சூது கவ்வும் – விமர்சனம்

World has changed. ஆம். உலகம் மாறித்தான் போய் விட்டது. திரைப்படங்கள் அந்த மாற்றங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

சூது கவ்வும் படமும் அப்படித்தான். இன்றைய காலகட்டத்தையும் இளைஞர்களின் மனநிலையையும் ஒருவிதத்தில் பிரதிபலிக்கிறது.

புதுமை என்பது புதிதாகத் தருவதல்ல. பழையதையே புதுமையாகத் தருவது. அதுதான் சூது கவ்வும். ஆயிரம் முறை பார்த்துச் சிரித்து விட்ட கடத்தல் நகைச்சுவைதான். ஆனால் படைக்கப் பட்ட விதம் புதுமையாக இருக்கிறது.

என்னைக் கேட்டால் பெரிய கதாநாயகர்களுக்கும் பெரிய இயக்குனர்களுக்கும் இந்தப் படம் ஒரு பாடம். நளனின் அடுத்தடுத்த படங்கள் எப்படியிருக்குமோ, தெரியாது. ஆனால் பிரம்மாண்டச் சகதியில் விழுந்துவிட்ட நூறுகோடி பட்ஜெட் இயக்குனர்களும் ஹீரோயிசம் மட்டுமே காட்டும் சூப்பர் ஹீரோக்களும் திருந்த வேண்டும் என்பதற்கு இந்தப் படம் சான்று.

படத்தின் நல்லவைகளைப் பற்றி முதலில் பட்டியல் போட்டு விடுகிறேன்.

புதுப்புது பாத்திரங்கள்
புதுப்புது நடிகர்கள்
வரம்பு மீறாத இயல்பான நடிப்பு
அலுக்காத திரைக்கதை
படத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கே ஆன இசை
படம் முழுக்க விரவிக்கிடக்கும் நகைச்சுவை

விஜய் சேதுபதி பொருத்தமான பாத்திரங்களை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது பாத்திரங்களில் பொருத்திப் போகிறாரா என்று தெரியவில்லை. இவராவது ஹீரோயிசம் செய்யாமல் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். குரலும் நடிப்பும் அட்டகாசம். அதிலும் கனவுக் காதலியோடு பேசும் காட்சிகள் அருமை.

அந்த மூன்று இளைஞர்களும் அட்டகாசம். அசோக் செல்வன், சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் ஆகிய மூவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்களை முன்பே பார்த்தது போல உள்ளது. நாளைய இயக்குனரில் வந்திருக்கலாம்.

சஞ்சிதா ஷெட்டி… மாமா மாமா.. என்று கூடவே வருவதும். இவர்கள் சீரியசாக நடந்து போகும் இடங்களில் கூட துள்ளிக் குதித்து ஓடுவதும்… செம ரெஃப்ரெஷ்மெண்ட்.

எம்.எஸ்.பாஸ்கர்.. வழக்கம் போல பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். உதவாக்கரை மகனையும் உருப்படியில்லாத மனைவியையும் வைத்துக் கொண்டு இவர் படும் பாடு… அப்பப்பா. அதே அவர் மனைவியாக நடித்தவரும் செமை நடிப்பு. ஒரு கட்டத்துக்கு மேல் பெண்களுக்கு கணவனை விட மகன் முக்கியமானவனாகி விடுவான். அதை இதை விட அழகாக வெளிக்காட்ட முடியுமா!

யாருய்யா அந்த இன்ஸ்பெக்டர் பிரம்மாவாக வரும் யோக் ஜப்பி? ஆள் ஜிம்பாடியும் கிடையாது. ஆனாலும் பார்வையாலும் நடிப்பாலும் ஒரு வெறுப்பைக் கொண்டு வந்து விடுகிறார். பார்த்தாலே நான்கு அறை வைக்க வேண்டும் போல இருக்கிறது. அவருக்குக் கடைசியில் கிடைக்கும் தண்டனை… சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது என்று கிளிஷேத்தனமாகத்தான் சொல்ல வேண்டும்.

அருமைப்பிரகாசமாக வரும் கருணாகரனும் சிறப்பாக நடித்திருக்கிறார். ”முன்னூறு கோடி ஒரு வருஷ டார்கெட். முடியுமா?” என்று ராதாரவி கேட்கும் போது தலையைத் தலைய ஆட்டும் போதும் தேர்தல் காட்சிகளின் போதும் அவர் ராஜ்ஜியம்தான்.

