நாகமாணிக்க வேட்டை – 8 – ஆந்தையின் போட்டி

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல்
அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான்
அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி
அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை
அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம்
அத்தியாயம் – 6 – கருடனின் போட்டி
அத்தியாயம் – 7 – இரண்டாம் மாணிக்கம்

ஆந்தையரசன் இருக்கும் காட்டிற்கு இருட்டுக்காடு என்று பெயர். அந்தக் காட்டில் சூரிய வெளிச்சமே உள்ளே நுழையாது. அவ்வளவு உயரமான மரங்கள். ஆந்தைகளுக்கு வெளிச்சத்தில் கண் கூசும். ஆனால் இருட்டில் கண்கள் நன்றாகத் தெரியும். அதனால் யாரும் வரமுடியாத இருட்டுக்காட்டிற்குள் ஆந்தையரசன் இருக்கிறான்.
இலட்சுமிதேவி சொல்லிக் கொடுத்தபடி கிழக்குப் பக்கமாக ஒரு நாள் நடந்தார்கள். அங்கே வழிமறிச்சான் மலை இருக்கிறது. அந்த மலைக்கு அந்தப் பக்கம் இருப்பதுதான் இருட்டுக்காடு.

வழிமறிச்சான் மலையில் ஒரு குகைப்பாதை உண்டு. அந்த வழியாகப் போனால்தான் இருட்டுக்காட்டுக்குள் போக முடியும்.

இருட்டு வழியில் எப்படிப் போவது என்று வேலன் யோசித்தான். அப்போது அரவன் உதவிக்கு வந்தன்.

“வேலா, யோசிக்காதே. பாம்புகளுக்கு இருட்டில் ஓரளவு பார்வை உண்டு. நான் சொல்லச் சொல்ல அந்த வழியில் நீ போ. அதை விட்டால் நமக்கு வேறு வழியும் இல்லை.”

வேலனுக்கும் அதுதான் சரியென்று பட்டது. அரவனை கழுத்தில் சுற்றிக் கொண்டு அந்த இருட்டுக் குகைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்ததும் கண்கள் குருடானது போல உணர்ந்தான். ஒன்றுமே தெரியவில்லை.

ஆனால் அரவனுக்கு கண்கள் தெரிந்தது. குகைப்பாதையோ பயந்த அளவுக்கு அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால் மனிதர்கள் யார் வந்தாலும் இருட்டில் தட்டுத்தடுமாறி இடித்துக் கொண்டு கீழே விழ வேண்டியதுதான். குகையின் ஓரங்களில் கூர்மையான கற்கள் இருந்தன. அதில் விழுந்தால் யாரையும் குத்திக் கிழித்து விடும்.

அரவனின் பாம்புக் கண்களுக்கு வழி நன்றாகத் தெரிந்ததால் வேலனை மிக எளிதாக அந்த வழியில் அழைத்துச் சென்று இருட்டுக்காட்டிற்குள் நுழைந்தான்.

குகைக்குள் இருந்த அளவிற்கு இருட்டுக்காட்டில் இருட்டு இல்லை. அதற்குக் காரணம் இருட்டுக் காட்டில் ஆங்காங்கே சிதறியிருந்த தங்கக் கட்டிகளும் வைரக்கட்டிகளும்தான். அவைகளின் ஒளியில் காட்டுக்குள் சிரமம் இல்லாமல் செல்லலாம்.

இருட்டுக்காட்டில் அப்படியொரு அமைதி. வேலனும் அரவனும் மெதுவாக காட்டுக்குள் நடந்து சென்றார்கள். ஆனால் அவர்கள் நடந்து செல்வதை பல ஆந்தைகள் மரப்பொந்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தன. அமைதியாக ஆந்தையரசனுக்கும் தகவல் அனுப்பி விட்டன. ஆந்தையரசனும் அவர்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டான்.

