நாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்

இந்தத் தொடரின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

மதுரைக்கு அருகில் இருக்கும் சிறிய ஊர் ஆனைமலை. அங்கு ஒரு மலை பார்ப்பதற்கு யானை போலவே இருக்கும். அதனால்தான் அந்த ஊருக்கு ஆனைமலை என்று பெயர்.

அந்த ஊரில் வேலன் என்ற இளைஞன் அவனது பெற்றோர்களோடு வாழ்ந்து வந்தான். அவர்களது தொழில் விவசாயம். இயற்கையாகவே வேலனுக்கு விளையாட்டுகளிலும் வாளெடுத்து சண்டை போடுவதிலும் ஆசை இருந்தது. ஏதாவது வீரசாகசம் செய்ய வேண்டும் என்று வேலனுக்கும் ரொம்ப நாளாக ஆசை.

அப்பொழுதுதான் இளவரசி வானதியை நாகராஜன் கடத்திக் கொண்டு போனது தெரிய வந்தது. நான்கு ஆண்டுகளாக யாரும் இளவரசி வானதியைக் காப்பாற்றாதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படியாவது தானே சென்று இளவரசியைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான்.

முதலில் வேலனின் பெற்றோர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அவர்களை ஒத்துக்கொள்ள வைத்தான். அப்போது வேலனின் அம்மா ஒரு சத்தியம் கேட்டார்.

“வேலா, நீ வீரச் செயல்களை செய்தால் எங்களுக்குப் பெருமைதான். ஆனால் உனக்கு இளம் வயது. நாகலோகம் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அத்தோடு பாம்புகளில் விஷமுள்ள பாம்புகளும் உண்டு. ஆகையால் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தோடு உனக்கு நாங்கள் ஆறு மாத கால அவகாசம் கொடுக்கிறோம். இந்த ஆறு மாதத்திற்குள் நீ இளவரசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீ வீட்டிற்குத் திரும்பி வந்துவிட வேண்டும். இதற்கு சத்தியம் செய்து கொடு.”

ஆறு மாதத்தில் எப்படியாவது இளவரசியைக் கண்டுபிடித்து விடலாம் என்று என்று வேலனுக்கு ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது. அதனால் அம்மா கேட்டது போலவே சத்தியம் செய்து கொடுத்தான்.

இரண்டு நாட்களுக்கு வருமாறு வேலனுக்குச் சோற்று மூட்டை கட்டிக் கொடுத்து நெற்றியில் திருநீறு பூசி அவன் அம்மாவும் அப்பாவும் வழியனுப்பினார்.

முதலில் வேலனுக்கு எந்தப் பக்கம் போவதென்று தெரியவில்லை. நாகலோகம் எந்தப் பக்கம் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாதே. ஆனால் காட்டிலும் மலையிலும் பாம்புகள் நிறைய இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். அருகில்தான் சோலைமலை இருக்கிறது. அந்த மலையில் காடும் காட்டுக்கு நடுவில் முருகன் ஔவைக்கு நாவல்பழம் கொடுத்த மரமும் இருப்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அங்கு போனால் ஏதாவது தெரியலாம் என்று சோலைமலையை நோக்கி நடந்து சென்றான்.

சூரியன் மறையத் தொடங்கும் மாலை நேரத்தில் ஒரு காட்டுக் கோயிலும் அதன் முன்னே ஒரு குளமும் தென்பட்டன. அங்கே இரவு தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று நினைத்து கோயிலுக்குள் சென்றான்.

அது ஒரு காளி கோயில். மகாகாளி கையில் சூலத்தோடு பயங்கரமான சிலையாக நின்று கொண்டிருந்தாள். காளியைக் கும்பிட்டு விட்டு அங்கிருந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்தான். கட்டுச்சோற்றில் பாதியைத் தின்றுவிட்டு பக்கத்திலிருந்த குளத்தில் கைகளையும் முகத்தையும் கழுவிக் கொண்டான்.

