறப்பு சேர்க்க திருவரங்கம் என்று அழைத்தும் ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். அவர்களின் பாசுரங்களில் அரங்கனே என்றுதான் அச்சுதனையும் அழைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீ என்னும் எழுத்தைத் திரு என்று தமிழில் மாற்றுகின்றார்கள் என்றும் சொல்வார்கள். ஆனால் இங்கு ஆழ்வார் சொன்ன திருவரங்கத்தில் திரு என்ற சிறப்புப் பெயர் ஸ்ரீ என்று மாற்றப்பட்டு இன்று ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது. அரங்கனின் பெயரின் முதலெழுத்தான அகரமும் போச்சு. தாமோதரனை மோதரன் என்று அழைப்பது போல அழைத்துக் கொண்டிருக்கிறோம். கோயிலுக்குள்ளும் ரங்கா ரங்கா என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ம்ம்ம்ம்.

பொதுவில் யாரும் எப்படியும் அழைக்கலாம். ஆனால் ஆழ்வார்களையும் அவர்களது பாசுரங்களையும் மதித்து மகிழ்ந்து ஓதும் உண்மையான வைணவ அன்பர்கள் இந்தப் பெயர்க்காரணத்தை தெரிந்து உணர்ந்து கொண்டால் அரங்கம்/திருவரங்கம் என்று அழைக்கவே விரும்புவார்கள் என்பது என் கருத்து.

சரி. நம்முடைய பயண அனுபவங்களுக்கு வருவோம்.

கோயிலுக்கு முன்னாடியிருந்த கடைகளையெல்லாம் பாத்துட்டே கோயிலுக்குள்ள போனோம். போற வழியில் பிரசாதக் கடையில் புளியோதரை வாடை பிடிச்சிக்கிட்டே போனோம்.

உள்ள போனா ஒரே கூட்டம். வரிசையப் பாத்தா அமெரிக்கத் தூதரக வாசல்ல விசாவுக்கு நிக்கிற அளவுக்குப் பெருசா இருக்கு. சமயபுரத்துல வழக்கத்துக்கு மாறா அம்மனைக் குளிரக் குளிரக் கும்பிட்டது நினைவுக்கு வந்தது.

என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்போ ஒரு ஐயங்கார் வந்து ஏழு மணிக்குத்தான் நடை தெறக்கும்னு சொன்னாரு. சாயுங்காலமா திருவரங்கம் போறவங்க ஏழு மணிக்கு மேலயே போறது நல்லது. இல்லைன்னா காத்திருக்கனும். அரங்கனுடைய கருவரங்கம் மட்டுமல்ல, தாயார் சந்நதி உட்பட எல்லாக் கோயில்களுமே ஏழு மணிக்குதான் திறக்கும்னு அந்த ஆள் சொன்னாரு. இது எவ்வளவு உண்மைன்னு தெரியலை. தெரிஞ்சங்க சொல்லுங்க.

அதே ஐயங்கார் 250ரூவா வரிசையைப் பத்தியும் சொன்னாரு. சரின்னு அந்த வரிசைல உக்காந்தோம். ஆறேமுக்காலுக்கு வரிசை நகந்தது. மொதல்ல 250ரூவா வரிசைய உள்ள விட்டுட்டு அப்புறமா 50ரூவா வரிசையை விடுறாங்க.

Image

250 ரூவா குடுத்ததால நின்னு நிதானமாக் கும்பிடலாம்னு நெனச்சிறாதீங்க. அப்படியே போயிட்டேயிருக்கனும். நாங்க போனப்போ அரங்கனுக்குத் தைலக்காப்பு சாத்தியிருப்பதாகச் சொல்லி அரங்கனுடைய முகம் மட்டும் தெரியிற மாதிரி துணி போட்டு மறைச்சிருந்தாங்க. கும்பிடு போட்டுட்டுக் கெளம்பீட்டோம். தைலக்காப்பு சாத்தியிருந்தா ஏன் முகம் மட்டும் தெரியுற மாதிரி மூடியிருக்கனும்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க.

கோயிலுக்குப் போனோம். சாமி கும்பிட்டோம்னு ஒரு திருப்தியே இல்லை. திருச்செந்தூர், பழனி மாதிரி பெரிய கோயில்கள்ளயும் இதுதான் நிலமை. தெலுங்கு தேசக் கோயில்லதான் ஜருகண்டி ஜருகண்டி என்றால் தமிழ்நாட்டுக் கோயில்களிலும் நகருங்க நகருங்க தான்.

