கற்பதிக்கு நற்பதியின் – விளக்கம்

தினமும் காலையில் வணக்கம் சொல்லும் போது எதையாவது எழுதிச் சேர்ப்பது வழக்கம்.

அம்மன் தொடர்பாக எதுவும் எழுதவில்லையே என்று தோன்றி எழுதியதுதான் கீழே உள்ள கவிதை. சரி. சரி. செய்யுள் மாதிரியான கவிதை.

கற்பதிக்கு நற்பதியின் பொற்பதிக்கு மாமகள்
கற்பதிக்கும் நிற்பதிக்கு வெற்பதனில் மணமகள்
இற்பதிக்கு சொற்பனையில் சொற்பதிக்கும் மலைமகள்

இதில் எதுகை, மோனை, அசை, சீர், தொடை, பா என்று எதையும் பார்க்கவில்லை. ஆகையால் இலக்கணப் பிழையிருந்தால் மன்னிக்கவும். அதே நேரத்தில் பிழையை எடுத்துச் சொல்லவும். அடுத்த முறை திருத்திக் கொள்ள உதவும்.

இந்தக் கவிதையை என்ன நினைத்து நான் எழுதினேன் என்ற பொருளைக் கீழே கொடுக்கிறேன்.

கற்பதிக்கு நற்பதியின் பொற்பதிக்கு மாமகள்

கற்பதி = கல்+பதி. இங்கு பதி என்பது ஊர்/இடம். மலைகளில் கற்களாக இருப்பதால் கற்பதி என்பது மலையூர் அல்லது கற்களாக உள்ள இடம். அதாவது இமயம்.
நற்பதியின் = நல்ல + பதி + இன். இங்கு பதி என்பது தலைவன். சுரபதி என்றால் சுரங்களின் தலைவன். அதுபோல நற்பதி என்றால் நல்ல தலைவன். கற்பதியின் நற்பதி என்றால் இமயத்துக்கு நல்ல அரசனான இமவான்.
பொற்பதி = பொன் + பதி. இங்கு பதி என்றால் இடம்/ஊர். பொன்னான வீடு/அரண்மனை என்று கொள்ளலாம்.

கற்பதிக்கு நற்பதியின் பொற்பதிக்கு மாமகள் = இமயத்தின் அரசனனின் பொன் வீட்டு மாமகள் ஆனவள்

கற்பதிக்கும் நிற்பதிக்கு வெற்பதனில் மணமகள்

கற்பதிக்கும் = கற்ப + திக்கும் = எல்லாத் திசைகளிலும்
நிற்பதிக்கு = நில் + பதி = நிலைத்து நிற்கும் பதி(தலைவன்). எல்லாத் திசைகளிலும் நிலைத்து நிற்கும் ஈசனாரின்
வெற்பதனில் மணமகள் = வெற்பு + அதனில் + மணமகள். ஈசனின் வெற்பு கயிலை. அந்தக் கயிலையில் மணமகளாக இருக்கிறாள்

கற்பதிக்கும் நிற்பதிக்கு வெற்பதனில் மணமகள் = கல்பகோடி திக்குகளில் நிறைந்திருக்கும் ஈசனாரின் கயிலையில் மணமகளாக இருக்கிறாள்

இற்பதிக்கு சொற்பனையில் சொற்பதிக்கும் மலைமகள்

இற்பதி = இல் + பதி. இல்லத்தின் பதி என்றால் கணவன். இற்பதிக்கு = கணவனுக்கு
சொற்பனையில் = சொல் + பனையில். இங்கு சொல் என்பது தமிழ்ச் சொற்களால் ஆன பாடல்களைக் குறிக்கும். பனை என்பது சினையாகு பெயர். அதாவது தமிழ் எழுதப்படும் ஓலை பனையிலிருந்து வருவதால் பனை என்பது ஓலையைக் குறிக்கும்.
சொற்பதிக்கும் மலைமகள் = சொல் + பதிக்கும் + மலைமகள். சொற்களை பொருளோடு பதிக்கின்ற மலைமகள்.

இற்பதிக்கு சொற்பனையில் சொற்பதிக்கும் மலைமகள் = கணவனான இறையனார் ஓலையில் எழுதும் பாடல்களில் சொற்களாகவும் பொருளாகவும் பதிந்து நிற்கின்றாள் மலைமகள்

எளிமையாகச் சொன்னால்,

இமயமலையின் தலைவன் இமவானின் பொன்வீட்டு மகளான அம்பிகை
எங்கும் நிறைந்திருக்கும் ஈசனுக்கு கயிலையில் மணமகளாக எப்போதும் இருக்கிறாள்
(அத்தோடு) ஏடெடுத்து கணவன் எழுதும் தமிழ்ச் செய்யுட்களில் சொற்களாகவும் பொருளாகவும் பதிந்திருக்கிறாள் மலைமகள்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அம்மன், இறை, தமிழ். Bookmark the permalink.

2 Responses to கற்பதிக்கு நற்பதியின் – விளக்கம்

  1. Sethu says:

    fantastic GiRa 🙂 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s