ஆண்டொன்று போனால்.. வயதொன்று குறையும்..

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்பதுதான் பழமொழி. ஆனால் சென்ற ஞாயிறு (03-ஆகஸ்ட்-2014)ல் வயதொன்று குறையக் கண்டோம்.

ஆம். சென்னைக் கம்பன் கவிமன்றம் தொடங்கி ஓராண்டுகள் முடிந்தன. 2013ம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி தொடங்கிய இந்தத் தமிழ்ப் பயணம் ஓராண்டைக் கடந்துள்ளது.

நண்பர் நாகாவுடன் பேசும் போது தோன்றிய சிறு பொறி போன்ற எண்ணம் பலப் பல நண்பர்களால் செயல் வடிவம் பெற்று இன்று சென்னைக் கம்பன் கவிமன்றமாய் நிமிர்ந்து நிற்கிறது. அதற்காக நண்பர் நாகாவுக்கு (என்.சொக்கன்) என்னுடைய மனமார்ந்த நன்றியைக் சென்னைக் கம்பன் கவிமன்றம் சார்பாகச் சொல்லிக் கொள்கிறேன்.

இந்தக் கவிமன்றம் சிறந்து விளங்கக் காரணமாக இருந்த/இருக்கும்/இருக்கப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய சிரந்தாழ்ந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிப் பொதுவாக நன்றி சொன்னதோடு நிற்காமல் இந்தத் தமிழ் வேள்வியில் பங்கு கொண்ட நண்பர்களைப் பற்றிக் கொஞ்சமாவது சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தக் கவிமன்றம் நடத்துவதற்கு ஒரு இடம் வேண்டாமா? மனதில் மட்டும் இடம் கொடுத்தால் போதாது என்று தங்கள் மனையிலும் இடம் குடுத்த சுஷிமா அம்மாவுக்கும் சேகர் சாருக்கும் இந்தக் கட்டுரைச் சபையிலேயே கம்பன் கவிமன்றம் சார்பாக இனிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் சென்னைத் தமிழ்ச் சங்கம் இருப்பதும் கூடுவதும் சாலிகிராமத்தில் என்று சொல்வதும் பொருத்தமே. வகுப்பு இருக்கட்டும்.. ஒவ்வொரு வகுப்பிலும் இவர்களுடைய விருந்தோம்பலைப் போற்றிச் சொல்லவிட்டால் என்னுடைய வயிறு என்னை மன்னிக்காது. ஸ்னாக்ஸ் தாதா சுகீ பவ.

இந்த ஓராண்டு காலத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் எல்லாரும் சிலமுறைகள் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம். ஆனால் சுஷிமாம்மாவின் அம்மா மரகதம் அவர்கள் இல்லாமல் வகுப்பு நடந்ததே இல்லை. அவர்களின் ஆர்வம் எங்கள் தமிழ்ப் பயிர் வளர வேரில் ஊற்றிய தண்ணீர். இவர் எடுத்துச் சொல்லும் தகவல்கள் எக்கச்சக்கம். நாமெல்லாம் கணிணியில் கூகிளாண்டவர் துணையோடு தேடிப் படிக்கிறோம். ஆனால் இன்றளவும் புத்தகளில் தேடிப் படிக்கும் இவருடைய ஆர்வத்துக்குத் தலை வணங்குகிறேன்.

அனுபவமே பாடம். அப்படியான அனுபவமே ஒரு மனிதராக வந்தால்? அவர்தான் திரு.பிவிஆர். அவருடைய வாழ்வியல் அனுபவங்களும் பணியியல் அனுபவங்களும் அழகான எடுத்துக்காட்டுகளாய்ச் சபைக்கு வரும் போது படித்துக் கொண்டிருக்கும் கடினமான பாடலின் மையக்கருத்து மையப்பிணைந்த சோற்றைப் போல எளிதாக இறங்கும். அதே போல ஒவ்வொரு பங்கேற்பாளரையும் உரிமையோடு அழைத்து நகைச்சுவையோடு பேசும் பாங்கு அனைவரும் ரசிப்பது.

நாலுவரி நோட்டு நாயகன் மோகனகிருஷ்ணனை விட்டுவிட முடியுமா? அவரைப் பார்த்தாலே அவர் முகத்திலிருக்கும் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்ளும். கண்ணதாசனையும் வாலியையும் அழைத்துக் கொண்டு இவர் பாடம் சொல்லும் அழகை ரசிக்காதவர்களும் உண்டோ? கம்பனை எடுத்தாளாத கவிஞர்கள் தமிழ் சினிமாவில் இல்லை. அவர்கள் வரிகளைச் சொல்லி கம்பனை இன்னும் ரசிக்க வைக்கும் மோகனின் தமிழுக்கு வணக்கங்கள்.

