நாகமாணிக்க வேட்டை – 4 – நாகதேவன் கதை

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல்
அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான்
அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி

தாழம்பூவின் வாசம் பாம்புகளுக்கு மிகப்பிடிக்கும். அனால் அதுவே அளவுக்கு அதிகமானால் மனிதர்களுக்குத் தலைவலி வரும். இன்னும் அதிகமானால் மயக்கம் வரும். ஆனால் பாம்புகள் அந்த வாசத்தை ரசிக்கும். அதனால்தான் தாழம்பூ புதர்களுக்குள் பாம்புகள் இருக்கும்.

அந்த வாசத்தின் அதிகமான நெடியினால்தான் வேலன் மயங்கி விழுந்தான். கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தான். அந்த இடம் நாகராஜனின் அரண்மனை.

மிக அழகான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கொலு மண்டபம். அதில் ஒரு மேடையில் வைரங்கள் பதித்த தங்க சிம்மாசனத்தில் நாகராஜன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் கையில் நாகாஸ்திரம் எனப்படும் ஆயுதம் இருந்தது. மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் நாகர்களும் நாக கன்னிகைகளும் இருந்தார்கள்.

சிம்மாசனத்தில் இருந்தது நாகராஜன் என்று வேலன் தானே புரிந்து கொண்டான். உடனே வணக்கம் கூறினான்.

“வணக்கம் நாகராஜா”

ஆனால் நாகராஜன் ஆத்திரத்தில் இருந்தான். “யாரடா நீ மானிடனே? நாகலோகத்தில் மனிதர்களுக்கு என்ன வேலை? அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் காவல் பாம்புகளையும் பயமுறுத்தியிருக்கிறாய். இச்சாதாரிப் பாம்புகளையும் அடித்து மயக்கம் போட வைத்திருக்கிறாய். நான் நினைத்தால் உன்னை இந்த இடத்திலேயே கொன்று விட முடியும். அதற்கு முன் நீ எதற்காக வந்தாய் என்பதைச் சொல். நாகர்களைக் கொல்ல வந்தாயா? இல்லை இங்கிருக்கும் செல்வங்களைக் கொள்ளையடிக்க வந்தாயா?”

நாகராஜன் இப்படிப் பேசியது வேலனுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் காளிதேவியை மனதில் நினைத்துத் துணிச்சலாகப் பேசினான்.

“நாகராஜனே, இந்த மிரட்டல்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். பாண்டி நாட்டு மக்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். உங்கள் செல்வம் எங்களுக்குக் கால்தூசு. இங்கு யாரையும் துன்புறுத்துவதோ கொல்வதோ என்னுடைய நோக்கம் அல்ல. ஒரு வகையில் நான் இங்கு வந்ததற்கு நீங்கள்தான் காரணம். எங்கள் பாண்டி நாட்டு இளவரசியை நீங்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கின்றீர்கள். இளவரசி வானதியை சிறை மீட்டுப் போவதற்காக வந்திருக்கிறேன்.”

வேலனின் துணிச்சலான பதில் நாகரஜனுக்குப் பிடித்திருந்தது. நான்கு ஆண்டுகளாக யாரும் வானதியைத் தேடி வராத சூழ்நிலையில் ஒரு இளைஞன் வந்திருப்பது வியப்பாக இருந்தது. அத்தோடு வானதியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் வீரனே அவனைக் காப்பாற்றுவான் என்று தான் கூறியதையும் நினைத்துப் பார்த்தார். வேலனுக்கு அந்த வீரம் இருக்கிறதா என்று சோதிக்க விரும்பினார். அதனால் கொஞ்சம் அமைதியாகவே பேசினார்.”

“இளைஞனே உன்னுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். உன்னுடைய பெயர் என்ன? யாரும் வர முடியாத நாகலோகத்திற்கு நீ எப்படி வந்தாய்?”

“நாகராஜா, தங்களுடைய பாராட்டிற்கு நன்றி. என் பெயர் வேலன். காளிதேவியின் அருளால் நாகலோகத்தில் நுழைந்தேன். இந்த வாளும் காளிதேவி பரிசாகக் கொடுத்ததுதான்.” தன்னுடைய வாளைக் காட்டினான் வேலன்.

