தருமனும் தருமமும் – பாகம் 2

இதன் முதற்பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது.

சொர்க்கத்தில் உயிரோடு புகுந்த தருமனைப் பார்த்து வேகமாக ஓடி வந்தார் சகுனி.

“தருமா! வா! வா! நீ வருவதாகச் சொன்னார்கள். அதான் ஓடி வந்தேன்.” வரவேற்ற சகுனியின் குரலில் உண்மையான பாசம் இருந்தது.

சொர்க்கத்தில் முதன்முதலாக சகுனியைப் பார்த்த தருமன் மனதில் வெறுப்பு பரவியது.

“அடடா! முதலில் போயும் போயும் சகுனி மாமன் முகத்திலா விழிக்க வேண்டும்! இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் செய்த அட்டூழியங்களுக்கு நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். தீயவர்கள் நரகத்தில் நெருப்புக்கு இரை என்றுதானே வேதம் சொல்கிறது. இவரைப் பார்த்தால் சுகமாக உண்டு வாழ்கிறவரைப் போலிருக்கிறாரே!”

“என்ன தருமா யோசனை?” சகுனி இடைமறித்தார்.

“அப்படியொன்றும் இல்லை மாமா. எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்று இவ்வளவு நேரம் தேடினேன். இங்கே என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இது சொர்க்கந்தானா?” கொஞ்சம் ஐயத்தோடு கேட்டான் தருமன்.

சிரித்து விட்டார் சகுனி. “மருமகனே! உன்னை உண்மையான பாசத்தோடு நான் வரவேற்றதிலிருந்தே தெரியவில்லையா! இது சொர்க்கந்தான் மருமகனே.”

இத்தனை கொடுமை செய்த மாமனும் சொர்க்கத்தில் இருப்பதை தருமன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. தருமன் நினைத்ததைச் சகுனி புரிந்து கொண்டான்.

“மருமகனே! ஏதடா இவ்வளவு அடாது செய்த மாமன் சொர்க்கத்திலும் விடாது தொடர்ந்து வருகிறானே என்று பார்க்கிறாயா? அதற்கும் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நான் தவறு செய்து என் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளவில்லை. எனக்காகவும் என் சந்ததிக்காகவும் சொத்து சேர்க்கவில்லை. மக்களை ஏமாற்றி சட்டத்தை மீறி செல்வம் ஈட்டவில்லை.

என் குடும்பத்தை அழித்த குடும்பத்தை நான் பழி தீர்த்துக் கொள்வதற்காக காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தவன் நான். அதைத்தான் செய்தேன். தவறு உங்கள் குடும்பத்தின் மீதும் இருந்ததால் என் தவறுகள் மன்னிக்கப்பட்டன. என்னுடைய நாட்டுக்காக நான் செய்த செயல்களால் சொர்க்கவாசம் எனக்கும் கிடைத்தது.”

தருமனக்கு உடனேயொரு ஐயம் வந்தது. “அப்படியென்றால் தாங்கள் காந்தார தேசத்துச் சொர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? இங்கு என்ன செய்கின்றீர்கள்? காந்தாரி பெரியம்மா இருப்பதால் இங்கும் வந்து விட்டீர்களா?”

சிரித்து விட்டார் சகுனி. புரியாத தருமனுக்குப் பதமாகச் சொன்னார் ஒரு மறுமொழி.

“சொர்கம் என்பது தேசங்களுக்கல்ல. நேசங்களுக்கு. இங்கு அன்பின் வழியதுதான் அனைவரின் நிலை. மாண்டாரை அன்றி உயிரோடு மீண்டார் சொர்க்கத்தின் மகத்துவத்தை அறியார் என்பது உண்மைதான் போலும். மேலும் நீ உன் காந்தாரி பெரியம்மாவைப் பற்றிச் சொன்னாய். மருமகனே, நானும் ஒரு அண்ணன். எனக்கும் சகோதரி மேல் பாசம் உண்டு. இங்கு வந்த பிறகு அது பல்கிப் பெருகி விட்டது. மேலும் காந்திரியைப் பார்க்கும் பொழுது உண்டாகும் அதே பாசம் உனது தாய் குந்தியைப் பார்த்தாலும் உண்டாகிறது. இந்த அன்பைச் சொல்லித் தந்த சொர்க்கத்துக்கு நன்றி.”

