ஏவினை நேர்விழி…

ரொம்ப நாளா எனக்கொரு ஆசை. இளையராஜா இசையமைச்சு திருப்புகழ் பாட்டெல்லாம் வெளிவந்தா நல்லாயிருக்கும்னு. இன்னும் அந்த ஆசை நிறைவேறல. காத்திருக்க வேண்டியதுதான்.

எம்.எஸ்.வி காலத்தோட சினிமாவில் திருப்புகழ் பாட்டெல்லாம் வர்ரது நின்னு போச்சு. அதிசய அதிசயமா காவியத்தலைவன்ல ஏ.ஆர்.ரகுமான் இசைல வாணி ஜெயராம் பாடி ஒரு பாட்டு.

பாட்டு நல்லாருக்குன்னு ரசிச்ச நண்பர்கள் அதுக்குப் பொருள் புரியாமக் கேட்டப்பதான் ஒரு பதிவு எழுதிட்டா என்னன்னு தோணுச்சு. இதோ அதான் இந்தப் பதிவு. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் முருகனே பொறுப்பு.

அருணகிரிநாதர் ஒவ்வொரு முருகன் கோயிலாப் போய் பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருப்புகழ். “ஏவினை நேர்விழி” பாட்டு திருச்செந்தூர் திருப்புகழ்.

திருப்புகழின் அமைப்புன்னு பாத்தா… தன்னுடைய குற்றங்களைக் குறிப்பிட்டு.. இப்படியெல்லாம் தப்பு செஞ்சிருக்கேன். ஆனாலும் காப்பாத்து முருகான்னு கேக்குற மாதிரி வரும்.

இந்தப் பாட்டும் அப்படித்தான். முதல் பாதில அருணகிரிநாதர் தன்னுடைய குறைகளைச் சொல்றாரு. அதெல்லாம் நம்முடைய குறைகளுந்தான். எப்போ நம்ம செய்ற தப்பு நமக்குப் புரியுதோ அப்பதான் நாம திருந்துவோம். இல்லாட்டி திரும்பத் திரும்ப அதே பிரச்சனைகள். அதே சுழல்னு வாழ்க்கை போகும்.

சரி பாட்டுக்குப் போவோம்.

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏவுகணைன்னு சொல்றோம். ஒரு எடத்துல இருந்து இன்னொரு எடத்துக்குப் போய்த் தாக்கும். அருணகிரிநாதர் காலத்துல ஏது ஏவுகணை? அப்பல்லாம் அம்புதான் ஏவுகணை. அந்த அம்பைப் போன்ற விழிகளைக் கொண்ட மாதர்கள் தரும் சுகத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தார் அருணகிரிநாதர். அதுதான் “ஏவினை நேர்விழி மாதரை மேவிய!”

கம்பன் ஏமாந்தான் பாட்டுல கண்ணதாசன் “அம்புவிழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால்தானோ”ன்னு எழுதுனது நினைவுக்கு வருதுல்ல?

ஏதனை மூடனை
ஏதம்னா குற்றம். ஏதன்னா குற்றமுள்ளவன். சீதையோட காதிலிருந்த குழையைப் பத்திச் சொல்லும் போது “ஏதம் இல் இருகுழை”ன்னு கம்பர் சொல்றாரு. அதாவது குற்றமேயில்லாத குழைகள். மூடன்னா என்ன பொருள்னு ஒங்களுக்கேத் தெரியும்.

நெறிபேணா ஈனனை வீணனை
ஒழுக்கத்தைப் பாலியல் கருத்தாத்தான் இப்பல்லாம் பாக்குறோம். ஆனா அது உண்மையில்ல. ஒழுக்கம் வாழ்வியல் கருத்து. நாலு பேரோட படுக்கையைப் பகிர்ந்துக்கிறவனை விட நாலு பேரை ஏமாத்திப் பொழைக்கிறவன் ஒழுக்கம் கெட்டவன். சுருக்கமாச் சொன்னா ஈனப்பிறவி. இன்னும் சுருக்கமாச் சொன்னா ஈனன். அந்த ஈனனுக்கு எவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்தாலும் வீணாப் போயிருவான். அதைத்தான் நெறிபேணா ஈனனை வீணனைன்னு அடுக்குறாரு அருணகிரி.

