அள்ளித் தந்த பூமி

சொந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்ததெல்லாம் அந்தக்காலம்.

பிறப்பு ஒரு ஊரில். படிப்பு பல ஊர்களில். வாழ்க்கையோ சோறு கண்ட இடமெல்லாம். முடிவு ஆண்டவன் விட்ட வழி என்பதே இந்தக்காலம்.

அதனால்தான் பழசையெல்லாம் நினைத்துப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விடுகிறோம்.

நம்முடைய அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குச் சொல்வது மிகவும் சுகமானது.

பட்டிக்காட்டில் வளர்ந்தவர்க்கு மட்டுமல்ல பட்டினக்கரையில் வளர்ந்தவர்களுக்கும் அப்படித்தான்.தன் மகனையோ மகளையோ கூட்டிக் கொண்டு போய்
இதுதான் நான் பிறந்த வீடு
இதுதான் நண்பர்களோடு விளையாண்ட தெரு/மந்தை.
இதுதான் என் பள்ளிக்கூடம். இங்குதான் நெல்லிக்காய்/ஜவ்வுமிட்டாய் வாங்கித் தின்றேன்.
இந்தக் கோயிலுக்கு/சர்ச்சுக்குதான் எங்கம்மா முந்தி கூட்டிட்டு வருவாங்க
இதுதான் நான் படிச்ச காலேஜ்.

இப்படிச் சொல்வதற்கு எத்தனையெத்தனையோ இருக்கின்றன.

அப்படிச் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பவன் இந்தப் பாடலைப் பாடுகின்றவன்.

பிறந்தது லக்னோ. கோடிக்கோடியாய் பணம் இருந்தாலும் குடும்பப்பிரச்சனைகளும் ஆஸ்துமா தொந்தரவும் தாங்காமல் சென்னையில் வேலை தேடிக் கொண்டு வந்துவிடுகிறான். வந்த இடத்தில் தமிழ்ப் பெண்ணோடு காதல். திருமணம் செய்து கொண்டு குழந்தையையும் கூட்டிக் கொண்டு லக்னோ செல்கிறான். அங்கு தன் குழந்தைக்கும் மனைவிக்கும் ஊரைச் சுற்றிக் காட்டுகிறான். அதுதான் இந்தப் பாட்டு.

அள்ளித்தந்த புமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

நன்றாக நினைத்துப் பாருங்கள்… எப்போதும் நாம் அன்னையோடும் தந்தையோடும் மட்டும் இருக்கவில்லை. தெருவில் விளையாண்டோம். பள்ளியில் இருந்தோம். அப்போது விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் எத்தனையெத்தனை விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். அத்தனையையும் ஒரேயொரு பாடலில் ஒருவருக்குச் சொல்ல முடியுமா? நாமென்ன கிருஷ்ணனா? மௌனமொழியில் நொடியில் கீதை முழுவதையும் சொல்லி அர்ஜுனன்களுக்குப் புரிய வைக்க!

கங்கையமரனின் அழகிய பாடலுக்கு இளையராஜாவின் இசையும் மலேசியா வாசுதேவனின் குரலும் துணைக்கு வருகின்றது.

குரல்களில் பொய்யில்லாத குரல்கள் உண்டு. முன்பெல்லாம் பாடகர்கள் அந்த வகைதான். பிறகு உண்மைக்குரலில் வராத சிலபல சங்கதிகளைப் பொய்க்குரலில் கொண்டு வரும் முறை வந்தது. எம்.எஸ்.விசுவநாதனுக்கும் இளையராஜாவுக்கும் உண்மைக்குரலையும் பொய்க்குரலையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் உண்மைக்குரல் பாடல்கள் மிக அரிதாகி விட்டன. அபூர்வமாகவே கேட்கக்கிடைக்கின்றன.

மலேசியா வாசுதேவன் உண்மைக்குரல் பாடகர். இவர் சிதம்பரம் ஜெயராமனைப் போலவும் பாடுவார். சுருளிராஜனைப் போலவும் பாடுவார். தன்னுடைய குரலிலும் பாடுவார். அவர் குரலில் பாடும் போது குரலில் சேட்டைகள் இருக்காது. சுசீலாம்மாவும் டி.எம்.எஸ்சும் ஜெயச்சந்திரனும், சித்ராவும் இந்தவகைக்குரல் கொண்டவர்கள்தான். நாம் இழந்துவிட்ட சுவர்ணலதாவும் இப்படித்தான்.

ஜெயச்சந்திரன் குரல் உருகும் ஐஸ்கிரீம் போல. அப்படியொரு இனிமை. அதற்கு நேர்மாறான குரல் மலேசியாவுக்கு. லேசான கரகரப்பு கலந்த குரல். டி.எம்.எஸ்க்குப் பிறகு மற்றொரு ஆண்மைமிக்க குரல் என்று இலங்கை வானொலி பட்டம் கொடுத்து பெரும்பாலோர் ஏற்றுக் கொண்ட குரல்.

அந்தக் குரலில் இந்தப் பாடலைக் கேட்பது சுகானுபவம். இந்தப் படத்தில் நடித்த இந்தி நடிகருக்குக் குரல் சரத்பாவு என்பது கூடுதல் தகவல்.


நண்டு படத்தில் ஒரு இந்திப் பாட்டும் உண்டு. கேய்சே கஹுன் குச் கெஹனா என்று தொடங்கும் பாடலை பூபிந்தரும் எஸ்.ஜானகியும் பாடியிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே என்ற உமாரமணன் பாட்டும் இருக்கிறது.  அழகான பாட்டு. அதையும் கேட்டு ரசிக்கலாம்.

எதையோ சொல்ல வந்து பதிவாக எழுதிவிட்டேன். பதிவு ரசனையாக இருக்கிறதோ இல்லையோ… பாடல்கள் ரசனையோடு இருக்கும். 🙂

அன்புடன்,

ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இசைஞானி, இளையராஜா, திரைப்படம், திரையிசை. Bookmark the permalink.

1 Response to அள்ளித் தந்த பூமி

  1. தங்களின் ரசனையை ரசித்தேன்… அனைத்தும் பாடல்களும் இனிமையான பாடல்கள்…

    நன்றி…

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s