அரங்கன் செய்யாமல் விட்டதைத் திருமகள் செய்து விட்டாள். ஆமா. கோயிலைச் சுற்றி வரும் போது மகாலட்சுமியின் சந்நதியில் நல்ல தரிசனம். அங்கிருந்த பூசாரி மிக அழகாகக் கோயில் தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். திருமகள் கோயிலை ஒட்டி திருமங்கையாழ்வார் கட்டிய நெற்கிடங்குகளையும் சுட்டிக் காட்டினார். இருட்டி விட்டதால் எத்தனை என்று எண்ண முடியவில்லை. ஆனால் செங்கல் வைத்து சுண்ணாம்பு பூசிக் கட்டப்பட்ட நல்ல உயரமான சேமிப்புக் கிடங்குகள் என்று பார்த்ததும் புரிந்தது. திருமகளுக்குத் தொண்டு செய்யும் பூசாரி எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. என் கையில் ஊற்றும் போது சர்வரோக நிவாரணி என்று சொல்லி ஊற்றினார். திருமகளுக்கும் அவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டேன்.

அப்படியே கோயிலைச் சுத்தி வந்தோம். என்னுடைய வழக்கம் போல ராமர் சந்நதியையும் அனுமாரையும் வணங்காமல் கோயிலை வலம் வந்தேன். அப்படியே வந்து இராமானுசரையும் பாத்திடலாம்னு உள்ள போனேன். அங்க ஒரு அம்பது அறுபது பேர் சேந்து ஏதோ பாடீட்டிருந்தாங்க. என்ன பாடுனாங்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியலை. தள்ளியிருந்தே இராமானுசரைப் பாத்துட்டு வெளிய வந்தாச்சு.

திருவரங்கம் போகும் பிரசாதப் பிரியர்களுக்கு ஒரு குறிப்பு. கோயிலைச் சுற்றி வரும் போது ஒரு பழைய அறையில் ஒருத்தர் பிரசாதம் வித்துட்டிருப்பாரு. அங்க போகாதீங்க. புளிப்பில்லா புளியோதரை பிடிச்சவங்க அங்க வாங்கிக்கலாம். அதைத் தாண்டி வரும் போது மண்டபத்தில் கடை மாதிரி போட்டு டோக்கன் எல்லாம் குடுத்து பிரசாதம் விக்கிறாங்க. அங்க வாங்குங்க. புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் அருமை. நல்ல வாழையிலையில் வெச்சுக் குடுக்குறாங்க. நல்ல மணம் + சுவை.

ஐயங்கார் புளியோதரைக்கும் மத்த புளியோதரைக்கும் சிலபல வேறுபாடுகள் உண்டு. அந்தப் புளியோதரையை அந்த அளவுக்கு மெனக்கிடாமல் கிட்டத்தட்ட அதே சுவையோட செய்றது எப்படீன்னு முந்தி தூத்துக்குடியில் ஒரு மாமி சொல்லிக் கொடுத்திருந்தாங்க. அந்த ரெசிபி பத்தி தனியா ஒரு பதிவு போடுறேன்.

Image

திருவரங்கத்துப் பிரசாதங்களை முடிச்சிட்டு கோயிலை விட்டு வெளிய வந்தோம். கார் டிரைவருக்கு ஃபோன் பண்ணா “Please check the number you have diallled”னு வருது. ஏர்டெல், ஏர்செல், வோடாபோன்னு எதுல இருந்து கூப்டாலும் அதே பதில். கோயிலுக்கு முன்னாடி பெரியார் சிலைக்குப் பக்கத்துல இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல தெருவில் செருப்பு கூட இல்லாம நின்னுக்கிட்டிருக்கோம். பைகள் எல்லாமே காருக்குள்ள. கேமாரா பை உட்பட.

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, திருச்சி பயணம், பயணம், விஷ்ணு and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

20 Responses to சீஸ்ரீதிரு அரங்கத்தின் ஒரு மாலை நேரம்

 1. பெரியாரை நினைச்சால் என் மனசுக்குள்ளே பாவமாத்தான் இருக்கு. சாமி இல்லைன்னு சொன்னவரை கோவிலை 24 மணி நேரமும் பார்த்தபடி நிக்கவோ உக்காரவோ வச்சுட்டாங்க பாருங்க!!!!

