நாகமாணிக்க வேட்டை – 1 – இளவரசி சிறைப்படல்

பாண்டிய நாட்டின் பட்டத்து யானை கோடைக்கானல் மலை மேல் ஏறிக்கொண்டிருந்தது. அந்த யானையின் மேல் ஒரு அம்பாரி. அதில் பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியனும் அரசியான மங்கையர்க்கரசியும் இளவரசி வானதியும் உட்கார்ந்திருந்தார்கள்.

மதுரையிலிருந்து புறப்பட்டு கோடைக்கானல் செல்கின்றார்கள். நாளை இளவரசி வானதியின் பன்னிரண்டாவது பிறந்த நாள். அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக கோடைக்கானல் செல்கின்றார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கோடைக்கானல் முருகன் கோயிலில் குறிஞ்சி மலர்கள் பூக்கும். வானதி பிறந்த அன்று பூத்த குறிஞ்சி மலர் மீண்டும் இப்பொழுதுதான் பூத்திருக்கின்றது.

அதை நினைத்து மன்னரிடம் கேட்டாள் வானதி. “அப்பா, குறிஞ்சி மலர்கள் ஏற்கனவே பூத்து விட்டதா? இல்லை இனிமேல்தான் பூக்குமா?”

“குறிஞ்சி மலர்கள் ஏற்கனவே பூத்து விட்டன. நாம் நாளை குறிஞ்சியாண்டவர் கோயிலுக்குப் போகும் போது பார்க்கலாம்.”

”நாளைக்குக் கோயிலுக்குப் போகின்றோமா அப்பா? இங்கே குளிர்கிறதே. மலைக்கு மேலே போகப் போக இன்னும் குளிருமா?”

“ஆமாம். மலைக்கு மேலே செல்லச் செல்ல குளிரும் நிறைய இருக்கும். அந்தக் குளிரில் எழுந்து குளித்து விட்டு நாளைக்குக் காலையில் கோயிலுக்கும் போகிறோம். உனக்காக சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.”

இப்படிப் பேசிக்கொண்டே யானை மீது சுற்றுலா போவது வானதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கோடைக்கானலில் இளவரசி வானதிக்கு உண்டாகப் போகும் ஆபத்து தெரிந்திருந்தால் மன்னர் கோடைக்கானலுக்குப் பயண ஏற்பாட்டைச் செய்திருக்கவே மாட்டார். என்ன செய்வது? விதி வலியது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சிமலர் பூக்கின்ற பொழுது மதுரையிலிருந்து பாண்டிய மன்னர் கோடைக்கானலுக்கு வந்து முருகனை வணங்க வேண்டும் என்பது பலப்பல ஆண்டுகளாக நடக்கும் வழக்கம். அதே போல் யாருக்கும் தெரியாமல் நாகராஜனும் நாகலோகத்திலிருந்து வந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வணங்குவதாகவும் ஒரு நம்பிக்கை.

மறுநாள் காலை அனைவரும் குளித்து விட்டு நல்ல உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்கள்.

அங்கே முருகனுக்கு அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள். மிகமிக அழகான நீல நிறத்துக் குறிஞ்சி மலர்களை மாலையாகக் கட்டி முருகனுக்குச் சாத்தியிருந்தார்கள். அந்த மலர்களைப் பார்க்கப் பார்க்க வானதிக்கு தானும் அந்த மலர்களை தனது கூந்தலில் வைக்க வேண்டும் என்று ஆசை வந்தது. இப்பொழுதுதான் முதன்முறையாக குறிஞ்சி மலர்களை வானதி பார்க்கிறாள். எத்தனையோ மலர்களைச் சூடிக்கொண்ட அவளுக்குக் குறிஞ்சி மலரையும் சூடிக்கொள்ள ஆசை வந்தது.

முருகனுக்குப் பூஜை முடிந்ததும் கோயில் மண்டபத்தில் அனைவரும் பிரசாதங்களை உண்டார்கள். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய்சாதம், தயிர்சாதம், மிளகுவடை, பஞ்சாமிர்தம் என்று விதம்விதமான பிரசாதங்கள். அனைவரும் ருசித்துச் சாப்பிட்டார்கள்.