சூரியன் மறைய மறைய அப்படியே தூங்கிவிட்டான். நடுராத்திரி ஆகிவிட்டது. அப்போது ஜலக்ஜலக் என்று சலங்கைச் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விழித்துக் கொண்ட வேலன் ஒரு தூணுக்குப் பின்னே மறைந்து கொண்டான்.

வெண்ணிலாவின் வெளிச்சத்தில் வானத்திலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்தாள். அழகென்றால் அழகு. அப்படியொரு அழகு. தங்கநகைகள் ஜொலிக்க இன்னொரு நிலாவக இறங்கி வந்தாள். ஒரு கையில் தங்க பூஜைத்தட்டு. அதில் கற்பக மரத்திலிருந்து பறித்த தங்கப்பூக்களும் தங்கப்பழங்களும் இருந்தன. அத்தோடு பூஜைக்குத் தேவையான தங்க விளக்கும் சூடமும் இருந்தன. இன்னொரு கையில் ஒரு தங்கக் குடம்.

இறங்கி வந்தவள் முதலில் குளத்தை நோக்கிப் போனாள். காளிதேவிக்கு அபிஷேகம் செய்ய குளத்திலிருந்து நீரெடுக்க தங்கக் குடத்தை குளத்திற்குள் விட்டாள். தண்ணீர் பட்டதும் அந்தத் தங்கக்குடம் அப்படியே மறைந்து விட்டது. அப்போது பூஜைப் பொருட்களை எல்லாம் தன்னுடைய சேலையில் கட்டிக் கொண்டு பூஜைத்தட்டை குளத்திற்குள் முக்கினாள். அடடா! அந்தப் பூஜைத்தட்டும் மறைந்து விட்டது. அத்தோடு சேலையில் முடிந்திருந்த பூஜைப்பொருட்களும் குளத்துத் தண்ணீரில் மூழ்கி விட்டன.

காளிதேவிக்கு பூஜை செய்ய முடியாமல் போனதே என்று அவளுக்கு அழுகை வந்தது. மெல்ல அழுதாள். நடந்ததையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த வேலனுக்கு வருத்தம் வந்தது. மெதுவாக நடந்து அவள் அருகில் சென்றான்.

“பெண்ணே, நீ யார்? எதற்காக அழுகிறாய்?”

வேலனின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் அந்தப் பெண். ஆனால் பயப்படவில்லை.

“ஐயா, என் பெயர் பொன்மாலை. நான் தேவலோகப் பெண். ஒரு வாரத்திற்கு முன்பு இந்தக் கோயிலைப் பார்த்தேன். காளிதேவியின் பக்தையான எனக்குக் காளிதேவிக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது. மனிதர்களின் கண்களில் தேவர்கள் தென்படக்கூடாது என்பதற்காக இரவு நேரத்தில் பூஜைப் பொருட்களோடு வந்தேன். ஒவ்வொரு இரவும் அபிஷேகத்திற்கு நீர் எடுக்கும் போது குடம் மாயமாக மறைந்து விடுகிறது. பூஜைத்தட்டும் பூஜைப்பொருட்களும் கூட மறைந்து விடுகின்றன. ஒவ்வொரு நாளும் இதே மாதிரி நடக்கிறது. அதனால்தான் காளிதேவிக்கு பூஜை செய்ய முடியவில்லையே என்று அழுகின்றேன்.”
பொன்மாலையின் கதையைக் கேட்டுப் பரிதாபப்பட்ட வேலன் அவளுக்கு உதவ முடிவு செய்தான்.

“பொன்மாலை. இந்தக் குளத்தில்தான் ஏதோ மாயம் இருக்கிறது. நான் உள்ளே குதித்து குடத்தையும் பூஜைத்தட்டையும் எடுத்து வருகிறேன். அதுவரை இங்கேயே இருங்கள்.” என்று கூறி விட்டு குளத்திற்குள் குதித்தான் வேலான்.

