மாலாசை கோபம் ஓயாதென்னாளும்

கடவுள் யாருக்குச் சொந்தம்?

குளிச்சு முடிச்சு தூய்மையா பக்தி நூல்களை ஓதுறவங்களுக்கா?
அப்படி பக்தி நூல்களை ஓதாட்டி கடவுள் அருள மாட்டாரா? தண்டிச்சிருவாரா?

இந்தக் கேள்விக்குப் பெரும்பாலான மதநம்பிக்கையாளர்களோட விடை ஆமாம்னுதான் இருக்கும்.

அந்தந்த மதநூல்களை ஓதினாதான் கடவுள் நம்ம மேல கருணை காட்டுவார் என்பது பெரும்பாலானவர்களோட நம்பிக்கை.

இந்த நூல்களையெல்லாம் கத்துக்கிறது நல்லதுதான்னே வெச்சுக்குவோம். இதுக்கெல்லாம் நேரமில்லாதவங்க எத்தனையோ பேர் உலகத்துல இருக்காங்க. உழைச்சுக் களைச்சு ஓஞ்சு விழுறப்போ அசதில தூக்கம் தான் வரும். இதுல திருப்புகழாவது காயத்ரி மந்திரமாவது!

சரி. அப்படியே எடுத்துப் படிச்சாலும் புரியுதா? அதுக்கு ஒரு விளக்கம் தேவையாயிருக்கு. அந்த விளக்கம் சரியா தப்பான்னு படிச்சவங்களே அவங்களுக்குள்ள அடிதடியோட விவாதம் செய்றாங்க.

அப்ப நாமல்லாம் என்னதான் பண்றது?

தன்னோட மனசறிஞ்சு ஒருவாட்டி ஆண்டவனேன்னு நமக்குள்ளயே கூப்பிட்டு வேண்டுறதை விட நல்ல வழிபாடு இருக்க முடியுமா? இதைத்தான் இந்தப் பாட்டுல அருணகிரி சொல்றாரு.

இப்பப் பாக்கப் போற “மாலாசை கோபம் ஓயாதென்னாளும்” திருப்புகழ் விராலிமலையில் பாடிய திருப்புகழ்.

மாலாசை கோப மோயாதென்னாளும் மாயாவிகார வழியேசெல்
மால் ஆசை கோபம் ஓயாது எந்நாளும் மாயா விகார வழியே செல்(லும்)

மால்னா மயக்கம். இப்பல்லாம் மாலுக்குப் போனாலே Parking Charge எவ்வளவுன்னு கேட்டதுமே மயக்கம் தானே வருது. நிலம் நீர் காற்று நெருப்பு வானம் ஆகிய ஐந்தும் கலந்த மயக்கம் தான் உலகம்னு தொல்காப்பியர் சொல்றாரு. கலந்ததுன்னு சொல்லி நிறுத்தியிருக்கலாமே? அதென்ன கலந்த மயக்கம்?

மயங்கிட்டா பிரிக்க முடியாது. போலிசையும் மாலையும் பிரிக்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். அரிசியும் கல்லும் கலந்தா பிரிச்சிறலாம். பாலும் தயிரும் கலந்துட்டா? பிரிக்க முடியாது. அது மயக்கம். தயிர் பாலையும் திரித்து தயிராக்கிவிடும். அது மாதிரி எதன் மீதாவது நமக்கு உண்டாகும் மயக்கம் நம்மளைத் திரிச்சுக் கெடுத்துரும்.

ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு சொல்லியிருக்காரு புத்தர். அருணகிரியும் அதத்தான் சொல்றாரு. சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லின்னு வள்ளுவரும் சொல்றாரே.

மயக்கம் ஆசை சினம் ஆகிய மூனும் இல்லாத மனிதன் உண்டா? இந்த மூனும் கூட்டிட்டுப் போற விகாரமான மாயவழியிலதான நாமெல்லாம் போறோம்.

அதுதான் ”மாலாசை கோபம் ஓயாது எந்நாளும் மாயா விகார வழியே செல்

மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவு மினிநீயே
மாபாவி காளி தான் ஏனு(ம்) நாத மாதா பிதாவும் இனி நீயே

விகாரமான வழியில் போறவன் நல்லவனாவா இருப்பான்? கண்டிப்பா மாபாவிதான்.

