செந்தில்நாதனும் கார்காலமும்

ஒரு குடும்பத் தலைவனின் விடியல் நல்ல விடியலா என்பது காப்பி டம்ளரிலேயே தெரிந்து விடும். வழக்கதை விட காப்பி நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் கணவர்களுக்கு அது எச்சரிக்கை மணி.

அப்படியொரு எச்சரிக்கை மணிதான் செந்தில்நாதன் மண்டைக்குள் அடித்தது. காப்பியைக் குடுத்து விட்டு வழக்கமாக நகர்ந்து விடும் வந்தாளே மகராசி இன்று அருகிலேயே நின்றது அவன் ஐயப்பாட்டை உறுதி செய்தது.

“காப்பி நல்லாயிருக்கா?”

இந்தக் கேள்வி வரும் போது சொல்ல வேண்டிய ஒரே பதிலை செந்தில்நாதனும் சொன்னான்.

“நல்லாருக்கு. ஃபில்டர் போடுறதுல எதாச்சும் புது டெக்னிக் கத்துக்கிட்டிருக்கியா?”

இந்த அதிகப்படியான கேள்வி, கணவன் காப்பியை ரசித்திருக்கிறான் என்ற பொய்யான நம்பிக்கையை மனைவிகளுக்குக் கொடுக்கும். வந்தாளே மகராசியும் அகமகிழ்ந்து போனாள்.

”கண்டுபிடிச்சிட்டீங்களே. வழக்கமா வாங்குற காப்பித்தூள்ள சிக்கரி 30% இருக்காம். அதான் வெறும் காப்பித்தூளை அரைச்சு வாங்கி ரெண்டையும் கலந்திருக்கேன். அதான் நல்லாருக்கு.”

காப்பித்தூளை அரைக்கும் போதே 10% சிக்கரி போட்டு அரைத்து வாங்கியிருக்கலாமே என்று தோன்றிய கேள்வியை செந்தில்நாதன் கேட்கவில்லை. அவன் அனுபவஸ்தன். அடுத்து மகராசியே பேசட்டும் என்று விட்டு விட்டான்.

”பக்கத்து தெருவுல கதிர்வேல் டிரைவிங் ஸ்கூல் இருக்குல்ல. அதுல சேரலாம்னு இருக்கேன்.”

பெண்கள் ஓட்டக்கூடிய கியர் இல்லாத ஹோண்டா ஆக்டிவாவையே ஏரோப்பிளேன் ரேஞ்சுக்கு ஓட்டும் மகராசி கார் டிரைவிங் என்று சொன்னதும் செந்தில்நாதன் சுனாமியும் நிலநடுக்கமும் ஒரே நேரத்தில் தாக்கும் போது தலையில் அணுகுண்டு விழுந்தது போல உணர்ந்தான்.

இந்த மாதிரி சூழ்நிலைகளில் எதிர்ப்பதமாக எதையும் பேசக்கூடாது என்பது கணவர்களுக்குப் பாலபாடமாக இருக்க வேண்டும். எதிராக எதையும் சொன்னால் எதிரியைச் சீண்டுவதற்குச் சமம் என்பதைச் செந்தில்நாதன் இத்தனை ஆண்டுகளின் படித்து வைத்திருந்தான்.

”நல்ல ஐடியா. சனிக்கிழமை நானே போய் பணம் கட்டிச் சேத்து விடுறேன். சரிதானே.”

“சனிக்கெழமைக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு. நானே நேத்து கடைக்குப் போறப்போ பணத்தைக் கட்டிட்டேன். நாளைல இருந்து கிளாஸ். காலைல அஞ்சரை மணிக்கெல்லாம் போகனும்.”

நேற்று பணங்கட்டியதை நேற்றே ஏன் சொல்லவில்லை என்று கேட்க செந்தில்நாதன் முட்டாளா! கேட்டால் “நீங்க மட்டும் எல்லாத்தையும் சொல்றீங்களா? ஒங்கம்மா எதையாச்சும் வாயத்தொறந்து சொல்லியிருக்காங்களா? போனமாசம் பேங்க் லாக்கருக்குப் போனாங்க. ஏன்னு ஒரு வார்த்தை கேட்டிருப்பேனா?” என்பது போன்ற வசனங்களைக் கேட்க வேண்டியிருக்கும்.