வேலனுக்கு நன்றாக நீச்சல் தெரியும். இரவு நேரத்தில் குளத்தில் வெளிச்சம் இருக்காது. ஆகையால் ஆழமாகப் போகப்போக ஒரே இருட்டாக இருந்தது. ஆனால் சற்றுத் தொலைவில் வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தை நோக்கி நீந்தினான் வேலன்.

வெளிச்சம் அருகில் வரும் பொழுது ஒரு அதிசயக்காட்சியைக் கண்டான். வெளியே இருந்த அதே காளிகோயில் குளத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்தது. அந்தக் கோயிலில் ஆயிரம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. தண்ணீருக்குள் எரியும் அதிசய விளக்குகளை அப்பொழுதுதான் பார்க்கிறான் வேலன்.

வெளிச்சத்திற்குள் வந்ததும் அவனால் தண்ணீருக்குள்ளேயே நடக்க முடிந்தது. அப்படியே நடந்து கோயிலுக்குள் நுழைந்தான். கோயில் முழுவதும் நறுமணம் கொண்ட மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கோயிலுக்குள் காளிதேவியின் சிலை இல்லை. காளிதேவியே நின்று கொண்டிருந்தாள்.

காளிதேவியைப் பார்த்ததும் வேலன் ”அம்மா” என்று கதறிக் கொண்டு அவள் காலில் விழுந்து விட்டான்.

“எழுந்திரு மகனே. உன் விருப்பம் போலவே எல்லாம் நிறைவேறும். என்னுடைய வாழ்த்துகள்.”
காளியின் ஆசியை வாங்கிக் கொண்டு எழுந்தான் வேலன்.

“அம்மா, நான் இங்கு வந்தது பொன்மாலைக்கு உதவி செய்ய. ஆனால் உலகத்தையே காக்கும் உங்களைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. உங்களைப் பார்ப்பதற்கு நான் ஏதோ நல்லது செய்திருக்கிறேன்.”

“மகனே வேலா, நீ உனக்காக இந்தக் குளத்தில் குதிக்கவில்லை. அதனால்தான் உன்னால் இங்கு வரமுடிந்தது. ஒருவருக்குத் துன்பம் என்று தெரிந்ததுமே உதவ வேண்டும் என்று நினைத்த உனது நல்ல உள்ளத்தினால்தான் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும் மகனே? கேள். ஆனால் இரண்டு வரங்கள்தான் கேட்க வேண்டும்.”

”நன்றி அம்மா. மிக்க நன்றி. முதலில் பொன்மாலையின் வருத்தம் போக வழி சொல்லுங்கள் தாயே. உங்களுக்கு பூஜை செய்ய முடியவில்லையே என்று அந்தப் பெண் குளக்கரையில் அழுது கொண்டிருக்கிறாள்.”

காளிதேவி சிரித்தாள். “மகனே, முதல் வரம் கூட அடுத்தவருக்காக் கேட்கிறாய். உன்னைப் பாராட்டுகிறேன். பொன்மாலை நல்லவள். தேவலோகத்துப் பெண் என்பதால் கற்பக மரத்திலிருந்து பறித்த தங்க மலர்களையும் தங்கப்பழங்களையும் வைத்து எனக்கு பூஜை செய்ய நினைக்கிறாள். அத்தோடு தங்கத் தட்டு தங்கக்குடம் என்று எல்லாமே தங்கம். இப்படி ஆடம்பரமாக பூஜை செய்தால்தான் எனக்குப் பிடிக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். அன்போடு அம்மா என்று ஒருமுறை அழைப்பதே எனக்குப் பிடித்த பூஜை. எளிமையான பூஜையே நான் விரும்புவது. இதை அவளிடம் சொல்.”

