ஏறுமுத்தமிழ் ஞானவித்தக..

வழக்கமாக எழுதும் நகைச்சுவை, இலக்கியம், விமர்சனங்களிலிருந்து மாறுதலுக்கு ஒரு பக்திப் பதிவு.

”எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் நெஞ்சத்தில் ஆடவில்லையே முருகா! நெஞ்சத்தில் ஆடவில்லையே” என்று டி.எம்.சௌந்தரராஜன் பாடியது ஒருவகையில் எனக்கும் பொருந்தும்தான்.

அப்படியிருக்கும் போது ஒரு அழகான வெண்பாவை முருகன் மீது எழுதிக் கொடுத்தால் நான் ரசிக்காமல் என்னதான் செய்ய முடியும்?

வெண்பா விளையாடும் நண்பர் நாகா எழுதிய பாவைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

வேலவா, வள்ளியெனும் வெள்ளிமயி லாள்விழி
வேலவா கொள்ள விருந்தானாய், கோலயெழில்
கொற்றவா, எம்குலக் கோமானே, வேண்டினேன்
மற்றவா இல்லா மனம்

படித்து மகிழ்வதற்கேற்ற எளிமையான பாடல்.

வள்ளியைச் சொல்லாமல் முருகனை யாரும் பாடுவார்களா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு சங்க இலக்கியம் முதலே முருகன் வள்ளி பாடப்பட்டிருக்கிறது.

”பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா” என்று அருணகிரியும் கூப்பிட்டிருக்கிறாரே.

அப்படிப்பட்ட வள்ளி வெள்ளிமயிலாம். அந்த வெள்ளிமயிலாளின் விழி வேலுக்கு அவா(ஆர்வம்) கொண்டவன் வேலவன்.

வேலவா = விளிப் பெயர் (முருகனை அழைக்கும் பெயர்)
வேலவா = வேல் + அவா (வேல் மீது ஆவல் கொண்டவன்)

முருகன் என்றாலே வேல்தானே. பிறகென்ன வேல் மீது ஆவல்.

இதுவும் கொல்லும் வேல்தான். வெல்லும் வேல்தான். ஆனால் உயிரை கொல்வதும் வெல்வதும் அல்ல. முருகன் உள்ளக் காதல் வேதனையைக் கொல்லும் வேல். முருகனின் அன்பை வெல்லும் வேல். அதுதான் வள்ளி என்னும் வெள்ளிமயில் விழிவேல். அந்த வேல் மீதுதான் முருகனின் ஆவல்.

வள்ளிக் கண்ணுக்கு ஆர்வம் கொண்டு கிழவனாய் வந்தான் முருகன். விருத்தன் என்ற வடமொழிச் சொல் வயதாவனன் என்று பொருள் கொடுக்கும். அதைச் செய்யுளுக்காக விருந்தன் என்றும் கொள்ளலாம். இதற்கு இலக்கணக் குறிப்பும் உள்ளது. சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

இன்னொரு பொருளில் எடுத்தால் வெள்ளிமயில் வள்ளிக் கண் மேல் ஆவல் கொண்டு விருந்துண்ண வரும் வேலவன் என்றும் கொள்ளலாம்.

இப்படியான முருகனிடம் ஒரு வேலை ஆகவேண்டியிருக்கிறது. கொஞ்சம் புகழ்ந்துவிட்டு வேண்டியதைக் கேட்கலாமே.

கோலயெழிற் கொற்றவா! எம் குலக்கோமானே! வேண்டுகிறேன் உன்னை. மற்று அவா இல்லாத மனம் தருவாய்!

கிட்டத்தட்ட பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று அருணகிரி பாடியதுதான்.

“பிறவாத மனம் வேண்டும். என் பிழையாலே நான் மீண்டும் பிறந்துவிட்டால் உன்னை மறவாத மனம் வேண்டும்” என்று கவியரசர் எழுதியது நினைவுக்கு வருகிறது.

முன்பொருமுறை முருகன் மீது நானும் சில வரிகள் எழுதினேன். பா வகையில் எல்லாம் வராமல் சும்மா சொற்களை அடுக்கி எழுதியது. நாகா எழுதிய பாடல் உந்த இதையும் பதிவில் இட்டுவிட்டேன். ஏற்றமும் குற்றமும் முருகனுக்கே!

ஏறுமுத்தமிழ் ஞானவித்தக நாததத்துவம் தினம் தேடி
கூறுஇட்டொரு சூர்தவிர்த்திடு வேல்பிடித்தவன் அருள் நாடி
நாரு கட்டுறு மாலை மெத்தென வள்ளிநாயகன் அடி சூட்டி
பாடு விட்டிட பாடும் பாட்டினில் பணிவேனே!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, தமிழ், பக்தி, முருகன் and tagged , . Bookmark the permalink.

6 Responses to ஏறுமுத்தமிழ் ஞானவித்தக..

 1. இரண்டுமே நன்றாக இருக்கின்றன. வேலவா ராகத்துடன் பாடலாம் .வாழ்த்துக்கள் .

  • GiRa ஜிரா says:

   நன்றிமா. நாகா எழுதிய வெண்பா வடிவம் அழகு. மனனம் செய்து பாடவும் எளிது

 2. amas32 says:

  நீங்கள் எழுதியிருப்பது பா அருணகிரிநாதர் எழுதும் சாயலில் உள்ளது, வெகு அருமை! திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றுகிறது 🙂

  /“பிறவாத மனம் வேண்டும். என் பிழையாலே நான் மீண்டும் பிறந்துவிட்டால் உன்னை மறவாத மனம் வேண்டும்” என்று கவியரசர் எழுதியது நினைவுக்கு வருகிறது./ என் அவாவும் இது தான்.

  பதிவுக்கு நன்றி.

  amas32

 3. uma chelvan says:

  படித்த உடனேயே பிடித்த வெண்பா, வெண்பாவும் உங்கள் விளக்கமும் மிக அருமை.
  “சிந்திக்கில்லேன் நின்று சேவிக்கில்லேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கில்லேன்”

 4. yarlpavanan says:

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

 5. இரண்டு பாக்களுமே அருமை. இதைப் போன்ற பக்தித் தமிழ்ப் பதிவுகள் நீங்கள் நிறைய எழுத வேண்டும், அதற்கு முருகன் மனம் வைக்க வேண்டும்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s