வாராவாரம்-கேசரி-பஜ்ஜி-கிரிக்கெட்-1-09-2012

கேசரியும் பஜ்ஜியும்

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் போயிருந்தேன். கலைமணி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ராவ் பகதூர் சிங்காரம் புத்தகத்தை வாங்கனும்னுதான் போனேன். ஆனா அது கெடைக்கலை. அதுக்குக் காரணம் புத்தகங்களின் பதிப்புரிமை விகடன் கைக்குப் போனதுதான்.

ஐம்பதுகளில் ஆனந்த விகடனில் வெளியான சூப்பர் ஹிட் தொடர்களான தில்லானா மோகனாம்பாளும் ராவ்பகதூர் சிங்காரமும் கொத்தமங்கலம் சுப்பு எழுதுனதுதான். அதுக்கப்புறம் பழனியப்பா பிரதர்ஸ் கிட்டத்தட்ட அம்பது ஆண்டுகளுக்கும் மேலா ரெண்டு நாவல்களையும் பதிப்பிச்சுட்டு வந்தாங்க. இப்போ உரிமை கைமாறியதுக்குக் காரணம் யாதோ எவரோ!

அங்கயே மணியன் எழுதிய சில நாவல்கள் வாங்கினேன். அப்போ மணியனுக்கு மார்டன் எழுத்தாளர்னு பேரு. ஆங்கிலச் சொற்கள் நிறைய கலந்து எழுதுவார்னு குற்றச்சாட்டு இருந்தது. அதெல்லாம் இல்லாம யார் பேசுறா என்பது அவர் தரப்பு வாதமா இருந்தது.

அவர் எழுதிய ஒரு நாவல்தான் “உண்மை சொல்ல வேண்டும்”. 1974ல் தொடர்கதையாக வந்து 1975ல் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

சரி. கதைக்கு வருவோம். அப்போதைய பல எழுத்தாளர்களைப் போல மணியனுக்கும் பிராமணக் குடும்பங்கள்தான் கதைக்களம். இந்தக் கதையில் சுந்தரம் என்று ஒரு பாத்திரம். கதாநாயகி வனஜாவின் நண்பன். ஒருதலையாகக் காதலிப்பவன்.

வனஜாவின் பெண்பார்க்கும் படலம் பற்றித் தெரிந்து வருத்தமாக இருப்பவனால் சாப்பிட முடியவில்லை. அப்போது டிபன் பாக்சில் இருப்பது கேசரியும் பஜ்ஜியும். அதாவது வனஜாவைப் பார்க்க வந்தவர்களுக்குக் கேசரி கொடுக்கும் நேரத்தில் இவனால் கேசரி சாப்பிட முடியவில்லை என்று சொல்ல வந்திருக்கிறார் எழுத்தாளர். அவர் எழுத்திலேயே அந்தக் காட்சியைத் தருகிறேன். படியுங்கள்.

வேண்டா வெறுப்பாக டிபன் பாக்ஸை வெளியே எடுத்துத் திறந்தான். உள்ளே, அவன் தாயார் அவனுக்குப் பிடித்தமான ரவா கேசரியையும், பஜ்ஜியையும் செய்து வைத்திருந்தாள். கேசரியை ஒரு வாய் போட்டுக் கொண்டான். அது அவனுக்கு ருசிக்கவில்லை. டிபன் பாக்ஸை அப்படியே மூடினான்.

ரவா கேசரி அவனுக்குக் கசந்தது.

இதில் என்ன பிரச்சனை? பிரச்சனையெல்லாம் இல்ல. ஒரு சந்தேகம். மதியம் ஆபீசுக்குக் கொண்டு போற டிபன் பாக்சில் ரவாகேசரியும் பஜ்ஜியுமா வெச்சு அனுப்புவாங்க! இத்தனைக்கும் அன்னைக்குப் பண்டிகை எதுவும் இல்லாதப்ப!

ஒரு வேளை 1974ல் சென்னையில் இருந்த பிராமணக் குடும்பங்களில் டிபன் பாக்சில் கேசரியும் பஜ்ஜியும் வைத்து அனுப்பும் பழக்கம் இருந்ததா? அல்லது இன்னும் இருக்கிறதா? யாராவது விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

——————————————

முடிதிருத்தப் படி

வீட்டிலிருந்து நடக்கும் தூரத்துக்குள் புதுசா ஒரு முடிதிருத்தும் நிலையம். கொஞ்ச நாளா அடிக்கடி கண்ணுல பட்டுட்டிருந்தது. நல்லா மார்டன் லுக்கோட ஏர்கண்டிஷன் எல்லாம் செஞ்சு பளபளன்னு இருந்தது. பாத்ததும் முடி வெட்ட நூறு நூத்தம்பது வாங்குவாங்களோன்னு தோணுச்சு. முடி நெறைய வளந்ததால அங்க போய் வெட்டலாம்னு உள்ள போனேன். டீவில உரிமைக்குரல் படம் ஓடீட்டிருந்தது. எம்.ஜி.ஆர் விழியே கதை எழுதுன்னு லதாவோட கண்ணத் தொடச்சிக்கிட்டிருந்தாரு.