இதற்கிடையில் வேலன் நடந்து காட்டின் நடுவேயிருந்த பெரிய ஆலமரத்தை நெருங்கினார்கள். அப்போது…

“நில்லுங்கள். ஒரு மனிதன். அவன் கழுத்தில் பாம்பு. பரமசிவன் என்ற நினைப்போ?”

குரல் வந்த பக்கமாகப் பார்த்தார்கள் வேலனும் அரவனும். அப்போது ஆலமரப் பொந்திலிருந்து வெளியே வந்தான் ஆந்தையரசன்.

ஆந்தையரசனைப் பார்த்ததும் அரவனுக்கு அடையாளம் தெரிந்தது. சிறு வயதில் தன்னைக் கொத்திய ஆந்தை இதுதான் என்று புரிந்து கொண்டான்.

”ஆந்தையரசனே, நாகராஜன் மகனாகிய அரவன் நான். இது என்னுடைய தோழன் வேலன். நாங்கள் உங்களிடம் ஒரு பொருளைக் கேட்க வந்திருக்கிறோம்.”

“ஓ! நாகராஜன் மகனா நீ? சின்ன வயதில் என்னுடைய கூர்மையான அலகினால் நீ கொத்தப்பட்டதை மறந்து போய் விட்டாயா? அல்லது என்னைப் பழிக்குப் பழி வாங்க வந்திருக்கிறாயா? அதைத் தனியாகச் செய்ய முடியாது என்றுதான் இந்த மனிதனையும் அழைத்து வந்திருக்கிறாயா?”

ஆந்தையரசனின் பேச்சில் ஆணவம் இருந்தது. இம்முறை வேலன் பேசினான்.

“அரசே, நாங்கள் பழிக்குப் பழி வாங்கவோ அல்லது இங்கிருந்து எதையும் திருடிச் செல்லவோ நாங்கள் வரவில்லை. முன்பு நீங்கள் நாகலோகத்தில் திருடிய நாகமாணிக்கத்தை வாங்கிச் செல்லவே வந்திருக்கிறோம். நீங்கள் நாகமாணிக்கத்தைக் கொடுத்தால் உங்களுக்கு நன்றி சொல்லி வந்த வழியே போய் விடுகிறோம். மறுத்தால் இதோ இருக்கிறது காளிதேவி கொடுத்த வாள். முடிந்தால் மோதிப் பாருங்கள்.”

காளிதேவியின் வாளைப் பார்த்ததும் ஆந்தையரசனுக்கு சற்று பயம். காளிதேவிக்குக் கோவம் வந்தால் யாரும் தப்பிக்க முடியாது என்று ஆந்தையரசனுக்கும் தெரிந்திருந்தது. ஆகையால் சூழ்ச்சி செய்து வேலனை ஏய்க்க நினைத்தது.

“வேலா, காளிதேவியின் வாளுக்கு நாங்கள் அச்சப்படவில்லை. அதே நேரத்தில் நாகமாணிக்கத்தை நான் எடுத்துத் தர முடியாது. அது ஒரு குகைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ மட்டும் உள்ளே சென்று நாகமாணிக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்.”

“சரி. அந்தக் குகை எங்கேயிருக்கிறது. சொல்லுங்கள். இப்பொழுதே சென்று எடுத்து வருகிறேன்.”

“அவசரப்படாதே வேலா. அந்தக் குகைக்குள் நுழைந்ததும் அதன் வாசல் தானாகவே மூடிக் கொள்ளும். நாகமாணிக்கத்தை எடுத்தால் மட்டுமே குகையிலிருந்து வெளியே வர முடியும். ஆனால் அதுவரை அரவன் இங்கே என் பாதுகாப்பில் இருக்க வேண்டும். மேலும் காளிதேவியின் வாளை இங்கேயே வைத்து விட்டுச் செல்ல வேண்டும். இதற்குச் சம்மதமா”

வேலன் சம்மதித்தான். “ஆந்தையரசனே, ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் வரும் வரையில் அரவனைத் துன்புறுத்துவதில்லை என்று இலட்சுமிதேவி மேல் சத்தியம் செய்து கொடு.”

