சங்கம் சரணம் கச்சாமி

ஏழாவது நாளாக எரிகின்றது பெரு நெருப்பு. மக்கள் கொண்டு வந்து கொடுக்கும் காய்ந்த விறகுகளை வாங்கி நெருப்பில் போட்டுப் போட்டு தோள்கள் தவங்கினர் சேவகர். தீயின் மூட்டத்தில் மெய் புழுங்க சாம்பலின் தூசியில் கண்கள் காந்த, “போதும். போதும். இனி யாரும் விறகுகளைக் கொண்டு வராதீர்கள்” என்று சேவகர்களின் உள்ளம் கதறும் ஓலம் ஒருவனுடைய காதுகளில் மட்டும் விழுந்தது.
ASOKAஏழு நாட்களாக அவன் ஒரே இடத்தில் நிற்கிறான். எரியும் சிதையை நோக்கும் பார்வை. பட்டெனப் பொறி பறக்கும் சிக்கி முக்கி விழிகள். சூட்டுப் புழுதியிலும் மூடித் திறக்காத இமைகள். கொதிக்கும் அனலிலும் அசராத மேனி. ஒரு நொடியும் அசையாத நிலை. எழுபதைத் தாண்டிய அகவை. இருபதைத் தாண்டாத உரமேறிய உடம்பு.

கொதித்துக் குமுறும் சிதையின் நெருப்பை விட அவனுள் கொதித்துக் கொண்டிருந்தது இன்னொரு நெருப்பு.

விறகு கொண்டு வரும் மக்களின் கூட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது. இதே வேகத்தில் குறைந்தால் இரவுவோடு சேர்ந்து ஏழு நாட்களாக எரியும் சிதை நெருப்பும் விடியலில் அணைந்துவிடும்.

”அசோகவர்த்தனா”

மெல்லிய குரல். ஆனால் தெளிவான குரல்.

ஏழுநாள் சிந்தனை அறுபடத் திரும்பிப் பார்த்தான்.

நெருப்பால் நெய்தது போன்ற காவியுடை. நிலவையே கண்களாக்கிய அமைதி. உலகம் எதைப் போட்டாலும் வாங்கிக் கொள்ள கையிலொரு பிச்சைத் திருவோடு.

“அரிகந்த தேவா, என் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி!” பணிந்தான் சாம்ராட் அசோகன்.

”அசோகவர்த்தனா, இப்போது நீ நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்கிறாயா?”

”தேவா, ஆம் என்று பொய்யுரைக்க மனம் விரும்புகிறது. ஆனால் உண்மையை மறைத்து ஒளிக்க முடியாத இடத்தில் பொய் சொல்லி என்ன பயன்? இதுவரையில் இருந்த நிம்மதியும் அமைதியும் கூட இப்போது என்னிடம் இல்லை என்பதே உண்மை! இனி அதைத் தேடும் வழியும் அறியேன்”

”அசோகவர்த்தனா, உன் அமைதியையும் நிம்மதியையும் இப்போது அழிப்பவை எவை?”

“நான் செய்த பாவங்கள்!” சுய-இழிவு சுழிக்கும் குரலில் சொன்னான் அசோகன்.

“சாம்ராட் அசோகா..” எதோ சொல்ல வாயெடுத்தார் பிட்சு.

”சண்டா அசோகா என்று அழையுங்கள் தேவா! சண்டா அசோகா என்று அழையுங்கள். அதுவே எனக்கு மிகவும் பொருந்தும் பெயர். அசோகனின் நரகம் என்று எல்லாரும் அஞ்சி அலறும்படி ஒரு சித்திரவதைக் கூடத்தை எதிரிகளை அடக்கக் கட்டினேன். அந்த அச்சத்தால் எல்லாரும் சண்டா அசோகா என்று அலறிக் கதறுகையில் பெருமிதத்துக் களித்தேன். இப்போது நினைத்துப் பார்த்தால் என்னுடைய வாழ்க்கையைத்தான் அசோகனின் நரகமாக்கியிருக்கிறேன். கொடுஞ் சித்திரவதைகளில் துன்புறுவது என்னவோ நான் தான்.

சுஷிம். எங்கள் இருவருக்கும் தாய் தான் வேறு. தந்தை ஒருவர்தான். சுஷிமை மன்னராக்க விரும்பினார் தந்தை. அதைச் சூழ்ச்சியால் தடுத்தேன். அமைச்சர் இராதாகுப்தரின் உதவியோடு சுஷிமை ஏமாற்றி நெருப்புக் குழிக்குள் விழச்செய்து கொன்றேன். பதவி என் காலடியில். அடுத்த எட்டாண்டுகள் நாடு வளர்த்தேன். கிழக்கே காமரூபத்திலிருந்து வடக்கே தட்சசீலம் வழியாக மேற்கே காந்தாரம் வரையில் என் வாளை வணங்க வைத்தேன்.

