நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம்

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல்
அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான்
அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி
அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை
அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம்
அத்தியாயம் – 6 – கருடனின் போட்டி
அத்தியாயம் – 7 – இரண்டாம் மாணிக்கம்
அத்தியாயம் – 8 – ஆந்தையின் போட்டி
அத்தியாயம் – 9 – கொள்ளிவாய்ப்பேய்கள்

கொள்ளிவாய்ப் பேய்களிடம் ஒப்புக் கொண்டபடி வேலன் வாளை அந்த மேடையில் வைத்ததும் மேடையைச் சுற்றி நெருப்பு பரவியது.

எந்த விதமான ஆயுதமும் இல்லாமல் தான் நிற்பது வேலனுக்கு அவமானமாக இருந்தது. இந்தப் பேய்களிடமிருந்து தப்பிக்க முடியுமா என்று அவனால் முடிவு செய்ய முடியவில்லை. மனதுக்குள் முருகக் கடவுளிடம் பேசினான்.

“முருகா, தமிழ்க்கடவுளே, மூன்றாவது நாகமாணிக்கத்தை மயிலரசனிடமிருந்து நீ வாங்கித் தருவாய் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்படிக் கொள்ளிவாய்ப் பேய்களிடம் மாட்டி வைத்து விட்டாயே. சரி. நடப்பது நடக்கட்டும். எல்லாம் உன் செயல்.”

பிறகு வேலன் பேயைப் பார்த்துச் சொன்னான். “இதோ ஒப்புக் கொண்டபடி நான் வாளை வைத்து விட்டேன். நீங்கள் ஒப்புக் கொண்டபடி அரவனை விடுதலை செய்யுங்கள்.”

“ஹிஹ்ஹிஹ்ஹிஹ். மனிதர்கள் முட்டாள்கள். பேய்களையும் அவர்களைப் போல முட்டாளாக நினைக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ பேய்கள் மனிதர்களுக்குப் பயப்படுவதில்லை. ஆனால் மனிதர்கள் பேய்களுக்குப் பயப்படுகிறார்கள்.”

அரவனை விடுவிக்காமல் பேய் பேசுவது வேலனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. “சொன்னதைச் செய்யாமல் இப்படி பேசிக் கொண்டிருந்தால் எப்படி? உன்னுடைய திட்டம் தான் என்ன?”

“திட்டமா? சொல்கிறேன். முதலில் உன்னைக் கொல்ல வேண்டும். உன்னைக் கொன்று இங்குள்ள பேய்கள் தின்ன வேண்டும். பிறகு உன் நண்பனை என்ன செய்வது என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் இங்கு என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியுமல்லவா. அவன் வேறு யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து எங்களை எதிர்த்தால் நாங்கள் என்னாவது? இன்று நீ காளியம்மன் வாளோடு வந்தாய். நாளைக்கு யாரேனும் முருகனின் வேலோடு வருவார்கள். வாளோ வேலோ, அந்தப் பாம்பை வெளியே விட்டால் எங்களுக்குத்தான் ஆபத்து. பேய்களே, இதோ இந்த மனிதனை நீங்கள் விருப்பம் போல பிய்துத் தின்னுங்கள்.”

எரிச்சலும் ஆத்திரமும் வேலனின் தலைக்கேறியது. மெதுவாகப் பேய்கள் அவனை நோக்கி நடந்து வந்தன. அப்போதுதான் நாகராஜா கொடுத்திருந்த நாகாஸ்திரம் வேலனின் நினைவிற்கு வந்தது. அவன் உள்ளங்கையில் எப்போதும் பிரிக்க முடியாமல் இருக்கு நாகாஸ்திரத்தைப் பேய்களின் மேல் ஏவினான். பேய்கள் அலறிக் கொண்டு அழிந்தன.

தன் கண் முன்னமே பேய்கள் இறந்து விழுவதைக் கண்டு பெரிய பேய்க்குக் கோவம் தலைக்கேறியது. “பேய்களே, அந்த நெருப்புருண்டையை அவிழ்த்து விடுக்கள். அந்தப் பாம்பு எரிந்து போகட்டும்.”

உடனே அந்த நெருப்புருண்டையை பேய்கள் அவிழ்த்தன. அது அரவனை நோக்கிக் கீழே விழுந்தது.