திடீர் புளியோதரை மிக்ஸ் மாதிரி திடீர் பொறுப்பு கொடுக்கப்பட்டதும் தெறித்து ஓடாமல் எடுத்துச் செய்யும் வீரு என்னும் வீரபாகுவுக்குப் பாராட்டுகள். ஒரு முடியாத சூழ்நிலையில் எனக்குப் பதிலாக அடுத்த வாரத்துக்கான பாடல்களைத் தேர்வு செய்ய வேண்டிய அவசரநிலைக்குத் தள்ளப்பட்ட வீருதான் இன்று ஒவ்வொரு வாரமும் முத்து முத்தாகப் பாடல்களை எடுத்துக் கொடுப்பது. இது தொடரட்டும். அமைதியாகப் பேசும் வீருவின் குரல் வகுப்பில் எனக்குக் கேட்கததால் இனிமேல் வகுப்பில் ஒலிப்பெருக்கி வைக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 🙂

கம்பராமாயணம் தெரிந்தவர்களுக்கு மு.இஸ்மாயில் அவர்களையும் தெரிந்திருக்கும். சென்னைக் கம்பன் கவிமன்றத்திலும் மு.இஸ்மாயில் உண்டு. அதுதான் அப்துல் முத்தலிப். தமிழ்த் துருவி இவன். இதென்ன அதென்ன இதெப்படி அதெப்படி என்று துருவித் துருவிக் கேட்டுக் கொள்ளும் ஆர்வத்துக்கு ஒரு சலாம். பெயரிலேயே முத்தத்தை வைத்திருக்கும் இந்த முத்தலிப்பின் இளமை ததும்பும் கருத்துகளை வகுப்பில் நாங்கள் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

திடீரென்று ஒரு நாள் ஒரு சிறுவன் வந்தான். அவன் பெயர் கூட மனதில் எடுத்ததும் பதியவில்லை. அவனை டிவிட்டரில் தொடர்கிறோமா இல்லையா என்று தொடர் ஐயம். அவனுடைய ஐடி என்னவென்று அவனிடமே பலமுறை கேட்டிருக்கிறேன். அந்த மாய யட்சன் தான் பிரவீன். இதுவரை வகுப்பில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தவனுடைய கன்னிப்பேச்சு நடந்தது முதலாண்டுக் கொண்டாட்டத்தில். கொடுத்து வைத்தவனடா நீ.

”சாலிகிராமத்துலதான இருக்கேன். என்னதான் நடக்குதுன்னு பாக்க வர்ரேன்” என்று சொல்லி வந்தவன் ஆனந்த். வந்தவன் வந்தவன் தான். வராமல் போகமுடியாமல் இருக்கிறவன். ”என்னென்னவோ பேசுறீங்க. பெரிய விஷயங்களா இருக்கு” என்று முதலில் சொன்னவன் இரண்டு முறை வகுப்பெடுத்து விட்டான் என்பதுதான் பெருமையோடு நாம் சொல்லிக் கொள்ள வேண்டியது.

இவன் முணுமுணுத்தாலே ஊர் கேட்கும். வாய் திறந்து பேசினாலோ உலகமே கேட்கும். கணீர்க் குரல் சுதர்சனைத்தான் சொல்கிறேன். இந்திய நேரந்தவறாமையைத் தவறாமல் கடைப்பிடிக்கும் சுதர்சனிடம் எதையும் பேசலாம். அவனுடைய வேலை நேரத்தின் மாற்றங்கள்தான் இதற்குக் காரணம் என்றாலும் உரிமையோடு கிண்டல் செய்யலாம். தன்னுடைய அம்மாவையும் ஆண்டுவிழா வகுப்புக்கு அழைத்து வந்த சுதர்சன் நல்ல சன். இவனைப் பற்றி இவன் அம்மா பெருமையாகச் சொல்லும் போது அவர்கள் முகத்திலிருந்த மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே.. ஆகா.