”சரிம்மா. இவ்வளவு அவசரமா கார் படிக்கிற ஆசை எப்படி வந்தது?”

”அவசரமாவும் வரல. ஆவேசமாவும் வரல. நீங்க காலைல எந்திரிச்சு ஒருவேலையும் செய்யாம ஆபீஸ் போயிருவீங்க. நாந்தானே கொழந்தகைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வர்ரேன். எல்லாரும் கார்ல வந்து விடுறாங்க. நாந்தான் பழைய ஸ்கூட்டர்ல போய் விடுறேன். பிரதிக்கோட அம்மால்லாம் அவங்களே கார் ஓட்டிக்கிட்டு வர்ராங்க. She has a car for herself. நான் படிக்கனும்னுதானே சொன்னேன். கார் வேணும்னா கேட்டேன்.” ஒரு குட்டி ஆவேசச் சொற்பழிவு நிகழ்ந்தது.

“படிக்கக்கூடாதுன்னு சொல்லலையே நான். தாராளமாப் படி. திடீர்னு ஆசை வந்திருக்கேன்னு கேட்டேன். நீ கார் ஓட்டப் பழகுனா எனக்கு ரொம்பவே சந்தோஷந்தான்.” மனதறிந்து பொய் சொன்னான் செந்தில்நாதன்.

இப்படியாக செந்தில்நாதனின் வாழ்வில் வந்தாளே மகராசியின் தயவில் புதியதொரு “கார்”காலம் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை காலை ஏழு மணியும் வந்தது. முதன்முதலாக டிரைவிங் கிளாஸ் போய் வந்த மனைவியிடம் ”டிரைவிங் எப்படியிருந்தது? ஒழுங்கா சொல்லிக்குடுத்தாரா?” என்று உண்மையான அக்கறையோடு கேட்டான்.

அப்படி அவன் கேட்காவிட்டால் அதை வைத்தே சண்டையைக் கிளப்பத் தயாரான மூடில்தான் மகராசியே வீட்டுக்குள் நுழைந்திருந்தாள். ஏனென்றால் காரை நகட்டக் கூட முடியாமல் டிரைவிங் சாரிடம் திட்டு வாங்கியிருந்தாள். ஆனால் செந்தில்நாதனே கேட்டதும் அவள் தனது போர்த்திட்டத்தை மாற்ற வேண்டியிருந்தது.

“மொதநாளே காரை அப்படியே ஓட்டிருவாங்களாக்கும். கார்ல என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கவே நாளாகும். இப்ப எங்கிட்ட ஒன்னும் கேக்காதிங்க. கார் ஓட்டிக் காமிக்கும் போது தெரிஞ்சுக்கோங்க.”

அதற்கு மேல் அவன் ஒன்றும் கேட்கவில்லை. சில நாட்கள் அமைதியாகவே சென்றன. டிரைவிங் கிளாசும் தொடர்ந்தது. அமைதி நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. சனிக்கிழமை கடைக்குக் காரில் போகும் போது பேச்சு தானாக ஆரம்பித்தது.

”நீங்க இப்போ கியர்தான மாத்துனீங்க.”

ஐந்து நாட்கள் டிரைவிங் கிளாசுக்குப் போனவர்கள் கேட்கும் கேள்வியைப் போல அது இல்லாவிட்டாலும் பொத்தாம் பொதுவாக ஆமாம் என்றான் அவன்.

”எனக்குத் தெரியும். ஆனா நீங்க செகண்ட் கியருக்கு நேரடியா மாத்திட்டீங்க. அது தப்பு. பர்ஸ்ட் கியர்ல வண்டிய நகட்டி, கியர நியூட்ரலுக்கு கொண்டு வந்துதான் பிறகு செகண்ட் கியருக்கு வரனும். ஒரே இழுப்பா இழுத்துட்டீங்களே?”

அவனும் அப்படித்தான் செய்தான். ஆனால் பழக்கத்தினால் மடமடவென்று அழகாக மாற்றியிருந்தான்.

