குட்டிப் பெண்குட்டி அகிலா

முந்தைய பதிவைப் படிக்க இங்கு சுட்டவும்.

திருவானைக்காவல் கோயில்ல இருந்து வெளிய வர்ரப்போ சிலந்திச் சோழனோட எதிரியைச் சந்திச்சேன்னு சொன்னேன். ஆமா. வெளிய வரும் போது தெப்பக்குளத்துப் பக்கத்துல ஒரு அழகான குட்டியானை. குட்டியானைன்னா ரொம்பக் குட்டி இல்ல. கொஞ்சம் வளந்த குட்டியானை.

இந்தக் குட்டியானை வந்து இன்னும் ஓராண்டு கூட ஆகலை. ஆனா அம்சமா கோயிலோட சேந்துக்கிடுச்சு.

இதுக்கு முன்னாடி இருந்த யானைக்குப் பேர் சாந்தி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவானைக்காவல் கோயிலுக்குப் பரிசா கொடுத்த யானை அது. முப்பத்தொம்பது ஆண்டுகளா கோயிலில் நடந்த ஒவ்வொரு நாள் வழிபாட்டிலும் சாந்திதான் சிறப்பு செஞ்சது. அந்த யானை மேல மக்களுக்கு ஒரு ஒட்டுறவுன்னு நெனைக்கிறேன். ஏன்னா, சாந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சு ஒட்டுன பெரிய போஸ்டர் எல்லாம் இன்னும் இருக்கு.

எதுவும் இருக்கும் வரைக்கும் மதிப்பு தெரியாம இருக்கும். ஆனா சாந்தி இருக்கும் போதும் மதிப்பா இருந்தது. ஆனா இறந்த பிறகு அந்த இழப்பு ரொம்பப் பெருசா தெரிஞ்சிருக்கு.

ஒரு இழப்பை இன்னொரு வருகைதான் ஈடுகட்ட முடியும். அப்படி வந்த புதுவருகைதான் இந்தக் குட்டியானை.

அசாமிலிருந்து வந்தவளுக்கு அகிலா என்று அழகு பெயர் சூட்டியிருக்காங்க. வந்தப்போ நெத்தியில் படமெல்லாம் வெச்சு ஊர்வலமாக் கொண்டு வந்து ஆரத்தியெல்லாம் எடுத்து அமர்க்களம் பண்ணியிருக்காங்க. அந்தப் பிரபல அகிலாதான் நான் பாத்தது.

வடகிழக்கு மாநிலமான அசாமிலிருந்து வந்த யானைக்கும் தமிழ்நாட்டில் இடமுண்டு. கோயிலில் வைத்துப் பூசையும் உண்டு. 🙂

நான் ஃபோட்டோ எடுத்துட்டிருந்ததால வயலூருக்குப் போக நேரமாயிரப் போகுதுன்னு வீட்டுல எல்லாரும் அவசரப்படுத்துனாங்க. போறதுக்குள்ள கோயில் மூடிருச்சுன்னான்னு எல்லாருக்கும் ஒரு துணுக்கம்.

நான் சொன்னேன், “வயலூர்ல இருக்குறது முருகன். மத்த கோயில்கள்ள சாமிகள் காத்திருக்குமான்னு தெரியாது. ஆனா முருகன் நமக்காக காத்திருப்பான். நம்ம போறப்போ நமக்காக காத்திருப்பான் முருகன்.”

வயலூர் ரோட்டைப் பிடிச்சுப் போனோம். திருச்சியிலயும் சில ரோடுகளை ஒருவழிப்பாதையா ஆக்கீருக்காங்க. தில்லைநகரெல்லாம் ரொம்பவே மாறியிருக்கு. திருச்சி ரொம்பத்தான் மாறியிருக்கு. ஆனாலும் சென்னை பெங்களூர் மாதிரி ஊர்கள்ள இருந்துட்டு திருச்சியப் பாக்குறப்போ ரொம்பவே இதமாயிருக்கு. சாலை விதிகளின்படியெல்லாம் நடந்துக்கிறாங்க. சிக்னல்ல வண்டிய நிறுத்துறப்போ சந்துல பொந்துல முண்டியடிச்சுக்கிட்டு முன்னாடி போறதெல்லாம் இல்ல. ஒரு ஒழுங்கு இருக்கு. திருச்சி, இப்பிடியே இருந்துக்கோ.