காசு பணம் மணி மணி என்று பாட்டு. என்னவோ நல்லாத்தான்யா இருக்கு. ஆபாசம்னு சொல்ல முடியாது. இதை விட ஆபாசமா கதாநாயகிகளே ஆடிக்கிட்டிருக்காங்க. ஆனா அந்தப் பாட்டு நல்லாத்தான் இருக்கு. அதுலயும் அந்த ராஜகுரு மொபைல் கேமராவில் ஆட்டத்தைப் படம் பிடிக்கும் போது விழுந்து விழுந்து சிரித்து கிளிஷே செய்தேன். மாமா டவுசர் கழண்டிருச்சேய் என்று ஆண்டிரியா கன்னாபின்னாவென்று கலக்கியிருக்கிறார். ஆனால் படத்தில் பாடலை பாதிக்கு மேல் வெட்டி விட்டார்கள் என நினைக்கிறேன்.

படத்தில் குறைகளே இல்லையா? இருக்கின்றன. லாஜிக் பார்க்கவே கூடாது. லாஜிக் தேவைப்படும் இடங்களே கதையிலும் இல்லை. படத்தில் தண்ணியடிக்கும் சிகரெட் குடிக்கும் காட்சிகள் நிறைய. இதைக் குறையாகச் சொல்லலாம். ஆனால் தேவதாஸ் படம் பார்த்து விட்டு தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு கையில் ஏதாவது பாட்டிலைப் பிடித்துக் கொண்டு உலகே மாயம் வாழ்வே மாயம் என்று அன்றைக்கும் பாடியிருப்பார்கள். கிக்கு ஏறுதே என்று சூப்பர் ஸ்டார் கூட பாடியிருக்கிறார். முன்பே சொன்னது போல, World has changed. அதைத்தான் இது போன்ற படங்கள் காட்டுகின்றன.

ஒரே கதாநாயகன் படம் முழுக்க வந்து ஆடிப் பாடி சண்டை போட்டு அழுது நாட்டைக் காப்பாற்றுவதைப் பார்த்து அலுத்துப் போன நிலையில் சூது கவ்வும் போன்ற படங்கள் பாராட்டப்பட வேண்டிய புதுவரவுகள்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம். Bookmark the permalink.

12 Responses to சூது கவ்வும் – விமர்சனம்

 1. ganapathy says:

  Excellent reviews. Makes me to see the movie.

  • GiRa ஜிரா says:

   படம் கண்டிப்பா பாக்கலாம். பாத்துச்சு சொல்லுங்க 🙂

 2. அப்ப படத்தைப் பார்க்கலாமுன்னு சொல்றீங்க!!! பார்த்துருவோம்…… டிவிடி வந்தவுடன்:-)

  ஹீரோயிஸம் பார்த்துப்பார்த்து இப்பெல்லாம் சினிமான்னா காத தூரம் ஓடுகிறேன்.

  • GiRa ஜிரா says:

   டிவிடியில் பாருங்க. பிடிக்கும்னுதான் நெனைக்கிறேன். ஹீரோயிசம் அலுத்துப் போச்சுங்குறதுதான் உண்மை டீச்சர்.

 3. //சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.//

  அப்போ நந்தியை என்ன செய்யணும்னு சொல்லிடுங்களேன்.

  • GiRa ஜிரா says:

   வாங்க தருமி சார். நந்திய என்ன செய்யனும்னு தெரியாம நந்தியே கொழம்பிக் கெடக்குது. நந்தி ஒரு முடிவுக்கு வந்ததும் சொல்றேன் 🙂

 4. 4anbu says:

  இன்ஸ்பெக்டர் பிரம்மாவை தெரியலையா ? 🙂 டேவிட்பில்லாவோட வலதுகரமா பில்லா2 பில்லா1 ல வந்திருப்பார்.

  • GiRa ஜிரா says:

   தெரியலைங்க. அதெல்லாம் நினைவில்லையே.

 5. பார்க்கலாம் போல இருக்கிறது. அவ்வாறு எண்ண வைத்தீர்கள். நன்றி.

  • GiRa ஜிரா says:

   படம் பாத்திங்கன்னா.. படம் எப்படியிருந்துச்சுன்னும் சொல்லுங்க 🙂

 6. amas32 says:

  நல்ல விமர்சனம் ஜிரா 🙂 நானும் இந்தப் படத்தைப் பார்த்து விவிசி தான் 🙂

  amas32

 7. Pandian says:

  அடுத்த செட் வந்திட்டாங்க ஜிரா அய்யா. இவர்கள் தமிழ் சினிமா நல்ல நிலையில் வைத்திருப்பார்கள் (இப்படி ஒருந்த ஒரு காலத்தில்தான் ஒரு முக்கிய இயக்குநர் வந்து முரட்டுக்காளை போன்ற டொம்பை படங்களை எடுத்து மக்களின் ரசனையை மாற்றிவிட்டாராம்)

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s