தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா

தங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது.

சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964.

ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.

balamuralikrishnaதெலுங்குத் திரைப்படத்தில் சில பாடல்களை அதற்கு முன்பு பாடியிருந்தாலும் தமிழ்த்திரையில் தன்னுடைய நண்பரை இப்படியாக ஸ்ரீதர் இயக்கத்தில் தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.

அதே ஆண்டில் அவரைத் தெலுங்கில் கர்ணன் திரைப்படம் ஒலிமாற்றம் செய்யப்பட்ட போது “நீவு நேனு வலசிதிமி” என்று இரவும் நிலவும் வளரட்டுமே என்ற பாடலைப் பாட வைத்தார்.

கலைக்கோயில் வெளிவந்து சரியாக ஓராண்டில் பட்டிதொட்டியொங்கும் இன்றும் கேட்கும் பாடலொன்றைப் பாடினார் பாலமுரளிகிருஷ்ணா. தமிழ்த்திரையிசைப் பங்களிப்பில் அவரது உச்சமான பங்களிப்பாக இந்தப் பாடலையே கருதலாம்.

அந்தப் பாடல்தான் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற “ஒரு நாள் போதுமா” என்ற அட்டகாசமான பாடல். இந்தப் பாடல் இவருக்குக் கிடைத்ததும் ஒரு அதிசயமான முறையில்தான். முதலில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜவை வைத்துப் பாடவைக்கவேண்டும் என்று விரும்பினாராம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். ஆனால் இந்தப் பாடல் தோல்விப் பாடல் என்பதால் சீர்காழி பாட மறுத்துவிட்டாராம்.

இந்தப் பாடலை விட இதைத் தோல்வியடையச் செய்யும் பாடலான “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலே மக்களிடத்தில் நன்றாகப் போகும் சீர்காழி தவறாக நினைத்ததுதான் பாலமுரளிகிருஷ்ணாவை மறுபடியும் திரைப்படத்துக்கு அழைத்து வந்தது. அதுவும் நல்லதுதான். ஒரு பாலனுக்கு(பாலையா) இன்னொரு பாலன்(பாலமுரளிகிருஷ்ணா) பாடியது மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது. “ஒரு நாள் போதுமா” மற்றும் “பாட்டும் நானே” ஆகிய இரண்டு பாடல்களுமே மக்களிடம் சிறப்பாக வெற்றி பெற்றன.

அடுத்து வந்தது பக்த பிரகலாதா திரைப்படம். ஏவிஎம் தயாரிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு 1967ல் வெளிவந்தது பக்தபிரகலாதா திரைப்படம். இதில் நாரதர் வேடத்தில் நடித்தது பாலமுரளிகிருஷ்ணாதான். தன்னுடைய நடிப்புக்கே தன்னுடைய குரலை முதன்முதலில் கொடுத்தார் பாலமுரளிகிருஷ்ணா.

இப்படி எதாவது ஒரு வகையில் சாஸ்திரிய இசை தொடர்பான பாடல்களையே பாடிக் கொண்டிருந்தவரை 1977ல் ஒரு குத்துப்பாட்டு பாட வைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். அதுவும் யாருக்கு? மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு. நவரத்தினம் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து “குருவிக்கார மச்சானே” என்று குறவன் குறத்தி பாடலைப் பாடினார். இதே படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து Sound of Music திரைப்படத்தில் வரும் High on the hill பாடலைப் பாடினார்.

ஆனால் அதே ஆண்டு இன்னொரு இனிய பாடல் அவரது குரலில் ஓரு மிகப்புதிய இசையமைப்பில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம். இளையராஜாவின் வரவு பாலமுரளிகிருஷ்ணாவை கவிக்குயில் திரைப்படத்துக்காக சின்னக் கண்ணனை அழைக்க வைத்தது.

சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் தமிழில் வந்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

அடுத்து இரண்டே ஆண்டுகளில் இன்னுமொரு அருமையான பாடல் அவர் குரலில் வெளிவந்தது. ஆம். நூல்வேலி திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் பாடிய “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” பாடல்தான் அது. இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாடியிருக்க முடியாது. கேட்கும் போதெல்லாம் இதயத்தை வருடும் இந்தப் பாடலைப் பாடிப் பெருமைப்படுத்திய பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இந்த நொடியில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அப்படிப் பாட வைத்த மெல்லிசை மன்னரோடு சேர்ந்து பாடும் வாய்ப்பும் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. அதுவும் இசைஞானி இளையராஜா இசையில். 1982ல் தாய்மூகாம்பிகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னரோடும் சீர்காழி கோவிந்தராஜனோடும் சேர்ந்து “தாயே மூகாம்பிகே” என்ற பாடலைப் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.

காலங்கள் மாறின. காட்சிகள் மாறின. ஆனாலும் பசங்க வடிவத்தில் மீண்டும் அவரது குரல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2009ல் திரையில் ஒலித்தது. ”அன்பாலே அழகாகும் வீடு” என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு குடும்பத்தையே இன்பத்தில் ஆழ்த்தும் பாடல் அது. 2010ல் கதை என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலை பால் ஜெ இசையில் பாடினார்.

அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு அபூர்வமான ராகம் வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணாவைக் கேட்க அவர் மகதி-யை நினைவுபடுத்தினார். மூன்றே தந்திகளை உடைய நாரதனின் வீணைக்கு அந்தப் பெயர். அந்த ராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்ததுதான் “அதிசயராகம் ஆனந்தராகம்” பாடல். இது போல பாலமுரளிகிருஷ்ணாவின் தமிழ்த் திரைப்பயணம் இன்னும் தொடரட்டும்.

பதிவில் பேசப்பட்ட பாடல்களின் சுட்டி
தங்கரதம் வந்தது (கலைக்கோயில்) – http://youtu.be/2wWdF_kZhjA
ஒரு நாள் போதுமா (திருவிளையாடல்) – http://youtu.be/ppnzHXqT5Sg
ஆதி அந்தமும் நீயே (பக்தபிரகலாதா தெலுங்கில்) – http://youtu.be/G2KL_jxRmY8
குருவிக்கார மச்சானே (நவரத்தினம்) – http://youtu.be/M8HXMVmQEi8
High on hill (நவரத்தினம்) – http://youtu.be/P2vlpFLA0IA
சின்னக் கண்ணன் அழைக்கிறான் (கவிக்குயில்) – http://youtu.be/b_bwY89DXrQ
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (நூல்வேலி) – http://youtu.be/RPBTtUwNeWA
தாயே மூகாம்பிகே (தாய் மூகாம்பிகை) – http://youtu.be/sVVBuQM4eJU
அன்பாலே அழகான வீடு (பசங்க) – http://youtu.be/gaSPnCIFCWg
தீராத விளையாட்டு (கதை) – http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBPAJ0002&lang=en

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இசைஞானி, இசையரசி, இளையராஜா, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், பாலமுரளிகிருஷ்ணா, பி.சுசீலா, மெல்லிசைமன்னர், வாணிஜெயராம். Bookmark the permalink.

2 Responses to தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா

  1. மணிவேல் says:

    நன்றி. சிறப்பான தொகுப்பு!
    இன்னும் சில பாடல்கள்
    அவர்கள் – ராமனும் நீயே. http://www.youtube.com/watch?v=EGij9r7bxf4
    இசை பாடும் தென்றல் – ரகுவர நன்னு http://www.youtube.com/watch?v=nOmyz6CjACE
    கவிக்குயில் – ஆயிரம் கோடி http://www.youtube.com/watch?v=azKJXqaDppE
    திசை மாறிய பறவைகள் – அருட்ஜோதி தெய்வம் http://www.youtube.com/watch?v=rVIfdViWptk

  2. Pingback: தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா | Rammalar's Weblog

I am eager to hear what you want to say. Please say it. here. :)