தெற்கில் கலிங்கம்… கலிங்கம்… அதுவரை யாரும் வெல்லாத நாடு. வெல்ல வேண்டுமென்று வெல்லமாய் இனித்த நாடு. வென்றால் வரலாறு என்னுடையது. வென்றேன். ஆயிரமாயிரம் கலிங்கர்களைக் கொன்றேன். என்னுடைய வீரர்கள் வாளையும் வேலையும் கழுவிக் கழுவி இரத்த ஆறானது சோனையாறு. கூர்வாளால் கலிங்கத்தின் கலிங்கத்தை(ஆடை) உருவி மானம் கெடுத்தான் இந்தச் சண்டா அசோகன்.

இறந்தவர்களுக்கு இறுதிக்கடன் செய்யக்கூட ஆளில்லாமல் பிணச்சகதியில் அழுகி நாறியது கலிங்கம். அந்தப் போர் கலிக்கத்தின் மீது மட்டுமா? இல்லை. என்னை எதிர்க்க வேண்டும் என்று நினைத்த அத்தனை மன்னர்களின் எண்ணங்களின் மீதும் தான். எவனுக்கு என்னை எதிர்க்கும் துணிச்சல் கிளம்பும்? மௌரியன் என்று நினைத்தாலே அஞ்சி மௌனிக்கும் உலகம்.

சண்டா அசோகன். கலிங்காந்தக அசோகன். உயிர் உண்ணும் அசோகன். ஹா ஹா ஹா”

வெறிக்குரலில் தெறித்துச் சிரித்தான் சாம்ராட் அசோகன்.

”அசோகவர்த்தனா….” பிட்சுவின் குரல் அசோகனை நொடியில் அமைதியாக்கியது. இழிந்து போய் தலைகுனிந்தான்.

“இதெல்லாம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகின்றன, தேவனாம்பியாச பிரியதர்ஷனா! போரின் முடிவில் உன் மனம் அமைதியை நாடி பௌத்தத்தில் கலந்தது. இந்தப் பெரு நிலப்பரப்பில் மட்டுமன்றி கடல் கடந்தும் உள்ள மக்களை பத்மயானி கௌதம புத்தர் உபதேசித்த அரிய எட்டு வழிகளை நோக்கி நெறிப்படுத்தி வழிகாட்டினாயே. அதை மறந்தாயா அசோகா?”

”மறக்கவில்லை தேவா. ஆனால் வருவோரை வழிப்படுத்தும் கைகாட்டி மரங்கள் அந்த வழியில் செல்வதில்லையே . அவை வழிகளைக் காட்டிக் கொண்டு காலங்காலமாக அசையாமல் இருந்த இடத்திலேயே கிடப்பவை. உலகத்தையே பௌத்தத்தில் நெறிப்படுத்திய நான் என்னளவில் நெறிகெட்டுத்தான் இருந்தேன்.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் சாக்கிய முனி. அந்த ஆசைகள் என்னை உந்தி உசுப்பியதால் எத்தனையெத்தனை தவறுகள் செய்தேன். அத்தனை தவறுகளையும் இப்போது திருத்திவிட முடியாதா என்று தவிக்கிறேன். பழுது எழுதிய ஓலையைத் திருத்துவார் யார்?

உடலாசை தீராமல் நாளும் ஒரு படுக்கை. படுக்கைக்கு ஒரு பெண். பெண்ணுக்கொரு குழந்தை. என் வம்சத்துக்கு வித்தாக்கிய அத்தனை பெண்களிலும் என்னைப் பித்தாக்கிய பெண் திஷ்யா. நான் சொன்னால் செய்து முடிக்கும் அமைச்சர்களை அவள் நினைத்தாலே செய்து முடிக்க வைத்தேன்.

பதினாறில் செழித்து ஓடிய பருவ ஆறு அவள். அவளுக்கு வயதேறிய நான் போதவில்லை. என் அழகு மகன் குணாளன் மீது மனதை வைத்தாள். அவன் நல்லவன். உத்தமன். ஆசைக்கு மறுத்தவனை தீர்த்துக்கட்ட சதிதீட்டினாள் அந்தச் சண்டாளி. விழியில் ஒளி நீக்கி அவனை இருட்டுலகில் அலைய விட்டாள். தந்தையின் அரசாட்சியில் மகனும் மருமகளும் குருட்டுப் பிச்சைக்காரர்களான நாடகத்தை நடத்தினாள் நயவஞ்சகி.