  பட்டீஸ்வரம் கோவிலுக்கு முன்னாலேயும் கால்கடுக்க நிக்கறார். அப்ப என் மனசுலே தோணுச்சு மேலே உள்ள பாரா:(

  நம்ம ஜெயஸ்ரீயின் தாளிக்கும் ஓசையில் கோவில் ரெஸிபி எல்லாம் வந்துருக்கே பார்க்கலையா?

  ராமன் அனுமன் வேணாமா? போயிட்டுப்போறது….. ஆண்டாள் என்ன சொன்னாள்?

  • GiRa ஜிரா says:

   // பெரியாரை நினைச்சால் என் மனசுக்குள்ளே பாவமாத்தான் இருக்கு. சாமி இல்லைன்னு சொன்னவரை கோவிலை 24 மணி நேரமும் பார்த்தபடி நிக்கவோ உக்காரவோ வச்சுட்டாங்க பாருங்க!!! //

   நான் அப்படி நினைக்கலை டீச்சர். கோயிலுக்குள்ள போகும் போதும் கோயிலை விட்டு வரும் போதும் பெரியார் சொன்னதை நினைச்சுப் பாருன்னு நமக்குச் சொல்ற மாதிரி வெச்சிருக்காங்கன்னு தோணுது.

   எங்க பெரியார் சிலைய வெச்சாலும் அது எங்குமிருக்கும் ஆண்டவனைப் பாத்த மாதிரிதானே இருக்கும்? 🙂

   // நம்ம ஜெயஸ்ரீயின் தாளிக்கும் ஓசையில் கோவில் ரெஸிபி எல்லாம் வந்துருக்கே பார்க்கலையா? //

   இல்லையே. லிங்குசாமி பிளீஸ்

   // ராமன் அனுமன் வேணாமா? போயிட்டுப்போறது….. ஆண்டாள் என்ன சொன்னாள்? //

   ஆண்டாளைப் பாக்கலையே. திருமகள் பார்த்த அருளில் கோயிலின் மற்ற எல்லாம் பின்னுப் போய்விட்டது. புளியோதரை தவிர 🙂

 2. \\என்னுடைய வழக்கம் போல ராமர் சந்நதியையும் அனுமாரையும் வணங்காமல் கோயிலை வலம் வந்தேன்.\\

  ஏன் அவுங்க ரெண்டு பேருக்கும் மட்டும் இப்படி ஒரு ஸ்பெசல் !? 😉

  சமீபத்தில வடபழனி முருகனை பார்க்க போயிருந்தேன்…என்ன தான் ஸ்பெசல் டிக்கெட் எடுத்தாலும் அமைச்சர்கள் (அமைச்சர் வளர்மதி) வந்தால் அதோ கதி தான் கிட்டதட்ட 1 மணிநேரம் நிக்கவுட்டாங்க.

  • GiRa ஜிரா says:

   // ஏன் அவுங்க ரெண்டு பேருக்கும் மட்டும் இப்படி ஒரு ஸ்பெசல் !? //

   நான் ஈ படத்துல கேக்குற மாதிரி கேக்குறீங்களே 🙂 எல்லாம் ஒரு நம்பிக்கையினால்தான். 🙂

   // சமீபத்தில வடபழனி முருகனை பார்க்க போயிருந்தேன்…என்ன தான் ஸ்பெசல் டிக்கெட் எடுத்தாலும் அமைச்சர்கள் (அமைச்சர் வளர்மதி) வந்தால் அதோ கதி தான் கிட்டதட்ட 1 மணிநேரம் நிக்கவுட்டாங்க) //

   எல்லாப் பெரிய கோயில்கள்ளயும் இதுதான் நெலமை. என்னைக் கேட்டா உண்மையான பக்தி இருந்தா கோயிலுக்கே போக வேண்டியதில்லை. இல்லைன்னாலும் பக்கத்துல ஏதாச்சும் சின்னக் கோயிலுக்குப் போய்க்கலாம்.