ஆனால் இளவரசி வானதிக்கு மட்டும் குறிஞ்சி மலர்களின் மேலே ஆசை இருந்தது. இவ்வளவு அழகான பூக்களை அவள் மதுரையில் பார்த்ததேயில்லை. மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தந்தையிடம் குறிஞ்சி மலரைப் பற்றி கேட்டாள்.

“அப்பா, குறிஞ்சி மலர்கள் மிகவும் அழகான இருக்கின்றன. இந்த மலர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் பூக்குமா?”

“ஆமாம் மகளே. முருகனுக்கு முகங்கள் ஆறு. முகத்திற்கு இரண்டு கண்கள் வீதம் மொத்தக் கண்கள் பன்னிரண்டு. தமிழ் மொழியில் உயிர் எழுத்துகளும் பன்னிரண்டு. அதனால்தான் முருகனைத் தமிழ்க்கடவுள் என்று போற்றுகின்றார்கள். அதைச் சிறப்பிக்கத்தான் குறிஞ்சி மலர்களும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன என்று சொல்வார்கள்.” பாண்டிய மன்னர் மகளுக்கு அழகாகச் சொன்னார்.

“அப்படியா? இவ்வளவு அழகான மலர்கள் கோடைக்கானலில் எந்தத் தோட்டத்தில் பூக்கின்றன? எங்கிருந்து கொண்டு வருகின்றார்கள்? மதுரையில் இந்த மலர்கள் கிடைப்பது இல்லையே?”

“மகளே, கோயிலுக்குப் பின்புறம் நந்தவனம் உள்ளது. அந்த நந்தவனத்தில் நிறைய குறிஞ்சி மரங்கள் உள்ளன. அங்கிருந்துதான் கொண்டு வருகின்றார்கள். குறிஞ்சி மலர் முருகனுக்கு மட்டுமே உரியது என்று சொல்வார்கள். அதனால் யாரும் அதைப் பறிப்பதில்லை. நம்மைப் பொறுத்தவரை குறிஞ்சி மலர் தெய்வ மலர். இதற்கு முன்பு நீ பிறந்த ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூத்தன. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் மீண்டும் பூக்கின்றன.”

பாண்டிய மன்னர் குறிஞ்சி மலரைப் பற்றிச் சொல்லச் சொல்ல வானதிக்கு எப்படியாவது அந்த மலரைப் பறிக்க வேண்டும் என்றும் கூந்தலில் சூடிக் கொள்ள வேண்டும் என்றும் ஆசை வந்தது. கோயிலைச் சுற்றிப் பார்க்கப் போவதாகப் பொய் சொல்லி விட்டு யாருக்கும் தெரியாமல் நந்தவனத்தில் நுழைந்தாள்.

நந்தவனத்தில் நிறைய குறிஞ்சி மரங்கள் பூக்கள் பூத்து அழகாக இருந்தன. நீலநிறத்துக் குறிஞ்சி மலர்களைப் பார்க்கப் பார்க்க கண்கள் குளிர்ச்சியடைந்தன.

அந்த நேரத்தில் இளவரசியைத் தேடிக்கொண்டு பாண்டிய மன்னரும் அரசியும் நந்தவனத்திற்கே வந்து விட்டனர். அப்போது வானதி ஒரு குறிஞ்சி மரத்தை வளைத்து மலர்களைப் பறிக்க முயற்சிப்பதைக் கண்டார்கள்.

உடனே பதறிப்போனார்கள். வானதியைத் தடுப்பதற்காக வேகமாக நந்தவனத்திற்குள் நுழைந்தார்கள். ஆனால் அதற்குள் வானதி அங்கிருந்த பாம்புப் புற்றில் ஏறி குறிஞ்சி மலர்களைப் பறித்து விட்டாள். அப்படியே நிலைதடுமாறி புற்றின் மீதே விழுந்து புற்றையும் உடைத்து விட்டாள்.

