திகிசண்டளா வீணை

இந்தத் தொடரின் முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்.

அடுத்த நாள் காலை எழுந்து நாங்கள் சென்ற கோயில் துடையூர் விஷமங்களேசுவரர் கோயில். துடையூர் என்பது திருச்சியிலிருந்து முசிறி செல்லும் வழியிலுள்ள ஒரு சின்ன பட்டிக்காடு. அந்த ஊரில் ஒரு சிவன் கோயில்.

திருச்சியிலிருந்து செல்லும் போது வழியில் துடையூரைக் கவனிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். அவ்வளவு சின்ன ஊர். மிகச் சிறிய கோயில்.

2009ல் அவள் விகடனில் இந்தக் கோயிலைப் பற்றி வந்திருந்தது. அதை மனதில் வைத்திருந்து இந்த முறை திருச்சி பயணத்திட்டத்தில் துடையூரும் சேர்க்கப்பட்டது.

இந்தக் கோயிலைப் பற்றி இரண்டு தகவல்கள் பிரபலமானவை. திருச்சிக்காரர்களுக்கு ஓரளவு தெரிந்த தகவலாகவும் இருக்கிறது. துடையூர் என்று சொன்னதுமே தேனாபிஷேகம் பண்ற கோயிலா என்று சில திருச்சிக்காரர்கள் கேட்டார்கள். இன்னொரு தகவல் நல்லெண்ணெய் அபிஷேகம்.

இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அறிவியலின் துணை கொண்டு நிரூபிக்க முடியாது. அறிவு எவ்வளவு வளர்ந்தாலும் சிலவை அறிவால் விளக்கிக் கொள்ள முடியாதவையாகவே இருக்கும். நம்பிக்கையும் அந்த வகையைச் சேர்ந்தவையே. கீழே சொல்லப் போகும் தகவல்கள் சிலபலரின் நம்பிக்கை சார்ந்த விவரங்களே. நம்பிக்கை இல்லாதவர்கள் வெறும் தகவல்களாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

துடையூரில் இருக்கும் சிவனுக்கு இன்றைய கோயில் பெயர் விஷமங்களேசுவரர். இந்த ஊரில் யாரையும் பாம்பு தீண்டுவதில்லையாம். விஷப்பூச்சிகள் கூடக் கடிப்பதில்லை என்று சொல்கிறார்கள்.

இந்தக் கோயில் காவிரிக்கரையிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் காவிரிக்கரையில் நின்றால் கோயிலின் கோபுரம் நம் உயரத்திற்கு இருக்கும். முன்பு இது ஐந்து சுற்றுகள் உள்ள கோயிலாக இருந்ததாம். காவிரி வெள்ளத்தால் ஒவ்வொரு சுற்றாகச் சிதைந்து ஒரு கட்டத்தில் கோயிலின் கருவறையும் சில சிலைகள் மட்டுமே மிச்சம். ஒரு கட்டத்தில் இந்தக் கோயில் மறக்கப்பட்டு மறைந்து போனது.

அப்படி மறைந்து போன கோயிலில் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. நன்கொடைகள் வழியாக ஒரு சுற்றுச் சுவரும் கருவறைக்கு மேலாகச் சிறிய கோபுரமும் கட்டப்பட்டிருக்கிறது. இன்னும் சில வேலைகள் நடக்கின்றன. அந்த வேலைகள் பழைய கோயிலின் அழகை மறைக்கின்றன என்பதும் உண்மை.

நான் பார்த்த வகையில் அந்தக் கோயில் பல்லவர் காலத்துக் கோயிலாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிலைகளின் அமைப்பிலிருந்து அவை சோழர் காலத்துக்கும் முற்பட்டவை என்று நினைக்கிறேன். சிவலிங்கத்தின் அமைப்பும் சோழர்காலத்துக் கோயிலிலிருந்து மிகமிக மாறுபட்டிருக்கிறது. பல்லவரின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தக் கோயில் பராமரிப்பை இழந்திருக்கலாம்.

சிவனாரின் கருவறைக்கு வாயில் காக்கும் டிண்டியும் முண்டியும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். ஆனால் இந்தக் கோயிலில் டிண்டி மெலிந்து லேசான பெண் சாயலோடு இருக்க, முண்டி உருண்டு திரண்டு முரட்டுத் திமிரலோடு இருந்தார். கிடைத்த சிலைகளை டிண்டியாகவும் முண்டியாகவும் வைத்திருக்கூடும். விசாரித்ததில் சிலைகள் ஆற்றங்கரையோரம் கிடந்த சிலைகள் என்று சொல்கிறார்கள்.

