அண்ணாமல அண்ணாமல

திருவண்ணாமலைக்குப் போகனும்னு ரொம்ப நாளாவே ஒரு விருப்பம். பெங்களூர்ல இருக்கும் போதே நெறைய கன்னட நண்பர்கள் கூப்பிடுவாங்க. நாந்தான் போக முடியாம ஏதோ ஒரு காரணத்துக்காக தட்டிக்கழிச்சிட்டு இருந்தேன்.

மூணு வாரத்துக்கு முன்னாடி நண்பர் மோகனும் நாகாவும் கூப்பிட்டப்ப கூட போக முடியாத நிலை. மோகன் கூடவே கார்ல போய்ட்டு கார்ல வந்திருக்கலாம். ஆனாலும் முடியாமை.

திடீர்னு நண்பன் ஒருவன் வீட்டுப் பக்கத்து மக்களோடு போறதாகவும் வரமுடியுமான்னும் கேட்டான். என்னடா திருவண்ணாமலைக்கு தொடர்ந்து அழைப்பு வருதேன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்.

மொத்தம் பத்து பேரு. எனக்குத் தெரிஞ்சது ரெண்டு பேருதான். மத்தவங்களையெல்லாம் அன்னைக்குதான் பழக்கம். அதெல்லாம் பாத்தா முடியுமா? கெளம்பியாச்சு.

திருவண்ணாமலை மக்களை ஈர்க்க நெறைய காரணங்கள் உண்டு. ஆனா எனக்கு ஒரே காரணந்தான். அது அருணகிரிநாதர் என்னும் திருப்புகழ் காரணம். “சும்மா இரு”ன்னு முருகன் அருணகிரிக்கு உபதேசித்த கோயில். முத்தைத் தரு பத்தித் திருநகைன்னு பாடிய கோயில். மயில் ஆடும்படிப் பாடி குழந்தை முருகனை பிரபுடதேவராஜாவுக்கும் மக்களுக்கும் தூணில் காட்டிய கோயில். உடலைச் சம்பந்தாண்டான் மண்ணில் புதைத்துவிட கிளியுருவில் கோபுரத்தில் இருந்து கந்தர் அநுபூதி பாடிய கோயில். இப்படி எனக்கு அந்தக் கோயில் போறதுக்கு ஆயிரம் காரணம்.

நண்பர் மோகனிடம் பேசி என்னென்ன இடங்கள் பாக்கலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். பயணம் கிட்டத்தட்ட அவர் போட்டுக் குடுத்த திட்டப்படிதான் நடந்ததுன்னு வெச்சுக்கோங்க.

போறவழியில் செஞ்சி இருக்கு. செஞ்சிக்கோட்டை பாத்துட்டுப் போகலாம்னு யாரோ சொல்ல.. போலாமே போலாமே ஒரே கூச்சல். அதுக்கு ஒரு நாள் தேவைப்படும்னு நான் சொன்னேன். செஞ்சி வழியா போறப்போ மலை மேல இருக்கும் கோட்டைகளைப் பாத்ததுந்தான் மக்களுக்கு விவரம் புரிஞ்சது. மலையேறனுமே. அதுக்கப்புறம் ஒருத்தரும் பேசலை.

நேரா கோயில் பக்கத்துல இருக்கும் ஓட்டல் அபிராமி. பின்னே.. போய்ச் சேரவே ஒரு மணிக்கு மேல ஆயிருச்சே. மோசம்னும் சொல்ல முடியாம சுமார்னும் சொல்ல முடியாம நடுத்தரமா இருந்தது. அங்க வந்து சாப்பிட உக்காந்திருந்த வெள்ளைக்காரங்களப் பாக்கவும் பாவமா இருந்தது. வத்தக்கொழம்ப ஊத்தித் தின்னா அவன் வயிறே வத்திப்போயிருமே. அவ்வளவு ஒறைப்பு அவன் முன்னப்பின்ன சாப்பிட்டிருப்பானா?!

