Iயப்பாடு

வாரநாள்ள மதியக் காட்சி சத்யம்ல நிரஞ்சு வழிஞ்சதே படம் வெற்றிங்குறதுக்கு அறிகுறி.

Iபடத்த யோசிச்சா நினைவுக்கு வர்ர நல்ல விஷயங்கள்னு சொன்னா நிறங்களைத்தான் மொதல்ல சொல்லனும்.
பலநூறு பெயிண்டு டப்பாவைக் கொட்டி விட்ட மாதிரி உணர்ச்சி!
லேசா பச்ச மையைக் கரைச்சு விட்டாப்புல இருக்கும் சீன ஏரிகள்!
பொட்டுப் பொட்டாய் வெச்சது மாதிரியான சுங்கிடிச் சேலை மாதிரி பூக்கள் பூத்த நிலங்கள்!
பேனால இருந்து தெளிச்ச மைய அரகொறையாத் தொடச்ச மாதிரியான ஊதா வானம்!
இதெல்லாம் எதோ கலர் கரெக்‌ஷன்ல பண்ற வேலையாம். ஆனாலும் ரசிச்சேன்.

பி.சி.ஸ்ரீராம் படத்துல கால்வாசிதான் ஒளிப்பதிவுன்னு பேசிக்கிறாங்க. மீதியெல்லாம் அவரோட உதவியாளர்கள வெச்சிப் பண்ணுனதாம்.

விக்ரம், உங்க வயசு எங்களுக்குத் தெரியும். இந்த வயசுல ஒடம்பக் கூட்டிக் கொறச்சு முறுக்கி இறுக்கி நொறுக்கி… பல்லெல்லாம் ஒடச்சிக்கிட்டு… அப்பப்பா… யோசிக்கவே முடியல. வேற எந்த ஹீரோவும் செஞ்சிருக்க மாட்டாங்க. அதுலயும் ரெண்டு ஆள பார்ல காவடி மாதிரி தூக்கிக்கிட்டு சுத்துறதெல்லாம் அட்டகாசமான ஒழைப்பு. ஆனா இந்தப் படத்தோட போதும். ஏன்னா.. மாடல் ஆனப்புறம் மொகத்துல வயசு தெரியுது. இனிமே ஒடம்பையும் நல்லபடி கவனிங்க.

எமி ஜாக்சன், நீங்க இந்தப் படத்துக்குப் பொருத்தமோ பொருத்தம். மாடல் லுக், மார்டன் லுக், எந்த உடையும் போடும் துணிச்சல், கொஞ்சம் நடிப்புன்னு கலந்து கட்டி நடிச்சிருக்கீங்க. நீங்க அறிமுகம் ஆகுற பியூட்டிபுல் லேடியோ பாட்டுல பாதிதான் போட்டாங்க. நீங்கதான் யார்ட்டயாவது பேசி மீதிப் பாட்டையும் வீடியோல வாங்கிக் குடுக்கனும். நுரையத் துணி மாதிரி போட்டுட்டு வர்ர காட்சில அழகுதான் தெரிஞ்சது. கொஞ்சமும் ஆபாசம் இல்ல.

என்னோடு நீயிருந்தால் பாட்டு கேட்டப்போ சுமாராதான் இருந்தது. ஆனா படத்துல பாக்குறப்போ நல்லாருந்தது. வழக்கமா கடைசிப் பாட்டு மொறுமொறு சுறுசுறுன்னு வைக்கும் ஷங்கர் இந்தப் படத்துல மெலடிய வெச்சிட்டாரு. அந்தப் பாட்டுல விக்ரம் அவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் எல்லாம் போட்டு நடிச்சத விட, தேவதைகள் எமி ஜாக்சனைக் காப்பாத்தும் காட்சிகள்தான் மனசக் கவர்ந்தது.

