கோவை காயல்ல

வாரயிறுதியில் நண்பனின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது நான் கண்டவைகள் இவை.

கோவையின் காலைப்பொழுதுகள் இனியவை. எட்டு ஒன்பது மணி வரையிலும் ஒருவிதக் குளுமை/வெயிலின்மை.

கோவையில் இன்னும் பல வீடுகளில் சாணியைக் கரைத்து வாசல் தெளிக்கிறார்கள். ஆர்.எஸ்.புரத்தில் வெங்கடசாமி ரோட்டில் ஒரு பெரிய வீடு. வெள்ளையும் நீலமுமாம் ஒப்பனை செய்து கொண்ட பெரிய வீடு. அந்த வீட்டின் வாசலிலும் சாணி தெளித்திருந்தார்கள். அது கோவையில் தற்போதைய மேயர் செ.ம.வேலுச்சாமியின் வீடு.

போத்திஸ் துணிக்கடை வாசலிலும் சாணி தெளித்திருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

கோவை ஆட்டோக்களும் மீட்டர் இல்லாமல் தான் ஓடுகின்றன. பேரம் பேசத் தெரிந்திருந்தால் வசதி. சிந்தாமணியிலிருந்து காந்திபுரத்துக்கு 120 ரூபாய் கேட்டார்கள். நான்கைந்து ஆட்டோக்களில் பேரம் பேசிவிட்டு நடக்கலாம் என்று முடிவு செய்த போது ஒரு வயதானவர் வந்தார். அவருடைய வயதுக்காக அவரிடம் பேரம் பேசாமல் எண்பது ரூபாய் கொடுத்தேன்.

அன்னபூர்ணா இன்னும் பழைய அன்னபூர்ணாவாகத்தான் இருக்கிறது. பனீர் சேவை நாக்குக்கு நல்ல சேவை. கட்டிக் கட்டியாக இல்லாமல் துருவிய பன்னீருடன் அரிசிச் சேவைக் கூட்டணி அட்டகாசம். அது கிடக்கட்டும். அன்னபூர்ணா சில்லி பரோட்டாவின் சுவை இன்னும் நாவில் இருக்கிறது.

கால் டாக்சி இன்னும் கோவையில் வளரவில்லை என்றே சொல்வேன். எப்போது அழைத்தாலும் உறுதியாகச் சொல்வதில்லை. ”ஒரு மணி நேரம் கழித்துக் கூப்பிடுங்கள், அந்த ஏரியாவில் டாக்சி இருந்தால் அனுப்புகிறோம்” என்பதுதான் பொதுவான பதில். அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு டாக்சி வேண்டும் என்று கேட்டால் காலையில் கூப்பிடச் சொன்னார்கள். காலையில் கூப்பிட்டால் பழைய பல்லவி. ”ஒரு மணி நேரம் கழித்துக் கூப்பிடுங்கள், அந்த ஏரியாவில் டாக்சி இருந்தால் அனுப்புகிறோம்.” ஆனால் ரெட் டாக்சியில் அழைத்த இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு டாக்சி அனுப்பினார்கள்.

Red Taxi, Go Taxi, Taxi Taxi என்று கால் டாக்சிகளுக்கு குழந்தைத்தனமாய்ப் பெயர் வைத்திருக்கிறார்கள். பெயர் வைக்க மெனக்கெடவில்லை என்று தெரிகிறது.

ப்ரூக்ஃபீல்ட் மால் அட்டகாசம். More happening than Chennai. And I would like to say Chennai has more conservative crowd compared to Coimbatore. Yea. This is my opinion after visiting the Brookfield mall.

அதே போல கோவையில் அப்பார்ட்மெண்ட்டுகள் மிக அருமையாக இருக்கின்றன. ஷங்கர் படம் அளவுக்கு அதீத பிரம்மாண்டமாகவும் இல்லாமல் வி.சேகர் படம் போல லோ பட்ஜெட்டாகவும் இல்லாமல் நடுத்தரமாக நச்சென்று இருக்கின்றன. சென்னை பில்டர்கள் கவனிங்கப்பா!

ஒப்பனக்கார வீதியா? ஒப்பணக்கார வீதியா?துணிக்கடைகளும் நகைக்கடைகளும் நிரம்பிய வீதியை ”ஒப்பனை”க்கார வீதி என்பது பொருத்தம். ஏன் ஒப்பணக்கார வீதி? விவரம் தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.