 3. johan paris says:

  பொதுவில் யாரும் எப்படியும் அழைக்கலாம். ஆனால் ஆழ்வார்களையும் அவர்களது பாசுரங்களையும் மதித்து மகிழ்ந்து ஓதும் உண்மையான வைணவ அன்பர்கள் இந்தப் பெயர்க்காரணத்தை தெரிந்து உணர்ந்து கொண்டால் அரங்கம்/திருவரங்கம் என்று அழைக்கவே விரும்புவார்கள் என்பது என் கருத்து.//
  திரு அரங்கம் என்றால் அது தூயதமிழல்லவா?அந்த நீசபாசையை நாம சொல்லுவோமா?தமிழிலில் பாடியபோதே காவிரி சலம் கொண்டு கழுவியவர்கள் நாம், அரங்கா எனச் சொல்வோமா? அதுவும் கோவிலுக்குள், கூடவே கூடாது. ஆழ்வார்கள் தெரியாமல் பாடிப் போட்டா? நாம திருத்த வேண்டாமோ??

  நான் தமிழகம் சென்றபோதும், அரங்கனைத் தரிசிக்கவில்லை. என்னை அவர் அழைக்கவில்லை. (என் தாயார் அப்படித்தான் கூறுவார்). ஆனால் சென்றகோவில்களில் பட்ட சிரமங்கள், ஆண்டவனை வெளியே நின்று மனதால் தொழுவோம். எனும் நிலைக்குத் தள்ளிவிட்டது. சிதம்பரத்தை நினைத்தால் முத்தி என்பார்கள். இப்போதும் நினைத்தால் 2004 ல் தப்பி வந்து விட்டோமே, என்பது பயம் கலந்த அதிர்ச்சியைத் தருகிறது.
  செந்தூரனைச் சென்று கண்டுதொழ எனக்கு நான்முகன் நாலாயிரம் கண்தரவில்லையே என்ற கவலை தராமல் , பார்க்குமுன்னே வெளியே தள்ளிவிட்டார்கள், கோவில் அறத்தைக் காப்போர்.
  பணம் கொடுத்துப் பார்க்க எந்தக் கோவிலிலும் மனம் இடந்தரவில்லை. அன்னை வேளாங்கன்னியை எந்தச் சிக்கலுமின்றித் தரிசிக்கமுடிந்தது.

  இன்று பெரியாரைச் சொல்லி காலமோட்டுவோர், அவர்கள் மஞ்சள் துண்டுக் கொள்கை, கோவில் யானைக்கு ஓய்வும், உல்லாசமும் கொடுக்கும் கொள்கைப்படி, அவரைச் சிலையாக தங்கள் கொள்கைக்கு
  ஏற்ற இடத்திலேயே இருத்திவிட்டார்கள்.
  ஆனால் பெரியார் வைத்தியம், முரட்டு வைத்தியம்- ஏனெனில் நோய் அப்போ மிக உக்கிரம்.பெரியாரில் தேவை இருந்ததென்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

  உங்கள் நேர்மையான எழுத்துக்கு மிக்க நன்றி!

  • GiRa ஜிரா says:

   வணக்கம் யோகன் ஐயா, நீண்ட இடைவெளிக்குப் பின் என்னுடைய வலைப்பூவில் உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

   உங்கள் அனுபவங்கள் வேதனை தருகின்றன. இந்த வேதனைகள் தீர வேண்டிய வேதனைகள். இனிமேல் யாரும் படக்கூடாத வேதனைகள்.

   இதோ.. இன்றைக்கு டீவியில் வேதம் ஓதும் வெள்ளைக்காரர் என்று காட்டுகிறார்கள். ஒரு வெள்ளைக்காரருக்குப் பூணூல் போட்டு சபை நடுவில் அமர வைத்து என்னென்னவோ செய்கிறார்கள். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் மனிதனைச் சமமான மனிதனாகக்கூட மதிப்பதில்லை.

 4. அரங்கன் என்றால் நிறமில்லாதவன்…அதாவது கருப்பன்

  • GiRa ஜிரா says:

   இது தவறு என்றே கருதுகிறேன். நிறமற்றது கருமையல்ல. கருமை என்பது ஒரு நிறம். நிறமற்றதற்கு நல்ல எடுத்துக்காட்டு படிகம். அ+ரங்கு என்று பிரிப்பது விருப்பபடி பொருள் சொல்வதற்கே உதவும். அரங்கன் என்னும் பெயரின் உண்மையான பொருளைச் சொல்ல உதவாது என்பது என் கருத்து.

 5. கோவிலுக்கு சென்று வந்த அனுபவம் கிடைத்தது…. நன்றி ஐயா…

  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  • GiRa ஜிரா says:

   ஆகா. புளியோதரை தந்த புண்ணியவதி வாழ்க வாழ்க. 🙂 நானே கைப்பட செஞ்சு பாத்துட்டுச் சொல்றேன் 🙂 முடிஞ்சா படத்தோட.

