நாகமாணிக்க வேட்டை – 7 – இரண்டாம் மாணிக்கம்

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல்
அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான்
அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி
அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை
அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம்
அத்தியாயம் – 6 – கருடனின் போட்டி

கருடன் மாணிக்கத்தைக் கொடுத்து விட்டு பறந்து சென்றதும், சக்கரமானது இருவரையும் மறுபடியும் கிணற்றின் அருகில் இறக்கி விட்டது. கழுத்தில் அரவனோடு வேலன் சக்கரத்திலிருந்து இறங்கியதும் சக்கரமும் அது இருந்த பெட்டியும் மாயமாக மறைந்து விட்டன.

உதவி செய்த சக்ராயுதத்தை வணங்கி விட்டு, வேலன் நாகமாணிக்கத்தைப் பாதுகாப்பாக தனது இடுப்புத் துணியில் வைத்துக் கட்டிக் கொண்டான்.

”வேலா, நாம் மறுபடியும் அதே கிணற்றுக்கு அருகில் வந்திருக்கிறோம். தண்ணீர் இறைத்துக் குடிக்கலாமா?” என்று கிண்டலாகக் கேட்டான் அரவன்.

“கிண்டலா உனக்கு. மறுபடியும் நாம் ஆட்டுக்குட்டியாக மாறினால் யார் வீட்டுச் சட்டியிலாவது வேக வேண்டியிருக்கும்.” சொல்லிவிட்டு வேலன் சிரித்தான். அரவனும் சேர்ந்து சிரித்தான்.

“சரி. வேலா. எனக்குப் பசிக்கிறது. இந்தக் காட்டிலோ தின்பதற்கு ஒன்றுமில்லாமல் பருந்துகளே தின்று தீர்த்து விட்டன. வேறு ஏதாவது ஊர் அருகில் இருக்கிறதா பார்க்கலாம்.”

சரியென்று இருவரும் வடக்குப் பக்கமாகச் சென்றார்கள். கிட்டத்தட்ட அரைநாள் நடந்திருப்பார்கள். ஆனால் ஒரு ஊர் கூடத் தென்படவில்லை. இரவும் வந்து விட்டது. வேறு வழியில்லாமல் ஓரிடத்தில் படுத்துத் தூங்கிவிட்டு காலையில் எழுந்து புறப்பட்டார்கள்.

இருவருக்கும் நல்ல பசி. தண்ணீர்த் தாகம். சோதனைக்கு அடுத்த நாள் காலையும் ஒன்றும் கிடைக்கவில்லை.

வேலனும் அரவனும் நடந்து சென்ற வழியில் நான்கு பனைமரங்கள் தனியாக இருந்தன. அந்தப் பனைமரங்களில் குண்டன், மண்டன், சண்டன் மற்றும் பண்டன் என்று நான்கு பூதங்கள் இருந்தன. அந்த பூதங்களுக்கு முழங்காலுக்குக் கீழ் கால்கள் கிடையாது. அதற்குப் பதிலாக ஒரு சக்கரம் இருக்கும். நான்கு பூதங்களும் அந்தச் சக்கரத்தால் வேகமாக ஓடும்.

பெரிய வயிறும் தலையில் கொம்பும் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் இந்த நான்கு பூதங்களுக்கும் கொஞ்சம் மந்திர தந்திரங்கள் தெரிந்தாலும் முட்டாள் பூதங்கள்.

யாராவது அந்த வழியாக வந்தால் மரத்திலிருந்து இறங்கிப் பிடித்துத் தின்று விட்டு மரத்தின் மேல் ஏறிக்கொள்ளும். பனைமரத்தில் வழியும் கள்ளைக் குடித்து விட்டு நான்கு பூதங்களும் கத்தும். அவ்வளவுதான் அவர்களது வாழ்க்கை.

“ஏதோ மனித வாடை அடிக்கிறதே” என்றது பண்ட பூதம்.

“ஆமாம் ஆமாம். மனித வாடையேதான். ஆனால் பாம்பு வாடையும் அடிக்கிறதே.” என்றது சண்ட பூதம்.

