பார்த்தால் உயிர் போகும்

பிடிச்சாலும் பிடிக்காட்டியும் ஞாயிறு வந்தா வர்ர வாரமலரைப் புரட்டுறது ஒரு வழக்கம். அப்படிப் புரட்டுறப்போ கண்ணில் பட்டதுதான் திட்டிவிடம்.

திட்டிவிடம் என்றால் என்ன?

நல்ல கேள்விங்குறீங்களா? 🙂

திட்டிவிடம் ஒரு வகையான பாம்பு. பொதுவா பாம்புக்குப் பல்லுலதான் விஷம். கடிச்சாதான் உயிர் போகும். ஆனா திட்டிவிடத்துக்குக் கண்ணுலயே விஷம். கடிக்க வேண்டாம். பாத்தாலே போதும், உயிர் ஈரேழு பதினாலு உலகங்களையும் தாண்டி எமதருமராஜா கிட்ட போயிரும்.

ஒரு பாம்பு விஷப்பாம்பா இல்லையான்னு கண்ணப் பாத்து கண்டுபிடிக்கலாம். நஞ்சில்லாத பாம்புகளுக்குக் கண்ணோட கருவிழி வட்டமா இருக்கும். நச்சுப்பாம்புகளுக்கு கருவிழி நீளமா பூனைக்கண் மாதிரி இருக்கும்.

தெரியாம திட்டிவிடத்தை நச்சுப்பாம்பா இல்லையான்னு தெரிஞ்சுக்க கண்ணப் பாத்தா, கடைசியாப் பாத்தது அந்தக் கண்ணாத்தான் இருக்கும்.

இந்தத் திட்டிவிடம் உண்மையிலேயே இருக்கான்னு தெரியாது. ஆனா இலக்கியத்துல இருக்கு. மதுரைக் கூல வாணிகச் சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியத்துல இருக்கு. கம்பர் எழுதிய ராமகாதையிலும் இருக்கு. திருவாய்மொழியிலும் வருது இந்தத் திட்டிவடம்.

இலக்கியத்துல இருந்தாலும் திட்டிவிடத்தோட மூலம் வடமொழி. திருஷ்டி+விஷம் = திருஷ்டிவிஷம். தமிழில் திட்டிவிடம். சாத்தனாரும் கம்பரும் கிரந்தம் தவிர் கூட்டத்தைச் சேந்தவங்க போலும்.

சரி. கதைக்கு வருவோம். மணிமேகலையோட முற்பிறப்புல வருது இந்தத் திட்டிவிடம். போன பிறவியில் மணிமேகலை ஒரு இளவரசி. பேரு இலக்குமி. அவளுக்கும் இராகுலன் என்னும் இளவரசனுக்கும் கல்யாணம் நடந்தது. அந்த இராகுலனத்தான் திட்டிவிடம் கொன்னுருச்சு.

எட்டுஇரு நாளில்இவ் இராகுலன் தன்னைத்
திட்டி விடம்உணும் செல்உயிர் போனால்
தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை

பதினாறு நாளில் திட்டிவிடம் இராகுலனைக் கொல்லும்னு இந்த வரி சொல்லுது. அதுல பாருங்க… திட்டிவிடம் தீண்டும்னு சொல்லல. திட்டிவிடம் உணும்-னு சொல்லீருக்கு. பல்லால கடிச்சாத்தானே பாம்பு தீண்டியதுன்னு சொல்ல முடியும். இந்தப் பாம்புதான் பார்வையிலேயே உயிரை விழுங்கீருதே. அதுனாலதான் திட்டிவிடம் உணும்-னு எழுதியிருக்காரு சாத்தனார்.

கம்பரும் ரெண்டு மூனு எடங்கள்ள பயன்படுத்தினாலும் எனக்குப் பிடிச்ச ஒரு இடத்தை மட்டும் சொல்றேன்.

சீதையோட கற்புக்குத் திட்டிவிடத்தை எடுத்துக்காட்டா சொல்றாரு கம்பர். அதுவும் யார் வாயால? கும்பகருணன் வாயால. கும்பகருணன் பெரிய அறிவாளி. அவனை சினிமாலயும் நாடகத்துலயும் காமெடிபீஸ் ஆக்கீட்டாங்க. ஆனா உண்மையிலேயே அவன் அறிவாளி. கந்தபுராணத்துல வரும் சிங்கமுகாசுரன் மாதிரி. மகாபாரதத்தில் வரும் கர்ணன் மாதிரி. முடிவு என்னன்னு தெரியும். ஆனாலும் கூடவே இருந்து உயிரைக் கொடுத்து செஞ்சோற்றுக்கடன் தீர்க்குறாங்க.