“நான் ரொம்ப நாளா ஓட்டுறதால அது லேசா வருது. நீயும் நாளைக்கு இப்பிடித்தான் ஓட்டுவ.”

தான் கார் ஓட்டப் போகும் கனவில் ஆழ்ந்த மகராசி அடுத்து ஒரு குற்றச்சாட்டை வீசினாள்.

“நீங்க நடுரோட்டுலயே கார் ஓட்டுறீங்க. லெஃப்ட்லயே ஓட்டனும்னு சார் சொல்லியிருக்காரு. எடம் இருக்குன்னு நடுரோட்டுலயே ஓட்டிப் பழகுனா அப்படியே பழக்கமாயிருமாம். நீங்க மானாங்கானியா நடுரோட்டுல ஓட்டுறீங்க. இதெல்லாம் நான் சொன்னா தப்பாதான் தெரியும்.”

இப்படியே மகராசி தயவில் டிரைவிங்கில் புதிய பாடங்களைப் படித்துத் தெரிந்து கொண்டான். பதினைந்து கிளாஸ் முடிந்து டிரைவிங் லைசென்சும் வாங்கி விட்டாள் மகராசி.

சனிக்கிழமை மதியம் சாப்பிட்டுத் தூங்கிய செந்தில்நாதனுக்கு மாலையில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவனது அழகான காரின் இருபக்கம் எங்கேயோ உரசித் தேய்த்திருந்தது. வேகவேகமாக வந்து மனைவியிடம் கேட்டான்.

“ஓ ஒரசித் தேஞ்சிருக்கா? நான் ஒழுங்காதானே ஓட்டுனேன். எதையும் ஒரசுன மாதிரியே எனக்குத் தெரியலையே.”

”ஒரசுறது கூடத் தெரியாம ஓட்டியிருக்க. கார எடுக்கனும்னா என்னக் கூப்புட வேண்டியதுதானே. சொல்லாமக் கொள்ளாம எடுத்தா என்ன அர்த்தம்?”

ஆத்திரத்தில் கொதித்தான் செந்தில்நாதன்.

“ஏன் இப்பிடிக் கத்துறீங்க? இத்தன வருஷமா கார் ஓட்டுற நீங்களே அன்னைக்கு கிண்டில ஒரசலையா? புதுசா கத்துக்கிறப்போ அப்படித்தான் இருக்கும். அதுக்கு மேல நீங்க வண்டிய மெயிண்டெயின் பண்றதையும் சொல்லனும். டிரைவிங் கிளாஸ் கார்ல பிரேக்கும் ஆக்சிலரேட்டரும் நல்லா மெதுவா ஸ்மூத்தா இருக்கும். இந்தக் கார்ல லேசா பிரேக்க அமுக்குனாலும் படக்குன்னு கார் நிக்குது. அதே மாதிரி ஆக்சிலரேட்டர லேசா அமுக்குனாக் கூட குதிச்சிக்கிட்டு ஓடுது. இதுல என்னச் சொல்ல வந்துட்டீங்களா? இனிமே தெனமும் கார் எடுப்பேன். ஓட்டிப் பழகுவேன்.” இதைத்தான் டிஃபன்ஸ் எரிமலை என்பது. ஒரு கத்தலுக்குப் பதிலாகப் பத்து கத்தல். அப்போதான் அடுத்தவர் எதுவும் பேச மாட்டார்கள்.

நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பழைய கார் வாங்கித் தருவதாகவும் அதில் பழகும் படியும் சொன்னான். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பலப்பல திட்டங்களை அலசி ஆராய்ந்தபின் புதுக்கார் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இருக்கும் காரை மகராசி எடுத்துப் பழகுவது என்றும் நன்றாக ஓட்டத் தெரிந்தபின் புதுக்கார் மகராசிக்குக் கொடுக்கப்படும் என்றும் அதற்குப் பின்னர் ”ராசியான” பழைய காரைத் திரும்ப செந்தில்நாதன் எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இப்படி இடி மின்னல் மழை புயல் சுனாமிகளோடு செந்தில்நாதனின் வாழ்க்கையில் புதியதொரு கார்காலம் நடந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய பழைய காரை எடுக்கும் போது செந்தில்நாதன் கண்ணீர் விட்டுக் கதறி அழுததைப் பற்றி நாம் கண்டுகொள்ள வேண்டாம்.