அரவனைக் காப்பாற்ற முடியாத போது அவனோடு இறந்து விடுவோம்  என்று வேலன் நினைத்தான். முருகா என்று கத்திக் கொண்டு வேலன் அரவனுக்கும் நெருப்புருண்டைக்கும் நடுவில் பாய்ந்தான்.

பளார் என்று பெரிய ஒளி தோன்றியது. ஜலஜலஜல என்று சலங்கைச் சத்தம் மங்கலமாகக் கேட்டது. அந்த ஓசையைக் கேட்டதும் பேய்களும் பூதங்களும் நடுநடுங்கின.

எங்கிருந்தோ ஒரு பெரிய மயில் தோகையைத் தூக்கிக் கொண்டு மிக விரைவாகப் பறந்து வந்து விழுந்து கொண்டிருந்த நெருப்புருண்டையைக் கவ்வியது. கவ்விய நெருப்புருண்டையை அப்படியே லபக்கென்று விழுங்கி விட்டது.

அந்த மயிலின் கண்களில் கடும் கோபம். அந்தப் பார்வையே நெருப்பாக மாறி அங்கிருந்த பேய்களையும் பூதங்களையும் ஒரு நொடியில் அழித்துச் சாம்பலாக்கி விட்டது.

அரவனைக் கட்டியிருந்த மந்திரக் கயிறுகளும் அறுந்தன. வேலனும் அரவனும் எழுந்து அந்த மயிலை வணங்கினார்கள். அந்த மயிலைப் பார்த்ததுமே இருவருக்கும் களைப்பெல்லாம் நீங்கிப் புத்துணர்ச்சி உண்டானது. இருவரும் மயிலுக்கு நன்றி சொன்னார்கள்.

“நல்ல நேரத்தில் எங்களைக் காப்பாற்றியதற்கு நன்றி.”

“வேலா, அரவன், நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் மயிலரசன் நானேதான். கருடனிடமிருந்தும் ஆந்தையரசனிடம் இருந்தும் நாகமாணிக்கங்களை நீங்கள் பெற்றது எனக்குத் தெரியும். அடுத்து என்னிடம்தான் வருவீர்கள் என்று நானும் மாணிக்கங்களை எடுத்து வைத்துக் காத்திருந்தேன். ஆனால் நீங்கள் வரத் தாமதம் ஆனதால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகியிருக்கலாம் என்று பயந்தேன். என்னுடைய ஞானதிருஷ்டியில் உங்களுடைய நிலமையைப் புரிந்து கொண்டேன். அதனால்தான் சரியான நேரத்தில் உங்களைக் காப்பாற்ற முடிந்தது. இதோ மூன்றாவது நாகமாணிக்கத்தைப் பெற்றுக் கொள்.”

மயிலரசன் கொடுத்த நாகமாணிக்கத்தை வேலன் வணங்கிப் பெற்றுக் கொண்டான்.

“ஐயா, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எங்களையும் காப்பாற்றி நாகமாணிக்கத்தையும் கொடுத்து விட்டீர்கள். இனி இந்த மூன்று மாணிக்கங்களையும் நாகராஜனிடம் கொடுத்து பாண்டிய இளவரசியைத் திரும்பவும் மதுரைக்குக் கூட்டிச் செல்வேன்.”

“வேலா, எல்லாம் நல்லதாகவே நடக்கும். நான் நாகராஜனுக்கு ஏற்கனவே செய்தியனுப்பி விட்டேன். இளவரசி வானதியை அழைத்துக் கொண்டு கோடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு நாகராஜன் வந்து விடுவார். இன்னொரு மயிலை பறக்கும் பல்லக்குகளோடு மதுரைக்கு அனுப்பியிருக்கிறேன். அதிலேறி பாண்டிய அரசரும் அரசியும் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வந்து விடுவார்கள். நீயும் அரவனும் என்னுடைய காலைப் பிடித்துக் கொள்ளுங்கள். நாமும் அங்கே செல்லலாம். அதற்கு முன் காளியம்மன் கொடுத்த வாளை எடுத்துக் கொள்.”

அரவன் பாம்பாக மாறி மயிலரசனின் ஒரு காலைச் சுற்றிக் கொண்டான். வேலன் இன்னொரு காலில் ஏறி நின்று கொண்டு இறுக்கப் பிடித்துக் கொண்டான்.