மலைக்கு அடியிலும் ஒளிக்கு வெளியிலும் கடலின் மடியிலும் கூடத் தேடித் தவித்தேன். எப்படியோ அவர்களைக் கண்டுபிடித்தேன். எப்படியென்று தெரியுமா? குணாளனை புத்த பிட்சுவாகவும் காஞ்சனமாலையை புத்த பிக்குணியாகவும் கண்டுபிடித்தேன். இரக்கமற்ற இச்செயலுக்கு யார் காரணம்? திஷ்யா. திஷ்யா. அந்தப் பெண் பேய்க்குப் போய் இரக்கம் காட்டச் சொல்லிக் கெஞ்சினான் குணாளன். கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் அவள் கழுத்துக்கு உடலிலிருந்து இறக்கம் காட்டினேன். அன்றே கொன்றேன் அவளை.

சற்று சிந்தித்தால் எனக்குப் பிறகு அரசு செலுத்த வேண்டிய என் மகன் மொட்டைத்தலையோடு திருவோடு ஏந்தி இரந்துண்பதற்குக் காரணம் நானேதான். என்னுடைய ஆசையேதான். ததாகம புத்தரின் போதனையும் அதுதானே. ஆசையே துன்பத்துக்குக் காரணம். ஆனால் என் ஆசை என் மகனின் துன்பமாக விளைந்ததுதான் கொடுந்தண்டனை.

அகிம்சையை போதித்த புத்தரின் கொள்கைகளை விட்டுவிட்டு மதத்தை மட்டும் பிடித்துக் கொண்டேன். கூழைக் கொட்டிவிட்டு பானை காத்தவன் நான். கருவிழி அழிந்தும் இருளினில் திரிந்தும் என் மகனால் அகிம்சையை உபதேசிக்க முடிந்தது. ஆனால் நான்?

வங்கதேசத்தில் ஓரூர் புந்தரவனம். அவ்வூரில் யாரோ ஒருவன் மகாவீரரின் பாதங்களில் புத்த பெருமான் வணங்கி நிற்பது போன்ற ஓவியத்தை வரைந்தான் என்று அறிந்து அவன் தலையை அரிந்தேன். அது மட்டுமா? புந்தரவனத்து ஆசிவகர்கள் அனைவரையும் கொன்றேன். ஆசிவகர்களை மட்டுமா கொன்றேன்? இல்லை. உலகத்துக்கே மெய்ஞானம் காட்டிய புத்தர் பிரானின் கொள்கைகளைக் கொன்றேன். பாவி நான். பெரும்பாவி நான்.

இதோ.. ஏழு நாட்களுக்கு முன்னே என் சிதைக்கு குணாளனின் மகனும் என் பேரனுமான சம்பிராதி நெருப்பிட்டான். ஏழு நாட்களில் ஏழுமுறை பகலவன் ஓய்வெடுத்துவிட்டான். ஆனால் ஓயாமல் எரிந்து கொண்டிருக்கிறது என் சிதை. இந்த நெருப்பு அணைவது எப்போது? என் ஆன்மா அமைதி கொள்வது எப்போது?

அரிகந்த தேவா, எனக்கு வழிகாட்டுங்கள்.”

”மகனே, வருந்தாதே. நல்லதோ கெட்டதோ, நமக்குத் தகுதியில்லாதது நமக்கு நடப்பதில்லை. நமது வினைகளின் விளைச்சல்களை நாம் தான் சுமக்க வேண்டும். வினைகளையும் விளைவுகளையும் தீர்மானிப்பது ஞானம். உன்னுடைய ஞானத்துக்கு ஏற்ப நீ வாழ்ந்தாய். நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்க நடக்கப் போவதைப் பார். அதோ அங்கே பார்.”

புத்த பிட்சுவின் குரலால் சிறிது தெளிவு பெற்ற அசோகன் அவர் கைகாட்டிய இடத்தைப் பார்த்தான்.

“மகனே, இங்குள்ள மூன்று வாயில்களும் இறப்பின் வாசல்கள். இறந்த அனைவரும் இந்த மூன்று வாயில்களில் ஒன்றின் வழியாகச் சென்றே ஆக வேண்டும். இந்த மூன்றில் ஒன்று மறுபிறப்பைக் கொடுக்கும். ஒரு பிறப்பில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு தானும் புத்த பெருமானைப் போல் மெய்ஞானம் அடைவதற்கு அதுவொரு வாய்ப்பு. ஞானம் அடைந்தவர்களை மற்றொரு வழி சொர்க்கம் கொண்டு செல்லும். இன்னொரு வழியோ நரகத்துக்கு இட்டுச் செல்லும்.