வயலூர் போற வழியெல்லாம் அழகு. நெறைய தென்னை மரங்கள். ”காவேரியால் விளை சோழ மண்டல” என்று அருணகிரி பாடுனது உண்மைதான். இப்பவே இப்படியிருக்கே. அருணகிரி வாழ்ந்தப்போ காவிரியில ஒழுங்கா தண்ணி வந்தப்போ எப்படியிருந்திருக்கும்!

நாங்க வயலூர் போனப்போ கோயிலைத் திறந்து வெச்சுக்கிட்டு முருகன் ஏகாந்தமா காத்துக்கிட்டிருந்தான். “ராஜ கெம்பீர நாடாளு நாயக வயலூரா”ன்னு அருணகிரி பாடுனதுதான் மனசுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

திருப்புகழைப் படிக்கும் போதெல்லாம் வயலூர் நினைவுக்கு வரும். திருச்சிக்குப் பக்கத்துல இருக்குன்னு தெரியும். ஆனா இதுக்கு முன்னாடி போனதேயில்ல.

கோயில் வெளியிலிருந்து பாக்க சிறுசா இருந்தது. ராஜகோபுரம்னு சொல்வாங்களே.. அப்படியெல்லாம் ஒன்னும் கெடையாது. கோயிலுக்கு முன்னாடி ஒரு சின்ன மண்டபம். நாலஞ்சு பிச்சைக்காரங்கதான். இப்படி எல்லா விதத்துலயும் எளிமையா இருந்தது கோயில். ஆனா ஆண்டவனோட அருள் எளிமையானதா? இல்லையே. ஒரு முறை பாத்ததும் போதாம மறுபடியும் பாக்க வெச்சான். அவன் முன்னாடியே கொஞ்ச நேரம் நின்னு பாத்துக் கும்பிட வெச்சான். ஜருகண்டி ஜருகண்டி இல்ல. நகருங்க நகருங்க இல்ல. முருகா உனக்கு நன்றி.

வயலூர்க் கோயிலுக்கு நிறைய சேட்டுகள்/மார்வாடிகள் வர்ராங்கன்னு நெனைக்கிறேன். நாங்க இருக்கும் போதே ரெண்டு மூனு சேட்டு/மார்வாடி குடும்பங்கள் கூட்டமா வந்துட்டுப் போனாங்க. அடிக்கடி வர்ரவங்க போல. அங்கிருந்த பூசாரியோட அவங்க பேசுனதுல இருந்து இதை ஊகிச்சேன்.

அப்புறமா அங்கிருந்து கெளம்பி திரும்ப திருச்சிக்குப் போனோம். போற வழியில் நிறுத்தி எளநி குடிச்சோம். அப்பத்தான் திருச்சியில் எளநி ரூ.25ன்னு தெரிஞ்சது. அதுவும் சின்னச் சின்ன செவ்வெளநி. எளநி சிறுசாயிருந்தாலும் குடிக்க நல்லா தித்திப்பாயிருந்தது.

இனியென்ன மதியம் சாப்புட்டு ஓய்வெடுக்க வேண்டியது. சாந்தரமாக் கெளம்பி மலைக்கோட்டையையும் உச்சிப் பிள்ளையார் கோயிலையும் தாயுமானவர் கோயிலையும் பாக்கனும்னு திட்டம். மதியச் சாப்பாடு அதே ஓட்டல் ஆனந்தில்தான். சும்மா சொல்லக்கூடாது. அட்டகாசம். பேருக்குச் சாப்புட்டா போதும்னு போய் போருக்குச் சாப்டோம். 🙂

பெறகென்ன.. உண்ட மயக்கம் கதைதான்.