DSC09631வயிற்றுக்கு ஈந்த பின்னாடி உண்ட சிரமம் பாக்காம ரமணாசிரமம் போனோம். அடேங்கப்பா.. அடேங்கப்பா… எவ்வளவு மயில்கள். ஜலஜலஜலஜலன்னு தோகைய விரிச்சிக்கிட்டு ஆண்மயில்களும் பெண்மயில்களும் கூட்டங்கூட்டமா. பாத்ததும் எனக்கே வீட்டுல ரெண்டு மயில் வளக்கனும்னு ஆசை வந்துருச்சு. என்னப் போல உள்ள அப்பார்ட்மெண்டனுக்கெல்லாம் இப்பிடியாப்பட்ட ஆச வரலாமா? அடக்கிக்கிட்டேன்.

உள்ள நெறைய அமைதி. அமைதி. அமைதி. ரமணரோட சமாதி, வாழ்ந்த எடம், தவம் செய்றதுக்கு மக்கள் வந்து தங்குமிடம் (குறிப்பா வெளிநாட்டுக்காரங்க), சமையக்கட்டு, மருத்துவமனை, மாட்டுத் தொழுவம்னு நெறைய பாத்து ரசிச்சோம். அங்கிருந்து மலைக்கு மேல கந்தாசிரமம் போற வழியிருக்கு. அதுக்கே ஒரு நாள் வேணுமாம். இருக்குற நேரத்துல கந்தாசிரமத்துக்குப் போறது சிரமம். அதுனால அடுத்து வேன்லயே கிரிவலம் செஞ்சோம். நமக்குப் புண்ணியமோ டிரைவருக்குப் புண்ணியமோ வேனுக்குப் புண்ணியமோ! ஆனாலும் கிரிவலம் போற வழி எப்படியிருக்கும்னு பாத்துக்கிட்டோம்.

DSC09747மணி மூணு மூணரை இருக்கும். நேரா கோயிலுக்குப் போனோம். ராஜகோபுரம் பெருசா எடுத்துக் கட்டியிருக்காங்க. வெளிநாட்டுக்காரங்கள்ளாம் கைடு புக்கு வெச்சிக்கிட்டு ஒவ்வொன்னா ரசிச்சிக்கிட்டிருந்தாங்க. கோயிலுக்கு முன்னாடி குப்பையும் கடையும் அடைசலுமா இருந்தது. கடைகளை விரட்டாம ஏதாச்சும் செய்யலாம்.

கோயிலுக்குள்ள போனா முருகன் அருணகிரிக்குக் காட்சி கொடுத்த எடம்னு ஒருத்தர் சொன்னாரு. அவருக்குத் தெரிஞ்சவங்க கோயில்ல இருக்காங்களாம். அதுனால சாமியப் பாக்க வசதி செஞ்சிருந்தாரு.

முருகன் அருணகிரிக்குக் காட்சி கொடுத்த எடம்னு சொன்னது கம்பத்து இளையனார் கோயில். ஆனா அந்தப் பேரே அங்க இல்ல. சம்பந்தாண்டான் சவாலை ஏற்று குழந்தை வடிவில் மயில் மீது முருகனை அருணகிரிநாதர் வரவழைச்ச எடம் அது. தூணை உடைச்சிக்கிட்டு முருகன் வந்ததால அந்த எடத்துக்கு கம்பத்து இளையனார் கோயில்னு பேரு. ஆனா கோயில்ல சொல்ற விளக்கம் வேற. ம்ம்ம்.. ஒருவேள எனக்குதான் தெரியலை போல.

அடுத்தது கோபுரத்து இளையனார் சன்னதி. இந்தக் கோபுரத்துல இருந்துதான் அருணகிரி குதிச்சாரு. அவரை முருகன் காப்பாத்தி சும்மா இருன்னு உபதேசிச்ச இடம். ஆனா அந்தக் கோயில் பூட்டப்பட்டு ஆளரவம் இல்லாம இருக்கு. நான் மொதல்ல உள்ள போக மக்கள் உள்ள வந்து பூட்டியிருந்த கருவறைக்குள்ள முருகனைக் கும்பிட்டாங்க. இங்கதான் உண்மையிலேயே அருணகிரிக்கு முருகன் அருள் செய்த இடம். சும்மா இருன்னு முருகன் வாய் திறந்து சொன்ன இடம். அது நிலைக்கனும்னு தானோ என்னவோ கோபுரத்து இளைனார் கோயில் அமைதியா தியானம் செய்ய ஏதுவா இருக்கு. சரி. முருகனோட விருப்பம்.

