தருமனும் தருமமும் – பாகம் 3

இதன் இரண்டாம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது.

அண்ணன் கர்ணனுடனும் மாமன் சகுனியுடனும் சொர்க்கத்தில் நடந்தான் தருமன்.

சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். வீதிகளின் இரண்டு பக்கங்களிலும் புத்தம்புதிதான வீடுகள். இல்லை. மாட மாளிகைகள். இல்லையில்லை. பெரும் கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி ஓய்வெடுக்கும் அழகிய பொன்னிற அன்னங்கள். மடுவில் நடுவில் பூத்து மிதந்த செந்தாமரைகளும் வெண்டாமரைகளும். அந்தி வேளையோ எந்த வேளையோ என்று தெரியாமல் அல்லியும் மலர்ந்திருந்தது.

சூரியன் கண்களில் தென்படவேயில்லை. ஆனாலும் பொன்னிற வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது. அதுவும் கண்களை உறுத்தவில்லை. தோலைச் சுடவில்லை. வியர்க்கவில்லை. மேனியெங்கும் ஏதோவொரு சுகம் பரவியது.

பெரியவர்களைக் காண மூவரும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கவில்லை. காந்தாரியும் திருதுராட்டிரனும் குந்தியும் ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வெள்ளி மரத்தில் பொன்னிறத்து இலைகளும் வைர மொட்டுகளும் பவழப் பூக்களும் நிறைந்திருந்தன. காற்றில் அசையும் வெள்ளியிலைகள் மெல்லிய வெள்ளிமணி ஓலிக்கும் இசையைப் பரப்பியபடியிருந்தது. அந்த அபூர்வ மரத்தைப் பார்த்த பார்வையை தருமனால் விலக்க முடியவில்லை.

கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் மூவரின் கைகளிலும் கோப்பைகள் இருந்தன. செந்நிறக் கோப்பைகளில் வெண்ணிறத்தில் ஏதோ அருந்திக் கொண்டிருந்தனர்..

தருமனைக் கண்டதும் மூவரும் முகமலர்ந்தார்கள். மூவரையும் வணங்கி விட்டு கர்ணன் சொன்னான். “மதிப்புக்குரிய பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் எனது வணக்கங்கள். தாயார் குந்திக்கும் எனது வணக்கங்கள். நமது யுதிஷ்ட்டிரன் இன்று நம்மிடம் வந்துள்ளான். அவனது வணக்கங்களை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறான்.”

கர்ணன் சொன்னதும் தருமன் மூவரையும் பணிந்து எழுந்தான். குந்தி அவனை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. காந்தாரிதான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.

“மகனே தருமா! உன்னை இன்றுதான் நான் கண்கொண்டு காண்கிறேன். உனது பெரியப்பாவும் அப்படித்தான். உன்னைச் சொர்க்கத்தில் கண்டு உள்ளம் நெகிழ்கிறது. நீ வரப்போவதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எங்களோடு நீ வந்து சேர்ந்து நமது குடும்பம் ஒன்றாவதில் மெத்த மகிழ்ச்சி. உன்னைச் சந்திப்பதில் சுயோதனனும் மிகவும் மகிழ்வான்.”

திருதுராட்டிரனும் காந்தாரியும் எப்பொழுதும் துரியோதனனை சுயோதனன் என்றுதான் அழைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா.

“தாயே தங்கள் அனைவரையும் இங்கு மீண்டும் சந்திப்பதில் நானும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தம்பி துரியோதனனோடு சேர்த்து நூற்றுவரையும் சந்திக்க மகிழ்ச்சிதான் எனக்கு. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்பொழுது?”

கவுரவர்கள் நூறு பேரும் சொர்க்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் பதிலைக் குந்தி சொன்னாள்.

“யுதிஷ்டிரா! உனது தம்பிகள் நூற்று ஐவரும் இங்குதான் இருக்கின்றார்கள். இப்பொழுது எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சற்று முன்னேதான் சுயோதனனோடு பீமனும் விஜயனும் சென்றார்கள். அனேகமாக மானசரோவருக்குச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பீமன் முன்பொருமுறை அங்கு சென்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டதும் சுயோதனனுக்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. ஆகையால் அவர்கள் மூவரும் மானசரோவர் சென்று நீராடப் போயிருக்கிறார்கள்.”

தருமனுக்குத் திடுக்கென்றது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் துரியோதனன் பீமனைக் கட்டி ஆற்றில் போட்டான். அதே போல இப்பொழுதும் செய்து விட்டால் என்ன செய்வது என்று அவன் மனம் அஞ்சியது. கொஞ்சமும் யோசிக்காமல் அனுப்பிய தாயார் குந்தியின் மேல் லேசான கோவம் வந்தது. ஆனால் பெரியப்பா பெரியம்மா முன்னால் வெளிக்காட்டினால் நன்றாக இருக்காது என்று பேசாமல் இருந்தான். நகுல சகாதேவர்களையாவது பார்க்கலாம் என்று நினைத்தான்.

“அம்மா! நான் நகுலனையும் சகாதேவனையும் பார்க்க வேண்டும். அவர்கள் எங்கே அம்மா?”

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to தருமனும் தருமமும் – பாகம் 3

 1. Pandian says:

  ……
  கவுரவர்கள் நூறு பேரும் சொர்க்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் பதிலைக் குந்தி சொன்னாள்.
  ………
  அந்தாளுக்கு மட்டுமில்லை. எங்களுக்கும்தான்.

 2. சுவர்க்கத்துக்குச் சென்று நேரில் பார்த்து வந்த மாதிரியே இருக்கின்றன வர்ணனைகள் எல்லாம் 🙂 ஆமாம், பாண்டு, மாதுரி, இவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள்?

 3. tcsprasan says:

  பாண்டு அடுத்த பாகத்தில் வருவாரா. இதோ அங்க போறேன்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s