“சண்டா, உன்னுடைய மரத்தில்தான் பாம்பு ஏறுகிறது. அது உன்னைக் கடிக்கப் போகிறது. ஹாஹாஹா” என்று சொல்லிச் சிரித்தது மண்ட பூதம். அதைக் கேட்டுப் பயந்து மரத்தைக் குலுக்கியது சண்ட பூதம்.

“அடேய் மடப்பூதங்களா. மரத்தை ஆட்டாதீர்கள். இந்த மரம் ஒடிந்தால் நாம் இறந்து விடுவோம். இந்த மரத்தோடு பிறந்த பூதங்கள் நாம்” என்று மூவரையும் திட்டியது குண்ட பூதம். அப்படித் திட்டும் போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த வேலனையும் அரவனையும் பார்த்தது.

“சரி. அங்கே பாருங்கள். இரண்டு மானிடர்கள் வருகிறார்கள்.  இன்று சண்டன் பண்டன் முறை. நீங்கள் இருவரும் போய் அந்த மானிடர்களைத் தின்று விட்டு வாருங்கள்.”

பண்ட பூதமும் சண்ட பூதமும் கிறுகிறுவென சக்கரத்தால் மரத்திலிருந்து இறங்கி ஓவெனக் கத்திக் கொண்டே வேலனையும் அரவனையும் நோக்கி ஓடின. முதலில் தங்கள் சக்கரத்தை மனிதர்கள் மேல் ஏற்றிக் கொன்று விட்டுப் பிறகு சாப்பிடுவதுதான் வழக்கம்.

கண் முன்னே இரண்டு பூதங்கள் கத்திக் கொண்டு வருவதைப் பார்த்ததும் வேலன் வேகமாக காளிதேவி வாளை உருவினான். அந்த வாளிலிருந்து ஒரு ஒளி தோன்றியது. வேலனை நோக்கி வந்த பண்ட பூதம் வாளைப் பார்த்ததும் பயந்து அலறி தப்பிக்க மரத்தை நோக்கித் திரும்பியது.  சண்ட பூதமோ அரவனைப் பிடித்து விட்டது. ஆனால் அரவன் உடனே பாம்பாக மாறினான். சண்டனும் பயந்து போய் அரவனை உதறி எறிந்து விட்டு மரத்தை நோக்கி ஓடியது.

வேலனும் விடாமல் துரத்திச் சென்று வாளை எடுத்து பண்டனின் பனைமரத்தை வெட்டினான். பனைமரத்தோடு பண்ட பூதம் கீழே விழுந்து இறந்தது. அடுத்து சண்டனின் மரத்தை வெட்டினான். சண்ட பூதம் பனை மரத்தோடு விழுந்து செத்தது.

நடப்பதைப் பார்த்த குண்ட பூதமும் மண்ட பூதமும் பனையோலைகளுக்குள் ஒளிந்து கொண்டன. அதனால் வேலனும் அரவனும் அவர்களைப் பார்க்காததால் இரண்டு பூதங்களும் தப்பித்தன.

தங்களுடைய தம்பி பூதங்களான பண்டனையும் சண்டனையும் கொன்றதற்கு வேலனையும் அரவனையும் பழிவாங்கத் துடித்தன குண்ட மண்ட பூதங்கள். ஆனால் அந்த வாளும் வந்தவர்களில் ஒருவன் பாம்பு என்பதும் அவர்களுக்கு பயத்தைக் கொடுத்தன. வேறு ஏதாவது வழியில்தான் மடக்க வேண்டுமென்று இரண்டு பூதங்களும் அப்போதைக்கு அமைதியாக இருந்தன.

பூதங்களிடமிருந்து தப்பித்த வேலனும் அரவனும் இந்த முறை மேற்குத் திசையில் நடந்தார்கள். அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. தொலைவில் ஒரு காடு தெரிந்தது. மரங்களில் பழங்கள் பழுத்து சூரிய வெளிச்சத்தில் தகதகவென மின்னுவது நன்றாகத் தெரிந்தது. பழங்களைச் சாப்பிட்டுப் பசியாறலாம் என்று காட்டை நெருங்கினார்கள்.