ஆந்தையரசனும் ஒப்புக்கொண்டு சத்தியம் செய்து கொடுத்தான். காளிதேவி கொடுத்த வாளையும் அரவனையும் வெளியே விட்டுவிட்டு குகைக்குள் நுழைந்தான் வேலன்.

உடனே குகையின் வெளிக்கதவு தானாக மூடிக் கொண்டது. கதவு மூடியதும் மறுபடியும் குருடானது போல் உணர்ந்தான் வேலன். இருட்டில் சிறிது நேரம் இருந்தால் கண்கள் இருட்டிற்குப் பழகிவிடும் என்று சொல்வார்கள். ஆனால் நேரம் ஆக ஆக இருட்டு கூடியது போல் இருந்தது வேலனுக்குக்கு.

கையை நீட்டி ஏதேனும் சுவர் தெரிகிறதா என்று தடவிப் பார்த்தான். கையில் ஏதோ நறுக்கென்று குத்தியது. இருட்டில் தெரியாவிட்டாலும் தோல் கிழிந்து ரத்தம் வருவது புரிந்தது. சட்டென்று விரலை வேட்டியில் துடைத்தான். அப்போது விரல் இலட்சுமி தேவி கொடுத்த காசை  இடித்தது.

இலட்சுமி தேவி கொடுத்த காசை மறந்து விட்டோமே என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு அந்தக் கருப்புக் காசை வெளியே எடுத்தான்.

ஆனால் அது வெளியே வந்ததும் வைரக்காசைப் போல ஒளி வீசியது. குகைக்குள் இருந்த இருட்டு விலகி பாதை தெளிவாகத் தெரிந்தது. குகையின் சுவர்கள் முழுவதும் வைரமுனை கொண்ட ஈட்டிகளைப் பதித்து வைத்திருந்தன ஆந்தைகள். அதுதான் வேலனின் விரலைக் குத்தியது.

காசு கொடுத்த வெளிச்சத்தில் குகையின் நான்கு பக்கமும் பார்த்தான். வட்டவடிவமான அந்த குகையில் வாசல் என்று ஒன்று இருப்பது போலவே தெரியவில்லை. சுவர் முழுவதும் வைரமுனை ஈட்டிகள் வேறு. குகையின் மேல்புறத்தைப் பார்த்தான். அங்கும் ஈட்டிகள். குகையின் தரையில் மட்டும் ஈட்டிகள் இல்லை.

அப்பொழுதுதான் வேலன் கண்ணில் அந்தக் குழி தென்பட்டது. ஒரு சிறிய வட்ட வடிவமான குழி குகையின் தரையில் இருந்தது. அதன் அருகின் சென்று பார்த்தான். அந்தக் குழிக்குள் விரலை வைத்தான். ஆனால் அதில் ஒன்றுமில்லை.

படக்கென்று ஒரு யோசனை. இலட்சுமி தேவி கொடுத்த காசை அந்தக் குழியில் வைத்தான். குழிக்குள் வைத்ததும் அந்தக் காசு கரகரவென வேகமாகச் சுற்றியது. வேகம் கூடிக் கூடிப் படீர் என்ற சத்தத்தோடு காசு வெடித்தது. காசு இருந்த இடத்தில் தரை பிளந்து நாகமாணிக்கம் கண்ணில் பட்டது. நாகமாணிக்கத்தின் வெளிச்சம் குகை முழுவதும் பரவியது.

வேலனுக்கு மிகமிக மகிழ்ச்சி. இலட்சுமி தேவிக்கு நன்றி சொல்லி விட்டு நாகமாணிக்கத்தைக் கையில் எடுத்தான்.

உடனே படார் என்று குகையின் கதவு திறந்தது. அதன் வழியாக வேலன் நாகமாணிக்கத்தோடு வெளியே வந்தான்.