“நன்றி அம்மா. இதை நிச்சயமாக பொன்மாலையிடம் சொல்கிறேன். அடுத்தது நாகலோகத்துக்குப் போகும் வழி. எங்கள் இளவரசியை நாகராஜன் கடத்திக் கொண்டு போய்விட்டாராம். நாகலோகத்திற்குச் சென்று இளவரசி வானதியைக் காப்பாற்ற விரும்புகிறேன். அப்போதுதான் பாண்டிய மன்னருக்கு மகிழ்ச்சி உண்டாகும். அதற்கும் நீங்கள்தான் வழி சொல்ல வேண்டும்.”

“மகனே, இரண்டாவது வரத்தில் கூட உனக்கென்று கேட்கவில்லையே. நீ வாழ்க. நாகலோகத்திற்கு போகும் வழியை நான் சொல்கிறேன். ஆனால் மனிதர்களுக்கு அந்த வழி ஆபத்தானது. ஆனால் அதைக் கடந்து செல்லும் வழியை உனக்கு நான் சொல்லித் தருகிறேன். விடிந்ததும் மேற்குப் பக்கமாகச் செல். முதலில் கண்ணில் படும் பாம்புப் புற்று வழியாக நாகலோகத்திற்குப் போகலாம். ஆனால் அந்த வழியில் பாம்புகள்தான் போகமுடியும். இந்த மாத்திரையை விழுங்கினால் பாம்பாக மாறிவிடுவாய். பிறகு அந்தப் புற்றில் நுழைந்து செல். இந்த மாத்திரை உன்னைக் காப்பாற்றும். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உன் உருவம் மனித உருவமாக மாறிவிடும். உதவிக்கு இந்த வாளையும் வைத்துக் கொள். எல்லா வெற்றியும் உனக்கு உண்டாகட்டும்.”

அந்த மாத்திரையையும் வாளையும் நன்றியோடு பெற்றுக் கொண்டு குளக்கரைக்கு வந்தான். அங்கு பொன்மாலையிடம் காளிதேவி சொன்னதைக் கூறினான். அவளும் எளிமையான முறையில் பூஜை செய்து மகிழ்ந்தாள்.

அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டு அடுத்தநாள் காலையில் குளத்தில் குளித்தான். காளிதேவியை நினைத்து நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு மேற்குப் பக்கமாகச் சென்றான். அங்கே பாம்புப் புற்றைக் கண்டானா?

தொடரும்…

நண்பர் நிரஞ்சன் பாரதி இந்தக் கதையை அழகான கவிதை வடிவில் எழுதியிருக்கிறார். அவருடைய கவிதை விளையாட்டை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

10 Responses to நாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்

 1. Pingback: நாகமாணிக்க வேட்டை – 3 – நாகலோகத்திற்கு வழி « மாணிக்க மாதுளை முத்துகள்

 2. Pingback: நாகமாணிக்க வேட்டை – 4 – நாகதேவன் கதை « மாணிக்க மாதுளை முத்துகள்

 3. Pingback: நாகமாணிக்க வேட்டை – 5 – முதல் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

 4. Pingback: நாகமாணிக்க வேட்டை – 6 – கருடனின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

 5. ஒரு குழந்தைக்கு கதை சொல்வது போல சொல்லியிருக்கிறீர்கள். எளிய, தெளிவான நடை. உங்கள் மருமகள்கள் படித்தார்களா? 🙂

  amas32

  • GiRa ஜிரா says:

   அவர்களுக்கு இந்தக் கதையை நானே சொன்னேன். சொல்லச் சொல்ல ரசித்துக் கேட்டார்கள்.

 6. Pingback: நாகமாணிக்க வேட்டை – 7 – இரண்டாம் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

 7. Pingback: நாகமாணிக்க வேட்டை – 8 – ஆந்தையின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

 8. Pingback: நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள் « மாணிக்க மாதுளை முத்துகள்

 9. Pingback: நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம் « மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s