ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்…

உலகத்தில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பைபிள் என்கிறார்கள். தமிழில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பொன்னியின் செல்வன் என்று யோசிக்காமல் சொல்லலாம்.

அந்தப் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் படித்துப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

அந்தப் புதினம் நாடகம் ஆனால்… ஆகுமா? ஆக்கத்தான் முடியுமா?

முடிந்திருக்கிறது. மேஜிக் லேண்டர்ன் குழுவினரால் சிறப்பாக முடிந்திருக்கிறது.

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் பார்வையாளர்கள் அடித்துச் செல்லப்பட்டோம் என்பதுதான் உண்மை.

பொன்னியின் செல்வன் என்று கதைக்குப் பெயர். பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் இராஜராஜ சோழ அருள்மொழிவர்மன் தான் அந்தக் கதைக்குச் சொந்தக்காரன்.

ஆனால் அவனில்லை கதாநாயகன். முதற்பாகம் முடிந்து இரண்டாம் பாகம் தொடங்கும் போது “நமது கதாநாயாகன்” என்று கல்கியாலே ஒப்புக் கொள்ளப்பட்ட வந்தியத்தேவன் தான் உண்மையான கதாநாயகன். கதை தொடங்குவதும் அவனோடுதான். முடிவதும் அவனோடுதான்.

அந்த ஒரு பாத்திரம் மட்டும் சொதப்பி விட்டாலே மொத்த நாடகமும் சொதப்பிவிடும்.

ஆனால்.. வந்தியத்தேவனாக ஸ்ரீகிருஷ்ண தயாள் அறிமுகம் ஆகும் போது எழுந்த கைதட்டல்களே சொல்லிவிட்டது மக்கள் அவரை வந்தியத்தேவனாக ஏற்றுக்கொண்டதை.

அப்படியே மணியம் வரைந்த ஓவியத்தில் இருப்பது போலவே முடியலங்காரம். துறுதுறுப்பு. விறுவிறுப்பு. நல்ல நடிப்பு. அப்பாடி… எம்.ஜி.ஆர், கமல், விஜயெல்லாம் வந்தியத்தேவனாக நடிக்கவில்லை. எவ்வளவு நிம்மதி.

ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் நீட்டி முழக்காமல் பேச்சு வழக்கிலேயே என் கருத்துகளைக் கொடுக்கிறேன்.

எங்க போனாலும் சண்டை போடுறதுக்கு யாராச்சும் இருப்பாங்க. சரியா நாடகம் தொடங்கப் போறப்போ வாசல்ல ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு கிய்ய்யா கிய்யான்னு கத்துச்சு. ஒரு நடுவயசுக்காரரு ஏதோ சொல்லிச் சமாதானப்படுத்துனாலும் அந்தப் பொண்ணு கேக்காம விறுவிறுன்னு மேடை ஏறிடுச்சு. அப்புறந்தான் தெரிஞ்சது அவங்க ரெண்டு பேரும் நாடகத்தை நகர்த்த உதவும் நல்லன் நல்லை பாத்திரங்கள்னு. ரெண்டு பேரும் நல்லா நடிச்சிருந்தாங்க.

நந்தினியா நடிச்ச மீரா கிருஷ்ணமூர்த்தி அட்டகாசம். அந்தக் குரல் போதும். கதையைப் படிச்சவங்களுக்கு “முகஸ்துதி” வசனம் நல்லா நினைவிருக்கும். அந்தக் காட்சியெல்லாம் வாய்ப்பே இல்லாத அளவுக்கு கலகல. ஆதித்தகரிகாலன் சாகும் காட்சியில் நந்தினியின் நடிப்பு உச்சம்னு சொல்ல எனக்கு இல்லை அச்சம்.

குந்தவையா நடிச்ச ப்ரீத்தி ஆத்ரேயாவும் நல்லா நடிச்சிருந்தாங்க. என்ன.. அப்பப்ப வானத்தீ வானத்தீன்னு கூப்புடுறப்போ மட்டும் வித்யாசமா இருந்தது. ஆனா வந்தியத்தேவனோட காதல் காட்சிகள்ள கலக்கீட்டாங்க. வானதி பாத்திரத்தை அளவாப் பயன்படுத்தியிருந்தாங்க.

ஆனா.. கலக்குனது என்னவோ பூங்குழலிதான். “அவரிடம் சமுத்திரகுமாரியைத் தெரியுமா என்று கேள்”னு வந்தியத்தேவன் கிட்ட சொல்றப்பவும்.. அருள்மொழிவர்மன் வானதிக்குதான்னு தெரிஞ்சு வருத்தப்படும் போதும்.. அத்தை மந்தாகினி இறந்த போதும்… அட்டகாசம். அட்டகாசம். பின்னீட்டீங்க காயத்ரி ரமேஷ். அதுலயும் அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன் பாட்டு.. செம.