வேலன் நாகமாணிக்கத்தோடு வருவான் என்று ஆந்தையரசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. குகைக்குள் இருட்டில் தட்டுத் தடுமாறி வைரமுனை ஈட்டிகளில் விழுந்து இறந்து விடுவான் என்றுதான் ஆந்தையரசன் நினைத்தான்.

வேலன் இரண்டாம் நாகமாணிக்கத்தையும் எடுத்தது அரவனுக்கு மகிழ்ச்சி. ஓடிச் சென்று நண்பனைக் கட்டிக் கொண்டான்.

”ஆந்தையரசனே, இதோ நாகமாணிக்கம். உங்களிடம் சொன்னது போல எடுத்து வந்து விட்டேன். காளிதேவி கொடுத்த வாளை இனிமேல் நான் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா.”

“எடுத்துக் கொள்ளலாம்.” என்று வாய்க்குள் முனகினான் ஆந்தையரசன்.

தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டான்.

அப்போது அரவன் ஆந்தையரசனைப் பார்த்துக் சொன்னான். “ஆந்தையரசே, நான் சிறு பாம்புக்குட்டியாக இருந்த போது நீங்கள் என்னைக் கொத்தித் துன்புறுத்தியது உங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கும் நினைவிருக்கிறது. இதனால் என்ன பயன் கண்டீர்? போர் செய்யும் வெறியில் குழந்தை என்றும் பாராமல் தாக்குவது உங்களைப் போன்ற அரசனுக்குத் தகுதியாகாது. நீங்கள் கொத்திய பிறகு என்னல் ஒரு வாரத்திற்கும் மேல் எதையும் சாப்பிட முடியவில்லை. அந்தத் துன்பம் வேறு யாருக்கும் வேண்டாம். இனிமேல் யாரையும் துன்புறுத்தாதீர்கள். இது என்னுடைய வேண்டுகோள்.”

அரவனுடைய வேண்டுகோளைக் கேட்டதும் ஆந்தையரசனுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. பறந்து வந்து அரவனைக் கட்டிக் கொண்டான்.

“நாகராஜகுமாரா, என்னை மன்னித்து விடு. நான் செய்தது மிகப் பெரிய தவறு. என் மகன் ஆந்தை இளவரசன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இனிமேல் யாரையும் நானோ என் கூட்டத்து ஆந்தைகளோ துன்புறுத்த மாட்டோம்.”

அடுத்து வேலனைப் பார்த்துச் சொன்னான்.

“வேலா, நீ குகைக்குள் இருந்த போது உன்னைப் பற்றி அரவனிடம் பேசித் தெரிந்து கொண்டேன். பாண்டி நாட்டு வீரனான நீ, பாம்புகளுக்கு உதவி செய்ய வந்திருப்பது உன்னுடைய நல்ல மனதைக் காட்டுகிறது. ஆந்தைகள் செல்வத்திற்கு அடையாளம். உன்னுடைய வாழ்க்கையில் இனிமேல் செல்வம் குறைவில்லாமல் இருக்கும். உங்கள் பயணம் வெற்றியடைந்து மூன்றாவது மாணிக்கத்தையும் கைப்பற்ற எனது ஆசிகள்.”

பிறகு வேலனும் அரவனும் ஆந்தையரசனுக்கு நன்றி தெரிவித்து விட்டு இருட்டுக்காட்டை விட்டு வெளியே வந்தார்கள்.

மூன்றாவது மாணிக்கம் அவர்கள் விருப்பம் போலக் கிடைத்ததா?

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

3 Responses to நாகமாணிக்க வேட்டை – 8 – ஆந்தையின் போட்டி

  1. ரொம்ப அருமை! விறுவிறுப்பாகச் செல்கிறது கதை 🙂

    amas32

  2. Pingback: நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள் « மாணிக்க மாதுளை முத்துகள்

  3. Pingback: நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம் « மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s