நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள்

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல்
அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான்
அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி
அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை
அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம்
அத்தியாயம் – 6 – கருடனின் போட்டி
அத்தியாயம் – 7 – இரண்டாம் மாணிக்கம்
அத்தியாயம் – 8 – ஆந்தையின் போட்டி

இரண்டு நாகமாணிக்கங்களைக் கைப்பற்றியதில் வேலனும் அரவனும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

“வேலா, உன்னோடு இந்தப் பயணத்தைத் தொடங்கிய போது இவ்வளவு விரைவாக நாம் இரண்டு மாணிக்கங்களைக் கைப்பற்றுவோம் என்று நான் நினைக்கவில்லை. அத்தோடு நானும் நீயும் மிக நல்ல நண்பர்களாகவும் ஆனது ஆனந்தத்தைக் கொடுக்கிறது.”

“உண்மைதான் அரவன். பாண்டிய இளவரசியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நானும் வீட்டிலிருந்து கிளம்பினேன். வழியில் காளிதேவி, மகாவிஷ்ணு, இலட்சுமிதேவி ஆகியோரையும் சந்திக்க முடிந்தது. எவ்வளவோ தவம் செய்தவர்களுக்குக் கூட காட்சி தராமல் நமக்கு அவர்களே வந்து உதவி செய்தது மிகமிகப் பெருமையாக இருக்கிறது. உன்னுடைய நட்பும் உன் தந்தை நாகராஜனின் அன்பும் காளிதேவியின் வாளும் இந்தப் பயணத்தில் எனக்குக் கிடைத்த பெரும் செல்வங்கள்.”

“அது சரி வேலா. இரண்டு மாணிக்கங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னொரு மாணிக்கமும் வேண்டுமே. அதை எப்படிக் கண்டுபிடிப்பது?”

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. கருடனோ விஷ்ணுவிற்கு வாகனம். அதனால் கருடனிடமிருந்து முதல் மாணிக்கத்தைப் பெற அவர் உதவினார். ஆந்தையோ இலட்சுமி தேவிக்கு வாகனம். அதனால் ஆந்தையரசனிடம் இருந்து இரண்டாவது மாணிக்கத்தைப் பெற அவர் உதவினார். மூன்றாம் மாணிக்கம் மயிலரசனிடம் இருக்கிறது. மயிலோ தமிழ்க்கடவுள் முருகனின் வாகனம். முருகப் பெருமான் வந்துதான் நமக்கு உதவப்போகிறார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

வேலன் சொன்னதும் ஒரு விதத்தில் நியாயம்தானே. அரவனும் அதை ஏற்றுக் கொண்டான்.

நாம் குண்ட மண்ட பூதங்களை மறந்து விட்டோம். அவைகளின் தம்பி பூதங்களை வேலன் கொன்றதை இரண்டு பூதங்களாலும் மறக்க முடியவில்லை. எப்படியாவது வேலனையும் அவனோடு இருக்கும் பாம்பையும் கொன்று விட வேண்டும் என்று விரும்பின. ஆனால் வேலனையோ அரவனையோ தொடர்ந்து சென்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் அடுத்தவர் உதவியில்லாமல் இருவரையும் கொல்ல முடியாது என்று முடிவுக்கு வந்தன. உடனே பக்கத்துக் காட்டிலிருந்த கொள்ளிவாய்ப் பேய்களிடம் நடந்ததைச் சொல்லி உதவி கேட்டன. கொள்ளிவாய்ப் பேய்களும் உதவ ஒத்துக் கொண்டான்.

அங்கிருந்த பேய்களுக்கெல்லாம் பெரிய பேய் பேசியது. “குண்ட மண்ட பூதங்களே, பயப்படாதீர்கள். உங்களுக்குக் கொள்ளிவாய்ப் பேய்க் கூட்டம் உதவி செய்யும். நாங்கள் மந்திர தந்திரங்களில் பெரியவர்கள். ஆனால் ஒருவனிடம் காளியம்மன் வாள் இருக்கிறது என்று சொல்கின்றீர்கள். அது நம் எல்லாருக்குமே ஆபத்து. ஆகையால் அவனுடன் நேரடியாக மோதக் கூடாது. இன்னொருவனோ பாம்பு. பாம்புகளை மந்திரத்தால் எளிதாகக் கட்டி விடலாம். அந்தப் பாம்பை வைத்து இவனை மடக்க வேண்டியதுதான்.”

உடனே சில பேய்களை அழைத்து சில கட்டளைகளை இட்டது. அவைகளும் படக்கென்று அங்கிருந்து கிளம்பி வேலனையும் அரவனையும் பிடிக்கப் பறந்தன.

அப்படிப் பறந்து சென்ற பேய்கள் வானத்திலிருந்தே வேலனும் அரவனும் எங்கிருக்கிறான் என்று தேடிப் பார்த்தன. அங்கும் இங்கும் சுற்றிவிட்டு ஒருவழியாக இருவரையும் பேய்கள் கண்டுபிடித்தன.

