நாகமாணிக்க வேட்டை – 3 – நாகலோகத்திற்கு வழி

இந்தத் தொடரின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கவும்

அடுத்த நாள் காலையில் விடிந்ததும் வேலன் குளத்தில் நீராடினான். காளிதேவியை வணங்கி விட்டு அங்கிருந்த குங்குமத்தை நெற்றியில் பூசிக்கொண்டான். மாத்திரையும் வாளும் கொடுத்த காளிதேவிக்கு மனதுக்குள் ஒருமுறை நன்றி சொன்னான்.

குளித்து விட்டதால் பசித்தது. அம்மா கொடுத்தனுப்பிய கட்டுச்சோற்றை மிச்சமில்லாமல் தின்று விட்டுக் கிளம்பினான்.

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. அதற்கு எதிர்த் திசையான மேற்குத் திசையில் காளிதேவி சொன்னது போல நடந்தான். ஆனால் அவன் கண்களுக்கு ஒரு பாம்புப் புற்று கூட தென்படவில்லை. நடந்து நடந்து உச்சிவேளை வந்து விட்டது. உச்சி வெயில் சுள்ளென்று அடித்தது. அத்தோடு வேலனுக்குப் பசி வேறு. ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று சுற்றிப் பார்த்தான்.

அங்கு நிறைய தென்னைமரங்கள் இருந்தன. ஒவ்வொரு மரத்திலும் தேங்காய்கள் குலைகுலையாகக் காய்த்துத் தொங்கின. விறுவிறுவென மரத்தில் ஏறிய வேலன் நான்கைந்து தேங்காய்களைப் பிய்த்துப் போட்டான். கீழே இறங்கி வந்து காளிதேவி தந்த கத்தியால் தேங்காய்களை வெட்டி இளநீரைக் குடித்தான். உள்ளே இருந்த தேங்காயையும் சுரண்டிச் சாப்பிட்டான். இளநீரைக் குடித்து தேங்காயைத் தின்றதும் உடம்பில் கொஞ்சம் தெம்பு வந்தது.

வெற்றுத் தேங்காயைக் கீழே போடும் போதுதான் அதைக் கவனித்தான். தென்னமரத்தடியில் ஒரு பாம்புப்புற்று. மிகமிகச் சிறியதாக இருந்தது அந்தப் புற்று. சுண்டு விரல் கூட உள்ளே நுழைய முடியாத அளவிற்குச் சிறிய வாசல் உள்ள பாம்புப் புற்று. தென்னைமரத்தின் வேருக்கு அருகில் இருந்தது. அதனால்தான் முதலில் அவன் கண்களில் படவில்லை. இவ்வளவு சிறிய பாம்புப் புற்றை வேலன் பார்த்ததேயில்லை. அது பாம்புப் புற்றா என்று அவனுக்கே சந்தேகம்.

”இவ்வளவு சிறிய புற்றாக இருக்கிறதே. இதற்குள் எப்படி நுழைவது? காளிதேவி கொடுத்த மாத்திரையால் பாம்பாக மாறினாலும் இந்தச் சிறிய ஓட்டைக்குள் எப்படி நுழைவது? இது பாம்புப் புற்றுதானா? மாத்திரையை விழுங்கி பாம்பாகி மாறி உள்ளே நுழைந்த பிறகு அது பாம்புப் புற்று இல்லையென்றால் என்ன செய்வது?” என்று யோசித்தான்.

பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக காளிதேவியை வணங்கி விட்டு மாத்திரையை விழுங்கினான்.  அதை விழுங்கியதுமே அவனால் நிற்க முடியவில்லை. அப்படியே கீழே விழுந்து விட்டான். விழுந்தவனால் எழுந்திருக்க முடியவில்லை. இங்கும் அங்குமாக உருண்டான். மூச்சு முட்டியது. பார்வையும் மங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடம்பு பாம்பாகியது. கைகளும் கால்களும் மறைந்து நீளமான பாம்பாக மாறினான். உடம்பு முழுவதும் செதில்கள் தோன்றின. நாக்கு துறுதுறுவென்று வெளியே வந்தது. கோதுமை நிறத்தில் ஒரு நல்ல பாம்பாக மாறினான் வேலன். மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தான். ஒரு மனிதனாக இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும் பாம்பாக இருந்து கொண்டு பார்ப்பதற்கும் வித்தியாசம் இருந்தது.

மெல்லத் தவழ்ந்து பாம்புப் புற்றின் அருகில் போனான். அதன் சிறிய வாசலில் தலையை வைத்ததும் புற்றின் வழி தானாகவே பெரிதானது. ஒரு பெரிய பாம்பு உள்ளே போகும் அளவிற்குப் பெரிதானது. அதைப் புரிந்து கொண்ட வேலன் உடனே வேகமாக புற்றுக்குள் நுழைந்தான். வேலன் முழுவதும் புற்றுக்குள் நுழைந்த பின்னர் புற்றின் வாய் முன்பு போல மிகச் சிறியதாக மாறியது. பாம்புகள் நுழைந்தால் மட்டுமே அந்தப் புற்றின் ஓட்டை பெரிதாகும். வேறு யாருக்கும் வழி திறக்காது.