DSC09781அடுத்து பாத்தது கிளிக்கோபுரம். கிளி வடிவத்தில் இருந்து அருணகிரிநாதர் கந்தரநுபூதி பாடிய இடம். அப்படியே கோயிலுக்குள்ள போனா அண்ணாமலையார் கோயில். தெரிஞ்சவரு கூட்டிப் போனதால சிறப்பு வழியில் நேரா அண்ணாமலையார் கிட்டக்கயே போயாச்சு. ஒரே கதகதப்பு. வேர்த்து ஊத்துது. நல்லா அலங்காரத்தோட அண்ணாமலையைப் பாத்துட்டு கோயிலச் சுத்தி வந்தோம்.

கோயிலைச் சுத்தி வந்து அம்பாளுக்கும் வணக்கம் போட்டோம். அம்பாள் சன்னதி வாசல்ல நவக்கிரகங்களும் இருக்கு. எட்டு நெய் விளக்குகளும் ஒரு எள்ளு விளக்கும் பத்து ரூபாயாம். வாங்கி ஏத்துனேன். அப்படியே கோயிலைச் சுத்தி வந்தோம். கேமரா கைல இருக்குறப்போ போட்டோ எடுக்காம இருக்க முடியுமா? அதுவுந்தான்.

பொதுவா கோயிலுக்குள்ள வெளிநாட்டுக்காரங்கள விட மாட்டாங்க. வேறு மதத்தினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்னு மடத்தனமா எழுதி வெச்சிருப்பாங்க. மனுசனுக்குதானே மதம். கடவுளுக்குமா மதம். ஆனா திருவண்ணாமலையில் வெள்ளக்காரங்களும் கோயிலுக்குள்ள போய் கும்பிடுறதப் பாத்தேன். இதை மனதாரப் பாராட்டுறேன். ஆயிரம் காரணம் சொல்லுங்க… கடவுளுக்குத் தீட்டுங்குறதெல்லாம் நெருப்பு எரிஞ்சு போயிரும்னு சொல்ற மாதிரி அபத்தமாதான் தோணுது எனக்கு. ஆண்டவன் எல்லாருக்கும் பொது. மதவாதிகளிடமிருந்து உலகத்தக் கடவுள்தான் காப்பாத்தனும்.

அப்படியே வெளிச் சுற்றுல சுத்துனா பசுத்தொழுவம் இருக்கு. பக்கத்துலயே ஒரு பொண்ணு அகத்திக்கீரைக்கட்டு வெச்சிக்கிட்டிருக்கா. ஒரு கட்டு பத்து ரூவா. வாங்கிப் பசுவுக்குக் குடுக்கலாம். புண்ணியம் வரும்னு நான் யோசிக்கலை. ஆனாலும் சின்ன வயசுல எங்கூர்ல எங்க வீட்டு மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் நானே அகத்திக்கட்டு கட்டியிருக்கேன். Divine. அந்த ஆசையில் வாங்கி பசுமாடுகளுக்குக் குடுத்தேன்.

அந்த எடத்துக்குப் பக்கத்துல இடைக்காட்டுச் சித்தர் வணங்கிய சிவலிங்கம் கோயில் மதிற்சுவருக்குள்ள இருக்கு. ஒருத்தர் கஷ்டப்பட்டு உக்காந்து கும்பிடலாம். ஒருவழியா நெளிச்சு வளைச்சு உக்காந்து கும்புட்டு வந்தாச்சு.

வெளிய வந்ததும் கூட வந்த ஒருத்தரு ஜீவன்முக்தி வாங்கனும்னாரு. அது ஜீவன் பீமா ஜீவன் தாரா மாதிரி எல்.ஐ.சி பாலியான்னு நானும் தெரியாமக் கேட்டுட்டேன். அது ஒரு புத்தகமாம்.
திருவண்ணாமலையில் கிடைக்கும்னு சொல்லி அவர வாங்கிட்டு வரச் சொல்லியிருக்காரு அவரோட நண்பரு.