வரிசையாக மாமரங்கள். மாம்பழங்கள் அழகு மஞ்சள் நிறத்தில் பறித்துத் தொங்கின. அதுவும் கைக்கெட்டும் உயரத்தில். நன்கு பழுத்த பழமாக இருந்தாலும் மாம்பழ வாடையே அடிக்கவில்லை. வேலன் படக்கென்று ஒரு மாம்பழத்தைப் பறித்துக் கடித்தான்.

ஆனால் கடித்த பழத்தைத் தின்ன முடியவில்லை. அது தங்கப்பழம். இன்னொரு பழத்தைப் பறித்தான். அதுவும் தங்கம். எல்லாப் பழங்களும் தங்கம். அப்போதுதான் கவனித்தான். மாமரங்களில் பூக்கள், காய்கள், பழங்கள் எல்லாமே தங்கம்.

மனம் வெறுத்துப் போய் இன்னும் கொஞ்சம் உள்ளே போனார்கள். நிறைய தென்னை மரங்கள் இருந்தன. ஆனால் அதன் காய்கள் தங்கமாக இல்லாமல் பச்சையாகவே இருந்தன. சரசரவென அரவன் பாம்பாக மரத்தில் ஏறி நான்கைந்து தேங்காய்களைப் பறித்துக் கீழே போட்டான். அதில் ஒரு தேங்காயை எடுத்து வாளால் வெட்டினான் வேலன். இளநீரைக் குடிக்க தேங்காயை வாயில் கவிழ்த்தான்.

அடடா! இளநீர் தங்கநீராக வந்தது. சீச்சீ என்று அதைத் துப்பினான் வேலன். அரவனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. காட்டுக்குள் அவர்கள் வந்த வழியும் மறந்து போனது. மாதுளம்பழத்தைப் பிரித்து உரித்தால் உள்ளே செக்கச்செவேலென்று பொடிப்பொடி மாணிக்கங்கள். ஆரஞ்சுப் பழத்தை உரித்தால் தங்கச் சுளைகள். ஒரு பலாப்பழத்தைப் பிழந்தார்கள். தங்கச் சுளைகள். அதற்குள்ளே பவழக் கொட்டைகள்.

வாழ்க்கையே வெறுத்துப் போனது இருவருக்கும். இந்த மாதிரி செல்வம் நிறைய வேண்டும் என்றுதான் எல்லாரும் இறைவனிடம் வேண்டுவோம். அது இங்கே கொட்டிக் கிடக்கிறது. ஆனால் சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை.

அப்பொழுதுதான் அரவன் தன்னுடைய கண்களால் கூர்ந்து பார்த்தான். தொலைவில் ஒரு மாமரம். அதில் உண்மையான மாம்பழங்கள். அதுவும் இரண்டே இரண்டு. அதை வேலனிடமும் சொன்னான். இருவரும் அந்த மாமரத்தின் அருகில் சென்றார்கள். மாம்பழத்தின் வாசனை மூக்கைத் துளைத்தது. அந்த வாசனையே பசியைக் கிளறியது.

வேலன் காளிதேவியை மனதுக்குள் வணங்கி பழங்களைப் பறித்தான். நல்லவேளையாக பழங்கள் உண்மையான பழங்களாகவே இருந்தன. ஒன்றை அரவனிடம் கொடுத்தான். இருவரும் சாப்பிடப் போகும் போதுதன் அங்கே இன்னொருத்தர் இருப்பதும் தெரிந்தது.

அது ஒரு கிழவி. மிகவும் வயதான கிழவி. சாப்பிட்டு நீண்ட நாட்களகியிருக்கும் போல. பசி பசியென்று முனகினாள்.

வேலன் அந்தக் கிழவியைத் தரையிலிருந்து எடுத்து மடியில் சாய்த்துக் கொண்டான். யாரோ வந்திருக்கிறார்கள் என்று கிழவிக்குப் புரிந்து விட்டது. கிழவியால் கண்களைத் திறக்க முடியவில்லை. மெல்ல முனகலாக தனக்குப் பசிப்பதைச் சொன்னாள்.

”தம்பி… ரொம்பப் பசிக்குது. வழி தெரியாம இங்க வந்துட்டேன். இந்தக் காட்டுல எல்லாம் தங்கமாயிருக்கு. பசி தாங்காம மயங்கீட்டேன். பசி உயிர் போகுது. ஏதாச்சும் சாப்பிடக் கிடைக்குமா?”