காளின்னா ரெண்டு பொருள் உண்டு. ஒன்னு நஞ்சு. இன்னொன்னு இருட்டு/கருப்பு. கருப்பா இருக்குறதாலதான் நஞ்சுக்குக் காள்னே பேர். காளிங்கன் தலைல கிருஷ்ணர் ஆடுனதாச் சொல்வாங்களே. அந்தக் காளிங்கன் என்ற பேருக்கு நஞ்சுடையவன்னு பொருள். கருமையா இருக்கும் யமுனை நதிக்கும் காளிந்தின்னு ஒரு பேரும் உண்டு. கருப்பா இருக்குறதாலதான் காளிக்குக் காளின்னே பேர்.

அப்ப இங்க என்ன பொருள் எடுத்துக்கனும்? இருண்ட மனமுடையன்னு பொருள் எடுத்துக்கனும்.

தவறான வழியில் போகும் இந்த இருண்ட மனமுடைய மாபாவிக்கு நாதனாகிய நீதான் இனிமே அம்மா அப்பா.

நாலான வேத நூலாக மாதி நானோதி னேனு மிலை
நாலான வேத நூல் ஆக(ம)ம் ஆதி நான் ஓதினேனும் இலை

வேத நூல்கள் நான்குன்னு ஒரு கணக்கு. அந்த நான்கு வேதங்களையும் படிச்சதில்ல. ஆகம நூல்கள் எதையும் படிச்சதில்ல. பக்தி இருக்குறவங்க இந்த மாதிரியான பக்தி நூல்களை தினமும் ஓதுறாங்க. ஆனா.. நான் இதுல எதுவுமே படிச்சது கூடக் கிடையாது.

வீணே நாள்போய் விடாம லாறாறு மீதில் ஞானோப தேச மருள்வாயே
வீணே நாள் போய்விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே

விகாரமான வழியில் வாழ்க்கை போகுது. பாவியாகிய எனக்கு நீதான் இனிமே தாய்தந்தை. எந்த பக்தி நூல்களையும் நான் படிச்சு உணர்ந்ததில்ல. இப்படியே வாழ்க்கை வீணாப் போயிடாம நீதான் எனக்கு ஞானோபதேசம் செய்யனும்.

அதென்ன ஆறாறு மீதில் ஞானோபதேசம்? ஆறாறுன்னா முப்பத்தாறு. மொத்தம் முப்பத்தியாறு ஞானதத்துவங்கள் இருப்பதாக ஒரு நம்பிக்கை. அந்த மாதிரியான நம்பிக்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஞானோபதேசத்தைக் கொடுக்க வேண்டும் முருகா!

மனிதன் தன்னால புரிஞ்சிக்க முடிஞ்ச அளவுக்குதான் கடவுளைப் பத்திச் சொல்ல முடியும். ஆனால் அவ்வளவுதான் கடவுளா? கடவுள் மனிதனுடைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அதுனாலதான் தத்துவத்துக்குள்ளயே அடங்கி விடாமல் இருக்கனும்னு அதுக்கும் மேலான தூய மெய்ஞானம் வேணும்னு விரும்புறாரு அருணகிரி.

இந்த உபதேசம் நமக்குமே அப்பப்போ வாழ்க்கைல கிடைக்கும். எதோவொரு தவறான வழியில் போறப்போ ஏதோவொன்னு நம்மளைச் சரியான முடிவு எடுக்க வைக்கும். அதுவும் உபதேசந்தான். நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு அந்த உபதேசம் கிடைச்சதால சரியான வழிக்குத் திரும்பியிருப்போம். வேலை குடும்பம் நட்புன்னு பல சந்தர்ப்பங்கள்ள இது நடந்திருக்கும்.

இதுவரைக்கும் அருணகிரிநாதர் தன்னுடைய பக்கத்தில் இருக்கும் குறைகளைச் சொல்லி காப்பாத்த வேண்டுறாரு.

மாலாசை கோபம் ஓயாதென்னாளும் மாயாவிகார வழியே செல்
மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவும் இனி நீயே
நாலான வேத நூலாகம் ஆதி நானோதினேனும் இலை வீணே
நாள் போய்விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே!