கருவறையும் அதிலுள்ள சிற்பங்களும் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்திருக்கின்றன. அம்பாள் சிலையும் மணலில் கிடந்திருக்கிறது. அந்தச் சிலையை வைத்து சிறிய அறையை அம்பாளுக்காகக் கட்டியிருக்கிறார்கள். அதே போல கருவறை வெளிச்சுவற்றில் இருந்த கலியாண சுந்தரேசுவர் சிற்பம் மிக அழகு. கோயிலில் பழைய கல்வெட்டுகள் உள்ளன. அவைகளை யாராவது எடுத்து ஆராய்ந்தால் கோயில் பற்றிய பழைய விவரங்கள் தெரியவரும்.

சரி. தேனாபிஷேகம் (அ) தேன்முழுக்குக்கு வருவோம். கருவறையின் வெளிச்சுவரில் ஆலமர்ச் செல்வன் என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி சிலையொன்று உள்ளது. ஆலமர்ச் செல்வன் என்ற பெயர் சங்க இலக்கியங்களிலேயே உள்ளது. தொல்காப்பியரும் சிவண்(ன்) பற்றிக் குறிப்பிடுகிறார். இருந்தும் சிலர் தமிழகத்தில் தோன்றிய சிவ வழிபாட்டை மறுத்தும் திரித்தும் விருப்பம் போல் கருத்து சொல்வது மிகுந்த வருத்தத்திற்குரியது.

சரி. நாம் தேன்முழுக்குக்கு வருவோம். வழக்கமாக தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பார். ஆனால் இந்தக் கோயிலில் நின்று கொண்டிருக்கிறார். வழக்கமாக ஏடு பிடிக்கும் கையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு வீணை. அந்த வீணையில் ஒரேயொரு நரம்பு. இந்த வீணைக்குத் திகிசண்டளா வீணையென்று பெயராம். திகிசண்டளா என்பது உடம்பில் உள்ள ஏதோவொரு பெரிய நரம்பின் பெயராம்.

அந்தச் சுவரிலேயே ஒரு கலைமகள் சிலை. வழக்கத்திற்கு மாறாக கலைமகள் கையில் வீணையில்லை. ஓலைச்சுவடியும் யோகமாலையும் கையில் உள்ளது. தட்சிணாமூர்த்திக்கும் கலைமகளுக்கும் தேன்முழுக்கு செய்து அந்தத் தேனை குழந்தைகள் நாற்பது நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் படிப்பு நன்றாக வருமாம். இந்த தேன்முழுக்கை செவ்வாய், அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்ய வேண்டுமாம்.

அதே போல கோயிலின் ஐந்தாவது சுற்று தொடங்கிய இடத்தில், அதாவது கோயில் பெரிதாக இருந்த போது அதன் வாசல் இருந்த இடத்தில், ஒரு கல் இருக்கிறது. கருமையாக செவ்வக வடிவத்தில் இருக்கிறது அந்தக் கல். அந்தக் கல்லில் வாதமுனி இருக்கிறாராம். அந்தக் கல்லில் நல்லெண்ணெய் முழுக்கு செய்தால் அந்த எண்ணெய் மருந்தாகுமாம். அந்த நல்லெண்ணெய்யை சாப்பாட்டில் நேரடியாகக் கலந்து சாப்பிடுவது நல்லதாம். அதே போல சில மூலிகைகளைக் கலந்து நல்லெண்ணெய் கோயிலில் செய்யப்படுகிறது. அந்த எண்ணெயையும் வாதக்கல்லிற்கு முழுக்கு செய்கிறார்கள். அந்த எண்ணெயைப் பூசுமருந்தாகப் பயன்படுத்தலாமாம்.

தேனையும் நல்லெண்ணெய்யையும் நாங்களே கொண்டு சென்றிருந்தோம். அதை வைத்தே தேன்முழுக்கையும் நல்லெண்ணெய் முழுக்கும் செய்யப்பட்டது. வாதக்கல் கோயிலிருந்து அரைக்கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நடுவில் நடந்து செல்ல ஒத்தையடிப்பாதைதான். அதில் செருப்பில்லாமல் கல்லிலும் முள்ளிலும் நடக்க வேண்டியிருந்தது. என்னால் சரியாக நடக்கமுடியவில்லை. ம்ம்ம். சின்ன வயதில் எங்கள் ஊரில் வெறும் காலோடு வயக்காட்டுக்கும் தோட்டத்துக்கும் நடையாய் நடந்ததெல்லாம் ஒரு கனவு போல நினைவுக்கு வந்தது. காலம் நம்மை எவ்வளவு மாற்றிவிடுகிறது!

இந்தத் துடையூர்க் கோயிலில் இறைப்பணி செய்கின்றவர் பெயர் மறந்து விட்டது. அவருடைய தொலைபேசி எண் 98947 96967. கோயிலுக்கு வருகையில் தொலைபேசியை வீட்டிலேயே வைத்துவிடுகிறார். கோயில் பூசை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில்தான் தொலைபேசி அழைப்புகளை ஏற்கிறார்.

அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சிவலிங்கத்தின் மேல் அலங்காரம் செய்யப்பட்டிருந்த திருநீறை ஒரு பிளாஸ்டிக் பை நிறைய போட்டுத்தந்தார். அப்படியே முந்தைய நாள் அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்குழம்பையும் ஒரு பையில் போட்டுத் தந்தார். கலப்படமில்லாத சந்தனம் என்பது வாடையிலேயே தெரிந்தது. கல்லில் தேய்த்து இழைக்கப்பட்ட சந்தனக்குழம்புப் பதம். அதைக் கொண்டு வந்து காய வைத்து அவ்வப்போது நீரில் குழைத்து நெற்றியில் பூசிக் கொள்கிறேன்.

நாங்கள் கோயிலில் இருந்த போதே திருமணம் தடைப்படாமல் நடப்பதற்கு வேண்டிக்கொள்ளவும் சிலர் தங்கள் மகள்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.

துடையூர் கோயிலை முடித்துக் கொண்டு அப்படியே நாங்கள் சென்னைக்குத் திரும்பினோம். Home is always sweet home.

திருச்சி பயணம் முற்றும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to திகிசண்டளா வீணை

 1. பழைய கோவில்களில் இருக்கும் அமைதியும் ஆர்ப்பாட்டமில்லாத அழகும் ஆரவாரமா இருக்கும் புதுக்கோவில்களில் இல்லைதானே?

  கோவில் அறிமுகத்துக்கும் இனிய பகிர்வுக்கும் நன்றிகள்.

  கடவுள் = நம்பிக்கை.

  நல்லா இருங்க.

  • GiRa ஜிரா says:

   உண்மைதான் டீச்சர். பழைய கோயில்களில் இத்தனை விதமான கண்ணைப் பறிக்கும் நிறப்பூச்சுகள் இல்லை. வெறும் கற்சிலைகள் செய்தவற்றை இன்றைய வண்ணப்பூச்சுகளால் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

 2. அருமை… பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி… தொடர வாழ்த்துக்கள்…

 3. anonymous says:

  அப்பர் பெருமான் பாடி மகிழ்ந்த…சின்னஞ் சிறு தலமே = துடையூரைச் சொன்னமைக்கு நன்றி!

  பிறை ஊரும் சடையான் – எம் பெருமான் ஆரூர்
  “துடையூரும்” தொழ, இடர்கள் தொடரா அன்றே!!

  துடையூர் = வைப்புத் தலம்!
  வயலூரைக் காட்டிலும் மிக மிக “அமைதியான” ஊர்;

  திருமுழுக்கு ஆட்டிய காட்சிகள் படிக்கும் போது, நெஞ்சில் பலப்பல பழைய எண்ணங்கள்!
  ஈசனுக்குத் தேன் முழுக்கு ஆட்டினால், அடுத்த பிறவியில் தேன்குரல் வாய்க்கும் என்பது நம்பிக்கை!

  கோயில் அர்ச்சகருக்கு வாழ்த்துக்கள்;
  கைப்பேசியை, ஆலயம் கொண்டு வராமல் இருப்பது மிக்க நல்லது;
  = அவருக்கு நல்லது இல்லை தான்! ஆனால் அடியார்களுக்கு நல்லது!

  நம் அலுவலகங்களில் நாம் கடைபிடிப்போமா?
  Shd I renounce my personal life at work or what?? -ன்னு வாய் பேசும்:)
  இவர் அலுவலகத்தில் இவர் கடைபிடிப்பது மகிழ்ச்சி தருகிறது!

  திகிசண்டளா வீணை
  = திகி சந்தள வீணை

  *சந்தளம் = சந்தம் (எ) சந்தஸ்/ ஓசை-ஒலி எல்லாம் ஆனாய் நீயே
  *திகி = திக்கு (அஷ்ட திக்)
  இப்படி, பல திக்குகளிலும் ஒலிக்கும் வீணை = திகி சந்தள வீணை!

  பொதுவா, ஓசை ஒரு பக்கமா இருந்து தான் வரும்! வரும் திசையை வச்சி, இடத்தைக் கண்டு பிடிச்சீறலாம்!
  ஆனா, ஈசனின் திசை எது? = அங்கு இங்கு எனாதபடிக்கு, எங்கும் பிரகாசமாய்…
  அவன் வீணை வாசிப்பும் = பல திக்குகளில் ஓசை எழுகிறது! = திகி சந்தளம்!

  வீணாதர தட்சிணாமூர்த்தி என்றும் சொல்லுவார்கள்!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s