என் கொங்கை நின் அன்பர்

கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்!

வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன?

வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் கைப் பக்குவம்தான் அரங்கனுக்கு வட்டிலில் விழும் உணவு. கொஞ்சமும் பிசகில்லாத கைச்சுத்தம். புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ வரதன் செய்தாலே தனி மணமும் குணமும்.

திரையை மூடிக்கொண்டு படைக்கும் பொழுது உண்மையிலேயே பெருமாள் கொஞ்சம் எடுத்து விடுகிறார் என்று ஊருக்குள் பேசிக் கொள்கின்றார்கள். யார் கண்டார் உண்மையை? பெருமாளோ! படைக்கின்ற தாத்தாச்சாரியோ! ஆனால் பெருமையெல்லாம் வரதனுக்குத்தான்.

எண்ணெய் கரிக்காத வடை. புளிக்காத ததியோன்னம். வரட்டாத புளியோதரை. திகட்டாத அக்காரவடிசில். பிசுபிசுப்பேயில்லாத நொய்யப்பம். எத்தனை வகைகள். அடடா! அண்டாப் பொங்கல் கிண்டினாலும் அரைப்படியில் கிண்டினாலும் சுவை மாறவே மாறது. எங்கிருந்து வந்ததோ இந்தக் கைவண்ணம்.

சீரான சீரங்கத்து வரதனின் கைவண்ணம் ஆனைக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஆனைக்கா வீரசைவர்கள் சீரங்கத்தின் எல்லையைக் கூட மிதிக்க மாட்டார்கள். ஆனாலும் வரதன் கைப்பக்குவம் கொல்லை வழியாக அவர்களுக்குப் போகும். இரண்டு இடங்களுக்கும் போகின்ற பொதுவான மக்கள் இங்கிருந்து வாங்கி அங்கு கொண்டு சென்று கொடுப்பார்கள்.

ஆனைக்கா கோயிலின் பெரிய சிவாச்சாரியாரும் வரதன் வதக்கியவைகளை வகை வகையாக வளைத்துக் கட்டுகின்றவரே! நாராயணா என்று மறந்தும் ஒரு பேச்சு பேச மாட்டார். ஆனால் பெருமாளுக்குப் படைத்த பிரசாதங்களை பிற சாதங்களாக கருதாமல் ஏற்றுக் கொள்ளும் பரந்த வாய்ப் பக்குவம் அவருக்கு இருந்தது.

உணவில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும் எப்படியோ இருந்தது. கண்ணப்பன் படைத்த பன்றிக்கறியை பரம்பொருள் ஏற்றுக் கொண்டாரே என்று வக்கனை பேசுவார். எது எப்படியோ! வரதன் பெருமைதான் பெருகியிருந்தது.

நளனும் பீமனும் கூட வரதன் சமைக்கின்ற மாதிரிதான் சமைத்திருப்பார்கள் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். என்னவோ இவர்கள் நளபாகத்தையும் பீமபாகத்தையும் பத்து நாள் உட்கார்ந்து தின்றது போல!

இந்தப் பிரபல வரதனுக்கும் வந்தது காதல். அதுவும் மோகனாவின் மேல். அழகுச் சிலைதான் அவள். இவனும் குறைந்தவன் அல்லன். நல்ல சிவப்பு. நேர்த்தியான வடிவம். இடுப்பில் கச்சம். திறந்த மார்பு. குறுக்கே பூணூல். தென்கலை நாமங்கள். அள்ளி முடிந்த குடுமி. சவரம் செய்த முகம். காதில் கடுக்கண். வேறென்ன வேண்டும். மோகனாவும் மயங்கி விட்டாள். திருவானைக்காவல்காரி மனதைக் காவல் காக்க மறந்து விட்டாள். வரதனும் கண்ணனடி பற்றிக் கள்வனாகி விட்டான்.

நாளும் கிழமையும் எம்பெருமானைக் காண திருவானைக்கா போவது ஊரார் வழக்கம். ஆனால் மோகனாவைப் பார்க்கப் போவது வரதன் வழக்கம். எம்பெருமானும் எத்தனை நாள் பொறுப்பார்? தன்னைப் பார்க்காமல் மோகனாவைப் பார்க்கிறானே என்று சேர்த்து வைத்து பழி வாங்குவது போல மோகனாவைக் கதவை மூட வைத்து விட்டார்.