“என்ன அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்தீர்களா?” ஆவல் பொங்கக் கேட்டான் தருமன்.

“ஆம் தருமா! உன்னுடைய தாயும் நலம். பெரியம்மாவும் நலம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இங்கு உனது பெரியம்மா கண்களைக் கட்டிக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் சொர்க்கத்தில் குருடர்கள் இல்லை. உன்னுடைய பெரியப்பாவும் அனைத்தையும் பார்க்கலாம். ஆகையால் கண்ணைக் கட்டிக் கொள்ளாத உனது பெரியம்மாவைப் பார்க்க உனக்கே புதுமையாக இருக்கும். சரி. வா. பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அவர்களைப் போய் பார்க்கலாம்.”

சகுனி சொல்லச் சொல்ல யுதிஷ்டிரன் வியப்பின் உச்சிக்கே போனான். பெரியவர்களைச் சந்தித்து ஆசி பெற எண்ணி சகுனியுடன் சென்றான்.

சில எட்டுகள் முன்னே நடந்திருப்பார்கள். யாரோ ஒரு பெண் சிரித்துக்கொண்டே சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு ஓடினாள். அவள் சரக்கென்று வேகமாக கடந்து போனதால் அடையாளம் தெரியவில்லை. அவள் பின்னால் ஒரு ஆண்மகனும் ஓடினான். அட! அது கர்ணன். அவனைப் பார்த்த தருமனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வந்தது. “அண்ணா” என்று கூவி அழைத்தான்.

கர்ணனும் உடனே திரும்பிப் பார்த்தான். முகத்தில் வியப்பும் அன்பும் தெரிந்தன. செல்வங்கள் அனைத்தையும் கொடுத்துப் பழக்கப் பட்ட கர்ணனிடம் அள்ளக் குறையாமல் கொடுக்க அன்பும் நிறைய இருந்தது. “தம்பி, நலமா? உன்னை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.” தருமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

தருமனுக்குக் கண்ணில் தண்ணீர் வழிந்தது. “அண்ணா, முதலில் என்னை மன்னிக்க வேண்டும். அண்ணா என்று உங்களை வாய் நிறைய பூமியில் கூப்பிட முடியாமல் போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. நீங்கள் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய அரியணையை நீங்கள் விரும்பாமல் நட்புக்கு உயர்வு செய்ய துரியோதனனுக்கு பெற்றுக் கொடுக்க போர் புரிந்தீர்களே. ஐயோ! உங்களுக்கு உரிய அந்த ஆட்சியை நான் அபகரித்தேனே. அண்ணா! நீங்கள் என்னை மன்னித்தாலும் உலகம் மன்னிக்காது. இந்த பாவத்துக்கு விமோசனமே கிடையாதே!”

அழுத தம்பியைத் தேற்றினான் கர்ணன். “தம்பி யுதிஷ்டிரா, அழாதே. வா! நாம் முதலில் அன்னையைக் காணலாம். பிறகு தம்பியர்களைக் காணலாம். பேச வேண்டியவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டியவைகளையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” தருமனின் கண்களைத் துடைத்து அழைத்துச் சென்றான் கர்ணன். சகுனியும் உடன் சென்றான்.

தொடரும்,

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to தருமனும் தருமமும் – பாகம் 2

  1. //என் குடும்பத்தை அழித்த குடும்பத்தை நான் பழி தீர்த்துக் கொள்வதற்காக காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தவன் நான். அதைத்தான் செய்தேன். தவறு உங்கள் குடும்பத்தின் மீதும் இருந்ததால் என் தவறுகள் மன்னிக்கப்பட்டன. //

    அட, அதுவும் அப்படியா? அந்தக் கதையும் சொல்வீர்களா?

  2. Pandian says:

    இந்தக் குடை, அந்த அரிவாள். அந்த ஆடு, இந்த தருமன். ரெண்டுக்கும் சம்மந்தம் இருக்கறமாதிரியே தோன்றுகிறது. பார்க்கலாம்.

  3. tcsprasan says:

    எல்லாம் கற்றுணர்ந்த தருமனுக்கு சொர்க்கம் பற்றி. தெரியாதான்னு படிக்கும் நாங்கள் நினைக்கும்போதே சகுனி மூலமாக நீங்க அதுக்கு பதில் சொல்லிடுறீங்க. அருமையான கற்பனை.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s