பெண்ணைப் பெற்றவன்

பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன்.

இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேர்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழ வைத்துவிடும்.

சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புகுந்த வீட்டில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி வந்து காணவும் காணாள்! சரி! அவள்தான் இன்னொரு வீட்டின் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள்.

நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.

என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.

அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். கையில் பூக்களை திருமகள் வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.

சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.

நான் பாவி. இவளை நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவுக்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் ஏதோ பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறுகள் எல்லாம் அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?

பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு மத்யமாவதியில் “சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்” என்று அவள் பாடினால்……………பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்” பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.

“அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமையை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!”

பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.

“அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா நீ சொன்னபடி செய்கிறேனம்மா!”

இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.

“குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?”

கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.

“பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது” என்று பாடுகிறாள்.

“அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!”

அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாது அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.

கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.

ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். “சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்.”

உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!

அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம்தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.

ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் நல்ல நேரம். காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது.

நான் மட்டும் ஊர் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!

என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.

“மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?” எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.

சரி. மானத்தை விட்டுவிட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்துவிட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.

“பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன?
…….. பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய நீ, இந்த பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?

எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, மாலைகளுக்காக மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் சித்தத்தில் உன்னையே நினைக்கும் இந்த விஷ்ணுசித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?

உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!”

கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான்.

பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு! சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு! தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு! கோதை நாச்சியாரோடு! மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.

பி.கு – இந்தக் கதை 2005ல் மகரந்தம் என்னும் என்னுடைய வலைப்பூவில் நான் எழுதியது. ஒரு நாள் தூக்கத்தில் நடிகர் திலகம் வந்து இந்தக் கதையைச் சொல்ல, அதையே எழுதி இட்டேன்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, கதை, சிறுகதை, விஷ்ணு. Bookmark the permalink.

14 Responses to பெண்ணைப் பெற்றவன்

 1. kamala chandramani says:

  நல்லவேளை உங்க ரங்கமன்னாருக்கு அம்மா,அப்பா இல்லை.ஆண்டாள் கொடுத்து வைத்தவள்.

  • GiRa ஜிரா says:

   உண்மைதான் அம்மா. அப்படி இருந்திருந்தால் ஆழ்வாரின் பாடும் ஆண்டாளின் பாடும் பெரும்பாடாய்ப் போயிருக்கும்.

 2. கலங்க வைத்து விட்டீர்கள்… வேறு ஏதும் எழுத முடியவில்லை…

  • GiRa ஜிரா says:

   மிக்க நன்றி தனபாலன். உங்கள் கருத்து ஊக்கமளிக்கிறது.

 3. Excellent. Manam Uruhip Ponathu. Thank you.

  Nalina

  • GiRa ஜிரா says:

   பெண்குழந்தை வீட்டிலிருப்பவர்கள் அனைவருக்கும் கதையின் அடிநாதம் எளிதாகப் புரியுமென்று நினைக்கிறேன். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறவும் 🙂

 4. அதானே. எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் 🙂 மிக அருமை. குறிப்பாகப் பெண் குழந்தைகளின் பெருமைகளை அனுபவித்துச் சொல்லும் ஆரம்பப் பத்திகள் அமர்க்களம்! பெரியாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம். நன்றி தம்பீ.

  • GiRa ஜிரா says:

   ஏற்கனவே எழுதுனதுதான். பழைய நெனப்புடா பேராண்டி நினைப்புல எடுத்து இங்கயும் பதிச்சாச்சு 🙂
   ஆண்டாள் தமிழ் ஆண்டு வாழ்க 🙂

 5. Pandian says:

  மனதை அசைக்கும் கதை. நன்றி

  • GiRa ஜிரா says:

   நன்றி பாண்டியன். கதை மனதைத் தொட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. 🙂

 6. Uma Chelvan says:

  Excellent write up about girls and father- daughter bonding!!!. Keep up the Good work GiRa

 7. இந்த மாட்டுக்கார மன்னார் செஞ்ச வேலையைப் பார்த்தீங்கதானே!!!!

  எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத நடை ஜீரா.

  மீண்டும் அனுபவித்துப் படித்தேன்.

  நானும் பெண்ணைப் ‘பெற்றவள்’ ஆச்சே!

  • GiRa ஜிரா says:

   உங்க நடையெல்லாம் விட இது பெரிய நடையா? ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு அனுபவமா எழுதுறிங்களே.

   ஆனாலும் இந்த மாட்டுக்கார மன்னாரு இப்பிடி செஞ்சிருக்கக் கூடாதுதான். 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s