சிலந்திக்கும் யானைக்கும் சண்டை

நடுவுல பெங்களூர் போக வேண்டியதாப் போச்சு. அதுனால அடுத்த பதிவுக்குக் கொஞ்சம் இடைவெளி விழுந்துருச்சு. இதோ திருவானைக்காவலுக்குப் போவோம். முந்தைய பதிவுக்கான சுட்டி இங்கே.

திருவானைக்காவல் மிகவும் அழகான தமிழ்ப் பெயர். அங்கிருக்கும் கோயிலும் அழகானது. கோயிலில் இருக்கும் அன்னையும் அழகு. அவளது காதணிகளும் மிக அழகு. பெரியது.

முருகன் கோயில், அம்மன் கோயில்களை விட சிவன் கோயில் அமைதியா இருக்கும். பெருமாள் கோயில் கொண்டாட்டங்களைச் சொல்லவே வேண்டியதில்லை. அதுவும் நல்லாத்தான் இருக்கும்.

ஆனாலும் பொதுவா சிவன் கோயில் மத்த கோயில்களை விட அமைதியா இருக்கும். அதே போல புத்தர் கோயில்களும் அமைதியா இருக்கும். அதுக்குக் காரணம் இருக்கு.

சிவனும் சரி, புத்தரும் சரி, ரெண்டு பேருமே தவசிகள். எப்பவுமே தவத்தில் உட்கார்ந்திருப்பாங்க. தவம் மனதை அமைதிப்படுத்தும். ஆண்டவனை நினைச்சு இருக்கும் தவம் அமைதிப்படுத்தும்னா, ஆண்டவனே தவம் இருந்தா எவ்வளவு அமைதியா இருக்கும்!

ஒரு கதை சொல்வாங்க. புத்தர் தவத்தில் இருக்குறப்போ அந்த தவத்தின் ஆற்றல் புத்தரைச் சுற்றி பலப்பல யோசனைத் தொலைவுகளுக்கு இருக்குமாம். ஒருவேளை மானைத் துரத்திக் கொண்டு வரும் புலி அந்த தவ ஆற்றல் இருக்கும் இடத்துக்குள்ள நுழைஞ்சிருச்சுன்னா, அதோட சீற்றமும் பசியும் அடங்கி அமைதியாயிருமாம். புத்தரின் தவத்தால் அந்தப் புலியின் மனமும் அமைதியாகி அதுவும் தவத்துல விழுந்திருமாம்.

உள்ளத்தை ஒருமுகப் படுத்தும் தவம் உடம்புக்கும் நல்லது. அதுவும் காலையில் செய்யும் தவம் மிகவும் நல்லது.

அந்த அமைதிக்காகத்தான் காலையில் திருவானைக்காவலுக்குப் போகனும்னு நான் விரும்பினேன். கோயிலும் அமைதியா இருந்தது. அதுவும் சிவனுக்குச் சிறப்பானதாகச் சொல்லப்படும் திங்கட்கிழமை.

வாசல்ல கொஞ்சம் நாகலிங்கப்பூ வாங்கிக்கிட்டோம். நாகலிங்கப்பூ தெரியும்ல? அஞ்சுதலைப் பாம்பு படமெடுத்தாப்புல இருக்கும். உள்ள ஒரு குட்டி லிங்கம் இருக்கும். மிக அழகான மலர். சிவனை நம்புறவங்களுக்கு ஒரு நாகலிங்கப்பூ ஒரு கோயிலுக்குச் சமம். சிவலிங்கமோ கோயிலோ இல்லைன்னா நாகலிங்கப்பூவையே கும்பிடலாம்.

திருவானைக்காவல் கோயில் பஞ்சலிங்கங்களில் நீரைக் குறிக்கிறது. சிவலிங்கம் இருக்கும் இடத்தில் தண்ணீர் ஊறிக்கொண்டேயிருக்கிறது. மழைக்காலங்களில் நீரின் அளவு கூடுகிறது. காவிரிப் படுகையில் அதற்கேற்ற வகையில் அழகாக அமைந்திருக்கிறது கோயில்.

சிவலிங்கம் இருக்கும் கருவறை மிகச்சிறியது. ஒரு கதை சொல்வாங்க. காட்டில் வெண்நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மேல் இலையும் தூசியும் விழாம ஒரு சிலந்தி வலைகட்டிக் காப்பாத்துச்சாம். அந்தப் பக்கம் வந்த ஒரு யானையோ சிவலிங்கத்து மேல சிலந்தி வலைபின்னிப் பாழடைஞ்சிருச்சேன்னு வருத்தப்பட்டு அந்த வலையை அத்துப் போட்டுச்சாம்.

