செந்தில்நாதனும் மாமியார் வருகையும்

ரொம்பநாளா செந்தில்நாதனை நம்ம கண்டுக்காம விட்டுட்டோம். இப்பத் திரும்பவும் கண்டுக்க வேண்டியதாயிருக்கு. அதுக்குக் காரணம் அவனோட மாமனாரும் மாமியாரும்.

மாமியார் ஒரு அப்பிராணி. ஒரு பாவமும் அறியாத ஜென்மம். அதுக்கெல்லாம் சேத்து வெச்சு அட்டகாசம் பண்றது மானமார்தான். வீட்டு வாசப்படியத் தாண்டினா வெளிய எதுவும் சாப்பிடாம வீட்டுக்குள்ள திரும்ப வரமாட்டாரு. படி தாண்டிட்டா அவருக்குப் பசிச்சிரும். பால் வாங்கப் போறப்ப கூட பன்னீர்சோடா குடிச்சிட்டு வர்ர மனுஷன், காய்கறி வாங்கப் போனா பஜ்ஜி போண்டாவுக்குக் குறைஞ்சி எதுவும் முழுங்காம வீட்டுக்கு வர்ரதில்ல. அவர் ஒடம்புல இருந்து சர்க்கரைய எடுத்தா நாட்டுல சர்க்கரைத் தட்டுப்பாடே வராதுங்குற நிலை வந்தப்புறந்தான் சென்னைல செக்கப்புக்கு வந்திருக்காரு.

சும்மாச் சொல்லக் கூடாது. செந்தில்நாதன் நல்ல மருமகந்தான். வந்த மாமனார் மாமியாருக்கு தன்னோட ரூமைக் கொடுத்திட்டு ஹால்ல படுத்துக்கிறானே. அதுமட்டுமில்லாம ஒழுங்கா டாக்டர் கிட்ட கூட்டீட்டுப் போயி அவருக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் செஞ்சான்.

பெத்தவங்க வந்ததால வந்தாளே மகராசி ரொம்ப பிசி. அதுலயும் அப்பாவுக்குன்னு தனிச்சமையல். மாமியாரும் ஊர்ல இருந்து வந்த அம்மாவும் உதவி செஞ்சாலும் தானே எல்லாத்தையும் செய்றதா ஒரு மாயைல மூழ்கியிருந்தாங்க.

செந்தில்நாதனும் வழக்கம் போல வீடுண்டு ஆபிசுண்டு மாமனாருக்கு ஆஸ்பித்திரியுண்டுன்னு இருந்தான். எப்படா வரும்னு காத்திருந்த சனிக்கிழமையும் வந்தது. வந்த சனிக்கிழமை சனீஸ்வரரையும் கூட்டீட்டு வந்திருச்சு போல.

காலைல நேரங்கழிச்சு எந்திரிச்சுப் பல் தேச்சதும் வழக்கமா வர்ர காப்பி வரல. கூச்ச நாச்சமே இல்லாம செந்தில்நாதனும் வாய் விட்டுக் கேட்டுட்டான்.

வந்தாளே மகராசி காப்பி டம்ளரைக் கொண்டு வந்து கொடுத்தப்பதான் செந்தில்நாதன் பிரச்சனையின் ஆணிவேரைக் கவனிச்சான். வந்தாளே மகராசியின் கண் கலங்கியிருந்தது. பொய்யோ மெய்யோன்னு கண்டுபிடிக்க முடியாத இலக்கியப் பெண்கள் இடை மாதிரி கண்ணில் ஒரு ஓரத்துல கண்ணீர் ஒட்டியிருந்தது.

தன்னோட அடிவயிறே கலங்கிப் போன மாதிரி, “என்னம்மா கண்ணெல்லாம் கலங்கியிருக்கு”ன்னு பதறிப் போய்க் கேட்டான். அந்தப் பதட்டத்துலயும் ரெண்டு வாய்க் காப்பியைக் குடிச்சிருந்தான் கடமை தவறாக் கண்ணியன்.

“ஒன்னுமில்லை”ன்னு வந்தாளே மகராசி சொல்லும் போது மூக்கை உறிஞ்சிட்டுச் சொன்ன மாதிரி இருந்துச்சேன்னு காப்பி டம்ளர் காலியாகுற வரைக்கும் யோசிச்சான். காப்பி காலியானதும் துள்ளிக் குதிச்சுப் போய் “என்னம்மா ஆச்சு”ன்னு நாபிக்கமலத்துல இருந்து தில்லானா மோகனாம்பாள் சிக்கல் சண்முகசுந்தரம் மாதிரி கேட்டான்.

