மாலே Moneyவண்ணா

மாலில்லா ஊருக்கு அழகு பாழ்னு நவீன ஔவையார்கள் பாடாதது மட்டுந்தான் மிச்சம். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஊர்லயும் எத்தனையெத்தன மால்கள்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய மால்னு ஒரு மால் தொறப்பாங்க. அடுத்த பத்து மாசத்துல ஆசியாவிலேயே பெரிய மால்னு அடைமொழியோட இன்னொரு புதுமால் பிரசவிக்கப்படுது.

நமக்கெல்லாம் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்குறதுக்குள்ளயே நாக்கு மூக்கு வழியா வெளிய வந்துருது. இதுல இவ்வளவு பெரிய மாலை ஒருத்தன் கட்டுறான்னா அவன் எப்படிப்பட்டவன்னு யோசிச்சுப் பாருங்க.

இருக்கும் பணத்தப் போட்டு அவன் மால் கட்டுறதெல்லாம் சரி. ஆனா அந்த மால்ல நாமதான் நம்மகிட்ட இருக்கும் நல்ல பணத்தைச் செலவழிக்கனுங்குறது அநியாயங்க.

மாலுக்கு கேர்ள் பிரண்டத் தள்ளிட்டுப் போறவனுக்கு பர்சு மட்டும் பஞ்சராகுது. குடும்பத்தையே கூட்டீட்டுப் போறவனுக்கு பேங்க் அக்கவுண்டே பஞ்சராகுது.

ஐஸ்கிரிம் பிடிக்காதவங்க யாரு இருக்கா? முந்தியெல்லாம் ஐஸ்கிரிம்னா கோனைஸ் கப்பைஸ் தான். இந்தக் கடை மால்ல இருக்கும் நவீன ஐஸ்கிரீம் கடையாச்சே. ரெண்டு கரண்டி நெறைய ஐஸ்கிரிமை உருண்டைய உருட்டி எடுக்குறான். ஒவ்வொன்னும் ஒவ்வொரு கலரு. ரெண்டையும் கசாப்புக் கடைல கறி வெட்டுற மேடை மாதிரி ஒரு எடத்துல போடுறான். எதையெதையெல்லாம் கையக் காட்டுறோமோ அததுல எல்லாம் சாக்கோ சிப்ஸ், கேஷ்யூ, அல்மண்ட், பிஸ்டாச்சியோ, பல்லிமிட்டாய்னு கொஞ்சம் எடுத்துப் போடுறான். கடைசியா ரெண்டு ஓரியோ பிஸ்கட்டயும் போட்டு சப்பாத்தி மாவு பிசையுற மாதிரி பெசஞ்சு பெரிய கப்புல போட்டுத்தர்ரான்.

என்ன வெலைன்னு கேட்டா முந்நூத்தம்பதுங்குறான். நம்ம வீட்டுப் பிள்ளைகள்ளாம் ஒரு கப் வாங்கி ரெண்டு பேர் திங்குற மாதிரி சமாதானக் கொழுந்துகளாவா இருக்காங்க. ஆளுக்கொரு கப்புதான் வேணும்னு இஸ்ரேல்-பாலஸ்தீனம் மாதிரி அடம்.

அந்தக் கடைய முடிச்சிட்டு அப்படியே கிழக்க போய் வடக்க திரும்பி தெக்கால எறங்குனா… ஒரு துணிக்கடை. 50% வரை தள்ளுபடி விற்பனையாம். கூட்டம் அள்ளுது. அப்படியே நம்மளும் அன்ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட்டுல ஏறுற மாதிரி உள்ள நுழைஞ்சிறனும்.

அங்கதான் வானவில் வெறும் ஏழு நிறங்கள மட்டும் காட்டி நம்மள ஏமாத்துதுங்குற உண்மை தெரியும். ஒரு டீசர்ட்ன்னுன்னா அதே டிசைன்ல பேர் தெரியாத பத்து கலர்ல வரிசையா இருக்கும். இதுல ஒரு தொழில் இரகசியம் பாருங்க. ஆண்களுக்குப் பத்து நிறங்கள்ள இருந்துச்சுன்னா பெண்களுக்குக் குறைஞ்சது முப்பது நிறங்கள்ளயாவது இருக்கும்.