மறுபடியும் சிலந்தி வலையக் கட்ட, மறுபடியும் யானை பிய்க்கன்னு இந்தச் சண்டை கொஞ்ச நாள் நடந்திருக்கு. ஒருநாள் சிலந்தி ரொம்ப ஆத்திரபட்டு யானையோட தும்பிக்கைக்குள்ள நுழைஞ்சிருச்சாம். அந்த வேதனை தாங்காம யானை இறந்து விழ உள்ளயே சிலந்தியும் இறந்திருச்சாம்.

இறந்து போன அந்தச் சிலந்தி கோச்செங்கண் என்னும் சோழ மன்னனாகப் பிறந்ததாம். அந்தச் சோழன் கட்டியதுதான் இந்தக் கோயில்னு தலபுராணக் கதை சொல்றாங்க. கோயிலுக்குள்ள யானை வந்திருமோன்னு கருவறையை ரொம்பச் சிறுசா யானை நுழைய முடியாத வகையில் சிலந்திச் சோழன் கட்டினான்னு சொல்வாங்க.

சரி. கதையில் அந்த யானைக்கு என்னாச்சுன்னு தெரிய வேண்டாமா? அதுக்கான பதில் இந்தப் பதிவில் ஒரு எடத்துல இருக்கு. லேசாக் கண்டுபிடிச்சிரலாம். 🙂

கதையும் சுவையான கதைதான். கோயிலுக்குள் நுழையும் போது இந்தக் கதை ஒரு நினைவலை மாதிரி நொடியில் மூளைக்குள் வந்துட்டுப் போச்சு. கதையத் தள்ளி வெச்சுட்டு கடவுளைக் கும்பிடலாம்னு கருவறைக்குள் நுழைஞ்சேன். ஆனை மட்டுமல்ல குதிரை கூட நுழைய முடியாது. சின்ன அறைதான். உள்ள போனா சிவலிங்கத்துக்குப் பக்கத்துல நின்னு கும்பிடலாம். பொன்னார் மேனியனைத் தண்ணீர் மேனியனாப் பாத்து ரசிச்சேன்.

கருவறையில் தரிசனம் பண்ணீட்டு வெளிய வர்ரப்போ நல்லாக் குனிஞ்சு வராததால தலை லேசா இடிச்சிருச்சு. வலியெல்லாம் இல்லாம மெத்துன்னு லேசா இடிச்சது. அந்நேரம் அந்தப் பக்கம் வந்த ஒரு அம்மா, “மறுபடியும் உள்ள போங்க தம்பி”ன்னு சொன்னாங்க. நானும் உள்ள வந்துட்டேன். மறுபடியும் அருளின்பம் பெருக்கும் தீபாராதனை. இரண்டாம் காட்சி தந்த ஈசனுக்கு நன்றி சொல்லீட்டு வெளிய வந்தேன்.

திருவானைக்காவில் இருக்கும் அம்பிகைக்கு அகிலாண்டேசுவரி என்று பெயர். அகிலத்தையே படைத்து ஆட்சி செய்யும் அவள் அகிலத்துக்கே ஈசுவரிதான். அவளை உள்ளமும் உயிரும் குளிர வணங்கிவிட்டு வெளியே வந்தோம்.

ஆனைக்காகாரி சாமானியப்பட்டவள் அல்ல. கல்வி முழுதும் கற்க வேண்டும் என்று ஒரு அந்தணன் அம்பிகையை நோக்கித் தவம் இருந்தான். அம்பிகையும் வந்தாள். அவன் கற்பனையில் கண்டு வைத்திருந்த பட்டுச் சீலை இல்லை. சூரியனையே கண்கூச வைக்கும் நகைகள் இல்லை. எதிர்த்தவரைக் குத்திக் கிழிக்கும் சூலமும் இல்லை. ஆனால் ஞாலம் முழுதும் காக்கும் அன்னையோ தாய்மைக்குரிய எளிமையோடு வந்தாள். வந்தவளும் வாயில் வெற்றிலை மென்று கொண்டிருந்தாள்.