உடைந்த புற்றிலிருந்து குபுகுபுவென கருநீல நிறத்தில் புகை வந்தது. அந்தப் புகைக்கு நடுவிலிருந்து ஒரு நாகப்பாம்பு மிக வேகமாக வெளிவந்தது. புற்று உடைந்ததென்று அதற்குக் கோபம். தன்னுடைய படத்தை விரித்து வானதியைப் பார்த்துச் சீறியது.

மன்னரும் அரசியும் இந்தக் காட்சியைக் கண்டு அப்படியே நின்று விட்டார்கள். அவரசப்பட்டால் பாம்பு வானதியைக் கடித்து விடுமோ என்று பயம்.

வானதியும் மிகவும் பயந்து விட்டாள். அவ்வளவு பெரிய நாகத்தை அவள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. கிட்டத்தட்ட பதினெட்டு அடி நீளம் இருக்கும்.

தரையிலிருந்த பாம்பு சீற்றத்தோடு அப்படியே எழும்பியது. மூன்று ஆள் உயரத்திற்கு நின்றது. இந்த பயங்கரக் காட்சியைப் பார்த்த வானதிக்குப் பேச்சே வரவில்லை.

எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பாம்பு ஒரு ஆளாக மாறியது. இடுப்புக்கு மேல் மனித உருவம். இடுப்புக்குக் கீழே பாம்பு உருவம். அந்தப் பாம்புதான் நாகராஜன். பாம்புகளுக்கெல்லாம் அரசன். நாகலோகத்திலிருந்து புற்று வழியாக குறிஞ்சி ஆண்டவனைக் கும்பிட வரும் வேளையில்தான் வானதி புற்றின் மீதேறி புற்றையும் உடைத்து நாகராஜனையும் மிதித்து விட்டாள்.

நாகராஜனைப் பார்த்ததும் பாண்டிய மன்னரும் அரசியும் காலில் விழுந்தார்கள்.

“நாகராஜனே, எங்கள் மகள் அறியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டும். அவளைக் கொன்று விடாதீர்கள். மதுரை மீனாட்சி அருளால் பிறந்த ஒரே மகள். வேண்டுமானால் எங்கள் உயிரை எடுத்துக் கொள்.”

கதறி அழுதார் பாண்டிய மன்னர். மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவருக்கு ஆசை.

அப்படி அழுத பாண்டிய மன்னரைப் பார்த்து நாகராஜன் பேசினான். “பாண்டிய மன்னா, யாருடைய உயிரையும் எடுப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனாலும் வானதி இரண்டு தவறுகள் செய்திருக்கிறாள். முதலில் முருகக் கடவுளுக்கு மட்டுமே சொந்தமான குறிஞ்சி மலர்களைப் பறித்திருக்கிறாள். அடுத்தது பாம்புப் புற்றை ஏறி மிதித்து உடைத்திருக்கிறாள். அப்படியே என்னையும் மிதித்திருக்கிறாள். யாரும் பார்க்காமல் வந்து முருகனை வணங்க வேண்டும் என்பது எங்கள் வழக்கம். அதை மீறி இன்று உங்கள் முன் தோன்றி விட்டேன். இதனால் இந்த முறை நான் குறிஞ்சி ஆண்டவரைக் கும்பிடமுடியாது. இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துதான் நான் வரமுடியும். இந்தத் தவறுகளுக்குத் தண்டனையாக வானதியை என்னுடைய நாகலோகத்திற்கு கொண்டு செல்கிறேன். இனிமேல் வானதி அங்கேதான் இருக்க வேண்டும்.”

”நாகராஜனே, உன்னைக் கும்பிட்டுக் கேட்கிறோம். வானதியை விட்டு விடுங்கள். பன்னிரண்டு வயது சிறு பெண் அவள். நாகலோகத்தில் அவள் இருந்தால் நாங்கள் எங்கள் உயிரை விட்டு விடுவோம். மகளைப் பிரிந்து நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம்.”