”வேலை செய்ய விடுறீங்களா? ஆயிரம் வேலை இருக்கு. காலைல எந்திரிச்சதும் வந்து நொண நொணன்னுக்கிட்டு” என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாதிரி தாக்குதல் வரவும் தப்பிப் பிழைத்த யாசிதிகள் மாதிரி ஹாலுக்குள் சரணடைந்தான்.

மனைவி ஆத்திரப்பட்டாக் கூட ஆம்பளைங்க வீரத்தோட அடங்கிப் போயிருவாங்க. ஆனா அழுதுட்டா மண்டைக்குள்ள ஆம்புலனஸ் மாதிரி ஹார்ன் நிக்காம அடிக்கும். குளிச்சிட்டு கூடைல போடாத அழுக்கு ஜட்டியிலிருந்து வாங்கிக் கொடுக்காத வைரவளையல் வரைக்கும் காரணங்களை விதம் விதமா யோசிக்கத் தொடங்கும்.

”அப்பா எதுவும் சொல்லியிருப்பாரோ? சேச்சே! அவர் எனக்கு சப்போர்ட் பண்ணத விட அவளுக்கு சப்போர்ட் பண்ணதுதான் அதிகம். அவரைப் பொருத்தவரைக்கும் எனக்குதான் ஒன்னுமே தெரியாது. அவரைச் சமாதானப் படுத்துறதுக்குள்ள ரெண்டு மூனு பொண்டாட்டிகளைச் சமாதானப் படுத்தீறலாம். ஒருவேள அம்மா கூட எதுவும் சண்டையோ?”

செந்தில்நாதன் working from home, செந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்புவும், செந்தில்நாதனும் Carகாலமும்னு பழைய கதையெல்லாம் அவன் மனசு கொஞ்சம் அசை போட்டது. வந்தாளே மகராசியும் குடியிருந்த கோயிலும் போட்ட குளிர்சண்டைல (அதாங்க coldwar)வயிறும் தலைமயிரும் ஒன்னுமில்லாமப் போனதெல்லாம் கண்ணு முன்னாடி வந்தது.

எதுக்கும் கேட்டுப்பாக்கலாம்னு போனான். ”ஒங்களுக்குள்ள எதுவும் சண்டையா? நீங்க அவளை எதும் சொன்னீங்களா?” மாதிரியான அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட கேள்வியைக் கேக்க செந்தில்நாதன் விவரமில்லாதவனா?

“என்னம்மா அவ எதுக்கு அழுகுறா? ஒடம்பு எதுவும் சரியில்லையா அவளுக்கு?”

“இவளால என் மகன் படாதபாடு பட்டு அழுறது போதாதா? இவளுக்கு என்ன அழுகையோ”ன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே, “தெரியலையேப்பா. நான் எதுவும் சொல்லலையேப்பா. என்னன்னு கேட்டியா?”

குடியிருந்த கோயிலோட கேள்வில இருந்த ஆர்வத்தைப் புரிஞ்சிக்காம, “கேட்டேன். ஒன்னுமில்லைங்குறா”ன்னு மென்னு முழுங்கினான்.

”நாந்தான் திட்டினேன்”ன்னு திடீர்னு ஒரு குரல். அது வந்தாளே மகராசியை ஈன்றெடுத்த மாமியாரின் குரல். ஷுகர் குறைஞ்சு இடிஞ்ச இடியாப்பமா உக்காந்திருந்த மாமனார் கூட திடுக்கிட்டுப் போயிட்டார்னா பாத்துக்கோங்க.

”நீங்க கர்ப்பமா இருக்கீங்க”ன்னு செந்தில்நாதன் கிட்ட சொல்லியிருந்தாக் கூட இவ்வளவு அதிர்ச்சியடைஞ்சிருக்க மாட்டான். சாப்பிடுறதுக்குக் கூட வாய முழுசாத் தொறக்காத ஒரு வாயில்லாப் பூச்சி ”நாந்தான் திட்டினேன்”னு சொன்னதுல அவன் நெஞ்சுல நிலநடுக்கமே வந்துருச்சு.

”நானும் வந்ததுல இருந்து பாக்குறேன். எந்த வேலையும் உருப்படியாச் செய்றதில்ல. அடுப்படி ஜன்னல் ஓரத்துல ஒட்டடை. வந்தன்னைல இருந்து இருக்கு. அதத் தொடைக்க எவ்வளவு நேரமாகும்? சமைக்கும் போதே பாத்திரங்கள அப்படியப்படி ஒதுங்க வைக்கத் தெரியல. எல்லாப் பாத்திரமும் கழுவாம வேலைக்காரி வர்ர வரைக்கும் தொட்டில கிடக்குது.

