ஜார்ஜ்குட்டி என்னும் அச்சன்

மலையாளப் படங்கள் பாத்து ரொம்ப நாளாச்சுன்னு நெனைக்கிற நேரத்துல எனக்கு அறிமுகம் ஆனவர் தான் ஜார்ஜ் குட்டி. அவர் தான் திருஷ்யம் படத்தோட நாயகன். அப்படிச் சொல்லப் பிடிக்கலைன்னா… அவர் தான் திருஷ்யம் திரைப்படம்னே சொல்லலாம்.

மோகன்லால் நடிப்பின் மேல் பெருசா எனக்கு எந்த அபிப்பிராயமும் இருந்ததில்ல. மலையாளப் படங்கள்ள இருக்கும் செயற்கைத் தனமான இயல்புத்தன்மையை நடிப்பில் கொண்டு வர்ராருன்னு தான் இதுவரைக்கும் நெனைச்சேன். இன்னைக்கு அந்த நெனப்ப மாத்திக்கிறேன். மோகன்லால் ஒரு சிறந்த நடிகர்.

ஒரு வயசுக்கு மேல நடிகர்கள் எந்த மாதிரிப் படம் நடிக்கனுங்குறதுக்கு திருஷ்யம் ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு சிறிய குடும்பம். அழகான குடும்பம். அந்தக் குடும்பம் தான் ஜார்ஜ்குட்டியின் உலகம். அத்தோடு சினிமா. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலிஷ்னு சகட்டு மேனிக்கு பாத்துத் தள்ளும் மனுசன் ஜார்ஜ்குட்டி. அந்த சினிமாவை வெச்சு பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நாலாங் கிளாஸ் பாஸ் தான் ஜார்ஜ் குட்டி.

அவரோட பத்தாங்கிளாஸ் பெயில் மனைவிதான் ராணி. ஆஸ்தி பெருசா இல்லாததாலோ என்னவோ ஆசைக்கு ரெண்டு மகள்கள். இழுத்துக்கோ பறிச்சிக்கோன்னு ஒரு வாழ்க்கை. வீட்டுக்கு மட்டுந்தான் விருந்தாளி வரனும்னு இல்ல. அழையா விருந்தாளி வாழ்க்கைக்குள்ளயும் வரலாம். அந்த வேண்டாத விருந்தாளி கொண்டு வந்த பிரச்சனைகளை எப்படி ஜார்ஜ்குட்டி சமாளிச்சு குடும்பத்தைக் காப்பாத்துறாருங்குறதுதான் கதை.

மோகன்லால் நல்லா நடிக்கிறது இருக்கட்டும். மீனாவுக்கு இவ்வளவு நடிக்க வருமா? கொடுத்த வேலைய கச்சிதமா செஞ்சிருக்காங்க. மொபைல் போனில் போட்டோ பிடிச்சா அது நிர்வாணமா பிடிக்கும்னு அவர் அப்பாவித்தனமா நம்புறதாகட்டும்… அது உண்மையிலேயே அப்படி ஆகும் போது அவர் வெளிப்படும் நடிப்பு அருமை.

யாருய்யா அந்த போலிஸ் ஐபிஎஸ்! ஆஷா சரத். செம நடிப்பு. தமிழ்ல அடுத்தடுத்து வாய்ப்புகள் வரப்போகுது. குறிச்சு வெச்சுக்கோங்க. அனேகமா போலீஸ் வேஷமாத்தான் குடுப்பாங்க. படும் முழுக்க ஒரு வெரப்பு. மகன் என்ன ஆனான்னே தெரியாம அழுகுறப்பவும் வெரப்பு இருக்குது.

இப்படி நான் விமர்சனம் எழுதுனா… தொடர் விமர்சனமாத்தான் எழுதனும். அவ்வளவு இருக்கு சொல்ல. மொத்தத்துல ஒவ்வொரு பாத்திரமும் அட்டகாசம். எல்லா நடிகர்களுக்கும் சேத்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓ போட்டுக்குறேன்.