அதிஷாவின் அட்டகாசங்கள் என்று ஒரு தனிப்பதிவுதான் போட வேண்டும். ஒவ்வொரு பாட்டிலும் ஒளிந்திருக்கும் உணர்ச்சியை வெளிக் கொண்டு வந்து ரசனையைக் கூட்டுவதில் இவர் நல்ல கூட்டாளி. அதிலும் யானைப்படைகளின் மேல் பறக்கும் கொடிகளைக் கடலலைகள் என்று மேகங்கள் ஏமாறும் காட்சியைப் பற்றிப் பேசும் போது இவர் சொன்னவைகளை வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இவர்கள் மட்டுந்தான் என்று இல்லை. வேதாள அர்ஜுனை விட்டு விட்டு எப்படிச் செல்ல முடியும். கவிமன்றத்துக்குக்கென்று ஒரு மெயில் ஐடியை உருவாக்கியவனே இவன் தான். இவனுடைய குறும்பு குமுறும் கருத்துகளுக்கும் கிண்டல்களுக்கும் இப்போது மன்றம் ஏங்கிக் கொண்டிருக்கிறது.

ச.ந.கண்ணனைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவே முடியாது. இவருடைய மெய்யான தமிழார்வம் இயல்பாக அவரைக் கவிமன்றத்துக்கு அழைத்து வந்தது. பணிப்பளுவினால் இப்போது அவரால் வரமுடியாது போனாலும் அவர் திரும்பவும் வருவார் என்று நாங்கள் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ராஜா க்விஸ் மாஸ்டர் டிசிஎஸ் பிரசன்னாவின் பிரசன்னத்தைச் சொல்லாமல் மேலே போக முடியாது. ஒருநாள் பேச வேண்டியவர் தவிர்க்க முடியாத நிலையால் வரவில்லை. படக்கென்று புத்தகத்தையும் பாடல்களையும் வைத்துக் கொண்டு பேசி முடித்ததைப் பாராட்டியே ஆக வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் வருகின்ற இவர் முதலாண்டு விருந்துக்கு வரமுடியாமல் போனது வருத்தந்தான்.

கவிஞர் நிரஞ்சன் பாரதி, நண்பர் திருமாறன், நண்பர் சிவா, ஐஐடி விஜய் என்று பணிப்பளு அழுத்த வரமுடியாத நண்பர்களும் உண்டு. யாருடைய பெயரையாவது நான் விட்டிருந்தால் என்னை மன்னிக்கவும். என்னுடைய மறதிதான் அதற்குக் காரணம்.

சரி. முக்கியமான கட்டத்துக்கு வருவோம். ஆண்டுவிழாவில் செவிச்சுவையோடு நாச்சுவைக்கும் விருந்து நடந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கொண்டு வர வகுப்புக்கு வந்தவர்களால் வகுப்பை விட்டுப் போக முடியாத நிலை. உண்ட மயக்கந்தான்.

சக்கப் பிரதமன் என்னும் பலாப்பழப் பாயாசம்
கொண்டைக்கடலை வடை
கருவேப்பிலைக் குழம்பு
அவியல்
பொரியல்
ஆந்திரா கத்தரிக்காய் தொக்கு (பெயர் மறந்துவிட்டது)
ரசம்
தயிர்சாதம்
அப்பளம்
சவ்வரிசி வடகம்
கூழ்வடகம்
நெல்லிக்காய் ஊறுகாய்
உருளைக்கிழங்கு பாதாம் அல்வா
நன்னாரி சர்பத்

ஒரேயொரு வயிறுதானே இருக்கிறது என்று வருத்தப்பட வைத்துவிட்டான் பிரம்மன். முன்பு இதே போல இராம இலக்குவ பரத சத்துருக்கனர்கள் பிறந்த போது விருந்தளித்து மகிழ்த்தி விட்டார் சுஷிமாம்மா. அதே போல ஆஞ்சனேயருக்கும் ஒரு பலகை போட்டு அவரையும் வரவழைத்து விட்டார்கள்.
KambanFeast
இன்னும் நிறைய நிறையச் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழைக் கொண்டு செல்வது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எங்கேனும் பொதுயிடத்தில் வகுப்பை நடத்துவது, ஒரு நாள் சுற்றுலா என்று திட்டங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாகச் செயல்படுத்த வேண்டும். எல்லாம் இறைவனருள்.

என்னுடைய மகிழ்ச்சியெல்லாம் என்ன தெரியுமா… தொடக்கத்தில் பாடலின் ஒவ்வொரு சொல்லும் கடினம் கடினம் என்று நினைத்தவர்கள் எல்லாரும் இன்று எளிமை எளிமை என்று சொல்லும் நிலைக்கு முன்னேறியிருப்பதுதான். ஒவ்வொரு சொல்லின் வேர்ச்சொல்லையும் நண்பர்கள் எடுத்து ஆராயும் போது என் உள்ளம் ஆனந்தம் கொண்டாடும்.