இன்னைக்குக் காலைல என்னடான்னா சம்பந்தியம்மாதான் எல்லாருக்கும் காபி போட்டுக் கொடுத்தாங்க. பசங்களுக்கு பீடியாஷுயூர் கரைச்சுக் கொடுத்தாங்க. நாலு வாட்டி கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடந்துட்டு இருந்தா. ஆனா நீங்க கேக்குற வரைக்கும் அவ காப்பி போட்டுக் கொடுக்கல.

சரி. அதாவது போகுது. கல்யாணம் ஆகி இத்தன வருஷம் ஆச்சு. சமைக்கக் கத்துக்கிட்டிருக்காளா? என்னாலயே சாப்பிட முடியல. நீங்க எப்படித்தான் சாப்பிடுறீங்களோ? அன்னைக்கு உங்க அம்மா வெச்ச புளிக்கொழம்பு எவ்வளவு நல்லாருந்தது. இவளுக்கு இன்னும் ஒரே மாதிரி சமைக்கிற பக்குவம் வரல. என் நாக்குக்குன்னு சொல்லல. நீங்கள்ளாம் நல்ல சாப்பாடு சாப்பிடனுமேன்னுதான் நானும் கூடச் சேந்து சமைக்கிறேன்.

ஒவ்வொருத்தி வேலைக்கும் போயிட்டு வீட்டுவேலைகள்ளயும் பங்கு போட்டுக்கிட்டுச் செய்றா. இவளுக்கென்ன? நானெல்லாம் அப்போ ஆட்டுரல்ல ஆட்டி அம்மியில அரச்சு கையால அடிச்சுத் துவைச்சு இவங்களுக்கெல்லாம் சமைச்சுப் போட்ட ஆளு. இவள மாதிரி உக்காந்திருந்தா எங்க மாமியாரெல்லாம் என்ன ரசத்துல புளிக்குப் பதிலா கரைச்சு ஊத்திருப்பாங்க. உங்க அம்மா ரொம்ப நல்லவங்க. அதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிறாங்க.

சொல்லனும்னா சொல்லிக்கிட்டே போகலாம். பொண்ண இப்படி வளத்துட்டாங்களேன்னு என்னத்தான எல்லாரும் கொறை சொல்வாங்க. அதான் திட்டினேன். அதுக்கெதுக்கு அழுகை? குழந்தைங்கள அவ திட்டுறதில்லையா? அது மாதிரிதான் இதுவும்.”

எண்ணெய்ச் சட்டில தண்ணி சிந்துன மாதிரி படபடன்னு வெடிச்சி நின்ன மாதிரி இருந்துச்சு எல்லாருக்கும்.

இத்தன நாளா மனசுல வெச்சிருந்ததெல்லாம் சம்பந்தியம்மா வாய் வழியா வந்ததுல குடியிருந்த கோயிலுக்கு ரொம்பச் சந்தோஷம். புதுசா பத்து பட்டுச் சேல தன் கிட்ட இல்லாத கலர்ல கிடைச்சிருந்தாக் கூட இந்த சந்தோஷம் வந்திருக்காது.

வந்தாளே மகராசி நெலமைதான் ஈரத்தோட வதங்குன வெண்டக்கா மாதிரி வழவழ கொழகொழன்னு ஆயிருச்சு. மாமியார் சொல்லியிருந்தாக் கூட எதுத்து எதாச்சும் சொல்லியிருக்கலாம். அம்மா கிட்ட எதுத்துப் பேசுனா சின்ன வயசுல இருந்து செஞ்சதெல்லாம் ஆதாரத்தோட வெளிய வருங்குறதால அமைதி காக்க வேண்டியதாப் போச்சு.

அதுக்கப்புறம் வந்தாளே மகராசி கிட்ட செந்தில்நாதன் முகம் கொடுத்துப் பேச நாலு நாள் ஆச்சுன்னா நம்பாமலா இருக்கப் போறீங்க? அந்த நாலு நாளும் செந்தில்நாதன் நிம்மதியா திருப்தியா சந்தோஷமா இருந்தான்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை and tagged . Bookmark the permalink.

2 Responses to செந்தில்நாதனும் மாமியார் வருகையும்

  1. Anusuya says:

    // நானெல்லாம் அப்போ ஆட்டுரல்ல ஆட்டி அம்மியில அரச்சு கையால அடிச்சுத் துவைச்சு இவங்களுக்கெல்லாம் சமைச்சுப் போட்ட ஆளு. இவள மாதிரி உக்காந்திருந்தா எங்க மாமியாரெல்லாம் என்ன ரசத்துல புளிக்குப் பதிலா கரைச்சு ஊத்திருப்பாங்க//

    I feel my mom voice in this dialogue really true it happened to me too 🙂

  2. Pingback: செந்தில்நாதனும் மாடித்தோட்டமும் | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s