ஓட்டல் அபிராமி பக்கத்துல ஒரு புத்தகக்கடைய பாத்த ஞாபகம் இருந்துச்சு. அங்க கெடச்சாலும் கெடைக்கும்னு நெனச்சு அவரைக் கூட்டிட்டுப் போனேன். ஜீவன்முக்தி புத்தகம் இருக்கான்னு கடைக்காரரைக் கேட்டேன். கடைக்காரரு ஏளனமாப் பாத்தாரு. ”அதெல்லாம் விக்க மாட்டோம். நித்தியானந்தா ஆசிரமத்துல போய்க் கேளுங்கன்னு” சொன்னாரு. ஒரே அவமானமாப் போச்சு. இந்த நித்தியானந்தா மென்மேலும் வளரனும் ஜெயேந்திரர் வேற சமீபத்துல ஆசி குடுத்துருக்காரு. சாமியாரின் கால் சாமியார் அறியும்னு நெனச்சுக்க வேண்டியதுதான்.

அப்புறம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு ஏழு மணிக்கு மேல கெளம்புனோம். சென்னையில் கோட்டூர்புரம் சிக்னல்ல எறங்குறப்போ மணி பதினொன்னரை. மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. மொபைல் பர்சு எல்லாத்தையும் கொண்டு போன பைக்குள்ள போட்டுக்கிட்டு நனைஞ்சுக்கிட்டே வீட்டுக்கு வந்தாச்சு.

இப்படியாக திருவண்ணாமலை பயணம் சிறப்பாக இனிதே நடந்தேறியது.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அம்மன், இறை, சிவண், முருகன். Bookmark the permalink.

10 Responses to அண்ணாமல அண்ணாமல

  1. anonymous says:

    முதல்வரவு நல்வரவு!

    எங்கள் அருணகிரி (எ) “அண்ணா” மலையூரில்…எத்தனையோ முறை, மனம் ஊன்றி இருப்பீர்கள்; இன்று, காலும் ஊன்றியமைக்கு நல்வரவு;

    இம்முறை, அருணகிரி-க்கு ஒரே நாளில் அவசரமாய்ச் சென்று வந்தாலும்,

    இன்னொரு நாள்.. ஏக போகமாய், நீயும் நானுமாய் -ன்னு திருப்புகழில் வருவது போல் சென்று வரவேணும்;

    உடலின் கால் கீழ் உலாவ, மலையின் கால் மேல் உலாவ,
    கண் உலாவ, கருத்து உலாவ,
    திருப்புகழில் வரும் திருவருணைக் குறிப்பெல்லாம்,
    கண்டு கண்டு, உண்டு உண்டு, நிலத்தில் கால் பரவி, இயற்கை நடை நடந்து வாருங்கள்!
    ————

    * திருப்புகழ் துவங்கிய இடமும் இதுவே = முத்தைத் தரு பத்தித் திருநகை
    * திருப்புகழ் முடிந்த இடமும் இதுவே = ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

    அதிகமான திருப்புகழ்ப் பாடல்களைப் பெற்ற இடம்! அவரின் சொந்த இடம், கந்த இடம்!
    அவர் மனத்துக்கு இனிய பழனி, செந்தூருக்கு அடுத்து, அண்ணாமலைப் பதியே அதிகத் திருப்புகழ்கள் கொண்டது;

  2. anonymous says:

    அருணா+அசலம் -ன்னு வடமொழியில் வழங்கினாலும்…
    “அண்ணா” மலை என்பதே ஈசன் உகந்த தீந்தமிழ்ப் பெயர்;

    “அண்ணா” மலை = அது எந்த அண்ணாவோட மலை?

    அண்ணாந்து பார், அண்ணாவி, அண்ணம் -ன்னு எத்தனையோ சொல்லு இருக்கு; அத்தனைக்கும் ஒரே வேர்ச் சொல்லு தான்;

    அண்மை = அருகே
    * அண்ணுதல் = அருகே செல்லுதல்
    * அண்ணாதல் = அருகே செல்ல முடியாது

    தேவரும் மூவரும் கூட அருகே செல்ல முடியாத மலை
    = “அண்ணா” மலை
    அன்பினால் மட்டுமே அணுக வல்ல மலை
    = அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!

