தாயுமானவன் தந்தையானவன் அன்புச் சேவகன்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

குழந்தைப் பேறு எதிர் நோக்கும் எல்லாப் பெண்களுக்குமே பிடித்த இடம் தாய் வீடுதான். ஒரு தாய் மகளுக்குச் செய்வது மாதிரி யாரும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. பேறுகாலத்தின் தேவைகளும் வேதனைகளும் தாய்க்குத் தெரியும். அதற்கு மகளை மனதளவிலும் உடலளவிலும் தயார் செய்ய தாயார் தான் சரியான ஆள்.

தாம்பத்யம் ஒரு சங்கீதம் என்று ஒரு திரைப்படம். கதாநாயகி மாசமாக இருக்கிறாள். வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள் அவர்கள். அந்தப் பெண்ணின் தாய் பக்கத்தில் இல்லாததால் தலைவனே தாயாகிறான். சேவை செய்கிறான். அப்போது அவன் பாடும் பாட்டின் வரிகள் இவை.

நான் தாயுமானவன்
தந்தையானவன்
அன்புச் சேவகன்
அடிமை நாயகன்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய அருமையான பாடல் இந்தச் சுட்டியில்  இருக்கிறது. இறக்குமதி செய்து கேட்கலாம்.

ஒரு பெண்ணுக்குத் தலைவனாகிய கணவன் தாயாகி பார்த்துக் கொள்வதே இப்படியிருக்கிறதே. உலகத்திற்கெல்லாம் தலைவனாக விளங்கும் இறைவன் தாயாகி வந்தால் எப்படியிருக்கும்!

எப்போதும் சிவனே என்று இருப்பவளின் மகளுக்குப் பேறுகாலம். மகளை வீட்டில் விட்டுவிட்டு அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை. காலையில் பக்கத்து ஊருக்குச் சென்று மாலைக்குள் திரும்பி வருவதாகத் திட்டம். வெளியூர் சென்ற தாய் வீட்டுக்குத் திரும்ப வருவதற்குள் பெருமழையினால் காவிரியில் பெருவெள்ளம். திடீரென மகளுக்குப் பேறு காலத்து வலி. சிவனே என்றிருந்தவளின் மகளுக்குச் சிவனே உதவ வந்தான். எப்படி வந்தான்? தாயாக வந்தான். மருத்துவச்சியாக வந்திருக்கலாமே. ஏன் தாயாக வரவேண்டும்?

தாய் அன்பின் சின்னம். அந்த அன்பு தேவைப்படும் இடத்தில் இறைவன் தாயாக இருக்கிறான். அதனால்தான் அவன் தாயும் ஆனவன். தாயுமானவன்.

இப்படி ஒரு பெண்ணுக்காக பெண்ணாய் வந்தவனுக்கும் உள்ளது ஒரு கோயில். அதுவும் திருச்சி மலைக்கோட்டை மீது.

மலைக்கோட்டை என்றதுமே எல்லாரும் உச்சிப்பிள்ளையார் என்று சொல்வார்கள். ஆனால் தாயுமானவ சுவாமி கோயில் மிகவும் பழையது. கோயிலில் அழகான சித்திரமண்டபமும் உண்டு.

நாங்கள் முதலில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கே சென்றோம். வெளிச்சம் இருக்கும் போதே மலைமீதிருந்து திருச்சியையும் காவிரியையும் வேடிக்கை பார்க்கலாம் அல்லவா. அதற்காகத்தான்.

சிறுவயதில் நாங்கள் ஓடி விளையாடியதெல்லாம் நினைவுக்கு வந்தது. உச்சிப்பிள்ளையார் கோயில் சரிவில் குடுகுடுவென்று ஓடி இறங்கியதெல்லாம் நேற்று நடந்தது போல நினைவுக்கு வந்தது. குழந்தைப் பருவத்து நினைவுகள் சுகமானவை.

உச்சிப் பிள்ளையாரைப் பார்த்து விட்டு தாயுமானவர் கோயிலுக்கு வந்தோம். சிலர் வேண்டுதலாக வாழைப்பழத் தாரை வைத்துக் கொண்டு, வருகின்றவர்களுக்கெல்லாம் பழங்களைப் பிய்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அம்மையையும் அப்பனையும் கண் குளிர மனம் குளிர தரிசித்து விட்டு அங்கிருந்து இறங்கி வந்தோம்.

