தருமனும் தருமமும் – பாகம் 5

இதன் நான்காம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது.

தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன்.

தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை மலர் போல மலர்ந்தது. “குந்தி நந்தனா வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!” பணிந்து வரவேற்றாள். அப்படியே அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னாள். துச்சாதனனும் தருமனை வரவேற்று மற்றவர்களை வணங்கினான்.

தருமன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கத்தினான். “திரவுபதி! இதென்ன அலங்கோலம். துச்சாதனனோடு தோளோடு தோள் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு வருகின்றாயே! நீ குலமகளா? விலைமகளா? உனக்கு அறிவு மழுங்கிப் போயிற்றா!”

இப்படி அவன் கேட்டது எல்லாரையும் திடுக்கிட வைத்தது. திருதுராட்டிரர் எதையோ சொல்ல வந்தார். ஆனால் திரவுபதி அவரைத் தடுத்து தானே பேசினாள். “மாமா! சற்று அமைதியாக இருங்கள். நான் அவருக்கு விடை சொல்கிறேன்.”

”ஆரிய புத்திரரே! கணவன் என்ற வகையில் அதிகாரத்தைக் காட்ட இது ஒன்றும் மண்ணுலகம் இல்லை. இந்திரப்பிரஸ்த சட்டங்கள் சொர்க்கத்தின் நீதிமன்றத்தில் மதிக்கப்படுவதில்லை..

சொர்கம் என்பது இன்பமயமானது. இங்கு பெண்கள் என்றென்றும் நித்தியகன்னிகள். ஒருவரின் விருப்பமின்றி ஒருவரைத் தீண்டுவது இங்கு தகாது. அதே போல விரும்பிக் கூடினால் அவர்களைத் தடுப்பதும் தகாது. துச்சாதனனோடு நான் கூடினேன். ஆமாம். விரும்பித்தான் நாடினேன். இருந்தும் நான் கன்னிகைதான். ஐயமிருந்தால் என்னைக் கூடித் தெளிவு பெறுங்கள்.”

உலகமே சுழல்வது போல இருந்தது தருமனுக்கு. தருமங்கள் அனைத்தையும் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கே திரவுபதியின் பேச்சு குழப்பமாக இருந்தது. “இதென்ன பைத்தியக்காரத்தனம். கண்டவனோடு கூடுவதா பெண்மை?” எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.

திரவுபதியிடம் சீற்றமில்லை. ஆனால் உறுதியாகச் சொன்னாள். “பெண்மை என்றால் என்னவென்பதை ஆண்மை விளக்கக்கூடாது. அப்படி விளக்கினால் ஆண்மை எதுவென்று பெண்கள் விளக்கவேண்டிவரும். ஒரு பெண்ணின் கன்னித்தன்மைதானே ஆடவர்க்குத் தேவை. அதைப் பேணிக் காப்பதுதான் பெண்ணின் கடமை என்று மண்ணுலகில் சொல்கின்றீர்கள். அதற்குத்தானே எங்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். இதோ பாருங்கள். உடலை முழுமையாக மூடியிருக்கிறேன். எனது அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எந்த ஆடவனும் என்னைப் பார்த்து கிறங்க மாட்டான். அதுதானே உங்களுக்கு வேண்டியது. பெண்கள் மனதில் எதையாவது நினைத்து விரும்பினால் உங்களுக்கு என்ன வந்தது?”

தருமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான். “திரவுபதி, நீ என் மனைவி. பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகக் கடமைப் பட்டவள். எங்கள் பிள்ளைகள் விளைந்த நிலம் நீ. இப்படி மற்றவர்களோடு கூடினால் எப்படி? அதற்கும் விதம்விதமாய் விளக்கம் சொன்னால் எப்படி?”

சிரித்து விட்டாள் பாஞ்சாலி. “ஆரிய புத்திரருக்கு இன்னும் விளங்கவில்லை போலும். மனைவி என்றால் அழைத்ததும் வந்து கூட வேண்டும். வேசி போல நடந்து கொள்ள வேண்டும். மறுக்கக் கூடாது. இல்லையா! உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்தால் போதும். அல்லவா!

எங்கள் மாதவிடாய்க் கணக்கை வைத்துதானே நாங்கள் ஒருவனுக்கு மட்டுமே ஆனவள் என்று ஆண்களால் உபதேசிக்கப்பட்ட மண்ணுலக நீதி சொல்கிறது. இது விண்ணுலகம். ஆனாலும் மண்ணுலகத்திலும் புரட்சி செய்தவர் நீர். சகோதரர்களாகிய உங்கள் ஐவருக்கும் மனைவியாக நான் இருந்ததே மண்ணுலகில் பெரும் புரட்சிதான். இதை காலம் பல கடந்தாலும் ஆணாதிக்க வெறியர்கள் கேலி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

அப்படிப் புரட்சி செய்த நீங்கள் கூட விளைநிலம் என்று பேசத் தொடங்கி விட்டீர்கள். சொர்க்கத்தின் நீதி தெரியாமல் பேசாதீர்கள். இங்கே மாதவிலக்கு என்ற தொல்லையே எங்களுக்கு இல்லை. ஆகையால் எங்களோடு யார் கூடினாலும் பிரச்சனையில்லை. ஆகையால் எங்களோடு கூடியவன் விட்டு விலகினால் எத்தனை நாள் கழித்து அடுத்த ஆண் எங்களை மணக்கலாம் என்று கணக்குப் போட முடியாது.