காளிதேவியிடம் பரிசு வாங்கியிருக்கிறான் வேலன் என்றதும் அவன் மேல் நாகராஜனுக்கு நம்பிக்கை பிறந்தது.

“வேலா, காளிதேவியின் அருள் உனக்கு இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இளவரசி வானதியை நீ மீட்டுப் போக வந்திருப்பதும் எனக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுக்கிறது. வானதியை நான்  இங்கு கொண்டு வந்தாலும் என்னுடைய மகளைப் போலத்தான் பாதுகாத்து வருகின்றேன். வானதியும் இங்கு இன்பமாகத்தான் இருக்கிறாள். வானதியை அழைத்துக் கொண்டு செல்கின்றவன் ஒரு வீரனாகத்தான் இருக்க வேண்டும். உன்னை வீரன் என்று நீ நிரூபித்தால்தான் வானதியை உன்னோடு அழைத்துக் கொண்டு செல்ல முடியும்.  அதற்குச் சம்மதமா? அந்தத் துணிச்சல் உனக்கு இருக்கிறதா?”

“ஐயா, இளவரசி வானதியைக் காப்பாற்றுவதற்காக நான் எதையும் செய்யத் தயார். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். உடனே செய்கிறேன்.”

ஒரு நிமிடம் யோசித்தார் நாகராஜன். பிறகு ஒரு கதையைச் சொன்னார்.

“வேலா, பாம்புகளாகிய எங்களுக்கு நிறைய சக்திகள் உண்டு. சிவபெருமான் கழுத்தில் இருப்பதும் பாம்புதான். அம்பிகை தனது விரலில் மோதிரமாக வைத்திருப்பதும் பாம்புதான். ஒரு பாம்பு நூறு ஆண்டுகள் வாழ்ந்தால்தான் அவை இச்சாதாரிப் பாம்புகளாக மாற முடியும். அப்படி இச்சாதாரியாக மாறிவிட்டால் அந்தப் பாம்புகளுக்குப் பிறக்கும் குட்டிகளும் இச்சாதாரிக் குட்டிகளாக இருக்கும்.

ஆனால் நூறு வயது வாழாத பாம்புகளும் உண்டு. அவைகள்தான் காடுகளிலும் மலைகளிலும் நிறைய இருக்கின்றன. அவைகளின் குட்டிகளுக்கு எந்த சக்தியும் இருக்காது. ஒருவேளை அந்தக் குட்டி வளர்ந்து நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தால் இச்சாதாரியாக மாறிவிடும்.

எங்களுக்கு இவ்வளவு பெருமையும் சக்தியும் இருந்தாலும் எதிரிகளும் உண்டு. குறிப்பாக கருடன், ஆந்தை, மயில் ஆகிய பறவைகள் எங்கள் இனத்தவரைக் கொன்று தின்று விடுகின்றார்கள். பகலில் கருடனிடமும் மயிலிடமும் மாட்டிக் கொள்ளும் பாம்புகள் இரவில் ஆந்தைகளிடம் மாட்டிக் கொள்கின்றன. இப்படிப் பறவைகளிடம் மாட்டிக் கொள்வது பெரும்பாலும் சாதாரணப் பாம்புகள்தான்.

சிவபெருமான் ஒருமுறை நெற்றிக்கண்ணிலிருந்து மூன்று மாணிக்கங்களை உருவாக்கினார். அந்த மாணிக்கங்களை என்னுடைய முன்னோர்களுக்குப் பரிசாக அளித்தார். அதை நாங்கள் பெருமையாகப் போற்றிப் பாதுகாத்து வந்தோம். ஆனால் அந்த மூன்று மாணிக்கங்களும் இப்போது எங்களிடம் இல்லை.”

சொல்லும் போதே நாகராஜனின் குரல் சோகமானது. வேலனுக்கும் வருத்தமாக இருந்தது.