கீழே இறங்கிய பின் கண்ணில் ஒரு போஸ்டர் தட்டுப்பட்டது. அது திருச்சி கல்யாணராமனின் ஆன்மிகப் பேச்சுக்கான விளம்பரம். இன்றைக்குப் பிரபலமான ஆன்மிகக் கதை சொல்லிகளின் பெயரை நான் சொல்ல வேண்டியதில்லை. டீவி புகழ், யூடியூப் புகழ், யாத்திரை புகழ், புத்தகம் புகழ் என்று கார்பரேட் கதைசொல்லிகளாக இருக்கும் இந்தக் காலத்தில் திருச்சி கல்யாணராமன் ஒரு விதிவிலக்கு.

இவரும் ஒரு காலத்தில் டிவியில் வந்தவர்தான். ஆனால் அவருக்கு மற்றவர்கள் அளவுக்குத் தன்னை விளம்பரப்படுத்துக் கொள்ளத் தெரியவில்லை போல. இவருடைய பேச்சும் கதை சொல்லும் விதமும் மிக இயல்பாக இருக்கும்.

அறிவுஜீவித்தனமான அரைகுறைப் புகுத்தல்களோ, செயற்கையான உச்சரிப்புகளோ, அதீத வடமொழிக் கலப்போ இல்லாமல் கேட்பவர் ரசிக்கும் வண்ணம் பேசுவார். அழகான தமிழ்ப் பாடல்களை வைத்துப் பொருள் சொல்வதும் சிறப்பாக இருக்கும். இவருக்கு தொலைக்காட்சிகளும், காசெட்/சீடி நிறுவனங்களும், பதிப்பகங்களும் ஆதரவு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். வாரியார் சுவாமிகளுக்கும் கீரனுக்கும் பிறகு ஆன்மிகப் பேச்சில் நான் கேட்டு ரசிக்கும் ஒருவர் திருச்சி கல்யாணராமன்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மலையிலிருந்து இறங்கினோம். அடுத்த நாள் துடையூர் என்னும் ஊருக்குச் செல்வதாகத் திட்டம். அங்கு இறைவனுக்கு முழுக்கு செய்வதற்காக தேன் கொண்டு போயிருந்தோம். அந்தத் தேன் போதுமோ என்று ஒரு ஐயம். ஏன் கவலை? மலைக்கோட்டை சிந்தாமணி சிறப்பங்காடி இருக்கிறதே. இரண்டு பாட்டில்கள் வாங்கிக் கொண்டோம். நல்லெண்ணெய்யும் இறைவனுக்கு முழுக்கு செய்யத் தேவை என்பதால் இதயம் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளும் இரண்டு பெட் பாட்டில்களும் வாங்கிக் கொண்டோம். இதைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகச் சொல்கிறேன்.

இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு மலைகோட்டையிலிருந்து கிளம்பினோம். அதற்குள் நன்றாக இருட்டிவிட்டிருந்தது. மறுபடியும் மெயின் பஸ்டாண்டு. மறுபடியும் ஹோட்டல் ஆனந்த்.

வழக்கமாக இட்லி தோசை என்று சாப்பிடுவதால் ஒரு மாறுதலுக்கு பிரைடு ரைஸ் கேட்டேன். நன்றாகவே இருந்தது. ஆனால் வயிறு திருப்தியடையவில்லை. அடுத்ததாகத் தயிர்ச்சோறு கேட்டேன். இளம் சூட்டில் குழைவாக வந்தது தயிர்ச்சோறு. இட்லி தோசைக்கு வைக்கும் பொடியை தயிர்ச்சோற்றுக்கும் வைக்கச் சொன்னேன். அட்டகாசமாக கூட்டணி. சாப்பிடுவதில் என்ன வெட்கம். இருக்கும் வரைக்கும் இருக்கப் போவது பசி. அந்தப் பசிக்குச் சாப்பிடுவதில் வெட்கமும் கூச்சமும் எதற்கு!?!

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, சிவண், திருச்சி பயணம், பயணம், பிள்ளையார் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தாயுமானவன் தந்தையானவன் அன்புச் சேவகன்

  1. stavirs says:

    keep eating well and staying well 🙂

  2. தாயுமானவர் கதை ரொம்பப் பிடிக்கும். தயிர்ச் சோறுக்கு தோசைப் பொடியும்தான் 🙂

  3. Pingback: திகிசண்டளா வீணை « மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s