ரொம்ப நாளா விக்காமக் கிடைக்கும் நாலு பழைய துணிகளுக்குதான் அம்பது சதவீதம் தள்ளுபடின்னு இருக்கும். வேற எத எடுத்தாலும் “இதுல இல்ல டிஸ்கவுண்ட்”னு கவுண்டமணிக்கே கவுண்ட்டர் குடுப்பாங்க. இதுவும் தொழில் இரகசியமாக்கும்.

இதுல மூனாவதா வேற ஒரு தொழில் இரகசியம் இருக்கு. பெரியாளுகளுக்கான துணியை விட சின்னக் கொழந்தைங்க துணி விலை கூட இருக்கும். நமக்குப் பாத்துப் பாத்துக் குறைஞ்ச விலைல எடுத்தா… அதுல கொறச்சதையெல்லாம் கொழந்தைங்க துணியில கூட்டி வெச்சா நியாயமாரேஏஏஏ!

ஒரு பொருளுக்கு எப்படி வெலை வெக்குறாங்கன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது. சின்னவயசுல தரத்த வெச்சுதான் வெலைய முடிவு செய்வாங்கன்னு நெனச்சேன். காலேஜ் போறப்போ பிராண்டு வெச்சு வெலைய முடிவு செய்வாங்கன்னு நெனச்சேன். இப்பல்லாம் கைக்கு என்ன வருதோ அதத்தான் வெலையா ஒட்டுறாங்கன்னு தோணுது. பார்க்கர் பேனாவுக்கும் பேப்பர் நாப்கினுக்கும் ஒரே வெலைதான்.

மால்கள்ள எத்தன மாடிகள் இருந்தாலும் அத்தன மாடிகளுக்கும் மேல இருக்குற அந்த ஒரு மாடிக்கு மட்டும் போகவே கூடாது. அதையும் மீறிப் போனா வாழ்க்கைலயே மறக்க முடியாத பாடம் கெடைக்கும்.

இத்தாலிய அரேபிய தென்னிந்திய வடயிந்திய கேரள… தென்னிந்திய வேற கேரளா வேறையான்னு கேக்கக்கூடாது.. சாப்பாட்டுக் கடைகள் வரிசையா இருக்கும். நீங்க நேரா கடைக்குப் போய் ஆயிரம் ரூவாயை நீட்டி “டூ ஷவர்மாஸ் வித் கோக்”னு கேட்டாலும் ஒங்களப் பட்டிக்காட்டானாப் பாப்பாங்க.

மாலுக்கு மால் ஒரு கார்ட் வெச்சிருக்காங்க. இந்தக் கார்டுல மொதல்ல பணம் ஏத்தனும். அதுக்கு அங்கங்க கவுண்டர்கள் இருக்கு. அந்தக் கார்டைக் கொண்டு போய் கடைகடைல தேச்சு விரும்பியத வாங்கிச் சாப்பிட்டுக்கனும். ஐநூறு ரூவாய்க்கு நீங்க பணம் ஏத்தியிருந்து நானுத்துத் தொன்னுத்தஞ்சு ரூவாய்க்கு வாங்கித் தின்னிருந்தா மீதி அஞ்சு ரூவா ஒங்க கைக்கு வராது. கேட்டா, “இட்ஸ் லைஃப் டைம் வேலீட் கார்ட்”னு இங்கிலீஷ்ல சொல்வாங்க. அதாவது அடுத்த வாட்டி மாலுக்கு வரும் போதும் இதே கார்ட பயன்படுத்திக்கலாமாம்.

நம்மள்ளாம் வீட்டுச் சாவியையே மறக்குற ஆளுக. இந்தக் கார்டையா பத்திரமா எடுத்து வெச்சிருக்கப் போறோம். இதுல ஒரு கூத்து என்னென்னா.. ஒரு மால் கார்டு இன்னொரு மாலுக்கு ஆகாது. இரத்தமெல்லாம் ஒருத்தர் ஒடம்புக்கும் இன்னொருத்தர் ஒடம்புக்கும் ஒத்துப் போகுதா? அது மாதிரிதான்.