“என்ன? சிவபெருமான் கொடுத்த நாகமாணிக்கங்களுக்கு என்ன ஆயிற்று? ஆண்டவன் கொடுத்த பரிசை யாரேனும் திருடி விட்டார்களா?”

“ஆமாம். திருடி விட்டார்கள். ஒரு முறை கருடன், ஆந்தை மற்றும் மயில் ஆகிய பறவைகள் ஒன்று சேர்ந்து தாக்கின. மூன்று பறவைகளின் தாக்குதல்களையும் சாமாளிக்க முடியாமல் நாங்கள் கஷ்டப்பட்டோம். அந்த நேரம் பார்த்து இந்தப் பறவைகள் மூன்று மாணிக்கங்களையும் திருடி விட்டன. ஆளுக்கொன்றாய் மாணிக்கங்களை எடுத்துக் கொண்டார்கள்.

அன்று முதல் அந்த மாணிக்கங்களை இல்லாமல் வருந்துகிறோம். சிவன் கொடுத்த பொருளைத் தொலைத்து விட்டோம் என்று எங்களுக்கு வருத்தம் இருக்கிறது.

இளவரசி வானதியை அழைத்துச் செல்ல வேண்டுமானால் அந்த மூன்று மாணிக்கங்களையும் காப்பாற்றித் தர வேண்டும். இதை உன்னால் செய்ய முடியுமா?”

நாகராஜனின் கதையைக் கேட்டதும் வேலனுக்கு வருத்தம் உண்டானது. எப்படியாவது அந்த மாணிக்கங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வேகம் பிறந்தது. அந்த வேகத்தில் நாஜராஜனிடம் பேசினான்.

“ஐயா, நான் வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுது நாகலோகம் எங்கு இருக்கிறது என்றே தெரியாது. எப்படிப் போக வேண்டும் என்றும் தெரியாது. ஆனால் உலகத்திற்குத் தாயாக விளங்கும் காளிதேவியையே நேரில் பார்க்கும் பெருமை கிடைத்தது. காளியைக் கண்டதற்கான சாட்சியாக இந்த வாள் என் கையில் இருக்கிறது. ஒரு மணி நேரம் நானும் பாம்பாக இருந்திருக்கிறேன். உங்கள் வேதனை எனக்கும் புரிகிறது. நிச்சயமாக அந்த மூன்று மாணிக்கங்களையும் நான் கண்டுபிடிப்பேன். உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்.”

வேலனின் பதிலில் நாகராஜனுக்கு திருப்தி வந்தது. அவனோடு தனியாக சில செய்திகளைப் பேச விரும்பினார்.

“வேலா, என்னோடு சற்று வா. உன்னிடம் சில செய்திகளைப் பற்றிப் பேச வேண்டும்.”

வேலனின் தோளில் கை வைத்து அழைத்துச் சென்றார் நாகராஜன். ஒரு தனியறையில் நாற்காலியில் அமர்ந்தார்கள். வேலனுக்காக மனித உணவுகளைக் கொண்டு வந்து வைத்தனர் நாககன்னியர்கள்.

வேலன் சாப்பிடும் பொழுது நாகராஜன் மெதுவாகப் பேசினார்.

“வேலா, பறவைகளுக்கும் பாம்புகளுக்கும் நடந்த போரைப் பற்றி உனக்கு மண்டபத்தில் சொன்னேன். திருடு போன மூன்று மாணிக்கங்களைப் பற்றியும் சொன்னேன். அந்த மாணிக்கங்கள் எவ்வளவு முக்கியமானவை என்று உன்னிடம் சொல்லவில்லை.

மனிதர்களாகிய உங்களுக்கு காய்ச்சல் சளி என்று வியாதிகள் வருவது போல பாம்புகளுக்கும் வியாதிகள் வருவதுண்டு. சிவனுக்கு வைத்தீஸ்வரன் என்று ஒரு பெயர் உண்டு. அதாவது நோய்களுக்கு வைத்தியம் பார்ப்பவர் என்று பொருள். அவர் கொடுத்த மாணிக்கங்களுக்கும் அந்த சக்தி உண்டு. அதை வைத்துதான் நோய்வாய்ப்பட்ட பாம்புகளை நாங்கள் காப்பாற்றிக் கொண்டிருந்தோம்.