“மன்னா, வருத்தப்படாதே. உன் மகள் எப்பொழுதும் நாகலோகத்திலேயே இருக்க மாட்டாள். இவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்றவன் வந்து இவளைக் காப்பாற்றுவான். அதுவரை நாகலோகத்தில் என் மகளாகவே இவள் வளர்ந்து வருவாள்.”

இதைச் சொல்லி விட்டு உடனே நாகராஜன் இளவரசி வானதியைக் கைகளில் தூக்கிக் கொண்டு மறைந்து விட்டார்.

ஆசையாக வளர்த்த மகள் வானதியை நாகராஜன் கொண்டு சென்றதைப் பார்த்த பாண்டிய மன்னரும் அரசியும் அழுதபடியே மதுரைக்குத் திரும்பினார்கள்.

அங்கு தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவர் நல்லனாரைச் சந்தித்து நடந்ததைச் சொன்னார்கள். அவரும் அரசரையும் அரசியையும் சமாதானப்படுத்தினார்.

உடனே வீரர்களைக் கூப்பிட்டு இளவரசியைக் காப்பாற்றுகின்றவர்களுக்கு கேட்ட பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கச் சொன்னார்.

நிறையப் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் நிறைய பேர் நாகலோகத்தைத் தேடிப் போனார்கள். ஆனால் அதற்கான வழியைக் கூட யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன. இளவரசி வானதியோ நாகலோகத்திலேயே வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டாள்.

மதுரையில் பாண்டிய மன்னரும் அரசியும் மகளைப் பிரிந்து பெரும் துன்பப்பட்டார்கள்.

நான்கு ஆண்டுகளாக யாரும் வானதியைக் கண்டுபிடிக்காத நிலையில் மதுரைக்குப் பக்கத்திலிருந்த கிராமத்திலிருந்து ஒருவன் புறப்பட்டான்.

அவன் பெயர் வேலன்.

தொடரும்…..

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

13 Responses to நாகமாணிக்க வேட்டை – 1 – இளவரசி சிறைப்படல்

 1. tcsprasan says:

  அருமை ஜிரா அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்

 2. Pingback: நாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான் « மாணிக்க மாதுளை முத்துகள்

 3. @RRSLM says:

  சிறப்பாக இருக்கிறது ஜிரா.

  //“அப்பா, குறிஞ்சி மலர்கள் மிகவும் அழகான இருக்கின்றன.//

  “அழகாக” என்று வந்திருக்க வேண்டும் என்று நினைகின்றேன்.

 4. Pingback: நாகமாணிக்க வேட்டை – 4 – நாகதேவன் கதை « மாணிக்க மாதுளை முத்துகள்

 5. Pingback: நாகமாணிக்க வேட்டை – 5 – முதல் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

 6. Pingback: நாகமாணிக்க வேட்டை – 6 – கருடனின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

 7. நான் ரிவர்ஸில் வருகிறேன், மன்னிக்க 🙂 நிரஞ்சனின் கவிதைகளை படித்து பின் ஒரிஜினலுக்கு வருகிறேன். மிகவும் அருமை. வாழ்த்துகள்!

  amas32

 8. Pingback: நாகமாணிக்க வேட்டை – 7 – இரண்டாம் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

 9. Pingback: நாகமாணிக்க வேட்டை – 8 – ஆந்தையின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

 10. Pingback: நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள் « மாணிக்க மாதுளை முத்துகள்

 11. ஜீரா, அருமையான தொடக்கம்.. இன்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன்.

  இனி வரிசையாகப் போகணும்:-)

  • GiRa ஜிரா says:

   ஆகா… டீச்சர் வாங்க வாங்க

   எனக்கு கையும் ஓடல காலும் ஓடலையே.. டேய்… யார்ரா அங்க ஒரு ஜோடா கொண்டா. நம்ம டீச்சர் வந்திருக்காங்க. 🙂

 12. Pingback: நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம் « மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s