 6. stavirs says:

  You really like playing with controversies dont you 🙂 ?

  Glad you got blessed by the archagar. Its true blessings always comes in unexpected ways.

  • GiRa ஜிரா says:

   Speaking the fact has become controversy in these days. 🙂 கலிகாலம். கலிகாலம்.

   // Its true blessings always comes in unexpected ways. //

   True. True. Real blessings come as surprises.

   • stavirs says:

    Thats the problem u see, what is factual to u is ur perceived truth. U can quote all that u want to quote but history itself is not the ultimate truth, its someone’s version of truth 🙂 problem arises when someone wants to proclaim their version of truth as universal truth 🙂 ok.. vitruden 🙂

   • stavirs says:

    My phd friend said, new age society no more appreciates the word ” supersition” , it is renamed to “cultural belief” And I loved the idea of respecting others belief. I dont have to necessarily believe in it, and i also dont have to say that is wrong. I just wish there are some parts of the post that u could have writtern with more caution.

 7. Pingback: திக்திக்கிலிருந்து தித்திக்கும் திருச்சிக்கு « GRagavan’s Weblog

 8. anonymous says:

  அப்பா…
  புகுந்த வீட்டில் வாழ்க்கைப்பட்டவளுக்கு பிறந்து வீடு இல்லை;
  என்றாலும்…
  உன்னை எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே!

  குடதிசை முடியை வைத்துக்
  குணதிசை பாதம் நீட்டி
  வடதிசை பின்பு காட்டித்
  தென்திசை இலங்கை நோக்கிக்
  கடல்நிறக் கடவுள் – “எந்தை”
  அரவணைத் துயிலுமா கண்டு
  உடல் எனக்கு உருகுமாலோ
  என் செய்கேன் உலகத்தீரே?

  கங்கையிற் புனிதம் ஆய
  காவேரி நடுவில் பாட்டு
  பொங்கு நீர் புரந்து பாயும்
  பூம்பொழில் “அரங்கம்” தன்னுள்
  எங்கள் மால் இறைவன் – ஈசன்
  கிடந்ததோர் கிடைக்கை கண்டும்
  எங்ஙனம் மறந்து வாழ்வேன்?
  ஏழையேன் ஏழையேனே!

  அமர ஓர் அங்கம் ஆறும்
  வேதம் ஓர் நான்கும் ஓதித்
  தமர்களில் தலைவர் என்னும்
  சாதி அந்தணர்கள் ஏலும்
  நுமர்களைப் பழிப்பார் ஆகில்
  நொடிப்பதோர் அளவில் ஆங்கே
  அவர்கள் தான் புலையர் போலும்
  அரங்க மா நகருளானே!

  பச்சை மா மலைபோல் மேனி
  பவழவாய்க் கமலச் செங்கண்
  அச்சுதா அமரர் ஏறே
  ஆயர் தம் கொழுந்ந்ந்தே என்னும்
  இச்சுவை தவிர – யான்போய்
  இந்திர லோகம் ஆளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன்
  அரங்க மா நகருளானே!

  கந்தனும் வள்ளியும் ஓர் வடம் தொட்டு ஆட்ட
  திருவரங்கப் பெருமாளே, ஆடிர் ஊசல்!
  ஆடிர் ஊசல்! எந்தையே, ஆடிர் ஊசல்!

 9. anonymous says:

  “அரங்கம்” என்ற இன்தமிழ்ச் சொல்லின், பொருள் சொன்ன பான்மை;
  உங்களுக்கு நன்றி; ”
  அரங்கன்” என்றே ஆழ்வார்கள், அவனைக் காட்டிக் குடுத்தது!
  ரங்கா என்றோ, ரெங்கா ரெங்கா என்றோ, ஸ்ரீரங்கா என்றோ அல்ல!

  * ஆண்டாள், “அரங்கர்”க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம்!

  * விரிதிரைக் காவிரி, வியன்பெரு துருத்தி – “அரங்கத்”
  திரு-அமர் மார்பன் கிடந்த வண்ணமும்
  ….என்றே இளங்கோவின் அழகுச் சிலம்பும் சிணுங்கும்!