புற்றுக்குள் நுழைந்ததும் வேலனுக்கு எல்லாம் இருட்டாக இருந்தது. பாம்புகள் நாக்கின் மூலம் பல விஷயங்களை உணர முடியும். அதனால்தான் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுகின்றன. வேலன் நல்லபாம்பாக இருந்ததால் நாக்கை நீட்டினான். முன்னால் இருட்டாக இருந்தாலும் வழி இருப்பது அவனுக்குத் தெரிந்தது. கொஞ்சமும் தாமதிக்காமல் இருட்டான பாதைக்குள் பாம்பின் உருவத்தில் வேகவேகமாக ஊர்ந்து போனான். ஒரு மணி நேரத்திற்குள் அவன் நாகலோகத்திற்குள் நுழைய வேண்டும். இல்லையென்றால் மனித உருவம் வந்து விடும்.

வேலன் கொஞ்சம் கொஞ்சாமாக உள்ளே செல்லச் செல்ல வழி பெரிதாகிக் கொண்டே வந்தது. பிறகு நல்ல வெளிச்சமும் தெரிந்தது. நாகாக்கினி எனப்படும் நெருப்பை ஏற்றித் தீப்பந்தங்கள் வைத்திருந்தார்கள். அந்த நெருப்பு நீலநிறத்தில் எரியும். அதனால் அந்த வழியே நீலநிறமாகத் தெரிந்தது.

நாகாக்கினி எப்போதும் அணையாமல் இருக்கும். ஆனால் பாம்புகளுக்கு மட்டுமே வெளிச்சம் தரும். பாம்பைத் தவிர வேறு யார் நாகாக்கினியைப் பார்த்தாலும் அவர்கள் கண் குருடாகி விடும். யாராவது அத்துமீறி நாகலோகத்திற்குள் நுழைந்தால் குருடாகப் போகட்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வேலன் வேகவேகமாகச் சென்றான். திடீரென்று நான்கு பக்கங்களில் இருந்தும் நச்சுப் புகை வந்தது. அந்தப் புகை யார் மீது பட்டாலும் விஷம் ஏறி இறந்து விடுவார்கள். ஆனால் வேலன் பாம்பு உருவத்தில் இருந்ததால் ஒன்றும் ஆகவில்லை. மிக எளிதாக நச்சுப்புகையை விட்டு வெளியே வந்தான்.

நச்சுப்புகை பாம்பு வடிவத்திலிருந்த வேலனை ஒன்றும் செய்யவில்லையானாலும் நீல நிறப் பொடியாக வேலனின் பாம்புச் செதில்களின் மீது ஒட்டியிருந்தது. இப்படி ஒட்டியிருப்பது ஆபத்து. ஏனென்றால் மீண்டும் மனித உருவம் வரும் போது அந்த விஷப்பொடி வேலனைக் கொன்று விடும்.

இதைப் புரிந்து கொண்ட வேலன் தன்னுடைய பாம்பு உடம்பை ஒரு முறை நன்றாக முறுக்கினான். அப்போது பாம்பின் மேல்த்தோல் கொஞ்சம் உரிந்தது. இதைப் பாம்பு சட்டையைக் கழற்றுவது என்பார்கள். உடம்பை நன்றாக முறுக்கி பாம்புச் சட்டையை உரித்தான் வேலன். பாம்புச் சட்டையோடு நச்சுப் பொடிகள் கீழே விழுந்தன. புதிதாகச் சட்டையைக் கழற்றிய பாம்பிற்கு சீற்றம் அதிகமாக இருக்கும். வேலனுக்கும் யாரையாவது கடிக்க வேண்டும் போல இருந்தது.

தன்னுடைய சீற்றத்தைக் குறைக்க அங்கேயிருந்த ஒரு சிறிய குளத்தில் குளித்து விட்டு இன்னும் வேகமாகச் சென்றான்.

திடீரென்று ஓரிடத்தில்  பாதையைக் காணவில்லை. ஆனால் கீழே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பைத் தாண்டினால்தான் பாதை தெரியும். நெருப்பில் விழுந்து விடுவோமோ என்று முதலில் பயந்தான் வேலன். பிறகு காளிதேவியை நினைத்துக் கொண்டு நெருப்பில் இறங்கினான்.

மந்திர மாத்திரையின் சக்தியால் நெருப்பு வேலனை ஒன்றும் செய்யவில்லை. காளிதேவியின் அருளால் நெருப்பைத் தாண்டிச் சென்று பாதையைக் கண்டுபிடித்தான். ஆனால் அங்கு நிறைய பாம்புகள் இருந்தன. அந்தப் பாம்புகளுக்கு வேலனும் ஒரு பாம்பாகத் தெரிந்ததால் அவனைத் தாக்கவில்லை. வேறு யாராவது வந்திருந்தால் எல்லாப் பாம்புகளும் ஒன்றாகப் பாய்ந்து கடித்திருக்கும்.