அந்தணனனால் அவளை அம்பிகையாகவே நினைக்க முடியவில்லை . அவள் வாயில் செம்மையாக இருந்தது மெல்லப்பட்ட வெற்றிலை அல்ல. ஞானம். நம்பிக்கை இல்லாதவனுக்கு அது புரியவில்லை. ”சீ போ போ” என்று விரட்டி விட்டான். அம்பிகை அப்படியே கோயிலைச் சுற்றி வந்தாள். மடப்பள்ளியில் சமைத்து நன்றாகத் தின்று விட்டுப் படுத்திருந்தான் வரதன். “வரதா, வாயைத் திற” என்றாள் அன்னை. அவனும் வாயில் பொங்கலோ பாயசமோ விழப்போகிறது என்று அரைகுறைத் தூக்கத்தில் வாயைத் திறந்தான். அம்பிகை தான் மென்றிருந்த வெற்றிலையை அவன் வாயில் உமிழ்ந்தாள். வெறும் வரதன் அன்றிலிருந்து கவிமழை பொழியும் காளமேகம் ஆனான். இதுதான் காளமேகப் புலவரின் கதை.

பிள்ளைகளுக்கு படிப்பும் தங்களுக்கு நல்லறிவும் வேண்டும் அன்பர்கள் வணங்க வேண்டியது திருவானைக்காவல் அகிலாண்டேசுவரியை. அதுனால்தானோ என்னவோ பணக்காரசாமிகளுக்குத் தினப்படி கூடும் கூட்டம் அகிலாண்டேசுவரிக்குக் கூடுவதில்லை. கல்வியும் அறிவும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. சேரிடம் அறிந்தே அறிவும் சேர்கிறது. அதனால்தான் கற்றோரைக் கற்றோரே காமுறுவர். பணம் வரும் போகும். கல்வியறிவு வரும். ஆனால் போகாது. அந்த யானையை சிவபெருமான் சிவகணங்களுக்குத் தலைமைக்கணமாக ஆக்கிக் கொண்டாராம்.

கோயிலைச் சுற்றி வரும் போது நந்தியம்பதி அகப்பட்டார். அவரைக் கிளிக்கிக் கொண்டேன். அப்போது அங்கு நெய்விளக்கு வித்துக் கொண்டிருந்தவர் “கேமரா டிக்கெட் வாங்கியாச்சா” என்று கேட்டார். ஆச்சு என்று சொல்லி விட்டு அவரையும் கிளிக்கிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தேன்.

வழியில்தான் சிலந்திச் சோழனின் எதிரியைச் சந்திக்க நேர்ந்தது.

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம் and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

15 Responses to சிலந்திக்கும் யானைக்கும் சண்டை

 1. பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி ஐயா…
  அடுத்த பகிர்வு எப்போ…?

  • GiRa ஜிரா says:

   ஒவ்வொரு பதிவுக்கும் வந்து ஊக்குவிப்பதற்கு நன்றி. அடுத்த பதிவு இரண்டொரு நாட்களில் 🙂

 2. ஆஹா… நம்ம யானை சிவகணங்களுக்குள் முதல் கணமா ஆகிருச்சா!!!!! பேஷ் பேஷ்!

  மூலவருக்கு ஜம்புகேஸ்வரர் என்ற நாமம் உண்டுன்னு முன்னொருக்கில் போனப்ப அர்ச்சகர் சொன்ன நினைவு.

  அகிலாண்டேஸ்வரியின் அழகுக்கு என்ன குறைச்சல்.? பெரிய இடத்துக்காரியாச்சே !!!! ஆனைக்காரியா?????

  எனக்குமே நகைநட்டோடு ஜொலிப்பா வந்தால்தான் சாமின்னு தோனும். படங்களில் அப்படித்தானே வரைஞ்சுருக்காங்க. கோவிலிலும் அப்படித்தானே அலங்காரமா இருக்கார். நம்ம வீட்டிலூடப் பாருங்க சமீபத்தில் மகரகண்டிகை செஞ்சு போட்டுருக்கேன்! சொந்தத் தயாரிப்பு:-)))))

  புத்தர் கோவில் பற்றிச் சொன்னது இங்கே இந்தியாவைப்பொறுத்தவரை உண்மை. அதான் ரொம்பப்பேர் போறதில்லையே:(

  ஒரு சமயம் தில்லி லக்ஷ்மிநாராயணரை (பிர்லா மந்திர்) பலகெடுபிடிகளுக்கிடையில் போய் கும்பிட்டுவிட்டு. மனம் சலிச்சுப்போய் பக்கத்தில் இருந்த புத்தர் கோவிலுக்குள் புகுந்தேன். நிம்மதியா ஏகாந்த ஸேவை! தொட்டடுத்த பில்டிங். அங்கே அமர்க்களம் இங்கே ஆனந்தம்!