அருணகிரியாருக்கு ஞானோபதேசம் கிடைச்ச இடம் விராலிமலை. இதுக்கு மேல அந்த விராலிமலையைப் பத்திச் சொல்றாரு. அதெல்லாம் சுருக்கமாப் பாக்கலாமா?

பாலா கலாரம் ஆமோத லேப பாடீர வாக அணி மீதே
பாலா – பாலனே
கல்லாரம் ஆமோத – செங்குவளை மலரை விரும்புகின்றவனே
லேப பாடீர வாக அணி மீதே – அழகான அணிகலன்களை அணிந்து கொண்டு சந்தனம் பூசிக் கொண்டவனே

பாதாள பூமி ஆதாரம் மீன பானீயம் மேலை வயலூரா
பாதாளத்துக்கும் பூமிக்கும் ஆதாரமாய் இருப்பவனே
மீன்களும் நீர்வளமும்(பானீயம்) நிரம்பிய மேன்மையான வயலூரா! (மேலை வயலூராவுக்கு மேற்குத் திசையிலிருக்கும் வயலூரைச் சேர்ந்தவனேன்னும் ஒரு பொருள் உண்டு)

வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே
வேலனே! விராலிமலைத் தெய்வமே! வேதாளங்களையும் தனது சமூகமாகக் கொண்ட தலைவனாகிய சிவனுடைய சேயே(மகனே)!

வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே!
வீரனே! கொடுமையான துன்பத்தை அழிப்பவனே. சூர்னா துன்பம். சூரனை அழித்தவனேன்னும் பொருள் கொள்ளலாம்.
செவ்வேளே! தேவர்களுக்கெல்லாம்(சுரேசர்) தலைவனே(பெருமாளே)!

இப்ப முழுப் பாட்டையும் படிங்க. பொருள் எளிமையாப் புரியும். இரண்டாவது பாதி கடமுடன்னு இருந்தாலும் முதல் பாதியையாவது நல்லா படிச்சுப் பழகிக்கலாம்.

மாலாசை கோபம் ஓயாதென்னாளும் மாயாவிகார வழியே செல்
மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவும் இனி நீயே
நாலான வேத நூலாகம் ஆதி நானோதினேனும் இலை வீணே
நாள் போய்விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே!

பாலா கலாரம் ஆமோத லேப பாடீர வாக அணி மீதே
பாதாள பூமி ஆதாரம் மீன பானீயம் மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, தமிழ், திருப்புகழ், முருகன் and tagged , , , , , , . Bookmark the permalink.

13 Responses to மாலாசை கோபம் ஓயாதென்னாளும்

 1. psankar says:

  முக்காலமும், முருகனின் மாமன் பெயரை உரைப்பதன்றி வேறேதும் ஆற்றவில்லை என்பதால் நாரதருக்கு தான்தான் உலகிலேயே மிகப் பெரும் அடியார் என்ற இறுமாப்பு இருந்ததாம். திருமால், பூவுலகில் இருக்கும் ஓர் ஏழைக் குடியானவன்தான் தன் மிகப்பெரும் அடியார் என்று கூறினாராம்.

  இதனால் வெகுண்ட நாரதர் அந்த குடியானவனைப் பின்பற்றினாராம் ஒரு நாள் முழுதும். காலை எழுந்தவுடன் ஒரு முறையும், இரவு படுக்கப் போகும் முன் ஒரு முறையும் என இரு முறை மட்டுமே அவன் கடவுளை வணங்கினானாம்.

  குழம்பிப் போன நாரதர், திருமாலிடம், “இவனைப் போய் மிகப்பெரும் அடியவர் என்று பொய் சொல்கிறீரே !?” என்று முறையிட்டாராம். அதற்கு திருமால், நாரதர் கையில் ஒரு அகல் விளக்கைக் கொடுத்து, அதில் உள்ள எண்ணெய் சிந்தாமல், விளக்கு அணையாமல், அவ்விளக்கை ஏந்திக் கொண்டு ஒரு முறை ஊரைச் சுற்றி வரச் சொன்னாராம். நாரதரும் அவ்விதமே செய்தாராம். அவர் திரும்பி வந்தவுடன், “விளக்கை ஏந்திச் சென்றபோது ஒரு முறை கூட நீ எம்மை நினைக்கவில்லை. உம் கவனம் முழுதும் விளக்கின் மேலே மட்டுமே இருந்தது. என்னை மறந்து விட்டீர். அதைப் போலவே, அந்த குடியானவனும் தன்னுடைய தொழிலில் முழுதுமாக இறங்கி விட்டான். அவன் நூல்களைப் படிக்க வேண்டியதில்லை. தான் செய்யும் செயல்களில் முழு இடுபாட்டோடு, எவரையும் ஏமாற்றாமல் வாழ்கிறான். இதுவே போதும்” என்றாராம்.