அன்புடன்,
ஜிரா

Photo Courtesy
1. http://soundspicy.blogspot.in/2010/12/madras-filter-coffee.html
2. http://www.pistonheads.com/Gassing/topic.asp?h=0&t=562849&r=8710833&hm=28560

3. http://www.wellheeledblog.com/category/car/

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை and tagged , , . Bookmark the permalink.

17 Responses to செந்தில்நாதனும் கார்காலமும்

 1. ஹாஹா.. போனமாசந்தான் மவராசி LLR’எடுத்து வீக்கிலி கிளாஸ் போயிட்டு இருக்காக..!!
  கார் இல்ல தான். ஆனா “கார்”காலம் வரும்னு ஒரு முன்னெச்சரிக்கை.
  “நீங்க கடலு கப்பலுன்னு போயிட்டா வண்டிய நானே ஓட்டுவேனே”ன்னு இல்லாத காருக்கு இப்பவே பழகிக்கிட்டு இருக்காக.!

  #அய்யய்யோ.. இப்பத்தான் ஞாபகம் வருது. பழகிமுடிச்ச பின்னாடி.. “லோன் போட்டாவது வண்டி வாங்குங்க”ன்னு ஆரம்பிச்சிருமோ.., “கருகாலம்” எனக்கு..!

  • GiRa ஜிரா says:

   உங்க கார்காலமும் தொடங்கப் போகுதுன்னு சொல்லுங்க. 🙂 என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

 2. Very funny! But all lady drivers are not like how you have described 🙂 I am an excellent driver if I may say so myself 🙂

  amas32

 3. ஜிரா..மையமாக சிரித்து வைக்கிறேன் #நானும் பொண்டாட்டிக்கு என் காரை பழககுடுத்தவந்தேன்..;)

  • GiRa ஜிரா says:

   மையமாச் சிரிக்கும் போதே தெரிஞ்சு போகுதே விவரம். சிலர் வீட்டுல நல்லாவே பிக்கப் பண்ணிக்கிறாங்க. என்னோட பிரண்டு வீட்டுல அவன் சொல்லிக் கொடுத்தே கார் ஓட்டுறது நல்லா பிக்கப் பண்ணிக்கிட்டாங்க. தைரியமா கொல்கொத்தா தெருக்கள்ள ஓட்டிட்டுப் போறாங்க.

 4. வெறித்தனம் போங்க! கார்காலம் ஊடல ஆரம்பிச்சி வெச்சுடும் போல. மூணு மாசத்துக்குப் பிறகு “ராசியான” பழைய கார திரும்ப வாங்கும் பொது செந்தில்நாதன் நிலைமையை நெனைச்சா சிரிப்பாவும், பாவமாவும் வருது. 😉

  • GiRa ஜிரா says:

   அதான் செந்தில்நாதன். அழுதும் சிரிக்க வைப்பான். இன்னும் என்னென்னவோ அவன் வாழ்க்கையில் நடக்கப் போகுது. இதெல்லாம் சின்ன விவகாரம். 🙂

 5. Mathan says:

  // இந்த மாதிரி சூழ்நிலைகளில் எதிர்ப்பதமாக எதையும் பேசக்கூடாது என்பது கணவர்களுக்குப் பாலபாடமாக இருக்க வேண்டும். // sooper !

  • GiRa ஜிரா says:

   பாலபாடங்கள் வாழ்க்கையில் பலவிதங்கள்ள உதவும்.

 6. Paavam Senthilnathan!. But he is very smart.

  Nalina

  • GiRa ஜிரா says:

   ஆகா. இந்தப் பாடு பட்டிருக்கான். அவனை ஸ்மார்ட்னு சொல்றிங்களே?

 7. Vijay says:

  Nice Story. Last para is very nice 🙂

 8. Senthil Nathan says:

  Adappavi Vera pere kadaikaliya :)))

 9. Pingback: செந்தில்நாதனும் மாமியார் வருகையும் | மாணிக்க மாதுளை முத்துகள்

 10. Pingback: செந்தில்நாதனும் மாடித்தோட்டமும் | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s