  • GiRa ஜிரா says:

   யானையப் பத்தி எழுதும் போதே டீச்சரோட நினைவைத் தவிர்க்க முடியல. யானை நல்ல கனம். அதான் கணத்துக்கெல்லாம் பெரிய கணம் ஆக்கீட்டாரு சிவன் 🙂

   ஜம்புன்னும் பேர் உண்டு. வெண்நாவல் மரத்தடியில் உக்காந்திருக்காராம். அதான். நாவலன்னு பேர் வெச்சிருக்கலாம். அழகா இருக்கு

   ஆனைக்காரிதான். ஆனை கட்டித் தீனி போடுறாப்புல நமக்கெல்லாம் தீனி போடுறாளே 🙂

 3. மனதை வருடிச் சென்ற பதிவு. வாசிக்கையில் ஏனோ கண்ணீர் வந்தது.

  • GiRa ஜிரா says:

   கண்ணீர்க் காவியம் எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிருச்சு அக்கா

 4. கதைகளும் பயணமும் கலக்கல் பகிர்வு…;-))

  • GiRa ஜிரா says:

   Thanks Gopi. உங்களைப் போல பழைய பிளாக் நண்பர்கள் கூட்டத்தார் பின்னூட்டங்களைப் பாக்குறப்போ ஒரு மகிழ்ச்சி. நம்ம டீச்சர் எவர்கிரீனா இருக்காங்க 🙂

 5. seemless post, still feel bad for the elephant 😦
  and its also true if u have to be really famous, u should be so willing that u open ur mouth even if somebody spits on u 🙂

  good to reach teacher’s comments in everypost.

  • GiRa ஜிரா says:

   I can understand the feelings for the elephant. 🙂

   For the obvious reasons spider won’t get that sympathy even though it did the same best done by elephant. 🙂

   உமிழ்தல்னு எழுதீட்டேன். உண்மையிலேயே அது உமிழ்தல் அல்ல. முந்தியெல்லாம் வெத்தல போடும் பழக்கம் நெறைய இருந்தது. அப்போ மெல்லும் வெத்தலையை உருட்டி ஒருத்தர் வாயிலிருந்து இன்னொருத்தருக்கு கொடுப்பாங்க. காதல்லயும் இது நடக்கும். பிள்ளைப் பாசத்திலும் இது நடக்கும். இங்க நடந்தது ரெண்டாவது. ஆனா சாமி விஷயம்னு அதைப் புனிதப்படுத்திட்டாங்க. 🙂

   • மஹாகவி காளிதாஸ் அவர்களுக்கும் சரஸ்வதி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை உமிழ்ந்ததாகத்தான் சொல்வார்கள்.

    இந்த உமிழ்தல் அப்போ அந்தக் காலத்தில் அருவருப்பான விஷயமா இருந்துருக்காதோ என்னவோ!!!!

 6. Pingback: குட்டிப் பெண்குட்டி அகிலா « GRagavan’s Weblog

 7. அனுஷா says:

  திருவானைக்காவலுக்குப் போகணுங்கற ஆவலை உண்டாக்கிட்டீங்க.

 8. anonymous says:

  ஆனைக்காவில்…
  அகிலாவைக் காணாதே கண் என்ன கண்ணே!
  கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!

  ரொம்ப உசரமான அம்மா!
  அதனால் பிள்ளைகளைத் தூர இருந்தே பாக்கும் தெறமுள்ள தாயி!
  மக-மாயி, குக தாயி!

  இவ அறைக்குப் போகும் முன்ன, வாசப்படி கிட்டக்க, ஒரு குட்டி முருகன் இருப்பான், அவனைப் பாக்கும் போது எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வரும்; அத்துனூண்டு குட்டிப் பையன் – குள்ளப் பையன்:)
  ——————

  பொதுவா அம்மாவின் அங்கங்களை வருணிப்பது, தப்பான பார்வை/தப்பான செயலாச் சொல்லப்படும்;
  ஆனா, அவ ஒயிலும், அழகும், கருணை கூர் முகமும், கையில் கோலக் கிளியும்!