உண்மைதான். ஈசன் விளையாட்டினால்தான் மோகனா கதவடைத்தது. மாதமோ மார்கழி. சைவப் பெண்ணல்லவா மோகனா! காலையில் எழுந்து குளிர்நீரில் நீராடி வெண்ணீறில் நீறாடி திருவெம்பாவை பாடிக் கொண்டு காலையில் கூட்டத்தோடு கோயிலுக்குப் போவாள்.

நல்ல பக்தி சிரத்தையுள்ள பெண். உள்ளமுருகிப் பாடுவாள். திருவெம்பாவையும் தேவாரப் பாசுரங்களும் மோகனா பாடினால் தேனாக ஒலிக்கும். பரமசிவனின் இளைய மகனுக்கு குடங்குடமாக தேனாபிஷேகம் செய்தால்தான் அப்படிக் குரல் வாய்க்குமாம். நல்ல குரல்வளம்.

“எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
என் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க”

இந்தப் பாட்டில்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது. வராமலா இருக்கும்? நல்ல தமிழறிவு மோகனாவிற்கு. பாண்டியனுக்கு ஐயம் வந்த பொழுது மாட்டிக் கொண்டது தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர். மோகனாவிற்கு வந்த பொழுது மாட்டிக் கொண்டவன் வரதன். தாங்குவானா வரதன்?

சரி. பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பாடல் என்ன சொல்கிறது? சிவனைப் பார்த்து சைவப் பெண்கள் சொல்வது போல அமைந்த திருவெம்பாவைப் பாட்டு.

“எம்பெருமானே! உனக்கு ஒன்று சொல்கின்றோம் கேள். சைவப் பெண்டிர்களாகிய எங்கள் கொங்கைகள் உன்னை வணங்குகின்றவர்களின் தோளை மட்டுமே சேரும்.” அதாவது சைவர்களையே மணப்போமென்றும் உடலால் கூடுவோமென்றும் சொல்வது போல வருகிறது.

இப்பொழுது புரிந்திருக்குமே மோகனாவின் குழப்பம். வரதனோ பரம வைணவன். இவளோ சிவக் கொழுந்து. ஒத்து வருமா? கலப்புத் திருமணம் செல்லுபடியாகுமா? ஊரார் ஒப்புக் கொள்வார்களா? ஊராரை விடுங்கள். அவளது வீட்டிலேயே ஒப்புக் கொள்வார்களா?

சரி. மற்றவர்களை விடுங்கள். வாழப் போவது இவள்தானே. ஊரார் என்ன சொல்ல? பெற்றோரும் உற்றோரும் என்ன சொல்ல? வரதனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி நடந்து விட்டால் அவள் இத்தனை நாள் உள்ளமுருகச் சொன்னது பொய் என்று ஆகிவிடும் அல்லவா? அதுதான் அவள் கவலை.

அதனால்தான் வரதன் வரும் வேளையில் படக்கென்று வீட்டுக்குள் சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டாள். திடுக்கிட்ட வரதனோ மனமும் வாயும் மூடிக் கொண்டான். அருகிலிருந்த மண்டபத்துத் தூணோடு ஒட்டிக் கொண்டான்.

அவன் கலக்கம் நீடிக்கவில்லை. விரைவிலேயே மோகனாவின் தோழியர் மூலம் வரதனுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. காரணம் புரியாததால் காவிரிக்குள் விழ இருந்தான். நல்ல வேளையாக ஈசனார் காப்பாற்றினார்.

பிரச்சனை புரிந்ததும் அடுத்து வருவது தீர்வுதானே! இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு காண்பான் வரதன்?

நேராக பெரிய சிவாச்சாரியாரைப் பார்த்தான். காலில் விழுந்தான். சிவதீட்சை வேண்டுமென்று வணங்கிக் கேட்டான். சீரங்கத்தை மறந்து விட்டு ஆனைக்காவிலேயே காவலிருக்கவும் உறுதி சொன்னான்.

எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்வாரா பெரிய சிவாச்சாரியார். திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவராயிற்றே. நிபந்தனைகளைப் போட்டார். திருவானைக்காவல் மடப்பள்ளிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஒரு கட்டளை வேறு போட்டார்.

அங்கே பார்த்த அதே வேலைதான். அங்கே பரந்தாமன். இங்கே பரமேசுவரன். இரண்டு இடத்திலும் இருப்பது பரம் தானே! மோகனா என்னும் வரம் கிடைக்க எதற்கும் அவன் தயார்தான். ஒத்துக் கொண்டான்.