    இதை மாணிக்கவாசகரும் சொல்லுவாரு: புறத்தார்க்குச் சேயோன் (தூரமானவன்); அன்புடையார்க்கு அண்ணிப்பான் (அண்மையானவன்)

    அருகே செல்ல முடியாது, உயரமாக இருப்பதால் = அண்ணாந்து பார் என்கிறோம்;
    அப்படியான மலை = “அண்ணா” மலை!
    அண்ணாத மலை, ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகி, “அண்ணா” மலை என நின்றது!

    அப்படியான பெருமை மிக்கவர் = “அண்ணா” மலையார்;
    அருணாசலேஸ்வரர் என்பதை விட, அண்ணாமலையார் என்பதே தமிழ் வழக்கு, எளிய மக்களின் வழக்கு! அண்ணாமலைக்கு அரோகரா!

    • மதிப்பிற்குரிய பெயரிலி,
      பதிவில் இருக்கும் விதயங்களை விட உங்கள் பின்னூட்டுகளில் இருக்கும் விதயங்கள் நன்றாகவும், விதயச் செறிவுடனும் இருக்கின்றன.

      நன்றி..

  3. anonymous says:

    //எனக்கே வீட்டுல ரெண்டு மயில் வளக்கனும்னு ஆசை வந்துருச்சு//

    🙂
    நல்ல ஆசை!

    மயிலு வளர்க்குறது easy தான்;
    ஆனா கோழி போல வீட்டுக்குள்ள அடைச்சி வளக்க முடியாது;

    மயிலுக்கு, ரொம்ப உலாத்தணும்; பறக்க முடியாததால் அடிக்கடித் தாவும்; very active & kuRumbu pudicha paRavai – like Him:)
    சிம்லா ஸ்பெஷல் பட Shooting-ல, அதை ரொம்ப புடிச்சி அடக்குனதால, உலக நாயகன் கமலஹாசனையே கொத்திருச்சி:)

    நல்லாத் திங்கும்; பூச்சி பொட்டெல்லாம் அதுவே புடிச்சிக்கும்;
    தினை, வரகு -ன்னு ஊட்டி விடலாம்; ஊட்டி விட்டுருக்கேன்;
    லபக் லபக் -ன்னு முழுங்கும் போது கையில் குறுகுறு-ன்னு இருக்கும்:)

    புன மயில்
    = அதுங்க உலாத்த புனம்/ தோட்டந் தொரவு வேணும்;
    = அதுக்கு மொதல்ல ஒரு தோட்டம் வாங்கணும்; சீக்கிரம் வாங்கிடுங்க:)
    ————-

    கனவுக் கவிஞன், பாரதியின் பாட்டு தான் நினைவுக்கு வருது:

    காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
    கட்டித் தரவேணும் – அங்கு,
    கேணி அருகினிலே – தென்னை மரம்
    கீற்றும் இளநீரும் – அங்கு

    கத்துங் குயிலோசை – சற்றே வந்து
    காதில் பட வேணும்
    We can change this line to…அகவும் மயிலோசை-அருகே வந்து,காதில் பட வேணும்:)

    தோட்டம் வாங்கினா, கந்த கோட்டம் ஆக்கீறலாம்:)

    பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
    பத்தினிப் பெண் வேணும் – எங்கள்
    கூட்டுக் களியினிலே – கவிதைகள்
    கொண்டு தர வேணும்!

  4. anonymous says:

    பதிவைப் பலமுறை வாசித்து நினைந்-தேன்; நனைந்-தேன்

    * கம்பத்து இளையனார் = பொதுவிலே, மானம் போகாமல் காத்த முருகன்
    * கோபுரத்து இளையனார் = தற்கொலையில், உயிர் போகாமல் காத்த முருகன்

    —–

    பொதுவா, பல கோயில்களிலும், விநாயகர் தான் மொதல்ல இருப்பாரு; “முழு முதற் கடவுள்” -ன்னு சொல்லுவாய்ங்க;
    ஆனா அண்ணாமலையில் முருகன் தான் “முதல்”:)

    கோயிலுக்குள் நுழையும் இராசகோபுரத்தில், முதலில் வந்து விடுவது முருகன் சந்நிதியே!
    “பிள்ளையாரை” விடப் “பிள்ளை ஆறுக்கே” முதல் வணக்கம்:)
    —–