அதே போல டாக்டர் சுண்டக்கா முத்து ரோடு என்று பெயர் பார்த்ததாகவும் நினைவு.

ஈஷா தியான மையம் கோவையின் மிகப்பெரிய கருப்புப் புள்ளி என்பது என் கருத்து. ஆக்கிரமிப்பு என்னும் அட்டூழியம் ஒரு பக்கம் இருக்க, வாசலிலேயே எடுத்தெறிந்து பேசும் காவலாளி. கைதட்டி சொடக்குப் போட்டு வந்தவர்களை அழைக்கும் உதவியாளர்கள். ரிசார்ட் போன்ற உணவு விடுதி. இது போன்ற போலி மடங்கள் அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருப்பதால் அவைகளை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. கோவை மக்களாலும் என்ன செய்ய முடியும்!

காந்திபுரம் நாலாவது தெருவில் இருக்கும் ஹரி பவன் சுவையான அனுபவம். கூட்டம் அள்ளிக் குவிகிறது. தெருவுக்குள் நுழையும் போதே பிரியாணி வாடை மூக்கைச் சீண்டுகிறது. நாக்கைத் தூண்டுகிறது. சீரகச் சம்பா அரிசி பிரியாணி அருமை. அசைவ விரும்பிகளுக்குக் கோவையில் சிறந்த சரணாலயம் ஹரி பவன். ”குடல் காலி. மூளை வேணுமா?” போன்ற வசனங்கள் சாதாரணம். பீளமேட்டிலும் கிளை இருக்கிறதாம்.

அதே போல கலந்து கொண்ட திருமணத்திலும் தினையரிசிச் தயிர்சாதம், பலாக்காய் பிரியாணி, காளான் குழம்பு, முழுப்பாசிப் பயிறு பருப்பு என்று விதவிதம். காளானைக் கரண்டியால் அள்ளி இலையில் இட்ட பரிமாறியவருக்கு நன்றி. I am foodie. Not by quantity. But by quality and variety. 🙂

மருதமலையில் அருமையான வழிபாடு. கூட்டம் நெருக்கித் தள்ளாமல் ஜருகண்டி கேட்காமல் முருகனை அருகிலிருந்து ரசிப்பதுதான் எவ்வளவு சுகம்! கீழேயிருந்து மலைக்குப் படி வழியாகத்தான் ஏறினேன் என்று சொல்ல வேண்டுமா! புதிதாகக் கட்டியிருக்கும் கோபுரம் அழகு! அதில் மீசை வைத்த முருகன் சிற்பம் இன்னும் அழகு!

பேரூர் கோயிலிலும் நல்ல வழிபாடு. பேரூர்க் கோயில் சிற்பங்கள் மிகப்புகழ் வாய்ந்தவை. சாமி சிற்பங்களை விடுங்கள். ஆடையில்லாத பெண், காதலரின் கூடல், காதலியை முத்தமிடும் காதலன் என்று சிற்பங்கள் அட்டகாசம். இது வரை போய்ப் பார்க்காதவர்கள் மறுபடியும் சென்று பார்த்து விடுங்கள். ஹிஹி.

கோவையில் சாலைகள் குறுகலானவை. இரண்டு பேருந்துகள் எதிரெதிர் வரும் போது சற்று நிதானித்துத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. கோவை ஓட்டுநர்களுக்குப் பழகிப் போய்விட்டது போல.

தெகிடி திரைப்படம் பார்த்தேன். ப்ரூக்ஃபீல்டு மாலில் தான். படம் தீயாய் இருக்கிறது. விறுவிறு திரைக்கதை. சுறுசுறு பின்னணி இசை. பரபர மர்மங்கள். மொத்தத்தில் படம் பட்டாசு.

ஜில்லா புகழ் மோகன்லால் நடிக்கும் வெற்றிமாறன் என்று ஒரு மலையாள டப்பிங் பட போஸ்டர். அதைப் பார்த்தால் மோகன்லால் தற்கொலை முயற்சியில் இறங்குவது உறுதி. எந்தப் படத்தின் டப்பிங் அது?