சந்தானம்…. வாய வெச்சுக்கிட்டு சும்மாயிருடான்னு யார் கிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சுன்னா அத உங்க கிட்டதான் சொல்லனும். கொடூரம். அதுலயும் உடல் சிதைஞ்ச மனுசங்க கிட்ட பேசுறதெல்லாம் வக்கிரக் கொடூரம். இதுதான் நகைச்சுவைன்னு நீங்களும் ஷங்கரும் சொன்னா… ஒங்க ரெண்டு பேரோட நகைச்சுவை உணர்ச்சில ஐ ஊசியத்தான் போடனும்.

ரகுமான் சார்… ஒரு பாட்டு கேட்டதும் நல்லாருக்கு. ரெண்டு பாட்டு பாத்ததுக்கப்புறம் நல்லாருக்கு. மிச்சமெல்லாம் மனசுல நிக்கல.

ஷங்கர் சார், உங்க படத்தப் பாத்துட்டு வந்தா பாட்டுதான் மனசுல நிக்கும். இதுல எதுவுமே அந்த அளவுக்கு நிக்கல. இத்தனைக்கும் அவ்வளவு மெனக்கெட்டிருக்கீங்க. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அமிர்தம் மட்டுமில்ல அனிமேஷன் கிராபிக்சுந்தான்.

பாட்டு எழுதுனவங்களை ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. முடியலைன்னா விட்டுருங்க. புதுமைங்குறது இயல்பா வரனும். போட்டுத் திணிக்கக் கூடாது.

எத்தன வில்லன்கடா சாமி. இதுல என்ன கொடுமைன்னா… யார் வில்லன்னு மொதல்லயே தெரிஞ்சிருது. அதை ஏதோ சஸ்பென்ஸ் மாதிரி காட்டுற காட்சிகள் எல்லாம் மொக்கை வாங்குது. வில்லன்களைக் கொஞ்சம் கொறைச்சிருக்கலாம். சண்டைக்காட்சிகளையும் வெட்டியிருக்கலாம். எந்தச் சண்டையுமே பெருசா ஈர்க்கல.

திருநங்கைப் பாத்திரம் வில்லனா இருக்குறதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல. ஆனா திருநங்கை சம்பந்தப் பட்ட எதையும் நகைச்சுவையாத்தான் காட்டுவேன்னு அடம்பிடிக்கிறது அருவருப்பு. காதல் தோல்வில அவ அழும்போது கூட தியேட்டர்ல சிரிக்கிறாங்க. காட்சியமைப்பும் அதுக்கேத்த மாதிரிதான் இருக்கு. அத விட அந்தத் திருநங்கையோட காதலை அழுத்தமாக் காட்டி அது வெறுப்பா மாறுவதாக் காட்டியிருந்தா இன்னும் விர்ருன்னு இருந்திருக்கும். சரி விடுங்க. அறிவுரை சொல்ல நான் யாரு.

மக்களே, ஒங்களுக்கு எதுக்குச் சிரிக்கனும்னு தெரியுமா தெரியாதா? உடல் சிதைஞ்சவங்களப் பாத்தாப் பரிதாபம் வரவேண்டாமா? சினிமாக்காரந்தான் அசிங்கம் பண்றான்னா.. நீங்களும் சிரிக்கிறீங்களே. உதவி செய்யச் சொல்லி ஒங்களச் சொல்லல. ஆனா முடியாதவங்களைப் பாத்துச் சிரிக்கிறது பாவம். பெரும் பாவம். தைரியமிருந்தா ஊழல் பண்ற அரசியல்வாதிகளைப் பாத்துச் சிரிங்க.

ஒரு கொடிய கிருமியாம். அத ஊசில போடுறவர் கிளவுஸ் கூட போடல. அந்தக் கிருமியால பாதிக்கப்பட்டவங்களோட இரத்தக்காயம் வர்ர மாதிரி சண்டை வேற. ஷங்கர் சார்… வேண்டாததுல எல்லாம் மூளையச் செலவழிச்சீங்க. இதுல விட்டுட்டீங்களே. சரி விடுங்க. நம்ம மக்கள் யாரும் அதக் கவனிச்ச மாதிரித் தெரியல.