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம், முருகன் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to குட்டிப் பெண்குட்டி அகிலா

 1. அடடடா….. அகிலா செல்லம் போல் நிக்கறாளே!!!!! என்ன ஒரு அழகு!!!!!

  எளிமையா இருக்கும் கோவிலில் மூலவர் முன்னே நிக்கும்போது மனம் அப்படியே நிறைஞ்சு வழியுமே! அவனிடம் எதாவது கேக்கணுமுன்னு கூடத் தோணாது. மனசை அப்படியே கட்டிப்போட்டுருவான். கண்ணு பூராவும் நிறைஞ்சு வழியும்!

  நிம்மதியா சாமி தரிசனம் செய்யவும் ஒரு கொடுப்பினை வேணும்,இல்லெ?

  இந்த ஆனந்தை மனசுலே ஒரு மூலையில் போட்டு வைக்கிறேன். அடுத்த மாசம் திருச்சி பயணம் ஒன்னு இருக்கு!

  • GiRa ஜிரா says:

   அகிலாவோட இன்னும் ரெண்டு படங்கள் இருக்கு. ஒங்களுக்கு மயில்ல அனுப்புறேன். 🙂

   உண்மைதான். நிம்மதியா மனநிறைவோட சாமி கும்பிடனும்னாலும் அதுக்கு அவன் தான் அருள் புரியனும்.

   அடுத்த மாசம் திருச்சியா. ஓட்டல் ஆனந்த் பத்தி உங்க கருத்தையும் சொல்லுங்க 🙂

 2. stavirs says:

  I think gods must have gone to small temples 🙂

  • GiRa ஜிரா says:

   God is everywhere. But we can really spend time with him in small temples only. Big temples have become business centres.

 3. பதிவின் மூலம் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது…

  தொடருங்கள்… வாழ்த்துக்கள்… நன்றி…

 4. mayooresan says:

  வந்தாரை வாழவைக்கும் பூமியாச்சே. அகிலா மட்டும் என்ன விதிவிலக்கா?

  அருமை அண்ணா. தொடர்ந்து எழுதுக வாசிக்க காத்திருக்கின்றோம்.

 5. குட்டி அகிலாக் குட்டி ச்சோ ச்வீட் 🙂 கூட்டம் இல்லாத இடங்களில்தான் அவனும் நிம்மதியா இருப்பான்!

 6. Pingback: தாயுமானவன் தந்தையானவன் அன்புச் சேவகன் « GRagavan’s Weblog

 7. kumaran says:

  வயலூருக்கு நீங்க இதுக்கு முன்னாடி போனதேயில்லைங்கறது வியப்பா இருக்கு இராகவன். சென்னையில் வேலை பார்க்கும் போது (ஓரிரு வருடங்கள்) ஒவ்வொரு முறை மதுரைக்கு வரும் போதும் திருச்சியில் இறங்கி திருவரங்கம், திருவானைக்கா, சமயபுரம், மலைக்கோட்டை, வயலூர்ன்னு ஒரு சின்ன சுற்றுலா முடிச்சுட்டு அன்னைக்கு இரவு ஊருக்குப் போய் சேருவேன். நிறைய தடவை இந்த மாதிரி செய்யும் வாய்ப்பு கிடைச்சது.

 8. rajendrannalina says:

  Hi GiRa,

  May I have your e mail or phone no? I am in Hong Kong. I am the regular follower of your blog.