பொன்னியின் செல்வனா ஸ்ரீராம் நடிச்சிருக்காரு. பொன்னின் செல்வனா வெள்ளை வெளேர்னு இருந்தாரு. ஆனா தமிழ்நாட்டு மக்களுக்குக் கதாநாயகன் ரொம்ப வெள்ளையா இருந்தாப் பிடிக்காதே. அதுலயே மாநிறந்து வந்தியத்தேவன் லேசுல முந்தீட்டுப் போயிர்ராரு.

பசுபதியைப் பத்திச் சொல்லலைன்னா… கல்கியே கோவிச்சுக்குவாரு. ரெண்டே காட்சிகள்தான். மொதல்ல கடம்பூர் சம்புவரையர் அரண்மனைல எல்லாரையும் தாறுமாறா பேச்சுல கலக்கும் காட்சி. அடுத்து நந்தியோட பேசிட்டு ஆபத்துதவிகள் கையால உயிரை விடும் காட்சி. மத்த எல்லாரையும் அப்படியே ஒரு கைப்பிடியில தூக்கிச் சாப்டுட்டாரு. பார்வையாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி.

ஆழ்வார்க்கடியனைப் பத்திச் சொல்லாம இருக்க முடியுமா? கல்கி எழுதுன மாதிரி குள்ளமா தண்டியா இல்லாட்டியும் ஹான்ஸ் கவுஷிக் நல்லாவே நடிச்சிருந்தாரு. அதுலயும் குறிப்பா அறிமுகக் காட்சி… மகாவிஷ்ணுவே பெரிய தெய்வம்னு அவர் வாதம் பண்றப்போ தூள் பறத்தீட்டாரு. ஆனா அடுத்து வந்தியத்தேவன் வந்து அரியையும் சிவனையும் முழம் போட்டு அளந்து பாத்ததாச் சொல்றப்போ நம்மளையும் அறியாம வந்தியத்தேவன் கட்சில சேந்துர்ரோம்.

ஆதித்தகரிகாலனைக் கொன்னது தானில்லைங்குற உண்மையப் பொன்னியின் செல்வன் கிட்ட பெரியபழுவேட்டரையர் சொல்லிட்டு வந்தியத்தேவன் குந்தவை காதலாலதான் பொய் சொல்றேன்னு சொல்லீட்டு உயிரை விடும் காட்சி அபாரம். என்னதான் சொல்லுங்க… வந்தியத்தேவன் குந்தவை காதலை நினைச்சாலே புல்லரிக்குது. மறுபடியும் அந்தக் காட்சிகளை வாசிக்கனும்.

கதைல வர்ர பல பாத்திரங்கள் நாடகத்துல வரலை. குறிப்பா மணிமேகலை. ஆனா அது தெரியாத மாதிரி கதையைக் கொஞ்சம் மாத்தி எடுத்திருந்தாங்க. மலையமான் மகள், கருத்திருமன்னு நெறைய துணைப்பாத்திரங்கள் வரல. ஆனா நாடகத்துல அந்தப் பாத்திரங்கள் வரத் தேவையே இருக்கல.

பொதுவாப் பாத்தா.. நாடகத்துல ஒரு காட்சி முடிஞ்சதும் விளக்கணைச்சு பின்னாடி திரைய மாத்தி டேபிள் நாற்காலியெல்லாம் கொண்டு வந்து வெச்சு விளக்கப் போட்டுன்னு ஒரு இம்சை இருக்கும். பொன்னியின் செல்வன்ல அதெல்லாம் இல்லவே இல்ல. சினிமா மாதிரி இடைவெளி இல்லாம காட்சி மாற மாற பின்னணியை அவ்வளவு அழகா மாத்துனாங்க. அரங்க வடிவமைப்பு செஞ்ச தோட்டா தரணி சார்… கலக்கீட்டீங்க.

கதைல மனுசங்க மட்டும் வரல. முதலை யானையெல்லாம் வருது. அதுலயும் வானதியும் பூங்குழலியும் யானை மேல ஏறிப் போகும் போது அரங்கமே அதிருதுல்ல.

அதே மாதிரி.. ஒரு காட்சி நடக்குறப்போ பின்னாடி இருக்கும் பாத்திரங்கள் சும்மாவே இருக்குறதில்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலை செய்றாங்க. ஒரு பாத்திரம் பூமுழம் போடுது. இன்னொன்னு வாழப்பழம் சாப்புடுது. ரெண்டு மூனு பேர் உக்காந்து பேசுறாங்க. ஒருத்தன் நடக்குறான். ஒருத்தன் தூங்குறான். எந்தப் பக்கம் பாத்தாலும் எதாவது ஒன்னு நடக்குது. இதையெல்லாம் யோசிச்சுத் திட்டமிடுறது சாதாரண வேலையில்ல. நல்லாச் செஞ்சிருந்தாங்க.