  மேற்சொன்னது சிறு வயதில் நான் படித்த ஒரு சிறுகதை. வாரியார் சொற்பொழிவில் கேட்டதாகக் கூட இருக்கலாம். உங்கள் பதிவைப் படித்தவுடன் அதுதான் நினைவு வந்தது.

 2. Kumaran says:

  Thanks GRaa. Heard this song many times in Yesudas voice. First time learning the meaning

 3. ஆருமை! ஆண்டவன் ‘ஆத்தாடி மாரியம்மா’வைத்தான் அதிகம் விரும்புகிறான். ஆடம்பரம் தேவையில்லை. நாம்தான் அவனுக்கு ஆடம்பரம் பிடிக்குமுன்னு அலங்கரிச்சு வச்சுக்கறோம். நம்ம ஆசைக்குத்தான் அளவில்லையே:(

  இவ்வளவு நெருக்கடியானவாழ்க்கையிலும் ராமா என்றோ,முருகா என்றோ ஒரே ஒரு முறை சொன்னால் கூடப் போதுமாம் அவனுக்கு.!

  நம்ம சண்டிகர் முருகன் தினமும் ஒரு திருப்புகழ் என்ற புதிய திட்டத்தின்படி வாரம் ஏழு பாடல்கள் அதன் பொருளுடன் அனுப்புகிறான். அவைகளை வாசிக்கும்தோறும் உங்கள் நினைவு வருவதைத் தடுக்க முடியலை:-)

  உங்களுக்கு விருப்பம் என்றால்சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன்.

  • GiRa ஜிரா says:

   உண்மைதான் டீச்சர். ஆத்தாடி மாரியம்மா மனப்பக்குவமெல்லாம் எப்ப வருமோ! டீச்சர்! அந்தப் பாடல்களை அனுப்புங்க. 🙏

 4. uma chelvan says:

  மிகவும் அருமையான விளக்கவுரை. இறைவன் நாமமே போதும், அவன் நம்மை காப்பான் என்ற எண்ணமே எவ்வளவு நம்பிக்கையை தருகிறது. மயக்கத்திற்கும் நல்ல தெளிவுரை. ஏன், மண், பொன், பெண் மீது ஆசை/ மயக்கம் வைத்தவர்கள் மீள முடிவதில்லை என்பதற்கு காரணம் இப்ப தெரியுது. 🙂
  மீன்களும் நீர் வளமும் நிறைந்த வயலூர். அப்படிதான் இருந்து 20 வருடங்களுக்கு முன்னால். எங்கும் வாழை மரங்கள். பசுமை, பசுமை, பசுமையை தவிர வேறு எதுவும் இல்லை. அருணகிரிநாதர் காலத்தில் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். இப்போ, வீடுகள் எல்லா பக்கமும், நடுவில் பரிதாபமாய் கோவில்.

  • GiRa ஜிரா says:

   ஆமா. போனப்போ வீடுகளுக்கு நடுவுலதான் கோயில். பாக்க ஆள் வராம தனியாத்தான் இருக்கான் முருகன்.

 5. Prasath says:

  மிகவும் அருமை….தயவுசெய்து நிறைய எழுதுங்கள் …..

  • GiRa ஜிரா says:

   நன்றி. கண்டிப்பாக முடிந்தவரையில் எழுதுகிறேன்.

 6. amas32 says:

  முதலில் பாடலைப் படிக்கும் பொழுது பொருள் எளிதாகப் புரியவில்லை. உங்கள் விளக்கத்திற்குப் பிறகு பாடலே முழுதுமாக மனசில் பதிந்து விட்டது, நன்றி 🙂

  amas32

  • GiRa ஜிரா says:

   மகிழ்ச்சி மா. படிக்கிறவங்களுக்குப் புரியனுங்குறதுதான் என் மனதிலும் இருந்தது. 😃

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s