  Thanks,
  Nalina

 9. anonymous says:

  யானைக்கு அழகே, அதன் முக படாம் தான்!
  முக விலாசம் -ன்னு சொல்லுவாங்க;
  நல்ல விசாலமான விலாசம், குட்டிப் பெண் அகிலாவுக்கு! அதிலும் அவ நெற்றியில் உள்ள ஓவியங்கள்; காதில் கம்மலுக்குப் பதிலா ஓவியங்கள்:)
  ——————-

  வயலூர்

  திருப்புகழ் பிறந்த தலமே வயலூர் தான்!
  என்ன தான், முத்தைத் தரு -ன்னு தனிப்பாடல், எங்கூரு திருவண்ணாமலையில் பிறந்தாலும்…
  அது, திருப்புகழ் ஆகும் -ன்னுல்லாம் அப்போ அருணகிரிக்குத் தெரியாது;

  வயலூர் முருகன் தான், திருப்புகழை இப்பிடி இப்பிடிப் பாட வேண்டும் -ன்னு சொல்லிக் குடுத்து, கணக்கைத் துவங்கியும் வச்சான்;
  முன்பு பாடுன முத்தைத் தரு-வையே கணக்கில் முதலாவும் வச்சான்!

  நம் திருப்புகழைப் பாடு -ன்னு சொன்ன முருகனிடம்…
  எப்படிப் பாடுவேன்? -ன்னு தெரியாமல் அருணகிரி விழிக்க….

  நம் 1)வேல், 2)மயில், 3)சேவல், 4)மலர்மாலை, 5)பன்னிருதோள், 6)சிற்றடி -ன்னு, ஆறு ஆறாய்ப் பாடு…
  ன்னு, வயலூர் முருகன் வகுத்துக் கொடுத்ததே, திருப்புகழ் அமைப்பு!
  அதை அருணகிரியே, வயலூர் திருப்புகழில் சொல்லுவாரு!

  = …சிற்றடியும், முற்றிய பன்னிரு தோளும், செய்ப் பதியும் வைத்து
  = திருப்புகழ் விருப்பமொடு செப்பு – என எனக்கு அருள்கை மறவேனே!

  வயலூர் முருகா,
  வயல் சூழ்ந்த பச்சைப் பசேல் முருகா
  என் பாலை வன வாழ்விலும்,
  உன் பச்சையும் இச்சையும் மறவேனே!

 10. anonymous says:

  //கோயில் வெளியிலிருந்து பாக்க சிறுசா இருந்தது. ராஜகோபுரம்னு சொல்வாங்களே.. அப்படியெல்லாம் ஒன்னும் கெடையாது//

  🙂
  வயலூர் முருகனே, ரொம்பச் சின்னவன் தான்
  அவன் திருமேனியும், சிறுசாத் தான் இருக்கும்… சென்னைக் கந்த கோட்டம் போலவே!
  ஆனா, மேடையில் ஏறி நின்று பாக்கும் போது, எதையும் மறைக்காம, அப்பிடியே காட்சி குடுப்பான்; மயில் உட்பட, எல்லாம் உள்ளவே இருக்கும்!

  மறவேனே -ன்னு அவரு பாடியதால், இவன் = மறப்பிலி நாதன்!

  வாரியாரு, ஒவ்வொரு சொற்பொழிவிலும், அதான் திருப்புகழ் விளைந்த தலமான வயலூரைச் சொல்லியே துவங்குவாரு;
  = “ஞானமே வடிவான வயலூர் முருகப் பெருமானின் திருவருளைத் துணைக்கொண்டு – இன்ன- தலைப்பில் பேசுவதற்கு மேற்கொள்ளுகின்றேன்…
  ————–

  ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
  சோழ மண்டல மீதே மனோகர
  ராஜ கம்பீர நாடாளும் நாயக வயலூரா!

  ஆர முலைகாட்டி, மார நிலைகாட்டி
  ஆடை அணி காட்டி – அநுராக
  வேலை உறை நீட்டி, வேலை தனில் ஓட்டு
  வேலை விளையாட்டு – வயலூரா!!

  உன் வயலில் என்னை விளைத்துக் கொள், என் ஐயா!
  என்னை உனக்கே அறுவடை செய்து கொள், வயலூரா!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s