நாகமாணிக்க வேட்டை – 6 – கருடனின் போட்டி

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல்
அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான்
அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி
அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை
அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம்

மகாவிஷ்ணுவை வணங்கி விட்டு அவர் சொன்ன வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். அரவன் பாம்பாகி வேலனின் தோளில் ஏறி கழுத்தைச் சுற்றிக் கொண்டான்.

”வேலா, கருடனை எப்படிப் பார்க்கப் போக வேண்டும் என்று மகாவிஷ்ணு சொன்னது உனக்கு நினைவிருக்கிறதா?”

“நன்றாக நினைவிருக்கிறது. இங்கிருந்து கிழக்குத் திசையில் ஒரு நாள் நடந்தால் ஒரு காடு வரும். அந்தக் காட்டில் ஒரு கிணறு இருக்கிறது. அந்தக் கிணற்று நீரைக் குடித்தால் கருடனைப் பார்க்கப் போகலாம் என்றார்.”

அதே போல ஒரு நாள் நடந்ததும் ஒரு காடு வந்தது. காட்டுக்குள் அந்தக் கிணறும் இருந்தது. கிணற்றடியில் ஒரு வாளி மட்டும் இருந்தது. கயிறு இல்லை.

அரவன் தன்னையே கயிறு போலக் கட்டி வாளியில் தண்ணீர் இறைக்கச் சொன்னான். முதலில் யோசித்த வேலன் பிறகு அரவனையே வாளிக்குக் கயிறாகக் கட்டி கிணற்றுக்குள் இறக்கினான். அரவனுக்கு வலிக்கக் கூடாது என்பதற்காக வாளியில் கொஞ்சமாக தண்ணீர் இறைத்தான்.

பிறகு இருவரும் அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். குடித்த உடனே அவர்களுக்குத் தொண்டை எரிந்தது. பேச்சு வரவில்லை. ”மே மே மே’ என்று கத்தினார்கள். ஆமாம். அவர்கள் ஆட்டுக்குட்டியாக மாறியிருந்தார்கள்.

காளி கொடுத்த வாளும் மகாவிஷ்ணு கொடுத்த பெட்டியும் வேலனின் ஆட்டு உடம்புக்குள் பாதுகாப்பாக இருந்தன.

தாங்கள் ஆடாக மாறிவிட்டதை இருவரும் உணர்ந்து கொண்டார்கள். ஆட்டின் மொழியிலேயே பேசிக் கொண்டார்கள்.

“அரவன், நாம் ஆட்டுக்குட்டிகளாகி விட்டோம். இனிமேல் என்ன செய்வது? தவறாக கிணற்றில் தண்ணீர் குடித்து விட்டோமா?”

“தெரியவில்லையே வேலா. என்ன நடக்கப் போகிறதோ. நம்மை யாரேனும் பிடித்தால் நம்மை வெட்டி விடுவார்களே!”

அரவன் பேசிக்கொண்டிருந்த போதே சடசடவென ஒரு பறவை இறகை விரித்துப் பறக்கும் சத்தம் கேட்டது. ஒரு பெரிய பருந்து வந்து காலுக்கு ஒன்றாக இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் கவ்வியது. அப்படியே வானத்தில் பறந்து ஒரு மலை மீது அமர்ந்தது. நல்ல தீனி கிடைத்திருப்பதால் கொத்தித் தின்ன நினைத்தது. ஆனால் அந்தப் பருந்தினால் கொத்த முடியவில்லை. இரண்டு ஆடுகளின் மீதும் துளசி வாசம் வீசியது. அந்த வாசனை பருந்தைக் கொத்த விடாமல் தடுத்தது.

சிலமுறை முயன்ற பருந்து, இந்த அதிசயத்தை பருந்துகளின் அரசன் கருடனிடம் சொல்ல வேண்டும் என்று வானத்தில் எழும்பிப் பறந்தது. இரண்டு ஆடுகளும் விழுந்துவிடாமல் இருக்க கால்களால் இறுக்கப் பிடித்துக் கொண்டு பறந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய மலையில் கொண்டு போய் இறக்கியது. அங்கு பறவைகளின் அரசனான கருடன் பருந்து உருவில் இருந்தான். அவன் முன்பு இந்த இரண்டு ஆடுகளையும் இறக்கி விட்டு நடந்ததைச் சொன்னது பருந்து.