இரவு எட்டரை மணி ஆயிருந்ததால கூட்டமில்லை. ஒரு ரெண்டு நிமிசம் காத்திருந்தேன். அவ்வளவுதான். முடி வெட்டுறப்போ பேச்சுக் குடுத்தேன். அவர் பேரு மோகன்.

கடை தொறந்து பதினோரு மாசம் ஆயிருச்சு. நான் இப்பத்தான் பாத்திருக்கேன். இனிமே ரோட்டப் பாத்து வண்டியோட்டனும்.

இப்ப எல்லாத்துக்கும் படிப்பு சொல்லித்தரும் பள்ளி/கல்லூரி இருக்குற மாதிரி முடிதிருத்துறதுக்கும் இருக்கு. இந்த மோகன் படிச்சது மைதிலீஸ் நடத்தும் பள்ளியில். அதுக்குக் கட்டணம் பதினாறாயிரம் ரூபாய். ஒரு வருடம் தொடர்ந்து போகனுமாம். தினமும் நாலு மணி நேரங்குற மாதிரி கணக்கு. அதுல படிச்சுத்தான் கடை வெச்சிருக்காரு மோகன்.

முடி வெட்டுனப்புறம் “எவ்வளவு”ன்னு கேட்டேன். எழுபது ரூவா வாங்கிக்கிட்டாரு. நெனச்ச அளவுக்கு அதிகமில்லை. இப்பல்லாம் முடி வெட்ட எழுபது ரூபாதான். அடையாறு காந்திநகர்ல எலைட்-னு ஒரு கடை இருக்கு. அதுல எம்பது ரூவா. இதே மாதிரி கடைகள் பெங்களூரிலும் உண்டு. நாலு வருசத்துக்கு முன்னாடி எரநூறு ரூபாய்னு கேள்விப்பட்டேன். இப்ப எவ்வளவோ தெரியலை.

——————————————

கிரிக்கெட்

கிரிக்கெட்னாலே நம்ம ஊர்ல ஒரே கொண்டாட்டம் தான். வேற எந்த வெளையாட்டை விளையாண்டு ஒலிம்பிக்ல மெடல் வாங்கீட்டு வந்தாலும் அவங்களைக் கண்டுக்காம கிரிக்கெட்காரன் தும்மினாக்கூட துடிதுடிச்சுப் போகும் மக்கள் இந்திய மக்கள்தான். இப்பக்கூட பாருங்க உன்முக்த் சந்த் பள்ளித் தேர்வுல தோற்றுப் போனதுதான் முக்கியச் செய்தி. ஒலிம்பிக் மெடல் வாங்குனவங்க பட்டதெல்லாம் யாருக்கும் தெரியாது.

சரி. விடுங்க. கிரிக்கெட்டுக்கு ஒரு தனி மதிப்புதான். அதுலயும் நட்சத்திரக் கிரிக்கெட்னா? இது புது நட்சத்திரமில்ல. பழைய நட்சத்திரங்கள். 70களில் நடந்த நட்சத்திர கிரிக்கெட். அதுக்குக் கமெண்ட்ரி நீச்சல்குள கேஸ் புகழ் பத்மா சேஷாத்ரி பள்ளித் தாளாளர் மகன் ஒய்.ஜி.மகேந்திரா. பார்த்து கேட்டு ரசிங்க.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பொது and tagged , , , , , . Bookmark the permalink.

7 Responses to வாராவாரம்-கேசரி-பஜ்ஜி-கிரிக்கெட்-1-09-2012

 1. பக்கத்து வீட்டு வனஜாவின் அம்மா கொடுத்து அனுப்பிய கேசரியையும் பஜ்ஜியையும் மகனுக்கு டிஃபன் பாக்ஸில் வச்சு அனுப்புனாங்க சுந்தரத்தின் அம்மா:-) இப்ப சரி வருதா????

  இங்கே நம்மூர்லே முடிவெட்டப்படிக்க பயங்கர டிமாண்ட் அண்ட் செலவு.

  அதேபோல பிரபல முடிவெட்டும் நிபுணரை தங்கள் சலூன்களில் வேலைக்கமர்த்த கடும் போட்டி! காசாலயே அடிச்சுருவாங்க.!