இந்தக் கவிமன்றத்து நண்பர்கள் கம்பன் கழகத்தில் பேசும் நாளும் வரும். வந்தே ஆகவேண்டும். என்னென்னவோ துறைகளில் இருந்து கொண்டு தமிழில் இவர்கள் செய்வதெல்லாம் மிகப்பெரிய வேள்வி.

நண்பர்களே, இது ஊர் கூடி இழுக்கும் தேர். நீங்களும் வாருங்கள். ஒன்றாய்ச் சேருங்கள்.

சென்னைக் கம்பன் கவிமன்றம் சார்பில்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இலக்கியம், கம்பராமாயணம், தமிழ். Bookmark the permalink.

13 Responses to ஆண்டொன்று போனால்.. வயதொன்று குறையும்..

 1. amas32 says:

  அருமையானக் கட்டுரை ஜிரா! இவ்வளவு அருமையாக எல்லாரையும் பற்றி எழுதினீர்கள் முக்கியமான ஒருவரைப் பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள்.

  எங்களை எல்லாம் ஈர்த்துக் கட்டிப் போட்டு, கம்பன் தமிழை சுவைக்க வைத்த முழுப் பெருமையும் ஜிராவையேச் சாரும். இதை எங்கள் குழுவில் உள்ள அனைவரும் ஒரு மனதோடு ஒப்புக் கொள்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

  இலக்கை நோக்கிச் செல்வதற்கு இறையருளோடு இவரின் பங்களிப்பும் தலையாயது. எல்லா புகழும் ஜிராவிற்கே என்பதை மகிழ்ச்சியோடு இங்கேப் பதிவிடுகிறேன் 🙂

  எங்கள் கம்பன் வகுப்பிற்கு இத்தருணத்தில் பல்லாண்டு பல்லாண்டு பாடி இன்னும் சீரும் சிறப்புமாக இவ்வகுப்புகள் நடைபெற எம்பெருமானின் அருளை வேண்டுகிறேன்.

  amas32

  • GiRa ஜிரா says:

   உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிம்மா. 🙂

 2. அட! இவ்ளோ நடந்துருக்கா!!! அதுவும் சென்னை சாலிக்ராமத்தில்!

  மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நவம்பர் முதல் வாரத்தில் இப்படி வகுப்புகள்/ஒன்றுகூடல் எதாவது இருக்குமென்றால் தகவல் சொல்லுங்கள். குறைந்தபட்சம் கவிமன்ற மக்களையாவது சந்திக்கலாம் என்ற ஆவல்தான்.

  • GiRa ஜிரா says:

   வாங்க டீச்சர். ஒவ்வொரு ஞாயிறும் கூட்டம் கூடிக்கிட்டுதான் இருக்கு. உங்கள் வருகை நல்வரவாகக் காத்திருக்கோம். வர்ரப்போ சொல்லுங்க. நானே கூட்டிட்டு வாரேன்.

 3. மழை!! says:

  நானும் ரொம்ப நாளா ஆசைப் படறேன்.. என்னமோ தெரியல இன்னும் வர முடியல.. “சுஷி”ம்மா கிட்ட முகவரி எல்லாம் வாங்கி வச்சுட்டேன்..
  திருப்பதி நாம போகணும்ன்னு ஆசைப்பட்டா முடியாதாம், சாமியும் ஆசைப்படனுமாம். 🙂 விரைவில் கலந்துக்குவேன் :))

 4. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். நீங்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள். மனதில் ஒரு ஏக்கம் வரவழைத்து தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விவரித்துள்ளீர்கள். வாழ்க வளர்க நன்றி 🙂

  • GiRa ஜிரா says:

   நன்றி நன்றி. தொடர்ந்து வரமுடியாட்டியும் எப்பப்ப முடியுதோ அப்பப்ப வாங்க 🙂

 5. அருமையானக் கட்டுரை!! Felt it in front of eyes.. Missing all ,,, but for a brief period only,,

 6. infoஸ்ரீ says:

  அய்யோ.! .இதைப்படித்த பின்பு, நான் சென்னையில் இல்லாததை எண்ணி, இலங்கை வேந்தனைப்போல் கலங்கி நின்றேன்.! :(((

 7. ஏ சூப்பருப்பா..

 8. uma chelvan says:

  அருமையான பதிவு. அங்கு இல்லையே என்ற வருத்தம் வருகிறது. மேலும் மேலும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s