பருந்து சொல்லி முடிக்கவும் இரண்டு ஆடுகளும் உருவம் மாறி வேலனாகவும் அரவனாகவும் பழையபடி ஆயினர். அரவன் பாம்பு வடிவில் இருந்தான்.

அதைப் பார்த்ததும் கருடனுக்குக் தாங்காத கோவம்.

“யாரடா நீங்கள்? பொடிப்பயல்கள். ஒரு மனிதனும் பாம்பும் சேர்ந்து உருவத்தை மாற்றி ஏமாற்றி இங்கு வந்திருக்கின்றீர்கள்? உயிர் மேல் ஆசையிருந்தால் உண்மையைச் சொல்லி விடுங்கள்.”

ஆனால் கருடனின் மிரட்டலுக்கு இருவருமே பயப்படவில்லை. வேலன் துணிச்சலாகப் பேசினான்.

“ஐயா, மகாவிஷ்ணுவையே தூக்கிச் சுமக்கும் பெருமையைப் பெற்றும் நீங்கள் எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்து கொள்ளவில்லையே! உங்களைக் கண்டா நாங்கள் பயப்படப் போகிறோம். இல்லவே இல்லை. உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்களையும் மதித்துப் பேசினால் வந்த காரணத்தைச் சொல்வோம். இல்லையென்றால் போரிடத் தயாராகுங்கள். இதோ என்னிடம் காளிதேவி கொடுத்த வாள் இருக்கிறது.”

வாளை எடுத்துக் காட்டினான் வேலன். அதைப் பார்த்ததும் கருடனுக்கு பயங்கர ஆத்திரம். வேலன் மேல் பாய்ந்தது. அலகால் கொத்தியது. ஆனால் ஒன்றும் ஆகவில்லை. வேலன் மேலிருந்து வீசிய துளசிவாடையால் கருடன் தடுக்கப்பட்டது.

அப்பொழுதுதான் இதில் ஏதோ இருக்கிறது என்று தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு கேட்டது.

“உன் மேல் ஏன் துளசி வாடை அடிக்கிறது? யார் கொடுத்தார்கள் இந்த வரத்தை”

“ஐயா, உங்களைப் போன்ற கோவம் மிகுந்த பறவைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு கொடுத்தார்.”

மகாவிஷ்ணு கொடுத்தார் என்று தெரிந்ததும் கருடன் ஆடிப்போனது. கடவுள் அருள் கொடுத்தவர்களிடமே வம்பு செய்து விட்டோமே என்று சற்றுப் பயந்தது. இருவரையும் பார்த்து மரியாதையாகக் கேட்டது.

“நீங்கள் யார்? இந்தப் பாம்பின் பெயர் என்ன? ஆதிசேஷனுக்கு ஏதேனும் உறவா? நீங்கள் வந்த வேலை என்ன?”

இப்போது அரவன் பேசினான். “ஐயா, என் பெயர் அரவன். நாகலோக இளவரசன். அரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் என் பாட்டனுக்கும் பாட்டனுக்கும் பாட்டன். என்னோடு இருப்பது என் நண்பன் வேலன். பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நாகலோகத்திலிருந்து திருடிய மூன்று மாணிக்கங்களில் ஒன்று உங்களிடம் உள்ளதாக அறிகிறோம். அதை உங்களிடமிருந்து வாங்கிப் போவதற்காக வந்திருக்கிறோம். நீங்கள் கொடுத்தால் உடனே நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டும் விடுகிறோம்.”

மூச்சு விடாமல் அரவன் பேசியதும் கருடன் திகைத்தது. அதே நேரத்தில் அவர்களை இங்கு அனுப்பியது விஷ்ணு என்பதைப் புரிந்து கொண்டு சற்று சூழ்ச்சியாகப் பேசியது.

“அரவன், வேலன், நீங்கள் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் சொல்லும் நாகமாணிக்கம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நான் அப்படியே கொடுக்க முடியாது. ஒரு போட்டி வைக்கிறேன். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நாகமாணிக்கம் உங்களுக்கு. இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?”

வேலனும் அரவனும் ஒத்துக்கொண்டார்கள்.

”சரி. போட்டி விதியைக் கேளுங்கள். கருடனாகிய நான் வானில் எழும்பிப் பறப்பேன். என்னை விட உயரமாக நீங்கள் பறக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து யார் அதிக உயரத்தில் இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். சரியா?”

சரி என்று இருவரும் ஒத்துக் கொண்டார்கள். உடனே ஜிவ்வென்று கருடன் வானத்தில் எழும்பிப் பறந்தது.