அப்புறம்… அம்பத்தூர் வழியா சைனாவுக்குக் கார்லயே போற வழி எங்கருக்குன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும். நானும் அப்பப்போ டிரிப் போய்ட்டு வருவேன்.

ஒரு வாட்டி பாக்கலாம் படத்த. மத்தபடி சொல்லனும்னா படம் சுமார்தான். இதுக்கா ரெண்டரை வருஷம்? காசு குடுத்துப் படம் பாத்துட்டு இதக் கூடக் கேக்காம விட்டுட்டேன்னா எப்படி?

நாம வாழ்க்கைல படுவதுக்குப் பேரு பாடு. அப்போ ஐ படத்தப் பாத்துப் படுவது Iயப்பாடோ!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

8 Responses to Iயப்பாடு

 1. amas32 says:

  நீங்க சொல்லியிருக்கிற ஒவ்வொரு கருத்தும் அருமை. நெத்தியடி விமர்சனம். தராசில் வைத்து மிகச் சரியாக விமர்சித்து இருக்கிறீர்கள். சந்தானம் நகைச்சுவை கொடுமை தான். உடல் குறைகளை வைத்து நக்கல் அடிப்பதை இயக்குநர்கள் தவிர்க்க வேண்டும். இந்த மாதிரி விஷயங்களுக்கு வரவேற்பு இருப்பதால் தான் அவர்களும் துணிச்சலாக இந்த சீன்களை வைக்கிறார்கள்.ஆம்பள படத்திலும் தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரித்த சீன்களும் படு திராபை. மக்கள் ரசனையைத் தான் இங்கு குறை கூற வேண்டும்.

  amas32

  • GiRa ஜிரா says:

   உண்மைதாம்மா. அந்த அளவுக்கு மக்கள் மனசு வறண்டு போச்சுன்னு நெனைக்கிறப்போ வருத்தமா இருக்கு 😦

 2. தப்பு செய்தவர்களுக்கு உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க ஜிரா.

  கீழேயுள்ளது நங்கை எழுதிய கட்டுரை.
  “அநேகமாக, இதை கவுண்டர் துவங்கி வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பாகவும் இருக்கலாம். அதாகப்பட்டது, ஒரு காமெடியன் போதுமான அளவுக்கோ அல்லது பயங்கரமாகவோ அடி வாங்கவேண்டும். அதைப் பார்த்து அரங்கம் அதிர நாம் சிரிக்கவேண்டும். இதுதான், தமிழ் சினிமா நமக்கு கற்றுக்கொடுத்த நகைச்சுவை ரசனை.

  ஒரு நகைச்சுவை நடிகர், ரத்தம் சொட்டச் சொட்ட அடி வாங்கும்போதோ அல்லது தீயில் கருகி புகை மண்டலமாக நிற்கும்போதோ, நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள். முதலில் நீங்கள் மனிதரா என்பதே சந்தேகம். அடுத்து உங்களுக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா என்பது கேள்விக்குறி. மூன்றாவதாக நிச்சயம் நீங்கள் ரசனையற்றவர். நான்காவதாக நீங்கள் ஒரு சுயநலவாதி, ஈவிரக்கமற்றவர்.

  இப்போது ‘ஐ’ படத்திற்கு வருவோம். ஒரு திருநங்கை, ஒரு மருத்துவர், ஒரு மாடல், ஒரு தொழிலதிபர் ஆகியோர் விக்ரமின் உடல் அழகை கொடூரமாக சிதைக்கிறார்கள். நாம், பரிதாபப்படுகிறோம். ஆனால், பதைபதைக்கவில்லை. ஏன் பதைபதைக்கவில்லை? ஏனென்றால் அதில் அழுத்தமில்லை. இந்த வேடத்தில் விக்ரம் எப்படி ஸ்கோர் செய்யப்போகிறார் என்பதில் மட்டுமே நம்முடைய கவனம் நிலைகொண்டிருந்தது. எனவே, விக்ரமின் அந்த கதாபாத்திரம் ஒருபோதும் நமக்கு கவலை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இல்லை.