    * தோழி, கோதையின் இடக் கையில் = கிளி
    * அன்னை, மீனாட்சியின் வலக் கையில் = கிளி
    இந்த இரண்டு பெண்களுக்கும் போட்டியா, என் முருகவன் கையிலும் கிளி:)

    அருணகிரியே, கிளியாய் அமர்ந்து, தமிழ்க் கடவுளின் காதிலே, நாளும் தமிழ் ஓதுவதாக வழக்கு;
    —–

    எத்தனையோ சுகித்த உடம்பு = அருணகிரி உடம்பு
    ஆனா, இறுதியில், தன் உடம்பு, தனக்கே கிடைக்காமல் செய்த சதியால், கிளியாக தங்கி, அநுபூதி பாடியதாகச் சொல்வதுண்டு;

    * முதலில் பாடத் துவங்கியது = முத்தைத் தரு = திருப்புகழ்
    * கடைசியில் பாடி நிறைந்தது = சிவ லோகமே = திருவகுப்பு

    திருப்புகழில் சந்தம் கொஞ்சும்; ஊர் ஊராகச் சென்று பாடின அனுபவம் தெரியும்;
    பழசை மறக்க மாட்டாது விலை மாதரைத் திட்டும் கோபம் கூடப் புரியும்;

    ஆனா அநுபூதியிலோ, திருவகுப்பிலோ, இந்தக் கோபம் ஒன்றுமே இராது!
    ஏன்-ன்னா, உடம்பு வாசமே இல்லையே;
    “கிளியாய் இருந்து பாடினார்” என்பதே கதை/வழக்கு!

    திருவண்ணாமலைக்கு எத்தனையோ மகான்கள் – முன்னும் பின்னும் – பெருமை தேடித் தந்துள்ளார்கள்;
    ஆனால் “அருணகிரி” என்கிற திருவண்ணாமலை ஊரின் பேரைத், தன் பெயரால் என்றும் வரலாற்றில் இருத்தி விட்டது
    = அருணகிரி நாதன் (எ) இந்த ஓசை முனியே!

    வேலா பாலா சீலா காரா
    வேளே வேடக் – கொடிகோவே
    ஞாலா மேலா வேதா அண்ணா
    மலையில் சோதிப் பெருமாளே!

  5. anonymous says:

    பதிவில் ஒரேயொரு ஏமாற்றம்:(

    உண்ணாமுலை உண்ணாமுலை -ன்னு தேடினேன்;
    காணலை;
    அவளைப் பத்திக் கொஞ்சூண்டு சொல்லிட அனுமதியுங்கள்; மனசு கிடந்து அடிச்சிக்குது;

    “முலை” -ன்னாலே ஏதோ பலானது-ன்னு சிலரு நெனச்சிக்குவாங்க; இலக்கியக் கேலிகளும் செய்வாங்க!
    ஆனா, இந்தத் திருவண்ணாமலையில் நிக்குற அம்மா பேரு
    = “உண்ணா முலை” அம்மன்!

    அது என்ன உண்ணா முலை?
    ————-

    பொதுவா, வைணவ நெறியில், “முலை” -ன்னு பேர் தாங்கி நிக்கும் தாயார் கோயில்களே இல்லை!
    ஆனா, சைவ நெறியில், இந்த “முலை” -ன்னு பேருடைய அம்மன் கோயில்கள், பல உண்டு!

    * போகம் ஆர்த்த பூண் முலையாள் (பிராண குஜாம்பாள்)
    * மலை முலை நாயகி (கிரி குஜாம்பாள்)
    * பெரு முலை நாயகி (பிரகத் சுந்தர குஜாம்பாள்)
    இப்படி, நிறைய…

    திருவண்ணாமலையில் = உண்ணா முலை அம்மன் (அபீத குஜாம்பாள்)
    எங்க ஊரில்/ வீட்டில் = சிறு முலை அம்மன் (பால குஜாம்பாள்)

    எங்க அத்தைக்குப் பேரு பால குஜாம்பாள் தான்;
    (பாலு -ன்னு கூப்புடுவாங்க); அட, கிராமத்தில் இப்படியொரு பேரா?