ஏடெழுதா முழு ஏழையை மோழையை
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்னு தமிழ் எப்பயோ ஏத்துக்கிட்ட ஒன்னு. அதுனாலதான் இன்னைக்குப் பெரிய பெரிய பள்ளிக்கூடங்கள்ள செல்வத்தைக் கொட்டிக் கொடுத்து பிள்ளைகளைச் சேக்க வேண்டியிருக்கு. ஏடெழுதும் அறிவு இல்லாத ஒருவன் ஏழை. மோழைன்னா மடையன். ”மூத்தது மோழை. இளையது காளை”ன்னு ஒரு பழமொழியே உண்டே.

அகலா நீள்மாவினை மூடிய நோய் பிணியாளனை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நம்ம ஒடம்புல ஒரு சின்ன நோய் வந்தாலும் தாங்க முடியுதா? எவ்வளவு வேதனை! இன்னைக்கு ஒலகத்துல எத்தனையெத்தனை வியாதிகள். அப்பப்பா! பழைய படத்துல பாத்தா ”இரத்தக் கொதிப்பு இருக்குறதால இவருக்கு அதிர்ச்சியான செய்தி எதையும் சொல்லாதீங்க”ன்னு வசனம் இருக்கும். அது கொஞ்சம் மாறி “இவருக்கு இதயம் பலவீனமாயிருக்கு”ன்னு கொண்டு வந்தாங்க. ஒரு கட்டத்துல சினிமா நாயக நாயகிகள் செக்கச் செவேல்னு செந்தூரம் கலந்த எண்ணெயை வெள்ளை வாஷ்பேசின்ல வாந்தி எடுத்தாங்க. இப்பல்லாம் எங்கயோ போயிருச்சு உலகம்.

அந்த மாதிரி நோய்கள் நம்மை விட்டு அகலாம கூடவே இருக்குறது எவ்வளவு பெரிய வினை! அந்த வினையால அருணகிரியும் தொழுநோய்ங்குற பேர்ல அவதிப்பட்டிருக்காரு. அதனாலதான் அகலா நீள் மா வினை மூடிய நோய் பிணியாளனைன்னு தன்னைச் சொல்லிக்கிறாரு. இது உலக மக்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு விதத்துல பொருந்தும்.

வாய்மையிலாதனை இகழாதே
பொய்யா விளக்கே விளக்கு. உண்மையை உள்ளபடி பேசுறது மட்டும் வாய்மை கிடையாது. யாதொன்றும் தீமை இலாத சொலல். நல்லதுக்கு உண்மையை மறைக்கலாம். பொய்யைச் சொல்லலாம். அதனுடைய விளைவு நல்லதா இருக்கனும். அப்படி இல்லைன்னா நம்ம சொன்னது உண்மையில்லைன்னு நாமளே முடிவு செஞ்சிக்கலாம். ஆனாலும் கைவிட்டுறாத முருகா!

மாமணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒருநாளே
நூபுரம்னா சிலம்பு. மாமணிகள் பொருந்திய சிலம்பை அணிந்துள்ள உன்னுடைய குளிர்ந்த திருவடிகளை வணங்கும் நல்ல வாழ்க்கையை இன்னைக்காவது குடு முருகா!

பாலியல் ஒழுக்கம் இல்ல. குற்றமுள்ள நெஞ்சு இருக்கு. மூடத்தனத்துக்கு குறைவில்லை. நெறியில்லாத ஈனத்தனமான வாழ்க்கைதான். வீணானவன் தான். ஒழுங்காப் படிக்கலை. முட்டாள் வேற. நோய்கள் துன்புறுத்துது. வாயத் தொறந்தா பொய்தான். இத்தனையும் இருந்தாலும் கைவிட்டுறாத முருகா! இதுலருந்து என்னைக் காப்பாத்தி உன்னுடைய குளுமையான திருவடிகளை வணங்கி வாழும் நல்ல வாழ்க்கையை இன்னைக்காவது கொடு முருகா!

இதுதான் முதல் பாதியோட பொருள். இப்ப வரிகளைப் படிங்க. ஒங்களுக்கே புரியும்.

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை இகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது மொருநாளே

தன்னோட தவறுகளையெல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்டு காப்பாத்தச் சொல்லியாச்சு. அடுத்து என்ன? தன்னைத் திருத்தி வாழ்வு தந்த முருகனைப் புகழ வேண்டியதுதானே. அதுதான் அடுத்த பாதி.