  சரி, இப்போது பழிவாங்கலுக்கு வருவோம். தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை, தன்னைவிட கொடூரமான நிலைக்கு ஆளாக்குகிறார் விக்ரம். அப்படி உருத்தெரியாமல் உருக்குலைந்து கிடப்பவர்களை காட்டும்போது நாம் என்ன செய்கிறோம்? வாய்விட்டு ஓட்டை லாரி மாதிரி சிரிக்கிறோம், சிரிக்கிறோம், சிரிக்கிறோம். நம் சிரிப்பை அதிகப்படுத்துவதற்கு ஒவ்வொரு காட்சியின்போதும் சந்தானம் வேறு வந்துவிடுகிறார். கொடூரமான ஒரு சம்பவத்தை பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் அளவுக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? இதெல்லாம்தான் நகைச்சுவையா? ஆம் என்றால், ‘ஐ’ ஒரு நகைச்சுவை படம் என்று ஒப்புக்கொள்வீர்களா? ஆக, ஒரு கொடூரமான காமெடி படத்தை பிரம்மாண்ட படம் என்று காதில் பூ சுற்றி இருக்கிறார் ஷங்கர்.

  ‘ஐ’ மட்டுமல்ல. பெரும்பாலான படங்களின்போதும் நாம் இப்படித்தான் இருந்தோம், சிரித்தோம். வடிவேலு ரத்தம் சொட்டச் சொட்ட “அ..ம்மெ” என்று அழும்போதெல்லாம் நாம் சிரித்தோம். அது மட்டுமா? நடிகை ஆர்த்தியை தனுஷுக்கு பெண் பார்க்க வைத்து, அந்த வக்கிரத்தை குடும்பத்தோடு கண்டு சிரித்தோம். ‘ஓகே ஓகே’வில் ஒரு பெண்ணை காரித் துப்பும்போதும் சிரித்தோம். சிரித்த நீங்களெல்லாம் அவ்வளவு அழகு..smile emotion. ஆக, நாம் எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டுள்ளோம் என்பதை எப்போதுமே நாம் உணராமல் இருக்கிறோம். காரணம் சினிமா. அது, அந்த அளவிற்கு உங்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறது. இதுவரை. இது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஏனென்றால், நல்லவை எதுவுமே சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. மேற்கண்ட காட்சிகளின்போது, கொஞ்சமும் குற்ற உணர்வின்றி நீங்கள் சிரித்தீர்கள் என்றால், உங்கள் குழந்தையும் அப்படித்தானே சிரிக்கும். எனவே, தெளிவு பெறுவோம். அடுத்தவனை துன்பப்படுத்தி இன்பம் காண்பதை அவமானம் என கருதுவோம்.”

  • GiRa ஜிரா says:

   அற்புதமான பின்னூட்டம் ரிஷான். சொல்ல வந்ததை ஒரு எழுத்தாளக்குரிய நேர்த்தியோட சொல்லியிருக்காங்க.

 3. இது தான் காமெடிங்கற மாதிரி ‘மூளைச்சல்வை’ செய்து ஒரு பெருங்கூட்டத்தையே உருவாக்கிட்டாங்க இனி இவங்களுக்கு புரிய வச்சி மாற்றத்தை கொண்டு வர்றதுக்குள்ள நெறய கலை வியாபாரிகள் கல்லாவ ரொப்பிடுவாங்க என்ன செய்ய 😦

 4. எவன் ஒருவன் அதிகம் அனாவசியமாக சிரிக்கின்ரானோ, அவன் அதிகம் மனச்சுமைல இருக்கான்னு அர்த்தமாம்!!

  • GiRa ஜிரா says:

   அந்த மனச்சுமையைக் குறைக்கத்தான் கண்டதுக்கெல்லாம் சிரிக்கிறாங்களா! என்ன கொடுமை இது!

 5. என்னை அறிந்தால் விமர்சனம் எப்ப போடுவேங்க?

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s