மயிலரசன் ஜிவ்வென்று வண்ணத்தொகை ஒளிவீச வானில் பறந்தது. மயிலரசனைச் சுற்றி எப்பொழுதும் மங்கல ஓசை நிறைந்து இருந்தது. அது வேலனுக்கும் அரவனுக்கும் நல்ல மன அமைதியைக் கொடுத்தது.

சொன்னபடியே கோடைக்கானல் மலையின் குறிஞ்சியாண்டவர் கோயிலில் மயிலரசன் இறங்கினான். அங்கே அரசனும் அரசியும் ஏற்கனவே வந்திருந்தார்கள். பிறகு அனைவரும் சேர்ந்து கோயிலுக்குப் பின்னிருந்த நந்தவனத்திற்குச் சென்றார்கள்.

அங்கே குறிஞ்சிமலர் மரத்தின் கீழேயிருந்த பாம்புப் புற்றிலிருந்து நாகராஜனும் இளவரசி வானதியும் வெளியே வந்தார்கள்.

தாயையும் தந்தையும் பார்த்ததும் வானதி “அப்பா அம்மா” என்று கத்திக் கொண்டு ஓடிக் கட்டிக் கொண்டாள். தங்கள் மகளைப் பிரிந்திருந்த அவர்களும் மகள் நல்லபடி வளர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.

இதைப் பார்த்து மகிழ்ந்த வேலன் நாகராஜனிடம் சென்றான். மூன்று நாகமாணிக்கங்களையும் எடுத்துக் கொடுத்தான். “ஐயா, உங்களிடம் ஒப்புக் கொண்டபடி மூன்று நாகமாணிக்கங்களையும் உங்களிடம் கொடுக்கிறேன். இனிமேல் இது நாகலோகத்தின் துன்பங்களைப் போக்கட்டும். என்னுடைய ஆருயிர் நண்பர் அரவன் முழுநலம் பெறவும் உதவட்டும்.”

பெருமகிழ்ச்சியோடு நாகராஜன் மாணிக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

“வேலா, வீரன் நீ. பாண்டி நாட்டு இளைஞர்களிடம் துணிச்சலுக்குக் குறைவேது. காளியம்மன் வாளோடு நீ நாகலோகம் வரும் போதே, நீ வெற்றி பெறுவாய் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. நீ வாழ்க. உன் குலம் வாழ்க.”

பிறகு நாகராஜன் பாண்டிய மன்னரிடம் பேசினான். “பாண்டிய மன்னா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நந்தவனத்தில் நீ கண்களில் கண்ணீர் மல்கி என்னிடம் வானதியை விடுமாறு கேட்டாய். இதோ வானதியை இப்பொழுது உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். சாட்சியாக மயிலரசனே வந்திருக்கிறார். இப்பொழுது திருப்திதானே?”

பாண்டிய மன்னர் மகிழ்ச்சியோடு “திருப்தி. திருப்தி” என்றார்.

அப்போது மயிலரசன் பாண்டிய மன்னரிடமும் நாகராஜனிடமும் ஒன்றை நினைவுபடுத்தினார். “நாக மன்னனும் பாண்டிய மன்னனும் ஒன்றை மறந்து விட்டீர்கள். இளவரசி வானதியைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற வீரனே வானதியைக் காப்பாற்றுவான் என்று நாகராஜன் சொன்னதைத்தான் சொல்கிறேன். வேலனும் தன்னுடைய வீரத்தையும் நல்ல பண்புகளையும் நிரூபித்து விட்டான். திருமணம் எப்பொழுது?”

பாண்டிய மன்னருக்கும் அது நினைவுக்கு வந்தது. “மயிலரசே, எப்பொழுது என்றா கேட்கின்றீர்கள். இதோ இப்பொழுது. நீங்களும் நாகராஜனும் வந்திருக்கும் இந்த நேரமே மிக நல்ல நேரம். இப்பொழுதே திருமணம். வேலனுக்கு இதில் ஒப்புதல் என்றே நான் நினைக்கிறேன். இருந்தாலும் வரப்போகும் மாப்பிள்ளை அவர் வாயால் கேட்பது நல்லதல்லவா.”

வேலன் பாண்டிய மன்னரை வணங்கிச் சொன்னான். “மன்னா, நீங்களோ அரசர். நாங்கள் உங்கள் குடிமக்கள். இளவரசி வானதியைக் காப்பாற்றி உங்கள் வருத்தத்தை நீக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருந்தது. அந்த முயற்சியில் கிடைத்தத அனுபவமே பெரும் பரிசு. அதற்கு மேல் இன்னொரு பரிசு கொடுக்கின்றீர்கள். என்னுடைய சம்மதத்தை விட இளவரசியின் ஒப்புதல் மிக முக்கியம். அதைக் கேளுங்கள் மன்னா.”