அஞ்சு ரூபாய்க்கா இந்தப் பாடுன்னு நீங்க கேக்குறீங்க. ஒரு கார்டுல அஞ்சு ரூவா திருடுறது தப்பா? ஒரு நாளைக்கு மாலுக்கு வந்த எல்லார் கார்டுலயும் அஞ்சு ரூவா திருடுறது தப்பா? ஒரு வாரத்துல மாலுக்கு வந்த எல்லார் கார்டுலயும் அஞ்சு ரூவா திருடுறது தப்பான்னு ஏத்திக்கிட்டே போங்க. அந்த அஞ்சு ரூவாய்கள வெச்சு நாமே ஒரு மால் கட்டலாங்குற உண்மை புரியும்.

இரத்தக்கண்ணீர் வரவைக்கும் இந்தக் கொடூரத்தையெல்லாம் யோசிக்காம திங்குறதுக்கு எதாச்சும் வாங்குனா, அதை உக்காந்து திங்க எடமிருக்காது. அப்படியே எடம் பிடிச்சாலும் நாம எப்ப எந்திருப்போம்னு நம்ம தட்டையே ஒரு கூட்டம் பாத்துக்கிட்டு இருக்கும். ஒருவகைல மால்க்காரன் நல்லவன். அந்த எடத்துலயும் நாலு கடையப் போடாம, டேபிள் சேர் போட்டு வெச்சானே.

திங்குற இடம் இப்படின்னா.. அவசரத்துக்குப் போற எடம் இன்னும் கொடுமை. ஏசியப் போட்டு லைட்டப் போட்டு சீரியல் செட் போட்டு பண்டிகைக்குப் பண்டிகை விஜய டி.ராஜேந்தர் செட்டு போட்ட மால்க்காரன் டாய்லட்டுல டாய்லட் பேப்பர் வெச்சிருக்க மாட்டான். அட.. கொழாய்ல தண்ணி ஒழுங்கா வருதான்னு பாத்தா… நாலு குழாய்க்கு ஒரு குழாய்ல அரைகுறையா வரும். இதுதான் முகத்தை முப்பது வாட்டி கழுவுன மோகனா காலைக் கழுவாம விட்ட கதை.

எல்லா மால்கள்ளயும் ஒரு பெரிய மளிகைக்கடை இருக்கும். நீங்க எதெல்லாம் வேண்டாம்னு நெனைக்கிறீங்களோ அதெல்லாம் குறைஞ்ச விலைக்கும்… எதெல்லாம் வேணும்னு நெனைக்கிறீங்களோ அதெல்லாம் மத்த எடங்கள்ள என்ன விலையோ அதே விலைக்கும் கிடைக்கும். வேண்டியது கால் வேண்டாதது முக்கால்னு கார் டிக்கியை மாசாமாசம் நிரப்பிட்டுக் கெளம்பும் கூட்டத்தையும் அங்க பாக்கலாம்.

சினிமா பாக்கனும்னாக் கூட மாலுக்குப் போனாப் போதும். டிக்கெட் நூத்துஇருபது ரூவாதான். நெட்ல பதிவு செஞ்சா ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கூட முப்பது ரூவா கன்வீனியன்ஸ் சார்ஜ். சரின்னு மனசத் தேத்திக்கிட்டுப் படம் பாத்துட்டுக் கெளம்புறப்போ ஒரு ஆப்பு வெப்பான் மால்காரன். டூவிலர்னா ஒரு மணிநேரத்துக்கு அம்பது ரூவா பார்க்கிங். கார்னா ஒரு மணிநேரத்துக்கு நூறுரூவா பார்க்கிங். ஒரு நொடி கூடிருச்சுன்னாக் கூட அடுத்த ஒரு மணி நேரத்துக்கும் காசப் புடுங்காம விடமாட்டாங்க. படத்துக்கு டிக்கெட் ரூ.120ன்னா பார்க்கிங் டிக்கெட் ரூ.200. காராயிருந்தா ரூ.400.

அட.. காரே வேண்டாய்யான்னு ஆட்டோல போய்ப்பாருங்க ஒரு வாட்டி. மால்ல இருந்து வெளிய வரும்போதே ஆட்டோக்காரன் ஒன்னுக்கு மூனா ஆட்டோ சார்ஜ் கேட்டா என்னதாய்யா பண்ணுவான் மாசச்சம்பளக்காரன்? நாலு கடை தள்ளிப் போய்தான் ஆட்டோ ஏறுவான். அப்பத்தான மீட்டருக்கு ஆட்டோ வரும்.