அவர்களைப் பார்த்ததும் வானத்திலிருந்தே நெருப்பைக் கக்கி வேலனையும் அரவனையும் சுற்றி வளைத்து நெருப்பு வளையத்தை உருவாக்கின.

பாம்புகள் பொதுவாகவே  நெருப்புக்கு பயப்படும். அரவன் மிகவும் பயந்து போனான். மனித உருவிலிருந்து பாம்பு உருவத்திற்கு மாறி தப்பிக்க நினைத்தான். ஆனால் நெருப்பு வளையத்தைத் தாண்ட முடியவில்லை. பேய்கள் வானத்தில் பறந்து கொண்டிருந்ததால் வேலனால் வாளைப் பயன்படுத்த முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக பேய்கள் வேலனுக்கும் அரவனுக்கும் நடுவில் ஒரு நெருப்புச் சுவரை உண்டாக்கி இருவரையும் பிரித்து விட்டன.

பாம்புகளை மயக்கும் மந்திரத்தைப் பயன்படுத்தி முதலில் அரவனை மயங்க வைத்தன. அரவன் மயங்கியதும் ஒரு கொள்ளிவாய்ப் பேய் குதித்து அரவனைக் கையில் தூக்கிக் கொண்டு ஜிவ்வென்று மீண்டும் வானத்திற்கு பறந்தது. இதையெல்லாம் வேலனால் பார்க்க முடிந்ததே தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.

அடுத்து மனிதர்களை மயக்கும் மந்திரத்தை வேலன் மீது பேய்கள் ஏவி விட்டன. வேலனுக்கு தலையைச் சுற்றி மயக்கம் வந்தது. கையிலிருந்த வாளை உறையில் போட்டான். ஆனாலும் அவனால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பேய்களின் மந்திரத்திற்குக் கட்டுப் பட்டு மயங்கி விழுந்தான்.

வேலனைத் தூக்குவதற்காக ஒரு பேய் கீழே குதித்தது. ஆனால் காளியம்மன் வாள் வேலனிடம் இருந்ததால் பேயால் வேலனைத் தொடமுடியவில்லை. வேலன் விழுந்து கிடந்த இடத்தையே பெயர்த்து எடுத்துச் சென்றன.

இரண்டு நாகமாணிக்கங்களை வெற்றிகரமாகக் கைப்பற்றிய வேலனும் அரவனும் இப்படிக் கொள்ளிவாய்ப் பேய்களிடம் மாட்டிக் கொண்டார்கள்.

இருவரையும் கொள்ளிவாய்ப் பேய்கள் தங்கள் தலைவனிடம் எடுத்துச் சென்றன. மயங்கிய நிலையில் இருவரையும் கண்ட குண்ட மண்ட பூதங்களுக்கு மகிழ்ச்சி.

“ஆகா. கொள்ளிவாய்ப் பேய்களே, நீங்கள்தான் வீராதி வீரர்கள். நாங்கள் வெறும் மக்கு பூதங்கள். இந்த இருவரையும் இவ்வளவு விரைவில் கொன்று விட்டீர்களே.”

அப்போது பெரிய பேய் குறுக்கே புகுந்து சொன்னது. “பூதங்களே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் மக்கு பூதங்கள்தான். இருவரும் உயிரோடுதான் இருக்கிறார்கள். மந்திரத்தால் மயங்கியிருக்கிறார்கள். இந்தப் பாம்பினால் நமக்கு ஆபத்தில்லை. ஆனால் அந்த இளைஞனால் நமக்கு ஆபத்து. காளியம்மன் வாளோடு அவன் நம்முடைய இடத்திற்கு வந்திருக்கிறான். அது அவனைத் தொட்டுக் கொண்டிருக்கும் வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவனிடமிருந்து நாம் வாளைப் பிரிக்க வேண்டும். அதற்கு இந்தப் பாம்பைப் பயன்படுத்த வேண்டும்.”

இரண்டு கொள்ளிவாய்ப் பேய்களை அழைத்து சில ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னது.

மந்திரத்தால் மயங்கியிருந்த வேலன் மெதுவாக சுயநினைவுக்கு வந்தான். மந்திரத்தினால் தலை பயங்கரமாக வலித்தது. உடம்பை அசைக்க முடியவில்லை. மெதுவாகக் கண்களைத் திறந்தான்.  சற்றுத் தொலைவில் நிறைய கொள்ளிவாய்ப் பேய்கள் தெரிந்ததன. உடம்பைக் கஷ்டப்பட்டு அசைந்து எழுந்து உட்கார்ந்தான். பக்கத்தில் அரவனைக் காணவில்லை.

அதிர்ச்சியோடு ஒருவழியாக எழுந்து நின்றான். அப்போதுதான் தான் எங்கே இருக்கிறோம் என்றே புரிந்தது. கொள்ளிவாய்ப் பேய்களின் தலைவன் ஒரு மேடையில் உட்கார்ந்திருந்தான். அருகில் குண்ட மண்ட பூதங்கள். இரண்டு பக்கமும் வரிசையாக நிறைய கொள்ளிவாய்ப் பேய்கள். நடுவில் தான் மட்டும் தனியாக இருப்பதைப் புரிந்து கொண்டான்.