வரதன் கையில் மீண்டும் கரண்டி. மோகனா கழுத்தில் தங்கத் தாலி. என்றைக்கும் அவளுடன் அவன் தங்கத் தாலி.

புதுப் பூணூல். நாமம் போயிற்று. திருநீற்றுப் பட்டை நெற்றியில் ஏறியது. நாராயண மந்திரம் சிவோகமாக ஒலித்தது. மோகனாவின் குளிர்விழியில் நாச்சியார் திருமொழி மறந்து போனது.

சீரங்கமோ பற்றி எரிந்தது. குலத் துரோகி வரதனைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். கிரியைகளைக் கூட முடித்து விட்டார்கள். அவன் சமைத்த மடப்பள்ளியை காவிரியைக் கொண்டு மீண்டும் மீண்டும் கழுவி தீட்டுக் கழிக்க யாகம் வளர்த்தார்கள். அவன் புழங்கிய வெங்கலப் பாத்திரங்கள் வீதிக்கு வந்தன. மண்பாண்டங்கள் பிறந்த வீட்டிற்குப் போயின.

“நாரிமணிக்காக நாராயணனை மறக்கலாமா? நீல மேனியனுக்குப் படைத்த கைகள் திருநீற்று மேனியனுக்கு படைக்கலாமா! வெண்ணெய் உண்டவனுக்கு படைத்துக் கொண்டிருந்தவன் விடமுண்டவனுக்குப் படைக்கலாமா? அப்படிப் படைத்தாலும் அந்த நஞ்சு விழுங்கிக்கு எட்டிக்காய் பாயாசமும் வேப்பங்காய் பொங்கலுமே ஆகும். காதலுக்காக மதம் மாறினானே இந்த மூர்க்கன்!” இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டார்கள்.

அங்கே அப்படியென்றால் திருவானைகாவில் வேறு மாதிரி. ஒரே கொண்டாட்டம். வரதன் கையால் பரமனுக்கு பலவிதப் பலகாரங்களைப் படைத்து அவற்றைத் தாமே உண்டனர். ஆயாசமே இல்லாமல் பாயாசங்களைப் பருகினார்கள். ஆசை குறையாமல் தோசைகளை அடுக்கினார்கள். பொன்னைக் கண்டதும் அதில் பொன்னார் மேனியனைக் கண்டார் சம்பந்தர். இவர்கள் வெண்பொங்கலில் வெந்நீறணிந்தவன் மேனியைக் கண்டு, சிவாநுபூதி பெற வெண்பொங்கலாக விழுங்கினார்கள்.

பரந்தாமனோ பரமசிவனோ அடித்துக் கொள்ளவில்லை. வட்டில் சோற்றுக்காகவா பரந்தாமன் வரதனை விட்டுக் கொடுத்து பரமன் பெற்றுக் கொண்டான்? எல்லாம் காரணமாகத்தான். நாளைக்கு வரதனோ அம்பிக்கை தரித்த தாம்பூலத்தைப் பிரசாதமாகப் பெறப் போகிறான். அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, கதை, சிறுகதை, சிவண், நகைச்சுவை, விஷ்ணு. Bookmark the permalink.

2 Responses to என் கொங்கை நின் அன்பர்

  1. ஓஜஸ் says:

    ரொம்ப நாட்களுக்கு பிறகு நல்ல சிறுகதை படித்த அனுபவம், அதுவும் அரங்கனும் ஆனைக்காவும்… கதை பொருள் ! சபாஷ் !

  2. அருமை. பிரமாதமான நடை.கீழ்க்கண்ட பாரா சரியாகப் பிரிக்கப் படவில்லை எனத்தோன்றுகிறது.
    ”இந்தப் பிரபல வரதனுக்கும் வந்தது காதல். அதுவும் மோகனாவின் மேல். அழகுச் சிலைதான் அவள். இவனும் குறைந்தவன் அல்லன். நல்ல சிவப்பு. நேர்த்தியான வடிவம். இடுப்பில் கச்சம். திறந்த மார்பு. குறுக்கே பூணூல். தென்கலை நாமங்கள். அள்ளி முடிந்த குடுமி. சவரம் செய்த முகம். காதில் கடுக்கண். வேறென்ன வேண்டும். மோகனாவும் மயங்கி விட்டாள். திருவானைக்காவல்காரி மனதைக் காவல் காக்க மறந்து விட்டாள். வரதனும் கண்ணனடி பற்றிக் கள்வனாகி விட்டான்”

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s