    திருவண்ணாமலை கிட்டக்க, வாழைப் பந்தல் கிராமத்தில், இப்பிடியொரு பேரு வைக்கக் காரணம்
    = வீட்டில், காதலித்து மாண்டு போன கன்னிப் பொண்ணு; ரொம்ப மனசு துடிச்சியே போயிருக்கா போல; உயிர் போகும் போது பால் சுரந்துச்சாம்;

    அப்போ திருவண்ணாமலைக் கோயில் அர்ச்சகரு, “பால குஜாம்பாள்” -ன்னு சொல்லி இருக்காரு போல; அதே நெலைச்சிருச்சி;
    அவ பேரை வைக்கும் வழக்கம் தொடருது; அதான் அத்தைக்கும் வச்சிருக்காங்க!

    இன்னிக்கும், அம்மா வைக்கும் படையலில், புதுப் புடைவையைப் பொண்ணு போலச் சுற்றி, காதோலை/கருகமணி மாட்டி, பால் தெளிச்சி…
    தாயே பாலு, பக்கத் துணையிருந்து இவனைக் காப்பாத்தும்மா -ன்னு வாய் விட்டுச் சொல்லும் போது, என்னமோ போல இருக்கும்…

    • anonymous says:

      எதுக்கு இதைச் சொன்னேன்-ன்னா, அந்த “உண்ணா முலை”!

      குழந்தை பெற்ற பெண்களுக்கு இது தெரிஞ்சிருக்கும்: பால் குடுக்கலீன்னா, கட்டிக்கும்; வலி உயிர் போகும்! இளக்கி எடுக்கணும்;

      அதே நெலமை, திருவண்ணாமலையில் உள்ள அம்மனுக்கும் (அம்பாள்-ன்னு சொல்ல மனசு வரல; அம்மா/அம்மன் -ன்னே சொல்லிக்கறேன்)
      ————-

      முருகன் பிறந்தும், அவள் முலையில் உண்ணவில்லை!
      வேறெங்கோ கொண்டு சேர்க்கப்பட்டு, வளர்கிறான்;
      ஒருத்தி மகனாய்ப் பிறந்து, அறுவர் மகனாய் ஒளிந்து வளர??

      இது ஒரு ஆண்-பெண் உளவியல் (மனோ தத்துவம்); சமயக் கண்ணோடு பார்க்க வேணாம்-ன்னு மனசாரக் கேட்டுக்கறேன்;

      அம்மாவின் உதவி இல்லாமல், அப்பாவின் ஆற்றலால் மட்டுமே தோன்றிய பிள்ளை;
      இடம் மாறி வளருது; இவளுக்குக் கிடந்து அடிச்சிக்குதே; இவளும் அப்போ மலை நாட்டுச் சின்னப் பொண்ணு தானே!

      அவரை அடையத் தானே தவமா தவம் இருக்குறா?
      அப்போது, உலக அன்னையான அவளுக்கும், பால் சுரந்து முட்டுது!

      ஆனா, உண்ண வேண்டியவன் அருகில் இல்லையே!
      கன்றும் உணாது, கலத்தினும் படாது, நல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா ஆங்கு -ன்னு சங்கத் தமிழ் வரிகள் ஞாபகம் வருதா?
      அது காதலனுக்கு; இது மகனுக்கு!

      = “உண்ணா முலை” அம்மன் ஆகின்றாள்!
      ————-

      அவரையே மணவாளராக அடைய, அவள் பட்ட பாடு! பட்ட வலிகள்…
      அவரைச் சொல்லியும் குத்தமில்லை; அவரோ யோகி;
      ஆனா அவரு தான், தன்னோட வாழ்க்கை -ன்னு உறுதியா நின்னுட்டாளே; அப்படீன்னா படத் தானே வேணும்?

      அப்போ கூட, அவரைக் கலைக்கல!
      ஆனா, அவரே-ன்னு பூசையா/பழியாக் கெடக்குறா!

      இப்படிப் பட்டவ தான், கடேசியில் அவரின் உயிரில் உயிராவும் ஆனாள்; அவரு உடம்பிலே பாதியும் ஆனாள்!
      = பாகம் பிரியாள் ; உமையொரு பாகன்

      இப்படி ஆன தலம் = திருவண்ணாமலை
      (அர்த்த நாரீஸ்வரர் சன்னிதி உள்ளார உண்டு; பார்க்கலாம்)

      இன்னிக்கும், எங்க திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மாவைப் பாத்தீங்க-ன்னா தெரியும்; ரொம்பக் குட்டியாத் தான் இருப்பா; (see picture)
      சின்னப் பொண்ணு; பால குஜாம்பாள்;
      நாலு கையெல்லாம் கிடையாது; மனுசப் பொண்ணாய், அவரையே நினைச்சி, வாழ்க்கைக்குப் பற்றிக் கொண்ட பொண்ணு;

      = அவ தான் “உண்ணா முலை” அம்மன் (எ) அபிதா!