வேலன் சொன்னது நியாயமாகப் பட்டது மன்னருக்கு. இளவரசி வானதி வெட்கத்தோடு ஒப்புதல் கொடுத்தாள். உடனே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பறக்கும் பல்லக்குகளை அனுப்பி வேலனின் பெற்றோரையும் அழைத்து வந்தார் மயிரலரசன். அவர்களும் வேலனின் வெற்றியையும் பெருமையையும் கண்டு ஆனந்தப்பட்டார்கள்.

அதற்குள் தகவல் தெரிந்து கருடனும் ஆந்தையரசனும் வேலன் – வானதி திருமணத்தைக் காண கோயிலுக்கு வந்து விட்டார்கள். நாகலோகத்தில் வானதி வளர்ந்ததால் நாகலோகத்திலிருந்தும் பலர் வந்தனர்.

வேலனுக்கும் வானதிக்கும் குறிஞ்சியாண்டர் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்தது. முதலில் பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கினார்கள்.

வானதியை வளர்த்த தந்தை என்ற முறையில் நாகராஜன் காலில் விழுந்தார்கள். நாகராஜனுக்கு அழுகை வந்து விட்டது. “மகளே, நான்கு ஆண்டுகளாக நாகலோகத்தில் என் மகளாக வளர்ந்து வந்தாய். இன்று உன்னைப் பிரியப் போகிறேன் என்று நினைக்கும் போது அழுகை வருகிறது. பாம்புகளாகிய எங்களுக்கும் பாசம் உண்டு. இதோ என்னுடைய பரிசாக இந்த முத்துமாலையை உனக்கு அளிக்கிறேன். இந்த மாலை உன்னிடம் இருக்கும் வரை உனக்கு நல்லதே நடக்கும். இதை யாரிடமும் கொடுக்காதே.” அண்ணன் என்ற முறையில் அரவன் வானதிக்கு இரண்டு அழகான வளையல்களைக் கொடுத்தான்.

பிறகு வேலனும் வானதியும் கருடன் காலில் விழுந்து வணங்கினார்கள். இருவரையும் வாழ்த்திய கருடன் வேலனிடம் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்தான். “வேலா, இந்தப் பெட்டி மருந்துப் பெட்டி. உலகத்தில் என்ன நோயாக இருந்தாலும் இதற்குள் மருந்து இருக்கும். நல்ல மனதோடு இதைத் திறந்தால் அப்போது தேவையான மருந்தும் அதைப் பயன்படுத்த வேண்டிய குறிப்பும் அதில் இருக்கும். இதை எல்லாருக்கும் பயன்படுத்தும்படி செயல்படுத்துவாயாக. தவறான நோக்கத்தோடு திறந்தால் இந்தப் பெட்டி பலனற்றுப் போகும். வாழ்க வளமுடன்.”

வேலன் கருடனை வணங்கிப் பெட்டியைப் பெற்றுக் கொண்டான்.

அடுத்து ஆந்தையரசன் காலில் விழுந்து வணங்கினார்கள். ஆந்தையரசன் இருவரையும் வாழ்த்தி விட்டு ஒரு துணிப்பையையை பரிசாகக் கொடுத்தது. “இந்தப் பை வேண்டிய செல்வத்தைக் கொடுக்கும். ஆனால் உண்மையிலேயே தேவையிருந்தால்தான் இதற்குள் கையை விட வேண்டும். பேராசையோடு கையை விட்டால் ஒன்றும் கொடுக்காது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுக. நீடூடி வாழ்க.”

ஆந்தையரசனை வணங்கிப் பையைப் பெற்றுக் கொண்டான் வேலன்.

கடைசியாக இருவரும் மயிரலரசனை நோக்கித் திரும்பினார்கள். காலில் விழும் முன் மயிலரசனிடம் வேலன் வேண்டினான். “மயிலரசே. என் உயிர் நீங்கள் காப்பாற்றிக் கொடுத்தது. உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டுமென்றால் வாழும் ஒவ்வொரு நொடியும் சொல்ல வேண்டும். இருந்தாலும் ஒரு வேண்டுகோள். கருடனைப் பார்க்கப் போகையில் மகாவிஷ்ணுவைப் பார்த்து வணங்கினோம். ஆந்தையரசனைப் பார்க்கப் போகும் போது இலட்சுமி தேவியைக் கண்டு வணங்கினோம். உங்களைப் பார்க்க வருகையில் முருகக்கடவுளைப் பார்ப்போம் என்று நம்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. அந்த விருப்பத்தை இப்போது நிறைவேற்றுவீர்களா?”