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் புகல் குறமாதை
நாடிய கானிடை கூடிய சேவக நாயக மாமயில் உடையோனே

வழக்கமா சினிமா நாடகம் பாத்தா நாரதர் “நாராயணா நாராயணா”ன்னு சொல்லிக்கிட்டே வருவாரு. ஆனா அவர் பல பாட்டுகளைப் பாடுறவர்னு அருணகிரி சொல்றாரு. அதுவும் யார் பாடும் பாட்டுகள்? நாவலர் பாடிய நூலிசையைப் பாடும் நாரதனார். நல்லதைச் சொல்லும் நாக்கு உள்ளவங்களுக்குத்தான் நாவலர்னு பேர். அந்த நல்லவங்க பாடியதையெல்லாம் கேட்டுத் தானும் பாடி மகிழ்கின்றவர் நாரதர். அவர் வந்து குறமகளைப் பத்திச் சொன்னாராம். புகல் – கூறல்.

அந்தக் குறமகளைக் நாடிப் போய் கானகத்தின் இடையே(நடுவே) விரும்பிக் கூடிய சேவகனே முருகா! நாயகனே! மாமயில் ஏறும் மன்னவனே!

தேவி மனோன்மணி ஆயி பராபரை தேன்மொழியாள் தரு சிறியோனே

இங்க பார்வதியைப் பத்திச் சொல்றாரு அருணகிரி. ஆயி என்ற சொல்லுக்கு அம்மான்னு பொருள் உண்டு. உலக மக்களுக்கெல்லாம் முதல்வராகிய உண்மையான அம்மா அவர்களுக்கு தேவி மனோண்மணி பராபரை என்றெல்லாம் பலப்பல பெயர்கள். அந்த அம்மா பேசுனா இனிமையா இருக்குமாம். அதுனால தேன்மொழின்னு இன்னொரு பேரு. அந்தத் தேன்மொழியம்மை பெற்றெடுத்த குழந்தையே!

சேணுயர் சோலையின் நீழலே திகழ் சீரலைவாய் வரு பெருமாளே
சேண் – தொலைவு. சேணுயர் சோலைன்னா தொலை தூரத்துக்கு உயர்ந்த மரங்களைக் கொண்ட சோலை. அப்படிப் பட்ட சோலையின் நிழலில் திருச்செந்தூர் இருக்குதாம். திருச்செந்தூருக்குச் சீரலைவாய்னும் ஒரு பழைய பேருண்டு. இன்னைக்கு ஜெயந்திபுரம்னு சொல்லிக்கிறாங்க. ஆனா உண்மையான பழைய பேர் சீரலைவாய்/செந்தூர்.

சீரலைவாய் = சீர் + அலை + வாய். சீராக அலைகள் வந்து மோதும் கரையில் இருப்பதால் சீரலைவாய். வலிமையான அலைகள் இருக்காதாம்.

அப்படியான திருச்செந்தூரில் குடியிருக்கும் முருகனே! அப்போதும் இப்போதும் எப்போதும் நீயே துணை!

இதுதான் இரண்டாம் பாகத்துக்கான பொருள். பாடல் வரிகளைப் படிங்க. பளிச்சுன்னு புரிஞ்சிரும்.

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரதனார் புகல் குறமாதை
நாடியெ கானிடை கூடியசேவக
நாயக மாமயி லுடையோனே
தேவி மனோமணி யாயிபராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு பெருமாளே

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன். Bookmark the permalink.

8 Responses to ஏவினை நேர்விழி…

 1. முருகன் அருள் உமக்கே! நல்லா இருங்க.

  தமிழ் என்னமா வீளையாடி இருக்கு!

  • GiRa ஜிரா says:

   டீச்சர் வாயால் முதற் பாராட்டு. ஆகாகா! நன்றி 🙂

 2. நல்ல பதிவு ராகவன். திருப்புகழைப் புரிந்துகொண்டால்தான் ரசிக்கமுடியும். அழகாக புரியும்படி பொருள் விளக்கம் அளித்துள்ளீர்கள். வாணியின் குரல் தேன்! முருகன் அருள் முன்னிற்குமாக.

 3. amas32 says:

  பலமுறை அழகிய விளக்கத்தைப் படித்து விட்டேன். பலமுறை பாடலையும் கேட்டுவிட்டேன். முழுமையாக அனுபவிக்க உதவிய உங்களுக்கு நன்றி 🙂

  amas32

 4. ammuthalib says:

  திருப்புகழ் பாடி இறை அவன் பாதத்ததே திருப்புகல் கொண்டால் இப்பிணி மிகு மண்ணிற்கு திரும்புதல் வேண்டுமோ. கடலின் அளவிற்கு பாவ மூட்டை வைத்திருப்பவன்களுக்கு திருப்புகழ் என்ன சொல்லுது அண்ணே?

 5. மீனம்மாகயல் says:

  அருமை

 6. Siva says:

  அருமையான பதிவு நன்றி.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s