டாக்டர் சாம்பன், ஃபெவிக்கால் ஸ்பெஷலிஸ்ட்

அனுமாரு எந்த மலையத் தூக்குனாரு?

சஞ்சீவி மலையத் தூக்குனாரு.

சரி. தூக்குனாரு. எதுக்குத் தூக்குனாரு. அதுல இருக்கும் மூலிகையால இறந்து போன ராமலக்குவனர்களையும் குரங்குகளையும் காப்பாத்தத் தூக்குனாரு.

நம்மள்ள பெரும்பாலனவங்களுக்குச் சஞ்சீவி மலையத்தான் அனுமாரு தூக்குனாருன்னு தெரியும். ஆனா கம்பரு தன்னோட ராமாயணத்துல வேறொரு பேரைப் போட்டுச் சொல்றாரு.

அதென்ன பேரு?

அந்தப் பேருதான் மருந்துமலை. இந்தப் பேர வெச்சிச் சொல்றப்போ நம்மாளுகளுக்கு அது என்ன மலைன்னு விளக்க வேண்டாம் பாருங்க. அடிபட்டுக் கிடக்குறவங்களைக் காப்பாத்தும் மருந்துமலைன்னு சொன்னா டக்குன்னு மண்டைல ஏறுதுல்ல. அதான் கம்பன் மருந்து மலைன்னு சொன்னான்.

சரி. இந்த மருந்து மலைல என்ன மருந்து இருக்கு?

மருந்து மலைல நெறைய மருந்துகள் இருக்காம். என்னென்ன நோய்னு சொன்னாலும் அந்தந்த நோய்க்கு அங்க மருந்து இருக்காம். கண்ணு தெரியல, காது கேக்கல, காலு நடக்கல, வாய் திங்கல, வயிறு செமிக்கல, கை தூக்கல, பிள்ளையில்ல, எப்பப்பாரு இருமல்னு என்னென்ன சொல்றீங்களோ எல்லாத்துக்கும் அங்க மருந்து இருக்கு.

இவ்வளவு விவரமும் ஒருத்தனுக்குத்தான் தெரிஞ்சிருக்கு. அவன் பேருதான் சாம்பவன். சாம்பவன் ஒரு கரடி. அந்தக் கரடிதான் அனுமாரை அனுப்பி மருந்து கொண்டுவரச் சொல்லுது.

சாம்பவன் கேட்டது என்னென்ன மருந்துகள்?

நான்கு மருந்துகளைக் கேட்டான் சாம்பவன். அது போர்க்களம். அடிகிடி நெறைய விழுந்திருக்கும். அதுனால இந்த நாலு மருந்தைக் கொண்டு வந்தாப் போதும்னு சாம்பவன் சொல்றான்.

மாண்டாரை உய்விக்கும் மருந்து – இந்த மருந்து மட்டும் இராவணன் கைல கெடச்சிருந்தா கும்பகருணனையும் இந்திரசித்தனையும் எழுப்பீருப்பான். அப்புறம் சண்டை எப்படி முடியும்?

அறுந்த உடல் உறுப்புகளைப் பொருத்தும் மருந்து – கைகால் அறுபட்டா எடுத்து ஒட்டிக்கலாம் பாருங்க. அதுவுமில்லாம குரங்குகள் சண்டை போடுது. வாலறுந்து போச்சுன்னா அசிங்கம். கொரங்குக்கு வாலும் வாயும் தானே அழகு. அதுக்குத்தான் இந்த ஃபெவிகால் மருந்து. ஒரு சொட்டு வெச்சி ஒட்ட வெச்சிரலாம்.

உடம்பில் பாய்ந்த படைக்கருவிகளை நீக்கும் மருந்து – ஒடம்புக்குள்ள பாஞ்ச அம்புகளையும் கத்திகளையும் ஒழுங்கா உருவனும்ல. உருவும் போது உள்ள இருக்குற உறுப்புகள் வெட்டுப்படாமல் இருக்கனுமே!