இத்தனை பாம்புகளை ஒரே இடத்தில் பார்க்க முதலில் வேலனுக்கு பயமாக இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அந்தப் பாம்புகளின் மீதே ஏறிச் சென்றான்.

இப்பிடி மூன்று தடைகளைக் கடந்து நாகலோகத்து வாசலை அடைந்தான் வேலன். வாசலின் இரண்டு பக்கங்களிலும் காவல் பாம்புகள் நின்று கொண்டிருந்தன. வாசலுக்கு வேலன் வருவதற்கும் ஒரு மணி நேரம் ஆவதற்கும் சரியாக இருந்தது. உடனே பாம்பு உருவத்திலிருந்த வேலன் மனித உருவத்திற்கு மாறினான்.

திடீரென ஒரு மனிதனைக் கண்டதும் காவல் பாம்புகள் சீறிப்பாய்ந்தன. வேலன் காளிதேவி கொடுத்த வாளால் அவைகளைத் திருப்பித் தாக்கினான். அந்த வாளைக் கண்டதுமே பாம்புகள் பயந்து விலகி ஓடின.

அடுத்து பல இச்சாதாரிப் பாம்புகள் வந்தன. அவை நினைத்த நேரத்தில் எந்த உருவத்தையும் எடுக்கும். வேலன் மனிதனாக இருந்ததால் இச்சாதிரிப் பாம்புகள் மனித உருவத்தில் கையில் வாளோடு வந்து சண்டையிட்டன. ஆனால் வேலன் தனியாளாக எல்லாப் பாம்புகளோடும் சண்டையிட்டான்.

அந்தப் பாம்புகளோடு சண்டை போட்டுக் கொண்டே நாகலோகத்திற்குள் நுழைந்து விட்டான். வேலனோடு சண்டை போட முடியாமல் இச்சாதிரிப் பாம்புகள் மயங்கி விழுந்து விட்டன.

அங்கே இன்னொரு கதவு இருந்தது. அதைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் வேலன். அங்கு பாம்புகள் தங்குவதற்குப் பெரிய பெரிய புற்று வீடுகள் இருந்தன. நிறைய தோட்டங்களும் மரங்களும் இருந்தன. இந்த மரங்களை இதற்கு முன்பு வேலன் பார்த்ததேயில்லை. எல்லா மரங்களும் நீல நிறத்தில் இருந்தன. அதிலிருந்த கனிகள் கருநீல நிறத்தில் இருந்தன. அவையெல்லாம் விஷக்கனிகள். பாம்புகள் மட்டுமே சாப்பிட முடியும். வேறு யாராவது சாப்பிட்டால் இறந்து விடுவார்கள்.

வேலன் இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு எதையும் தொடாமல் நடந்து சென்றான். ஒரு இடத்தில் குட்டிப்பாம்புகள் எல்லாம் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தன. வேலனைப் பார்த்ததும் அந்தக் குட்டிப் பாம்புகள் “அம்மா அப்பா” என்று கத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.

நாகலோகத்துப் பாதை நேராக இல்லாமல் வளைந்து நெளிந்து இருந்தது. சற்றுத் தொலைவில் நாகராஜன் அரண்மனை தெரிந்தது. அதை நோக்கி வேகமாக நடந்தான் வேலன்.

தீடீரென ஒரு மெல்லிய புகை பரவியது. அதில் நல்ல தாழம்பூவின் நறுமணம் வீசியது. அதை முகர்ந்து பார்த்ததுமே வேலன் மயங்கி விழுந்தான்.

உடனே பாம்புகள் வேலனைத் தூக்கிச் சென்றன. இந்தப் பாம்புகள் வேலனை எங்கே கொண்டு சென்றன?

தொடரும்..

அன்புடன்,

ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

8 Responses to நாகமாணிக்க வேட்டை – 3 – நாகலோகத்திற்கு வழி

  1. Niranjan says:

    அருமை நண்பரே. சஸ்பென்ஸ் கூடிக் கொண்டே போகிறது. வாழ்த்துகள் 🙂 🙂

  2. Pingback: நாகமாணிக்க வேட்டை – 4 – நாகதேவன் கதை « மாணிக்க மாதுளை முத்துகள்

  3. Pingback: நாகமாணிக்க வேட்டை – 5 – முதல் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

  4. Pingback: நாகமாணிக்க வேட்டை – 6 – கருடனின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

  5. Pingback: நாகமாணிக்க வேட்டை – 7 – இரண்டாம் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

  6. Pingback: நாகமாணிக்க வேட்டை – 8 – ஆந்தையின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

  7. Pingback: நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள் « மாணிக்க மாதுளை முத்துகள்

  8. Pingback: நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம் « மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s