மனதுக்குள் காளியம்மனை ஒரு முறை நினைத்தான். அவனைக் கட்டியிருந்த மந்திரம் முழுதும் நீங்கியது. கோபத்தோடும் வீரத்தோடும் பேசினான் வேலன். “யார் நீங்கள்? எதற்காக என்னை இங்கே கொண்டு வந்திருக்கின்றீர்கள். என் நண்பன் அரவன் எங்கே? அவனை என்ன செய்தீர்கள்?”

வேலன் பேசியதைக் கேட்டு பேய் சிரித்தது. “ஹிஹ்ஹிஹ்ஹிஹ்! உன் பாம்பு நண்பனின் பெயர் அரவனா. நல்ல பெயர். உன் பெயர் என்ன?”

“என்னுடைய பெயர் வேலன். என் நண்பன் எங்கே? சொல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்.” வாளை உருவினான் வேலன்.

“அடடா! அவசரம் கூடாது வேலா. கூடவே கூடாது. அதுவும் உன் நண்பன் உயிருக்கு ஆபத்து இருக்கும் போது இப்படி ஆத்திரப் படுவது கூடவே கூடாது. கொள்ளிவாய்ப் பேய்களாகிய எங்களுக்கும் ஆத்திரம் வரும். வந்தால் உன் நண்பன் உயிர் போய்விடும். அதனால் அமைதியாக நான் சொல்வதைக் கேள்.”

கொள்ளிவாய்ப் பேய் பேசும் போது வாயிலிருந்து நெருப்புக் கங்குகள் தெறித்து விழுந்தன. அரவனின் உயிருக்கு ஆபத்து என்றதும் வேலனும் அமைதியானான்.

“சரி. நீ சொன்னபடியே கேட்கிறேன். எங்களை இங்கே கொண்டு வந்த காரணம் என்ன? உங்களுக்கு என்ன வேண்டும்.”

“மூட மனிதனே. பேய்களையும் பூதங்களையும் அழிக்கும் உன் போன்றவர்களை அழிப்பதுதான் எங்களுக்கு நல்லது. ஏற்கனவே இந்த பூதங்களின் தம்பி பூதங்களைக் கொன்று விட்டாய். உன்னை இப்படியே விட்டால் இன்னும் நிறைய பேய்களையும் பூதங்களையும் கொன்று விடுவாய். அதனால்தான் உன்னை இங்கே கொண்டு வந்திருக்கிறோம். அதோ பார் உனக்குப் பின்னாலே திரும்பிப் பார் உன் நண்பனின் நிலையை.”

அரவன் மந்திரக்கயிறுகளால் கட்டப்பட்டுக் கிடந்தான். பாம்பு உருவில் இருந்த அரவனால் நகர முடியவில்லை. அரவனுக்கு மேலே நெருப்பு உருண்டை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. அது அரவன் மேல் விழுந்தால் அரவன் எரிந்து சாம்பலாகி விடுவான். அரவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினான் வேலன்.

“அந்த பூதங்கள் எங்களைக் கொல்ல வந்தன. தப்பிப்பதற்காகக் கொன்றேன். நாங்களாக எந்த பூதத்தையும் பேயையும் அழிக்கவில்லை. சரி. அப்படியே பார்த்தாலும் அந்த பூதங்களைக் கொன்றவன் நான். என்னைக் கொன்று விடு. அரவனை விட்டு விடுங்கள்.”

மறுபடியும் சிரித்தது பேய். “ஹிஹ்ஹிஹ்ஹிஹ். அரவனை விடுகிறேன். விட்டு விடுகிறேன். ஆனால் உன்னிடம் உள்ள ஒரு பொருளை எனக்குக் கொடுக்க வேண்டும். ஆம். உன்னுடைய் வாள். அதை இந்த மேடையில் நல்ல பிள்ளையாக நீ வைக்க வேண்டும். அப்போதுதான் அரவன் உயிர் பிழைப்பான். இல்லையேல் அந்த நெருப்புருண்டை அரவன் மேல் விழும். அந்தப் பாம்பு எரிந்து சாம்பலாகப் போகும். இப்போது சொல். அந்த வாளை வைக்கிறாயா?”

வேலனால் ஒன்றும் பேச முடியவில்லை. வாளை வைத்தாலும் இந்தப் பேய்கள் அரவனை விடுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது வேறு வழியில்லை என்பது வேலனுக்குப் புரிந்து போனது. மனதுக்குள் காளியம்மனை வணங்கிவிட்டு அமைதியாக வாளை எடுத்து மேடை மேல் வைத்தான்.
தொடரும… இன்னும் ஒரேயொரு அத்தியாயம் மட்டும்…

ஆம். அடுத்த அத்தியாயம் நாகமாணிக்க வேட்டையின் இறுதி அத்தியாயம்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

One Response to நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள்

  1. Pingback: நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம் « மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s