என்ன… செலிபிரிட்டி செலிபிரிட்டின்னு சொல்ற பிரபலங்களும் அந்த மாலுக்கு வருவாங்க. அவங்களோட ஏழை பாழைங்களும் மத்தியதரக் குடும்பங்களும் ஒரே கூரைக்குக் கீழ சுத்துறது சுகமாத்தான் இருக்கும். இதையெல்லாம் புலியப் பாத்து பூனை சூடு போட்ட கதைன்னு சொல்லக்கூடாது. கழுதையப் பாத்து கருங்குரங்கு பொதிசுமந்த கதைன்னு சொல்லனும்.

மாலைப் புகழ்ந்து தமிழ்மாலை பாடிய ஆழ்வார்கள் இன்னைக்கு இருந்திருந்தா Mallஏ Moneyவண்ணான்னுதான் பாடியிருப்பாங்க.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in நகைச்சுவை, பொது. Bookmark the permalink.

6 Responses to மாலே Moneyவண்ணா

 1. ஓஜஸ் says:

  மிகவும் அருமையான பதிவு, சரியாக எழுதி இருக்கீங்க, கொஞ்சம் கூட மிகைமை இல்லாம, நகைச்சுவையுடன, எதார்த்தமா இருக்கு. சபாஷ். வாழ்த்துக்கள். Mallலை பற்றி நீங்கள் கேட்ட கேளிவில் / சிந்தனைகள் பலவும், எனக்கும் உண்டு !

  முதல் வரியை படித்துவுடன், திருமால் இருக்கும் திருத்தலங்களை பற்றி தான் என்று நினைத்தேன். 😀

 2. Pandian says:

  இவனுகள என்ன தான் பண்ணுறது. எனக்கு முடியவே முடியாத விசியம் இந்த கார்டு கலாச்சாரமும் பார்க்கிங் கட்டணமும். பகல் கொள்ளை.

 3. amas32 says:

  புட்டு புட்டு வெச்சுட்டீங்க! ஒரு நடுத்தரவர்க்க குடும்பத் தலைவன் குடும்பத்தோடு இந்த மாதிரி மாலுக்கு வந்தால் அவன் ஒரு மாதச் சம்பளம் ஹோ கயா என்றால் மிகை ஆகாது!

  amas32

 4. இந்த மாதிரி அப்பப்போ சிரிக்கிறமாதிரி (அப்படியே சிந்திக்கிற மாதிரி!) எழுதுங்க.. படிக்க ஏதுவான நடை.. தடையில்லாமல் ஒரே மூச்சில் படிக்க நல்லாருக்கு…!

 5. சூப்பர் !!! இங்கே நாங்களும் குளிர்காலத்துலே வாக் போக மாலுக்குத்தான் போறோம். மால் வாக் 🙂 என்ன ஒன்னு இங்கெல்லாம் ஃப்ரீ பார்க்கிங்தான் மால்களில்.

  எங்கூர் மால்களில் கார்ட் வாங்கிக்கிட்டுத்தான் தின்னணும் என்றெல்லாம் இல்லை. இந்தியாவில் மட்டும் கொள்ளை அடிக்க விதவிதமாய் வழிகள் கண்டு பிடிச்சுக்கறாங்க 😦

  இன்னும் சிலர் காலையில் மால் திறந்ததும் வந்துட்டு, மாலை மால் மூடும்போதுதான் வீட்டுக்குப் போவாங்க. உள்ளே எப்போதும் ஹீட்டர்ஸ் ஓடுவதால் வெளியே இருக்கும் குளிருக்கு உள்ளே இதமா இருக்கும். மேலும் வீட்டில் இருந்தால் கரண்ட் பில் அதிகமாக ஆகிடுமேன்னுதான் இப்படியாம்.

  மால் அருகில் வீடு இருந்தால் சொர்கம் !

  • GiRa ஜிரா says:

   அங்கயும் அதே கூத்துதானா? பார்க்கிங்குக்கு காசு உண்டா?
   நம்மூர்ல காசு பாக்கனும்னு முடிவு செஞ்சிட்டா ஏமாத்த கோடி வழி.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s