  * உரகபடம் மேல் வளர்ந்த
  பெரிய பெருமாள் “அரங்கர்”
  உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே!
  பகை அசுரர் சேனை கொன்று
  அமரர் சிறை மீள வென்று
  பழநி மலை மீதில் நின்ற …… பெருமாளே!
  -ன்னு அருணகிரியும், “அரங்கன்” என்றே அழைத்திடுவார்;

 10. anonymous says:

  //தைலக்காப்பு சாத்தியிருந்தா ஏன் முகம் மட்டும் தெரியுற மாதிரி மூடியிருக்கனும்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க?//

  பொதுவாக, விண்ணவத் தலங்களில், அதுவும் தொல் தலங்களில், மூலத் திருமேனியைக், கால மாற்றத்தால் ஊறு நேராத வண்ணம் பார்த்துக் கொள்வது வழக்கம்; அதற்கான “விதிகள்”, கோயில் ஒழுகில் உண்டு!

  அப்படி, ஆண்டுக்கு ஒரு முறையோ, அல்லது இரு முறையோ…
  கார் காலத்திலும் (ஆடி-ஆவணி), குளிர்க் காலத்திலும் (மார்கழி-தை)…
  மருந்துத் தைலங்கள் அரைத்துக், கல் திருமேனிக்குப் பூசி வைப்பார்கள்;

  இதனால் கல் வெடிப்பு, கல் சிதைவு நிகழ்வது குறையும்!
  திருமஞ்சனம் (அபிஷேகம்) முதலானவற்றால், ஊறி உறித் தேய்வதும் குறையும்!
  இது, அந்தக் கலை வடித்த சிற்பியின் நுண்ணியலையும் போற்றிச் செய்யப்படும் ஒரு Maintenance நிகழ்வு!

  அதற்காக, மொத்தமாக மூடிவிட்டால், அடியவர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்பதால் முகம் மட்டும் விட்டு, மற்ற மருந்திட்ட இடங்களைத் துணியால் காப்பு கட்டுவது வழக்கம் = இதுவே தைலக் காப்பு!
  ———————

  முகத்தையும் பராமரிக்கும் பொருட்டு, பச்சைக் கருப்பூரம் கலந்த இதர தைலங்களால், அவ்வப்போது ஒத்தி எடுப்பதும் உண்டு!

  அல்லிக்கேணி முதலான சில ஆலயங்களில், மார்கழி ஏகாதசிக்கு முன், முகத்தையும் மறைத்துத், தொடர்ந்து மூன்று நாட்கள் திரையிட்டு விடும் வழக்கமும் உண்டு! அந்த நேரத்தில் சென்றால் சற்றுச் சங்கடம் தான்;

 11. anonymous says:

  பெரியார்…

  அரங்கனின் முன்னிருக்க, முழுதும் தகுதி பெற்றவர்;
  ஆழ்வார்களினும் மேலானதொரு உள்ளப் புரட்சி!
  இப்படிச் சொல்வதற்காக, தீவிர வைணவர்கள் யாரும் கோவித்துக் கொள்ள வேணாம்!

  ஆழ்வார் பாசுரம் ஒன்று – நாலாயிரத்தில் முதலாயிரம் – திருமாலையில் வருவது:
  பெரியார் என்ன சொன்னாரோ, அதைப் போலவே தான் இருக்கும்;

  நிறுத்தி நிதானமா வாசிச்சா, ஒங்களுக்கே தெரியும்; கோயிலில் இதன் பொருள் தெரியாமலயே, இன்னிக்கும் ஓதுறாங்களோ என்னவோ?:)

  அமர ஓர் அங்கம் ஆறும்
  வேதம் ஓர் நான்கும் ஓதித்
  தமர்களில் தலைவர் என்னும்
  சாதி அந்தணர்கள் ஏலும்
  நுமர்களைப் பழிப்பார் ஆகில்
  நொடிப்பதோர் அளவில் ஆங்கே
  அவர்கள் தான் புலையர் போலும்
  அரங்க மா நகருளானே!

  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கட்டாவாக வருணாசிரம தருமம் கோலோச்சிய காலத்திலேயே, இப்படியொரு பாசுரம்!
  இந்தப் பாசுரத்தை “உள்ளத்தால்” படித்த உண்மையான திருமால் அன்பர்கள் எவரும், அரங்கன் ஆலயப் பெரியார் சிலையினை எதிரக்கவே மாட்டார்கள்!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s