அந்தக் கும்பகருணன் வாயில் சீதையின் கற்பு புகழப்படுது. நல்லவனாக் காட்டப்படும் வீடணன் கூட இராவணனுக்கு இவ்வளவு அழகா எடுத்துச் சொல்லல.

”திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலை யோ! இது விதியின் வண்ணமே”

”பெண்களின் கற்பு திட்டிவிடம் போன்றது. கெடுதல் செய்றவங்களை தானாக அழித்து விடும். அப்படிப் பட்ட கற்புடைய சீதையை பிடித்து வைத்துக் கொண்டு விடவில்லையே! இதுவும் விதியின் விளையாட்டு.”

இப்படியான அழகான உருவகத்தை வால்மீகியும் காட்டியதில்லை. தமிழில் கம்பர் இப்படி அழகாச் சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு.”பார்வையாலேயே இலங்கையை எரிப்பேன். அது இராமனின் வில்லுக்கு இழுக்கு. அதனால் காத்திருக்கிறேன்”னு சீதை சொன்னாளே. அப்போ அவளோட கற்பு திட்டிவிடம் போலத்தானே இருந்திருக்கனும்.

இந்த மாதிரி ஏதோவொரு காண்டத்திலிருக்கும் ஏதோவொரு படலத்திலிருக்கும் ஏதோவொரு பாட்டிலிருக்கும் செய்திக்கும் மற்றுமொரு ஏதோவொரு காண்டத்திலிருக்கும் ஏதோவொரு படலத்திலிருக்கும் ஏதோவொரு பாட்டிலிருக்கும் செய்திக்கும் தொடர்பு வைக்கிறதுல கம்பன் பெரிய ஆள்.

இந்தத் திட்டிவிடம் நம்மூர்ல மட்டுந்தான் இருக்குதுன்னு நெனைக்காதீங்க. வெளிநாட்டுலயும் உண்டு. ஆங்கிலத்துல பசிலிஸ்க்-னு பேரு. ஹாரி பாட்டர் கதையில் கூட வரும். பசிலிஸ்க் பாம்பைப் பாத்தவங்கள்ளாம் இறந்து போவாங்க. கடைசியில் ஃபீனிக்ஸ் பறவை பசிலிஸ்க்கோட கண்களைக் குத்தீருது. அப்போ ஹாரி பாட்டர் அந்தப் பாம்பை மந்திரவாளால் வெட்டிக் கொல்றான்.

இதெல்லாம் கெடக்கட்டும். இப்பல்லாம் கல்யாணம் ஆனவங்களைக் கேட்டா பெண்டாட்டியோட பார்வைதான் திட்டிவிடம்னு சொல்றாங்க. எதையாச்சும் ஏடாகூடாமா செஞ்சிட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிற கணவர்கள் மேல திட்டிவிடப் பார்வை விழுறதாக ஊர்ல பேசிக்கிறாங்க.

சரி. ஒங்க வாழ்க்கைல திட்டிவிடப் பார்வைய எப்பவாச்சும் அனுபவிச்சிருக்கீங்களா? எங்க? எப்படி? சொல்லுங்களேன். 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இலக்கியம், கம்பராமாயணம், மணிமேகலை and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to பார்த்தால் உயிர் போகும்

 1. பார்வையே கூர்வேல். அதுவே நெஞ்சைத் துளைச்சுருமுன்னாலும் மனுசன் சாகமாட்டான்:-)))))

  திட்டிவிடப்பார்வையை அனுபவிக்காத குடும்பஸ்தன் உலகில் உண்டோ???????

  • GiRa ஜிரா says:

   // திட்டிவிடப்பார்வையை அனுபவிக்காத குடும்பஸ்தன் உலகில் உண்டோ??????? //

   இதத்தான் டீச்சர், வீட்டுக்கு வீடு பருப்புப் பொடின்னு சொல்றாங்க 🙂

 2. Raja says:

  Really nice to learn something about our tamil poetry and news

 3. கம்ப ராமாயணத்தில் கும்பகர்ணன் சொல்வது மிகப் பிடித்தது. சுவையார்வமான பதிவிற்கு நன்றி!

  • GiRa ஜிரா says:

   வாங்கக்கா. கும்பகர்ணனைப் பத்திப் பேசுனா பேசிக்கிட்டேயிருக்கலாம். அவ்வளவு இருக்கு. அதையும் அப்பப்போ பேசுவோம். 🙂

 4. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி… வாழ்த்துக்கள்…

 5. MathiSudhanan says:

  At childhood I have heard some where.Buddha was born as thitividam in one of his past life before he was born as buddha and in that life he did not even open his eyes untill he died.

 6. Kd says:

  திட்டி விடம் என்பது கண்ணை நோக்கி விசத்தை கக்கும் பாம்பு.. சரியான புரிதல் இல்லாமல் இருக்கவேண்டாமே

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s