தருமனும் தருமமும் – பாகம் 1

அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயர உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். பவழ நாற்காலிகள். அவற்றில் அமர்வதற்கு பட்டு மெத்தைகள்.

தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் அளவில்லாத பெருமிதம்.

பின்னே. நான்கு தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்க்கம் புக வேண்டும் என்று புறப்பட்டவன், தனியொருவனாக சொர்க்கம் போகிறான் அல்லவா, அந்தப் பெருமிதம்தான் அது.

இமயத்தில் நடந்து வந்த போது முதலில் திரவுபதி வீழ்ந்தாள். அடுத்து சகாதேவன். கொஞ்ச நேரத்திலேயே நகுலன். அந்தோ! அழகிய அருச்சுனனும் மாண்டான். பலசாலி பீமன் கூட பாவம். வீழ்ந்தான். கடைசி வரை மிஞ்சியவன் தருமனே.

அந்தத் தருமனை தன் மகனை உடலோடும் உயிரோடும் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான் தருமதேவதை. ஆகையால்தான் தருமதேவன் முகத்திலும் பெருமிதம்.

இலக்கியம் அவனுக்குத் தருமதேவன் என்று பெயர் தந்தாலும் பொதுமக்கள் அவனை எமன் என்றுதான் அழைக்கிறார்கள். அந்த எமதருமதேவன் சொர்க்கத்திலேயே மகனுடன் தங்க முடியாது. அவன் ஊரூராக உலகம் முழுதும் அலைந்து காலம் தவறாமல் காலன் பணியைச் செய்ய வேண்டும். கொஞ்சம் தவறினாலும் சர்வேசுவரன் விடமாட்டான்.

அதனால் தருமதேவன் மகனை சொர்க்கத்தில் இறக்கி விட்டுவிட்டு உடனே வேலைக்குத் திரும்ப வேண்டும்.

தருமனுடைய உள்ளத்தில் மகிழ்ச்சி எரிமலைக் குழம்பாகப் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது.

“சொர்க்கத்தில் தம்பியர் நால்வரையும் சந்திக்கலாம். குலமகள் திரவுபதையைச் சந்திக்கலாம். பெரிய பாட்டனார் பீஷ்மரையும், ஆசான் துரோணரையும், குலகுரு கிருபாச்சாரியரையும் சந்திக்கலாம். தாயார் குந்தியையும் கூடவே சிற்றன்னை மாதரியையும் சந்திக்கலாம்.

என்னதான் இருந்தாலும் பெரியப்பா திருதுராட்டினரையும் பெரியம்மா காந்தாரியையும் கண்டிப்பாக வணங்க வேண்டும். பீமன் என்று நினைத்து இரும்புத் தூணை நொறுக்கினாரே பெரியப்பா. அது போல என்னையும் நொறுக்கி விடாமல் இருக்க அவர் காலில் விழுந்து வணங்குவதே நல்லது.” இன்னும் உயிர்ப்பயம் தருமனை விடவில்லை.

பயம் மட்டுமா? ஆசைகளும்தான் தருமனை சொர்க்கத்திலும் விடவில்லை.

“பேசாமல் தம்பியரையும் தாயாரையும் திரவுபதையையும் கூட்டிக் கொண்டு ஒருபுறமாக சென்று ஒதுங்கி வாழ வேண்டும். பின்னே! மற்ற உறவினர்களைச் சந்திக்கையில் போரும் அதில் நடந்த கொலைகளும் அக்கிரமங்களும் தேவையில்லாமல் நினைவுக்கு வரும்.

நான் சொன்ன பொய்யால்தான் துரோணரும் வீழ்ந்தார். அந்தக் கடுப்பில் அவர் மன்னிக்க மாட்டார். அவரிடமிருந்தும் தள்ளியிருப்பதே நல்லது. துரியோதனாதிகள் நூற்றுவரும் உறுதியாக நரகத்தில் தான் இருப்பார்கள். ஆகையால் அவர்களால் பிரச்சனையில்லை.