  நமக்கு வாய்ச்சுருந்த ஆறு டாலர் ஜான் ரிட்டயர் ஆகிக் கடையை மூடிட்டுப்போயிட்டார். இப்பெல்லாம் கோபாலுக்கு 20 டாலர் செலவைக்க வேண்டியதா இருக்கு:(

  நம்ம கோகிப் பையனுக்கு முடிவெட்டக் கடைசியாக் கொடுத்தது 120 டாலர்.

  • kalaketeenga teacher, serial edithiurlam

  • GiRa ஜிரா says:

   ஹாஹாஹா டீச்சர், நீங்க மட்டும் மணியன் கிட்ட பேசியிருந்தா, கதையே மாறியிருக்கும். 🙂

   // நமக்கு வாய்ச்சுருந்த ஆறு டாலர் ஜான் ரிட்டயர் ஆகிக் கடையை மூடிட்டுப்போயிட்டார். இப்பெல்லாம் கோபாலுக்கு 20 டாலர் செலவைக்க வேண்டியதா இருக்கு:( //

   நெதர்லாந்துல நான் இருந்தப்போ இதே கதைதான் நடந்தது. கூட வேலை பாத்த நண்பர்கள் ஒரு பங்களாதேசியைக் கூப்பிடுவாங்க. எட்டு யூரோதான் முடிவெட்ட. வீட்டுக்கே வந்து வெட்டிவிடுவாரு. ஆனா அவரு முடிவெட்டுறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. எவ்வளவு வேகமா வெட்டி முடிச்சிட்டு கிளம்பலாம்ங்குற மாதிரியே இருக்கும்.

   நான் சலூனில் போய்தான் வெட்டிக்கிட்டேன். 25யூரோ. 20யூரோ முடிவெட்டிக்க. 5யூரோ டிப்ஸ். டச்சு இளைஞிகள்தான் அந்தக் கடையை நடத்துனது. தலைக்கு ஷாம்பு போட்டு கழுவி விட்டு முடி வெட்டுவாங்க. முடி வெட்டுறப்போ சீப்பு பயன்படுத்த மாட்டாங்க. விரல்களையே முடிக்குள்ள சீப்பு மாதிரி விட்டு வெட்டுவாங்க. 1500ரூவா(25யூரோ) குடுத்து முடிவெட்டுனதுக்கு சரியாப் போச்சு. ஆனா அவங்க ஒவ்வொருத்தருக்கும் ஏத்த மாதிரி சரியா வெட்டி விடுவாங்க. very professional.

   நம்மளை விட கோகி கூட்டத்துக்குதான் வெளிநாட்டுல வாழ்வு. இப்போ இங்கயும் கொஞ்சம் கொஞ்சமா அது தொடங்கீட்டிருக்கு.

 2. For many people laughing at brahmins is like eating kesari and bhajji, sad but true

  • GiRa ஜிரா says:

   Sorry sir. The reason for mentioning this is not to laugh, but curiosity to know whether it happens or not.

   Usually brahmins take rice for breakfast. That results in thin lunch like two idlies/ one dosa. I wanted to know whether the writer forced kesari and bajji in to the tiffion box just for the scenario, or really that can happen.

   And kesari and bajji are my favourite. 🙂 Bajji and Sojji

 3. அனுஷா says:

  பிராமண வீடுகளில் ஒரு பழக்கமுண்டு. காலையில் 10 மணி வாக்கில் ஃபுல் மீல்ஸ் அதுதான் அன்றைய முக்கிய உணவு. மதிய உணவு என்பது 3 மணி வாக்கில் ஏதாவது டிஃபன். இது பெரும்பாலும் பஜ்ஜி,கேசரி,பக்கோடா என்பதாகவே இருக்கும். இரவு மோர் சாதம். இதுதான் தினசரி வழக்கம். இன்றும் சிலர் விடுமுறை நாளன்று இதையே பின்பற்றுகிறார்கள்.

  • GiRa ஜிரா says:

   இதத்தான் நான் தெரிஞ்சிக்க கேட்டேன். தூத்துக்குடியில் பக்கத்து வீட்டுக்குப் போனா மாமி 3/3.30 மணிக்கு தோசை சுட்டுக் குடுப்பாங்க. சின்னக் கல். ஆனா மொறுமொறுன்னு தோசை வரும். தொட்டுக்க மொளகாப் பொடிதான். எண்ணெய்யோட கலக்குறப்போ எண்ணெய்யிலும் சிகப்பு நிறம் இறங்கும். பல வாட்டி சாப்பிட்டிருக்கேன். இந்நேரம் தோசை சுடுறாங்களேன்னு பலமுறை யோசிச்சிருக்கேன். இப்போ புரியுது.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s