பொன்னியின் செல்வன் கடல்ல காணாமப் போற எடத்துலதான் இடைவேளை. ”கப்பல்ல போன பொன்னியின் செல்வனைக் காணோம். அவரத் தேட பத்துப் பதினஞ்சு நிமிசமாவது ஆகும். அதுக்குள்ள சாப்புடுறவங்கள்ளாம் போய்ச் சாப்டு வந்துருங்க”ன்னு அறிவிச்சது செம காமெடி.

நம்ம மக்களும் முழு நாடகத்தையும் பாக்குற முடிவோட சாப்பாடு கட்டிக் கொண்டு வந்திருந்தாங்க. இடைவேளை வந்ததுமே புலி மாதிரி வெளிய பாஞ்சி போய் சேர்ல உக்காந்து மொளகாப்பொடில பெரட்டுன இட்டிலி, எலுமிச்சம்பழச் சாதம் துவையலோட, துளி ஊறுகாயோட தயிர்ச்சோறுன்னு வளைச்சுக் கட்டுனாங்க. இதெல்லாம் எப்படித் தெரியும்னா கேக்குறீங்க. எவ்வளவு வேலை இருந்தாலும் சாப்பாடுன்னா கண்ணும் மூக்கும் சரியாக் கண்டுபிடிச்சிரும்ல. அதுலயும் பசி வேற.

இப்படி அடுக்கடுக்கா அமுக்கிக் கிட்டிருந்தவங்கள உள்ள அனுப்ப பெரிய பழுவேட்டரையர் படைவீரர்களை அனுப்பி பொன்னியின் செல்வனக் கண்டுபிடிச்சிட்டாங்கன்னு சொல்லி அரங்கத்துக்குள்ள அனுப்புனாங்க. அது நல்லா ரசனையா இருந்தது.

குறை சொல்லனும்னா சொல்லலாம். ஆனா அதெல்லாம் தேவையில்ல. இவ்வளவு செஞ்சதே மிகப்பெரிய விஷயம். இதுல போய் உப்பில்ல ஒறப்பில்ல தொவர்ப்பில்லைன்னு சொல்றதெல்லாம் அதிமேதாவித்தனம்னு நெனச்சிக்கிற எண்ணங்குறது என் கருத்து. கல்கியின் விமர்சனத்தில் குறைகள் நெறையச் சொல்லிருந்தாலும் ”வாசிப்பை மீட்டெடுத்த வாசமலர்”னு சொன்னதே சிறப்புதான். புத்தகம் வேற. நாடகம் வேற. இதுவரை படிக்காதவங்களும் படிச்சா அவங்களுக்கும் நான் சொல்றது புரியும்.

முன்வரிசைல கனிமொழி உக்காந்திருந்தாங்க. அவங்களைப் பாத்து திருச்சி சிவா வந்து பேசிட்டுப் போனாரு. தனஞ்செயன் தம்பதிகள் வந்திருந்தாங்க. இன்னும் நெறைய பிரபலங்க வந்திருந்தாங்க. அவங்களையா நான் பாத்தேன். நாந்தான் நாடக அனுபவத்துல ஒன்றிப் போயிட்டேனே.

அடுத்து மதுரைலயும் கோவைலயும் நாடகம் நடக்கப் போகுது. அந்த ஊர் மக்கள் போய்ப் பாருங்க. ஒங்களுக்குப் பிடிக்குது பிடிக்கலைங்குறதையும் மீறி இந்த முயற்சிகளை ஆதரிக்கனும். அப்பத்தான் அடுத்து எடுத்துச் செய்றவங்க இன்னும் மெருகேத்துவாங்க.

மொத்தத்துல ஒரு வரில சொல்லனும்னா.. பார்த்தாலே பரவசம் நிலைல தான் நான் இருந்தேன்.

பின்குறிப்பு – முந்தி பொன்னியின் செல்வனைச் சினிமாவா எடுத்திருந்தா அதுல என்ன மாதிரி பாட்டுகள் வெக்கலாம்னு ஒரு நகைச்சுவைப் பதிவு போட்டிருந்தேன். அத இங்க போய் படிச்சிருங்க ஒருவாட்டி. விளம்பரந்தான் 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in நாடகம், புத்தகங்கள் and tagged , . Bookmark the permalink.

4 Responses to ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்…

 1. Sharmmi Jegan says:

  விமர்சணம் அருமை.. படங்கள் ஏன் போடவில்லை.. பாத்திரங்களை பார்க்க ஆவலாக உள்ளது..

  • GiRa ஜிரா says:

   படங்களை எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு 🙂

  • ஓஜஸ் says:

   செல் போன், கேமரா எல்லாம் உள்ளே எடுத்து செல்லவோ பயன்படுத்தவோ தடை என்று விளம்பரத்தில் பார்த்த ஞாபகம் !

 2. எத்தனையோ தடவை படிச்ச பொன்னியின் செல்வனை திரும்பவும் படிக்கணும்னு தோணுது. பெங்களூரில நாடகம் போட்டா நல்லா இருக்கும்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s