மூத்தவர் கர்ணர் எங்கிருப்பார்? அவர் நமது அண்ணன். ஆகையால் அவரும் சொர்க்கத்தில்தான் இருக்க வேண்டும். தானவீரனுக்கு சொர்க்கம் உறுதி என்று சாத்திரங்கள் கூறுகின்றனவே!” புதிதாக இந்த அண்ணன் பாசம் வேறு.

“அண்ணன் நம்மோடு வருவாரா? ஒருவேளை துரியோதனனோடு இருக்க அவரும் நரகத்திற்குப் போயிருந்தால்?” தருமனின் மூளை கணக்குப் போட்டது. அந்தக் கணக்குக்கு விடையும் கண்டது.

“சரி. அம்மாவிடம் சொல்லிக் கூப்பிடலாம். அம்மாவின் மீது அண்ணனுக்குப் பாசமுண்டு. இல்லையென்றால் உண்மையைச் சொல்லக்கூடாது என்ற வரமும் வாங்கி, போர்க்களத்தில் தான் வீழ்ந்தால் தன்னை மடியில் தூக்கி வைத்துக் கதற வேண்டும் என்று கேட்டிருப்பாரா? அம்மாவை வைத்துத்தான் அண்ணனை வளைக்க வேண்டும்.”

இனிய நறுமணங்களின் கலவை தருமனின் நாசியில் ஏறியது. ”அட! இதென்ன நறுமணம்! மனதை மயக்குகிறதே. ஒரு வேளை சொர்க்கம் வந்து விட்டதோ?” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

ஆம். உண்மையிலேயே சொர்க்கம் வந்து விட்டது. சொர்க்கத்தில் வாசலில் புட்பக விமானமும் நின்றது. மகனை இறங்கச் சொன்னான் தருமதேவதை.

“மகனே, உடலோடு சொர்க்கம் புகுந்தான் என் மகன் என்ற பெருமை எனக்கு. ஆனால் இனியும் உன்னோடு நான் வரலாகாது. தரும விதிகளின் படி உன்னை இங்கு அழைத்து வரத்தான் கடமை. நீ இப்படியே சென்றால் உனக்கு வேண்டியவர்களையெல்லாம் காண்பாய். நான் வருகிறேன்.”

தந்தை புறப்பட்டதும் வந்தடைந்த இடத்தை நன்றாகக் கவனித்தான் தருமன். பச்சைப் பசேலென்று எங்கும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். கொடிகள். கொத்துக் கொத்தாய் மலர்கள் பூத்து நறுமணம் எங்கும் பரவியிருந்தது. கடும் வெயிலும் இல்லை. நடுக்கும் குளிரும் இல்லை. இதமான தட்பவெட்பம் சுகமாக இருந்தது.

ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு தண்ணீர் நிறைய ஓடினாலும் கரையைத் தாண்டவில்லை. சொர்கமல்லவா! வெள்ளம் வராது.

ஆற்றில் எல்லா உயிர்களும் ஒன்றாகவே தண்ணீர் குடித்தன. புலியும் பசுவும் கூடிக் குடித்தன. புலியும் பசுவைத் துரத்தவில்லை. பசுவும் மருளவில்லை.

வரிசையாக ஒழுங்குமுறையாக நடப்பட்டிருந்த மரங்களின் ஓரமாக பாதையொன்று சென்றது. அதில் தருமன் கால்கள் சென்றன. சொர்க்கத்தின் விந்தைகளை வியப்பாக பார்த்துக் கொண்டு சென்றன அவன் கண்கள். என்ன இருந்தாலும் அவன் ஊருக்குப் புதியவன்தானே.