      * ஆனைக்காவிலே ஒரு அகிலா!
      * அண்ணாமலையிலே ஒரு அபிதா!

    • anonymous says:

      அதிகம் பேசியமைக்கு மன்னிக்க;
      ரொம்ப நாள் தமிழே பேசாது இருந்து, இப்போ எங்க ஊரு-ங்கிறதால, ஏதோ பேசிட்டேன்;

      பாலாறு/ செய்யாற்றங் கரையினிலே,
      வாழை மரங்களின் கீழே, பந்தல் அமைத்து, அவரையே கற்பனையாத் தழுவிக் கொண்ட பின்…
      பாகம் வாங்க, வாழைப் பந்தலை நீங்கி, அண்ணா மலையை அடைந்த உண்ணா முலை!

      * அவரு = அண்ணாத மலை!
      ஆனா, “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை”
      * இவள் = உண்ணா முலை!
      ———

      உண்ணாத எனக்கும், அத்தை சோறு ஊட்டிய இடம், இந்த அண்ணாமலையார் கோயில்;
      சிற்பம் சிற்பமாக் காட்டினாலும், சோறு மட்டும் இறங்காது; சோணிக் குழந்தை;

      ஆனா, முருகன் சந்நிதியில், “அதோ முருகனைப் பாரு-ன்னா மட்டும், வாயைப் பொளப்பான்;
      சோற்றை அப்போ உள்ளே தள்ளினாத் தான் உண்டு”-ன்னு, இன்னிக்கும் கேலி பேசுவாங்க அத்தை-மாமா;

      அப்படி வளர்ந்த பிள்ளை,
      இப்படிச் சீரழிஞ்சிப் போனாலும், உன் சிந்தையில் வச்சிக்கோ-ம்மா!

      “உண்ணா முலை” உமையாளொடும்
      உடன் ஆகிய ஒருவன்;
      பெண் ஆகிய பெருமான் மலை
      திருமா மணி திகழ,

      மண் ஆர்ந்தன அருவித் திரள்
      மழலை முழவு அதிரும்,
      “அண்ணா மலை” தொழுவார் வினை
      வழுவா வண்ணம் அறுமே!!

      (வெய்யோன் ஒளி தன் மேனியின்
      விரி சோதியின் மறைய…
      கம்பன் கவிக்கும் முற்பட்ட அதே சந்தக் கவி, தேவார நட்டபாடை பண்)

      • பெயரிலி,
        பெண்ஆகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
        சந்த நயத்தோடு இந்தப் பாடலை அம்மா பாடுவதைப் பலமுறை கேட்டது இப்போது நடப்பது போல இருக்கிறது இந்த வரிகளைப் படிக்கும் போது..
        நினைவூட்டலுக்கு நன்றி..

    • திருவண்ணாமலைக் கோயிலில், சிற்பம் சிற்பமாக் காட்டிச், முருகனைக் காட்டிக் காட்டிச், சோறூட்டிய அந்த வாழைப்பந்தல் அத்தை..

      இன்னியோடு போயிருச்சி:(

      “உன்னடியார் உயிரை வவ்வேல்”
      என்று அடற் கூற்று உதைத்த

      நின் அடி வழி படுவான்
      பூவொடு நீர் சுமக்கும்

      நின் மகள் இடர் களையாய்
      நெடுங் களம் மேயவனே!

      தெரியேன் பாலகனாய்
      பல தீமைகள் செய்து விட்டேன்

      பெரியேன் ஆயின் பின்
      பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்

      கரிசேர் மா பொழில் சூழ்
      கன மாமலை வேங்கடவா

      அவளே வந்தடைந்தாள்
      ஆட்கொண்டு அருளே!

Leave a reply to Kannabiran Ravi Shankar (KRS) Cancel reply