வேலன் கேட்டதுமே அந்தக் கோயில் முழுவதும் பேரொளி வீசியது. மயிலரசன் மீது முருகக் கடவுள் வேலோடு காட்சி தந்தார். மங்கல மணிகளும் இசைக்கருவிகளும் முழங்கின. திருநீறும் சந்தனமும் அந்தக் கோயில் முழுவதும் மணந்தது.

அங்கிருந்த அனைவரும் முருகன் காலில் விழுந்து வணங்கினார்கள். முருகா முருகா முருகா என்று அனைவரும் போற்றிப் புகழ்ந்தார்கள்.

மணமக்களை வாழ்த்தி விட்டு முருகக் கடவுள் மறைந்தார். மயிலரசன் தன்னுடைய தோகையில் ஒன்றை உருவி வேலன் கையில் கொடுத்தார். அது அழகான வாளாக மாறியது. பல நிறங்களில் மின்னும் அற்புதவாளை அனைவரும் வியப்போடு பார்த்தார்கள்.

“வேலா, இந்த மயில் வாள் உனக்கு எப்பொழுதும் உதவும். நீயும் வானதியும் பல்லாண்டு இன்புற்று வாழ்க.”

இப்படி அனைவரும் சிறப்பாக வாழ்த்த வேலன் வானதி திருமணம் இனிதே நிகழ்ந்தது. பின்னாளில் வேலன் பாண்டிய நாட்டு மன்னனாக இருந்து சிறப்பாக ஆட்சி செய்தான். மருந்துப் பெட்டி, துணிப்பை மற்றும் மயில் வாளைப் பயன்படுத்தும் சூழ்நிலை வேலனுக்கு வரவில்லை.  பல ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு கதையில் அவைகளைப் பயன்படுத்த வாய்ப்பு வந்தது.

இப்போதைக்கு இந்தக் கதை இங்கு முடிகிறது.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

6 Responses to நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம்

 1. தமிழ் says:

  இந்த வருடம் நான் முடித்த முதல் கதை/நாவல்/நூல் இதுதான்.
  சுவாரசியம் என்கிற அளவில் கதையை ரசிக்கவே இயல்கிறது. ஆயிரம் குறைகளை சொல்ல நினைத்தாலும் கதையின் வேகம் எல்லாவற்றையும் மறைக்கிறது.

  இந்த வேட்டையின் தொடர்ச்சி எப்போது வருமென ஆவலோடு உள்ளேன்.
  தளத்தில் இத்தொடர் வருகிறது என எனக்கு சொன்ன தோழன் ஓஜஸ்-க்கும் நன்றி

  அன்பன்,
  தமிழ்.

  • GiRa ஜிரா says:

   வாங்க தமிழ். உங்க கருத்துக்கு மிகுந்த நன்றி. லாஜிக்கை ஒளிச்சு வெச்சுட்டு எழுதப்பட்ட கதை. நீங்க படிச்சு ரசிச்சதுக்கு நன்றி. இதைப் பகிர்ந்த நண்பர் ஓஜசுக்கும் நன்றி 🙂

 2. அருமை அருமை !

  பறக்கும் பல்லக்கில் ஓரமா உட்கார்ந்துகொண்டு குறிஞ்சி ஆண்டவர் கோலில் நடந்த கல்யாணத்துக்கு நானும் வந்திருந்தேனே…கவனிக்கலையா ???

  • GiRa ஜிரா says:

   கல்யாண ஏற்பாட்டுல ஒங்கள சரியா கவனிக்காம விட்டதுக்கு மன்னிக்கனும். விருந்தெல்லாம் திருப்தியா சாப்டிருப்பிங்கன்னு நெனைக்கிறேன். ஒங்களுக்கும் கோபால்சாருக்கும் தனியா பறக்கும் பல்லக்கு புதுக்கடல்நாட்டுக்கு அனுப்பியிருந்தோமே 🙂

 3. Pingback: மின் வாசிப்பு | தமிழ்

 4. Pingback: குறிப்பு-1 | தமிழ்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s