ஜீத்து ஜோசப்போட திரைக்கதையும் இயக்கமும் கனகச்சிதம். இந்தக் கதைய எந்த மொழியிலயும் யோசிக்காம எடுக்கலாம். எந்த மொழியில் எடுத்தாலும் கண்டிப்பா வெற்றி பெரும். கதைப்படி ஜார்ஜ்குட்டியின் குடும்பம் கிருஸ்துவக் குடும்பமா இருந்தாலும் வேற எந்த மதக் குடும்பமாகவும் மாத்திக்கலாம். அந்த அளவுக்கு அட்டகாசமான திரைக்கதை.

இந்தக் கதையோட பலம் என்னன்னா… இது யாருடைய வாழ்க்கையிலும் நடக்கக் கூடியது. எந்த ஊரிலும் எந்த நாட்டிலும் எந்தக் குடும்பமும் இந்தப் பிரச்சனையில் மாட்டிக்க வாய்ப்பிருக்கு. அப்படியான பிரச்சனை வரும் போது போலிசை ஜார்ஜ் குட்டி எப்படி நம்பலையோ…அப்படிதான் நாமளும் நம்ப மாட்டோம். அதுதான் கதையோட நம்மள ஒன்ற வைக்குது. ஆயிரந்தான் சொல்லுங்க. போலீஸ்னா ஒரு வெறுப்பு இருக்கத்தானே செய்யுது. ஊரே காறித் துப்புற ஒரு நடிக அரசியல்வாதியே போலீச காறித் துப்புறார்னா… நாமள்ளாம் துப்புறதுல தப்பே இல்ல.

நான் ரொம்பவே ரசிச்ச காட்சிகளைச் சொல்றேன்.
1. மோகன்லாலும் மீனாவும் கட்டிலில் எதிரெதிர் பக்கம் பாத்து படுத்திருக்கும் காட்சி. அழகானதோர் சிறு கவிதை.
2. தொடுபுழைக்கு ஷாப்பிங் போகும் காட்சியும் பாட்டும்
3. டீக்கடை காட்சிகள் எல்லாமே அருமை. அதிலும் கண்ணாடியில் மோகன்லாலுக்குத் தெரியாமல் கான்ஸ்டபிள் மோகன்லாலை உளவு பார்க்கும் காட்சி.
4. பயந்து போய் உண்மையச் சொல்லிட்டேன் என்று மகள் ஜார்ஜ்குட்டியிடம் சொல்லும் காட்சி
5. மொத்தக் கூட்டமும் கான்ஸ்டபிள் சகாதேவனைத் துரத்தும் காட்சி
6. கான்ஸ்டபிள் சகாதேவன் கூட்டி வரும் சாட்சிகள் சகாதேவனுக்கே எதிராக அமைவது
7. இடியாப்பம் பிழியுறத வாங்கி அம்மாவுக்கு மீனா கொடுக்கும் காட்சி.
8. கீதா பிரபாகர் ஐபிஎஸ்சின் கணவராக வருகின்றவரின் பாத்திரப்படைப்பும் நடிப்பும்

இன்னும் எக்கச்சக்கமா சொல்லிக்கிட்டே போகலாம். சுருக்கமாச் சொல்லனும்னா… ஒரு குடும்பம் எப்படி ஒளிவுமறைவு இல்லாம ஒத்துமையா இருக்கனுங்குறதுக்கு ஜார்ஜ்குட்டியின் குடும்பம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

கமல் நடிக்கப் போறாராம். இது கமலுக்கான படமே அல்ல. சத்தியராஜ் மிகப் பொருத்தமா இருப்பாரு. பிரபு கூட பொருத்தமா இருப்பாரு. ஆனா… கமல்… பாக்கலாம் எப்படி அமையுதுன்னு.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , . Bookmark the permalink.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s