இப்போது நான் சொல்லிக் கொண்டிருப்பவைகளை சொர்க்கத்திலுள்ள ஆடவர்கள் அனைவருமே அறிவார்கள். நீங்கள் உயிரோடு இங்கு வந்திருக்கின்றீர்கள். உயிரோடு உங்கள் இதயமும் வந்ததால், அது மண்ணுலகத்து நியாயங்களையே இங்கும் பேசுகிறது. பாவம்! பொருந்தாத இடத்தில் இருக்கின்றீர்கள்.”

இப்பொழுது திருதுராட்டிரன் வாயைத் திறந்தான். “யுதிஷ்டிரா! பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதால் மண்ணுலகில் அவர்களை அடக்கி அதையே அவர்கள் சிறப்பு என்று அவர்களும் எண்ணும் அளவுக்குச் செய்ய முடிந்தது. ஆனால் இது சொர்க்கம். இங்கு பெண்கள் கருத்தரிப்பதே இல்லை. ஆகவே அவர்கள் யாரிடம் கூட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் எல்லாரோடும் கூடுவதில்லை. மேலும் இங்கு ஆண்களும் தங்கள் நிலையை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

இங்கு எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் வன்முறை கொண்டு கூடுவதில்லை. சொர்க்கம் அவர்களுக்கு அந்த அறிவைத் தந்திருக்கிறது. ஆகையால் வன்முறை செய்து விட்டு பெண்களின் ஆடை மீதும் நடவடிக்கை மீதும் குற்றம் சொல்வதுமில்லை. சொர்கத்துக்கு வரும் பொழுதே அனைவரும் நல்லவர்களாகவும் இங்குள்ள விதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.”

தருமனுக்குக் கிறுக்குப் பிடிக்கத் தொடங்கியிருந்தது. திருதுராட்டிரன் விட்ட இடத்திலிருந்து கர்ணன் தொடர்ந்தான். “தம்பி தருமா! இறைவனை வணங்கி அவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கான சொர்க்கமும் அதன் விதிகளும் சொர்கத்தின் உண்மையான குடியினருக்குத் தானாகப் புரியும். தெரியும். ஆகையால் இங்கு இதனால் குழப்பங்கள் எதுவுமே வருவதில்லை.”

முழுப் பைத்தியமாகியிருந்தான் தருமன். இரண்டடி பின்னால் சென்று கத்தினான். “இல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் பொய். என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள். இதுவும் சொர்கத்துக்குள் நுழைவதற்கான ஒரு சோதனையா? உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் உண்மையிலேயே எனது உறவினர்களா? இல்லை மாயையா? எனக்கு உடனடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வேண்டும். அவர் எங்கேயிருக்கிறார்? அவரிடம் என்னை அழைத்துப் போங்கள். என்னை அழைத்துப் போங்கள்.” கதறினான் தருமன்.

கொஞ்சம் முன்னால் வந்து சொன்னான் சகுனி. “மருமகனே! கிருஷ்ணன், ருத்ரன் என்றெல்லாம் நீ வணங்கியது மண்ணோடு போயிற்று. இங்கேயும் அங்கேயும் எங்கேயும் இறைவன் ஒருவனே. நீ விரும்புகிற வடிவத்தில் உனக்காக ஓடிவந்த இறைவன் உருவாயும் அருவாயும் இருப்பவன். கல்லில் இருப்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவன் கல்லிலும் சொல்லிலும் நமக்கு உள்ளிலும் நம்மைக் கடந்தும் இருப்பவன்.

நீ உன் பண்பாட்டோடு ஒட்டி இறைவனைப் படைத்தாய். வணங்கினாய் உனக்காக உன் மீது கருணை கொண்டு நீ விரும்பியபடியே வந்தார் இறைவன். ஆனால் சொர்க்கம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் இறைவனை இங்கே தேடிப் போகவேண்டியதில்லை. உண்மையாக அழைத்தால் எங்கும் இருப்பவர் உனக்காக இங்கும் தெரிவார்.”

“இல்லை. இல்லை. நீங்கள் என்னை ஏமாற்றுகின்றீர்கள். என்னைக் குழப்புகின்றீர்கள். நான் இங்கிருந்து செல்கிறேன். உங்களோடு என்னால் இருக்க முடியாது. இது ஏதோ மூளையைக் குழப்பும் மாயை நிறைந்த சோதனை. சோதனை.”

சொல்லிக் கொண்டே திரும்பி ஓடினான் தருமன். முதலில் தருமனைத் தடுக்க நினைத்தவர்கள் அந்தத் திட்டத்தை உடனே கை விட்டார்கள். சொர்க்கத்தினர் அல்லவா அவர்கள். தத்தமது வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

விடுவிடுவென ஓடினான் தருமன். எங்கே போவதென்றே தெரியவில்லை. அவன் உள்ளம் முழுவதும் நூறு கோடி சிந்தனைகள் சிலந்தி வலை கட்டியிருந்தன. எங்கே ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடியவன் காலை தடக்கென்று ஏதோ ஒன்று இடறியது. தடுமாறி கீழே சரிந்தான். கீழே என்றால் உண்மையிலேயே கீழே. சர்ர்ர்ர்ர்ர்ரென்று மண்ணுலகை நோக்கி வீழ்ந்தான்.

ஓவென்ற ஓலம் உலகிற்கே கேட்கும் வகையில் கத்தினான். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சத்தென இமயத்தில் இடித்தது அவன்தான் பனிப்பாறையில் விழுந்தான். அந்த ஒரு நொடியில் உண்மையிலேயே உயிரை விட்டான் தருமன்.

தருமனும் முடிந்தான். தருமமும் முடிந்தது.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தருமனும் தருமமும் – பாகம் 5

  1. Pandian says:

    அப்டீன்னா?
    😦

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s