பழைய உருவத்தைக் கொடுக்கும் மருந்து – ஒடம்பெல்லாம் காயம். அங்கங்க அடி இடி மாதிரி எறங்கி ஒரு பக்கமே நசுங்கிப் போச்சு. அந்த மூஞ்சியோட போனா நல்லாவா இருக்கும். சண்டை முடிஞ்சு வீட்டுக்குப் போனா பொண்டாட்டி பிள்ளைகளுக்கு அடையாளம் தெரிய வேண்டாமா! அதுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ற மருந்துதான் இந்த மருந்து.

இந்த நாலு மருந்தையும்தான் அனுமன் கொண்டு வரனும். ஆனா நேரமாயிருக்கக் கூடாதேன்னு அனுமன் மருந்தைத் தேடாம மலையையே தூக்கிக்கிட்டு வந்துர்ரான்.

இந்த நாலு மருந்தையும் பத்திச் சொல்லும் பாட்டைப் பாப்போம்.
‘மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
உடல் வேறு வகிர்கள் ஆகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,
படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர்
மெய்ம்மருந்தும், உள; நீ, வீர!
ஆண்டு ஏகிக் கொணர்தி ‘என அடையாளத்தொடும்
உரைத்தான், அறிவின் மிக்கான்.

இந்தப் பாட்டுக்கு விளக்கமெல்லாம் தேவையில்லை. ஓரளவு ஊன்றிப் படிச்சாலே புரிஞ்சிரும். இருந்தாலும் சுருக்கமா விளக்குறேன்.

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் – இறந்து போனவங்களை உயிர்ப்பிக்கும் மருந்து
உடல் வேறு வகிர்கள் ஆகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் – உடம்பைத் துண்டு துண்டா வெட்டினாலும் பொருத்துவிக்கும் ஒரு மருந்து
படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும் – உடம்புக்குள் போன படைக்கருவிகளை சேதமில்லாமல் வெளியே எடுக்கும் மருந்து ஒன்று
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம்மருந்தும், உள – எவ்வளவுதான் அடிபட்டு நெளிந்து நசுங்கிப் போயிருந்தாலும் திரும்பவும் உருவத்தைக் கொடுக்கும் மெய்ம்மருந்து

இப்பப் பாடல் எளிமையாப் புரிஞ்சிருக்கும்.

இந்த நாலு மருந்துகளுக்கும் கம்பர் தமிழ்ப் பெயர்கள் குடுத்ததால நமக்கு எளிமையாப் புரிஞ்சிருச்சு. வால்மிகி முனிவர் இந்த மருந்துகளுக்குச் சொல்லும் வடமொழிப் பெயர்கள் என்ன தெரியுமா?

மாண்டாரை உய்விக்கும் மருந்து – ம்ருதசஞ்சிவினி
உறுப்புகளைப் பொருத்தும் மருந்து – ஸந்தரணகரணீ
படைக்கருவிகளை நீக்கும் மருந்து – விஸல்யகரணீ
பழைய உருவத்தைக் கொடுக்கும் மருந்து – ஸாவர்ண்யகரணீ

இந்த சாம்பன் மாதிரி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களும் அனுமன் மாதிரி மெடிக்கல் ரெப்புகளும் இப்ப இருந்தா எவ்வளவு நல்லாருக்கும். என்ன… அவங்க நல்லவங்களாவும் இருக்கனும். இல்லைன்னா ஒன்னுக்கு ஆயிரமா வெலைய ஏத்தி லாபம் பாக்குறதே நோக்கமாயிரும்.

இந்தப் பாடலைப் பற்றிய எனது சிறிய சொற்பொழிவை இங்கே கேட்கலாம்.

அன்புடன்,
ஜிரா

p.s. Photo Coutesy

1. http://muslimvillage.com/2012/03/12/20434/understanding-islamic-prophetic-medicine-in-light-of-eastern-medicine/

2. http://killdisease.com/how-to-make-your-kids-swallow-medicine-easily.html

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இலக்கியம், கம்பராமாயணம் and tagged , . Bookmark the permalink.

3 Responses to டாக்டர் சாம்பன், ஃபெவிக்கால் ஸ்பெஷலிஸ்ட்

  1. பதிவும், சொற்பொழிவுக்கும் நல்ல பகிர்வு….நன்றி ஜிரா ;))

  2. குரலும் தமிழும் இனிமையாக இருந்தது 🙂 பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தம்பீ!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s