“இதென்ன சொர்க்கம். மயன் நமக்குக் கட்டிக் கொடுத்த மாளிகையையும் தோட்டத்தையும் விட எண்ணில் கோடி மடங்கு அருமையாக இருக்கிறதே. இங்கே ஒருவிதமான ஆனந்த அமைதி நிலவுகிறதே. எப்படி? இதுவரையில் விலங்குகளும் பறவைகளுமாகவே தெரிகின்றன. மனிதர்கள் எங்கே இருப்பார்கள்? தேவர்கள் எங்கே இருப்பார்கள்? நான் வருகிறேன் என்று யாருக்கும் சொல்லவில்லையா? கிருஷ்ணர் கூட வந்து வரவேற்கவில்லையே. இவர்களையெல்லாம் எங்கு போய்த் தேடுவது?”

கொஞ்ச தூரம் செல்லச் செல்ல பொன் மாளிகைகள் தொலைவில் தென்பட்டன. அங்குதான் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எண்ணி சற்று விரைவாக நடந்தான் தருமன்.

“பெரிய ஊர் போலத் தெரிகிறது. விண்ணையும் தாண்டும் பெரிய அழகான மாளிகைகள் தெரிகின்றன. இத்தனை உயரனமான மாளிகைகளில் மாடிக்கு எப்படி ஏறுவார்களோ?

நமக்கு வேண்டியவர்கள் எல்லாம் இங்குதான் இருக்க வேண்டும். ஒவ்வொருவராகப் தேடிப் போய் பார்க்கலாம். முதலில் யாரைப் பார்ப்பது? திரவுபதியைப் பார்த்து நாளாயிற்று. அவளோடு கூடிக் களிக்க வேண்டும். தாயாரை முதலில் பார்த்தாலும் நல்லதே. ஆசி வாங்கலாம். ஆனால் இவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியாதே. சரி. ஊருக்குள் போய் விவரம் கேட்கலாம்.”

இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு நடந்த தருமன் எதிரே ஓடி வந்தான் சகுனி.

தொடரும்….

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , . Bookmark the permalink.

6 Responses to தருமனும் தருமமும் – பாகம் 1

 1. Pandian says:

  மனம் லயித்துப் படித்தேன்.

  ……..
  மகிழ்ச்சி எரிமலைக் குழம்பாகப் பொங்கிப் பெருகிக்
  ……..
  மகிழ்வை எரிமலைக் குழம்புக்கு உவமை சொல்வது எப்படிச் சரியாகும்?

  #ஜிராகவிழ்ப்புஅரசியல்:-)

  • GiRa ஜிரா says:

   // மனம் லயித்துப் படித்தேன்.//

   நன்றி. 🙂

   // மகிழ்வை எரிமலைக் குழம்புக்கு உவமை சொல்வது எப்படிச் சரியாகும்? //

   நல்ல கேள்வி. அந்த மகிழ்ச்சியின் பலன் நீண்ட நேரம் நீடிக்காது என்பதற்காகச் சொன்னது. தொடர்ந்து படியுங்கள் 🙂

 2. உடலோடு சுவர்க்கம் புகுந்ததால், தருமனுக்கு உடலைச் சார்ந்த பற்றுகளும் விடவில்லை போலும். அழகான விவரிப்பு. மேலும் வாசிக்க ஆவலுடன்…

  • GiRa ஜிரா says:

   உண்மைதான். மண்ணுலகத்தில் மனிதனாய் வாழ வேண்டும். இங்கு தெய்வ வேடம் போட்டு சிலர் வாழும் வாழ்வு எவ்வளவு பொய்யானதோ அப்படித்தான் உயிரோடு சொர்க்கம் போவதும் என்பது என் கருத்து.

 3. Pingback: தருமனும் தருமமும் – பாகம் 2 | மாணிக்க மாதுளை முத்துகள்

 4. tcsprasan says:

  இப்போதான் படிக்கத்தொடங்கினேன். சூப்ப்ரப்பு. சொர்க்கத்தில் சகுனியா? ஆச்சரியம். இதோ இப்பவே அடுத்த பாகத்துக்கு ஓடுறேன்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s