வேலனுக்கு அந்தப் பாட்டியை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. தன்னிடமிருந்த மாம்பழத்தைக் கொடுத்தான்.

“பாட்டி. இந்தப் பழத்தைச் சாப்பிடுங்கள். உங்கள் பசி அடங்கும்.”

கிழவியும் ஆசையோடு பழத்தை வாங்கி மெல்ல மெல்லத் தின்றாள். ஒரு பழம் எப்படிப் போதும். இன்னும் பசித்தது. இந்த முறை அரவன் தன்னிடமிருந்த பழத்தைக் கொடுத்தான்.

இரண்டு பழங்களையும் சாப்பிட்ட பின் கிழவிக்குத் தெம்பு வந்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து இருவரையும் பார்த்தாள். இருவரின் முகமும் பசியால் வாடிச் சோர்ந்து இருந்தது.

ஆனால் கிழவி இருவரையும் பார்த்ததும் இருவருக்கும் சோர்வு பறந்தே போனது. நன்கு விருந்து சாப்பிட்டது போல ஒரு திருப்தி வந்தது. வேலனுக்கும் அரவனுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.

சட்டென்று அந்தக் கிழவி மாயமாய் மறைந்து போனாள். அந்த இடத்தில் இலட்சுமிதேவி தோன்றினார். வேலனும் அரவனும் விழுந்து வணங்கினார்கள்.

”வேலா, அரவா, உங்களை நான் வாழ்த்துகிறேன். என்னுடைய பார்வை உங்கள் மீது பட்டதால் நீங்களும் எப்பொழுதும் எல்லாச் செல்வங்களையும் பெற்று வாழ்வீர்கள். பசியின் கொடுமை தாங்கமல் நீங்கள் தவித்த போதும் கிடைத்த பழங்களை அடுத்தவருக்குக் கொடுத்து உதவியதால் உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு இது. நான் வைத்த சோதனையில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். உங்கள் விருப்பத்தை நான் அறிவேன். ஆந்தையரசனைச் சந்தித்து அவனிடமிருக்கும் நாகமாணிக்கத்தைப் பெற வேண்டும். அவ்வளவுதானே?”

வேலன் வணங்கிப் பேசினான். “ஆம் தாயே. அந்த நாகமாணிக்கங்கள் இல்லாமல் நாகராஜன் படும் துன்பம் பார்க்கச் சகிக்கவில்லை. நீங்கள்தான் உதவ வேண்டும் தாயே.”

”சரி. உங்கள் எண்ணம் நிறைவேற என்னுடைய வாழ்த்துகள். இதோ இந்தக் கருப்புக் காசைப் பெற்றுக் கொள். இது உனக்கு ஆந்தையரசனை வெல்ல உதவும். ஆனால் இதை இருக்கமாக துணியில் முடிந்து கொள். யாருமில்லாத இடத்தில் மட்டுமே இதை வெளியே எடுக்க வேண்டும்.”

இலட்சுமிதேவி கொடுத்த அந்தக் கருப்புக் காசை வாங்கி வேலன் தனது வேட்டியில் முடிந்து கொண்டான். பிறகு இலட்சுமிதேவி இருவருக்கும் ஆந்தையரசனைச் சந்திக்கும் வழியைச் சொல்லிக் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினார்.

இருவரும் ஆந்தையரசனைச் சந்தித்து நாகமாணிக்கத்தைப் பெற்றார்களா?

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

3 Responses to நாகமாணிக்க வேட்டை – 7 – இரண்டாம் மாணிக்கம்

 1. முடிந்ததும் புத்தகமா வெளியிட அனைத்துத் தகுதிகளும் உள்ளன 🙂

  amas32

 2. //வரிசையாக மாமரங்கள். மாம்பழங்கள் அழகு மஞ்சள் நிறத்தில் பறித்துத் தொங்கின//

  பழுத்துத் தொங்கின

  • GiRa ஜிரா says:

   ஆமா டீச்சர். பழுத்துத் தொங்கின. ஒங்களப் போல டீச்சர் திருத்த இல்லாமத்தான் இப்படியெல்லாம் தப்பு வருது 😦

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s