  எல்லாத்துக்கும் மேலா….
  அவ ஒசரத்த்துக்கு ஒரு குத்து வெளக்கு, கூடவே நிக்கும்; அது அவ முகத்தில் முனுக் முனுக் -ன்னு மின்னும்!
  அதை நாளன்னிக்கும் பாத்துக்கிட்டே இருக்கலாம்! அப்படியொரு ஈர்ப்பு
  ——————

  பல இடங்களில், ஈசனுக்குத் தான் முழுப்பட்டையாத் திருநீறு பூசுவாங்க! அன்னைக்கு லேசாப் பூசி, குங்குமம் தான் அழகாத் திகழும்!
  ஆனா, இவளுக்கு நெத்தி முழுக்கப் பட்டையென நீறு;
  அவரு சிவன்-ன்னா, இவ = சிவை!

  பொதுவாப் பொண்ணுங்களுக்குப் பொறந்த வீட்டை மறக்க முடியாது; அந்த Styleயே கூட ஒட்டிக்கிட்டு வரும்!
  ஆனா, இவ, என்ன தான் கருப்பன் திருமாலின் தங்கச்சியா இருந்தாலும், இவளே கருப்பியா இருந்தாலும்…

  அவனைப் பற்றிக் கொண்டதால், அவனையே உடம்பு முழுக்கப் பூசிக்குறா! அப்படியொரு உள்ள-உடம்பு-உறவாடல்!
  ஆமா, அன்னைக்கு உடல் முழுக்க நீறு பூசுவது, இவளுக்கு மட்டுமே!

  இவளைப் போலவே வேடம் அணிந்து, ஒடம்பு முழுக்க நீறு பூசி, ஒவ்வொரு மதியமும், அருச்சகர் சேலை கட்டிக்கிட்டு…
  இவளைப் போலவே ஈசனைப் பூசை செய்யும் காட்சி, வேற எங்கேயும் காண முடியாது, இங்கே தவிர….

  அப்படியான சிவக் கொழுந்து இவ!
  ——————

  மழையார் மிடறா மழுவாள் உடையாய்
  உழையார் கரவா உமையாள் கணவா
  விழவாரும் வெணா வலின் மேவிய வெம்
  அழகா எனும் ஆ யிழையாள் அவளே!

 9. anonymous says:

  திரு ஆனைக் கா-வில் இன்னும் ரெண்டு முக்கிய அழகு…
  * சோலைகள் உள்ள கோயில்
  * அதன் ஓவியங்கள் / படங்கள் ரொம்ப நல்லா இருக்கும்

  முருகனின் watercolor paintings, முருகன் சிவ பூசை செய்வது போல் கையில் தாமரை ஏந்தி நிக்கும் கோலம் – இதெல்லாம் என் காமிராவுக்குள் அடைபட்டு நிக்கும்; அப்பப்போ அந்த அழகைப் பாத்துக்குவேன்:) ஓவியர்: மணிவேல் -ன்னு நினைக்குறேன்
  ———–

  வாய்த் தாம்பூலம் காதலர்களுக்கு ஒரு பிரசாதம் போல…
  எச்சில் தான், நாச் சுரப்பான்களைத் தூண்டி, சுவை -ன்னா என்ன-ன்னு காட்டுபவை
  அந்த, அவன் எச்சிலையே குடிச்சா?
  அது, அமிழ்தினும் இனிய, தமிழினைப் போலச் சுவை சுரப்பது; அவனையே உள் வாங்கிக் கொள்வதற்குச் சமானம்!

  தாயும்-பிள்ளைக்கும் கூட எச்சில் அந்நியமல்ல; அம்மா, “காக்காக் கடி” கடிச்சிக் குடுக்கும் மாங்காய், கொய்யாக்கா எல்லாம் எளிய கிராமத்து வீடுகளில் சகஜம் தான்; அகிலாவின் தாம்பூலமும் அப்படியே!
  ———–

  திரு ஆனைக்கா வெண் பொங்கலின் சுவை, திருவரங்க வெண் பொங்கலில் கூட வராது; speciality dish
  முந்திரி மந்திரி -ன்னு கண்டதையும் சேர்க்காமல், இஞ்சித் துண்டுகள், தூண்டி எடுக்கும்:)

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s