சமீபத்தில் ரசித்த பாடல் – பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

இன்று ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆயிரம் வசதிகள் வந்துவிட்டன. ஆனால் என்னுடைய சிறுவயதில் பேருந்தும் புகைவண்டிகளும் தான் பயணங்களுக்கு உதவின.

அப்படிப் பேருந்திலோ புகைவண்டியிலோ ஏறினால் ஜன்னலோரத்து இருக்கைக்கு எப்போதும் அடிதடி இருக்கும். அதிலும் குழந்தைகள் கத்திக் கதறி சண்டை போடுவதும் உண்டு. கடைசியில் முதுகில் இரண்டு அடிகளையும் வாங்கிக் கொண்டு ஜன்னலோரத்தில் உட்கார்ந்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றது.

வாழ்க்கையில் இப்படியான சின்னச் சின்ன சந்தோஷங்கள் எக்கச்சக்கமாக உண்டு. ஓடும் பேருந்தில் வீசும் காற்றினால் உண்டாகும் தூக்கம். அதே தூக்கம் பேருந்து நிற்கும் போது தடைப்படும். எந்த இடம். எந்த ஊர் என்று கண்கள் தேடும். இந்த மாதிரியான சந்தோஷங்களை வைத்துக் கொண்டு ஒரு கவிதை எழுதினால் எப்படியிருக்கும்?

பாடல் – பேருந்தில் நீ எனக்கு
படம் – பொறி
இசை – தினா
பாடல் – யுகபாரதி
பாடியவர்கள் – மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
பாடலில் சுட்டி – http://youtu.be/042ztDjEGB4

இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு கவிதை. காதல் பாட்டுதான். காதல் என்பது பேரின்பமல்லவா. அந்தப் பேரின்பம் எப்படியிக்கிறது என்று சொல்ல சிற்றின்பங்களை வரிசையாக அடுக்கியிருக்கிறார் கவிஞர் யுகபாரதி.

காலங்களில் அவள் வசந்தம் என்பது போன்ற கண்ணதாசத்தனமான அடுக்கல்தான். ஆனால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவாரசியம். ஒவ்வொரு வரிக்கும் சிறுவயதில் நடந்த ஏதோவொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின்வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிகூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக் கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் என்ற வரியைப் படிக்கையில் புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை. பள்ளியைப் பார்த்ததும் மழையிலே ஒதுங்குவோம் என்று வாலி எழுதியது நினைவுக்கு வருகிறது. பிள்ளைகளுக்கு எப்போதும் பள்ளிக்கூடம் என்பது சிறைக்கூடம்தான்.

பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பரிட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
இருக்கும் நாளிதழ் நீதானே

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை. அப்பப்பா! இதைப் பற்றி கதைகதையாக எழுதலாம். ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் பிடிக்கப் போனால் நம்மை இப்படித் திருப்பி அப்படித் திருப்பி… எப்படி உட்கார்ந்தாலும் நேராக இல்லையென்று பாடாத பாடு படுத்தி “ஸ்மைல் பிளீஸ்” என்று சொல்லும் போது புன்னகையே வராது. ஆனாலும் பொய்யாக வாயை இழுத்தாற்போல் புன்னகைப்போமே….”முடிஞ்சதுடா சாமி” என்று தோன்றிவிடும்.

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர். பொதுவாகவே மழைக்காலத்தில் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாது. மழையின் குளிர்ச்சியினால் ஒருவித இன்பச் சோம்பல் வந்துவிடும். அந்த நேரத்தில் சும்மாயிருக்காமல் எதையாவது கொறிக்கவும் சூடாகக் குடிக்கவும் ஆசை உண்டாகும். அப்படியான மழை நேரத்துத் தேனீரின் சுவை வேறெப்போதும் கிடைத்துவிடாது.

தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும் நாளிதழ் நீதானே என்று காதலியைச் சொல்வதும் அழகு. ஒவ்வொரு நாளும் நாளிதழ் புதிதுபுதிதாக வருவது போல ஒவ்வொரு நாளும் காதலி புத்தம் புதிதாய் இருக்கிறாளே என்று வியக்கிறான் கவிஞன். அருமை யுகபாரதி அருமை.

தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல் வரும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

இந்தப் பாடலைப் போன்று நல்ல பாடல்களைக் கேட்கும் போதுதான் தமிழ்த்திரையிசை இன்னும் உயிர்ப்போடு இருப்பது புரிகின்றது. கவிஞர் யுகபாரதிக்கு எனது நன்றி. இப்படி நிறைய எழுதுங்கள்.

இந்தப் பாடல் வரிகளை உங்களுக்குத் தரவேண்டும் என்று இணையத்தில் தேடிப் படித்த பொழுதில் எனக்குத் தோன்றியது இந்தப் பாடலின் கடைசி வரிகள்தான்.

எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை ரசிக்கும் வாசகன் நீதானே

ஆம். பாடல் வரிகளில் அத்தனை எழுத்துப்பிழைகள். ஒன்றிரண்டிருந்தால் கூடத் தேவலை. ஒவ்வொரு வரியிலும் எழுத்துப் பிழைகள். அதை அப்படியே குடுக்க மனமின்றி பாடலைக் கேட்டு வரிவரியாக எழுதினேன்.

கீழே சுட்டியைக் கொடுத்திருக்கிறேன். நீங்களும் படித்துப் பார்த்து எத்தனை எழுத்துப் பிழைகள் என்று சரியாகச் சொல்லுங்கள். 🙂

பாடல் வரியின் சுட்டி – http://www.thiraipaadal.com/Lyrics.asp?lang=ta&lyrid=6231&sngid=SNGDHI0102

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரையிசை. Bookmark the permalink.

5 Responses to சமீபத்தில் ரசித்த பாடல் – பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

 1. அருமையான பாடல்

 2. எனக்கும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் பிடிக்கும். எப்படி இந்த கவிஞனுக்கு நமக்குப் பிடிக்கும் ஒவ்வொரு விஷயமும் பிடித்திருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். இனிமையான இசை, சானல் மாற்றும்போது இந்தப் பாடல் வந்தால் ஸ்டாப் 🙂

  amas32

 3. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இனிமையான பாடல்…

  உங்கள் ரசனையையும் ரசித்தேன்…

  கீழே உள்ள தளத்தில் பிழைகள் இல்லாமல் பாடல் வரிகளுடன் காணொளியும் உண்டு – மறுபடியும் ரசிக்க :

  http://amarkkalam.blogspot.in/2008/11/blog-post.html

 4. இப்பெல்லாம் பாடல் காட்சி வந்தாலே ஃபாஸ்ட் ஃபார்வேர்டுதான். இனிமையும் இல்லை .இரைச்சலும் கூடுதல். காதுக்கும் மூளைக்கும் கேடுன்னு முடிவெடுத்து சில வருசங்களாச்சு.

  இப்ப நீங்க எழுதி இருப்பதைப் பார்த்தால் பாலைவனச்சோலை போல ஒன்னுரெண்டு நல்லதுகூட வருதுபோல இருக்கே!!!

 5. உங்க யூட்யூப் சுட்டி எங்கூருலே தடைசெய்யப்பட்டுருக்காம்!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s