மாணிக்கங்கள் தொலைந்த பிறகு காப்பாற்ற முடியாமல் பல பாம்புகள் இறந்து விட்டன. எனக்கு அரவன் என்று ஒரு மகன் உண்டு. அவனும் உன்னைப் போல ஒரு இளைஞன். பறவைகளின் போர் நடந்த போது அவன் சின்னஞ் சிறுவன். போர்க்களத்துக்கு வராமல் அவனை பத்திரமாக வைத்திருந்தேன். ஆனால் போரைப் பார்க்கும் ஆவலில் அவன் எப்படியோ வந்து விட்டான். அப்போது ஒரு ஆந்தை அவன் சிறுவன் என்று கூடப் பார்க்காமல் கொத்தி விட்டது. அதனால் அவனுடைய விஷப்பை கிழிந்து விட்டது. அதிலிருந்து அவனுக்கு விஷமே சுரக்கவில்லை. பாம்புகளுக்கு விஷம் மிகமிக அவசியம். அதுவும் எனக்குப் பிறகு மன்னராகப் போகிறவன் விஷம் இல்லாத பாம்பாக இருந்தால் மொத்த பாம்பு இனத்திற்கே ஆபத்து.

அவனைக் குணப்படுத்தவும் மாணிக்கங்கள் தேவை. அரவனும் நல்ல வீரன். நீங்கள் இருவரும் சென்று மூன்று மாணிக்கங்களையும் கண்டுபிடித்து வாருங்கள். வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன்.

இளவரசி வானதியைப் பற்றி நீ கவலைப் பட வேண்டாம். வானதி இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவளை உரிய நேரத்தில் நானே பாண்டிய மன்னரிடம் சேர்த்து விடுவேன்.

பறவைகளோடு நேரடியாக மோத முடியாத சூழ்நிலையால்தான் மனிதனாகிய உன்னிடம் உதவி கேட்கிறேன். காளிதேவியின் அருள் உனக்கு இருக்கிறது. வெற்றி பெறுவாய் என்று எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. இந்த உதவியை நாகலோகத்துப் பாம்புகளுக்குச் செய்வாயா?”

நாகராஜனின் வேண்டுகோளைக் கேட்டதும் வேலனுக்குக் கண்ணீர் வந்து விட்டது.

“ஐயா, நிச்சயமாகச் செய்கிறேன். உங்களோடு சண்டை போட வேண்டியிருக்குமோ என்று எண்ணிக் கொண்டு நாகலோகத்திற்கு வந்தேன். ஆனால் உங்கள் நல்ல மனது எனக்குப் புரிகிறது. இந்த முன்று பறவைகளின் அரசர்களையும் கண்டுபிடித்து மாணிக்கங்களை மீட்பேன். இது உறுதி.”

இதைக் கேட்டு மகிழ்ந்த நாகராஜன் வேலனுக்கு ஒரு நாகாஸ்திரத்தைக் கொடுத்தான். பிறகு தனது மகன் அரவனை அறிமுகம் செய்து வைத்தான். அரவனும் உடனே வேலனுக்கு நல்ல நண்பனாகி விட்டான்.

பிறகு நாகலோகத்தில் இருக்கும் வானதியைப் பார்த்து விஷயத்தைக் கூறி விட்டு வேலனும் அரவனும் மாணிக்கங்களைத் தேடிச் சென்றார்கள்.

தொடரும்
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

6 Responses to நாகமாணிக்க வேட்டை – 4 – நாகதேவன் கதை

  1. Pingback: நாகமாணிக்க வேட்டை – 5 – முதல் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

  2. Pingback: நாகமாணிக்க வேட்டை – 6 – கருடனின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

  3. Pingback: நாகமாணிக்க வேட்டை – 7 – இரண்டாம் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

  4. Pingback: நாகமாணிக்க வேட்டை – 8 – ஆந்தையின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

  5. Pingback: நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள் « மாணிக்க மாதுளை முத்துகள்

  6. Pingback: நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம் « மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s