அரவன் மறுபடியும் வேலனின் கழுத்தில் ஏறிக் கொண்டான். விஷ்ணுவை மனதில் நினைத்துக் கொண்டு அவர் கொடுத்த பெட்டியைத் திறந்தான் வேலன். அந்தப் பெட்டிக்குள் மகாவிஷ்ணுவின் சக்கரம் இருந்தது. அது சுற்றிக் கொண்டே பெட்டியை விட்டு வெளியே வந்தது. வேலன் ஏறி நிற்கும் அளவிற்குச் சக்கரம் பெரிதானது. அதைப் புரிந்து கொண்ட வேலன் அந்தச் சக்கரத்தில் ஏறிக் கொண்டான்.

உடனே சக்கரம் வானில் எழும்பிப் பறந்தது. அதற்குள் கருடன் உயரத்திற்குப் போயிருந்தாலும் சக்கரம் உடனே கருடனைத் தாண்டியது.

சக்கரம் கருடனின் கண்களுக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு வேலன் பறப்பது போலத்தான் இருந்தது. “இவ்வளவு விரைவில் ஒரு மானிடனால் பறக்க முடியுமா? அதிலும் எனக்கு மேலே பறக்கிறானே!” என்று கருடன் நினைத்தது. உடனே தனது சக்தியெல்லாம் திரட்டி வேலனை முந்த நினைத்தது. ஆனால் கருடன் எவ்வளவு உயரமாகப் பறந்தாலும் வேலனைச் சக்கரம் இன்னும் உயரமாகத் தூக்கிச் சென்றது.

உயரமாகச் செல்லச் செல்ல பூமியே ஒரு பந்து போலத் தெரிந்தது. தான் தோல்வியடையப் போகிறோம் என்று கருடன் புரிந்து கொண்டது. முதன்முறையாக கருடன் ஒரு மனிதனிடம் தோல்வியடைகிறது. சரியாக ஒரு மணிநேரத்தில் கருடனை விட வேகமாகப் பறந்து வேலன் வெற்றி பெற்றான்.

அப்போது கருடன் அழைத்தது. “வேலா, நில். என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன். இதோ நாகமாணிக்கத்தைப் பெற்றுக் கொள்.”

சக்கரம் வேலனை கருடனிடம் கொண்டு வந்தது. “வேலா, ஆண்டவன் அருளைப் பெற்றவர்களோடு வீணாகப் போட்டி  போட்டது என் தவறு. அதை நான் உணர்ந்து கொள்கிறேன். இதோ நாகமாணிக்கத்தைப் பெற்றுக் கொள். இது நாகலோகத்திற்கு உரியது. இனிமேல் நாகங்களுக்கு என்னால் எந்தத் தொல்லையும் நேராது.”

தன்  கழுத்தின் இறகுகளுக்குள் ஒளித்து வைத்திருந்த நாகமாணிக்கத்தை எடுத்துக் கொடுத்தது கருடன். வேலன் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான். முதல் மாணிக்கத்தை வென்ற மகிழ்ச்சி அவனுக்கு.

அரவன் கருடனுக்கு நன்றி கூறினான். “ஐயா, உங்களிடம் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால் மன்னிக்கவும். நீங்கள் நாகமாணிக்கத்தைக் கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அத்தோடு இனிமேல் உங்களால் நாகங்களுக்கு எந்தத் தொல்லையும் நேராது என்பதும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. என்னுடைய தந்தையாகிய நாகராஜன் சார்பாகவும் எல்லா பாம்புகளின் சார்பாகவும் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

கருடன் முகத்தில் புன்னகை வந்தது. “நாகராஜன் தன் மகனை நன்றாக வளர்த்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொல். உங்கள் பயணம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். சரி. எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் கிளம்புகிறேன்.” சொல்லிவிட்டு கருடன் அங்கிருந்து வேகமாகப் பறந்து விட்டது.

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

4 Responses to நாகமாணிக்க வேட்டை – 6 – கருடனின் போட்டி

  1. Pingback: நாகமாணிக்க வேட்டை – 7 – இரண்டாம் மாணிக்கம் « மாணிக்க மாதுளை முத்துகள்

  2. Pingback: நாகமாணிக்க வேட்டை – 8 – ஆந்தையின் போட்டி « மாணிக்க மாதுளை முத்துகள்

  3. Pingback: நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள் « மாணிக்க மாதுளை முத்துகள்

  4. Pingback: நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம் « மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s