கோவையில் ரசித்த இடம் சினாக்ஸ் ஸ்டிரீட். ஆர்.எஸ்.புரத்தில் தாஸா உணவகத்துக்கு அருகில் இருக்கும் சிறிய சாப்பாட்டுக் கடையில் உள்ளமைப்பு செம. செம. டிபன் ஐட்டங்களும் அட்டகாசம். மலையாளிகள் நடத்தும் கடை என்று நினைக்கிறேன். நிறைய மலையாள வாடை (சாப்பாட்டில் அல்ல). கோவையில் பொதுவாகவே மலையாளிகள் நிறைய என்பது எளிதாகத் தெரிகிறது.

மொத்தத்தில் கோவை காயல்ல. கனி.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பயணம் and tagged . Bookmark the permalink.

10 Responses to கோவை காயல்ல

 1. irquiz365 says:

  ’செ.ம.வேலுச்சாமி’
  ‘சுண்டக்காமுத்தூர் ரோடு’

  ஒப்பண – தான்.. இப்பத்தான் ஒப்பனை’யும் சேர்ந்திடுச்சு.
  விஜயநகர பேரரசுகாலத்தில் ‘பணம் ஒப்புவிக்கும்’ பலிஜாநாயுடுகளின் குடியிருப்பு வீதி ‘ஒப்பணக்காரர்’ வீதி

  • GiRa ஜிரா says:

   செ.ம.வேலுச்சாமி என்று மாற்றி விட்டேன்.

   ஒப்பணக்காத வீதிக்கு விளக்கம் அருமை. இதுக்குதான் விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கனும்னு சொல்றது. நன்றி 🙂

 2. amas32 says:

  உங்களை ஒரு மாதமாக மிஸ் பண்ணின சோகம் இந்தப் பதிவைப் படித்ததும் தீர்ந்து விட்டது 🙂 கோவைக்காரர்கள் கூட இவ்வளவு அருமையாக அவர்கள் ஊரைப் பற்றி எழுதியிருக்கமாட்டார்கள். ஆனால் எப்பொழுதுமே வெளியூரில் இருந்து வருபவர்கள் தான் இந்த மாதிரி கவனித்து எழுதமுடியும் 🙂

  ஈஷா மையம் பற்றி சொல்லியிருப்பது முற்றிலும் உணமை. அங்கு போய் வந்து வெறுத்துவிட்டேன்.

  “I am not a foodie” :-))

  amas32

  • GiRa ஜிரா says:

   வாங்கம்மா. நீங்க வந்ததும் கம்பன் வகுப்பில் களை கட்டீரும். காத்திருக்கிறோம்.

   இருந்தது ரெண்டு நாளு. அதுல கண்ட கேட்ட அனுபவங்களைப் பகுந்துக்கிறதும் சுகம் தான. அதான்.

   ஈஷாவை இன்னமும் நம்புறவங்க இருக்காங்க பாருங்க. அவங்களச் சொல்லனும்.

 3. ஓஜஸ் says:

  பட்டாசு பதிவு… Wikipediaயால கூட இந்த தகவல்கள் எல்லாம் போடலாம் 😉

  ஓ பணக்காரர்கள் ! என்று தோன்றுவதால், அடக்கத்துடன், சத்தம் இல்லாமல் ஒ’ப்பணக்கார தெரு போலும் #சும்மா :p

  • GiRa ஜிரா says:

   ஒப்பணக்கார வீதிக்கு பின்னூட்டத்துல விளக்கம் வந்திருக்கே. ஆச்சரியமான வரலாற்றுத் தகவல்.

   விக்கில இந்தப் பதிவில் இருக்கும் விவரத்தையெல்லாமா போடுவாங்க? 🙂

   • ஓஜஸ் says:

    போட்டா, கோவை போறவுங்க சரியான இடத்தில, செமையான உணவை ருசிக்கலாம் என்ற நல்லெண்ணம்தானுங்கோ !

 4. Pandian says:

  அற்புதம் அற்புதம். மருதமலையான் அருள் பெற்றீர்கள் போல.

 5. கோவை சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன. கோவையின் சீதோஷ்ணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.மருதமலை மீது ஏறிச்சென்றதும், வழியில் மயில் ஆடக் கண்டதும் நினைவு வருகிறது. ஈஷா பற்றி எழுதியமைக்கு நன்றி.
  கோவை வலம் மனதுக்கு நிறைவு.

 6. ammuthalib says:

  சூப்பர் ரைட்டப் ஐ சே.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s