எந்த வழியில் செல்ல வேண்டும் என்று அவரவரே முடிவு செய்ய வேண்டும். உண்மையான மெய்ஞானிகளுக்கு மூன்று வாயில்களும் ஒரே போலத்தான் தோன்றும். மூன்று வாயில்களும் கொடுக்கும் அனுபவங்களும் அவர்களுக்கு ஒன்றுதான். உன்னுடைய வினை உன்னுடையது. மூன்று வழிகளும் காத்திருக்கின்றன. எந்த வழியில் செல்லப் போகிறாய்?”

மூன்று வழிகளையும் உற்றுப் பார்த்தான் அசோகன்.

பொன்னை உருக்கிச் செய்த அழகிய வாயில் ஒன்று. அந்த வாயிலில் மரகதக் கொடி சுற்றி வைரப் பூ பூத்து பவழக் காய் காய்த்து மாணிக்கப் பழங்கள் பழுத்திருந்தன. வாயிலுக்கு அந்தப் புறம் பொன் மேகங்கள் பேரொளி வீசிக்கொண்டிருந்தன.

இரண்டாம் வாயில் நெருப்பு வாயில். பார்த்ததும் கண் கலங்கி நீர் கொட்டும் செந்தீ. அரக்கும் நெய்யும் கலந்து கொட்டி எரிவது போல போல் கரும்புகை மட்டுமே வாயிலின் மறுபக்கம் தெரிந்தது.

மூன்றாவது வாயிலை நோக்கிய நோக்கில் திடுக்கிட்டான் அசோகன். ருசிக்க ருசிக்க மீண்டும் பசிக்கப் பசிக்கக் கூடிக் களித்து ரசித்த யோனியாக இருந்தது அது. அவன் பார்த்த அத்தனை பெண்களும் அவன் கண் முன் வந்து போனார்கள். என்ன செய்வதென்று அறியாமல் பிட்சுவைப் பார்த்தான்.

”புத்ததேவா, நான் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அந்த வழியில் உன்னுடைய உபதேசங்கள் உடனிருந்து வழிநடத்தட்டும்.” என்று வணங்கினான்.

ஒரு முடிவுக்கு வந்தவனாக பிட்சுவைப் பார்த்து, “அரிகந்த தேவா, சொர்க்கத்துக்குச் செல்லும் தகுதி எனக்கில்லை. தருமச் சக்கரத்தைச் சின்னமாக வைத்து ஆயிரம் சங்கங்கள் வைத்து சாக்கியமுனியின் புகழைப் பரப்பினாலும் என் கைகள் குருதிக் கறை படிந்தவை. அந்தப் பாவக் கறையைக் கழுவி சொர்க்கத்தின் புனித ஊற்றுகளை அவமதிக்க விரும்பவில்லை. நமக்குத் தகுதியில்லாதது நமக்கு நடப்பதில்லை என்பது புத்தரின் உபதேசம். சொர்க்கத்துக்கு நான் தகுதியற்றவன். அதனால் சொர்க்கத்தை நான் மறுக்கிறேன்.

குற்றுமுள்ள உள்ளம் குறுகுறுக்க என் பிழைகளை உணர்கிறேன். அந்த உணர்வு பாவத்தின் சம்பளத்தை ஏற்றுக்கொள் என்று சொல்கிறது. பாவத்தின் சம்பளம் பிறப்பா? ஒருவேளை மறுபிறப்பில் நல்லவனாக வாழ்ந்து விட்டால் இப்பிறப்பின் பாவங்களுக்கான தண்டனை நிறைவேறாமல் போய்விடும். ஒருவேளை மறுபிறப்பிலும் நான் தீயவனானால்? ஐயோ! நினைக்கப் பதறுகிறது என் ஆன்மா. அதனால் நரகத்தின் பாதையில் செல்லவே நான் விரும்புகிறேன். இப்போதும் இனி எப்போதும் புத்த பெருமான் அருள் துணை நிற்கட்டும்.

புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!”

கரும்புகை எழும் செந்தீ வாயிலில் நுழைந்தான் அசோகன்.

நடப்பதை சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தார் புத்தபிட்சு.

கரும்புகைக்குள் நுழைந்தும் குருடானான் அசோகன். அப்படியொரு இருட்டு.கண்களை நன்றாகத் திறந்து பார்த்தான். இருளைத் தவிர எதையும் அவன் கண்கள் உணரவில்லை. காலங்காலமாக உண்டான இருள் முழுவதும் அங்குதான் உள்ளதோ! இருட்டைக் கைகளால் துளவினான். கால்களால் இடறினான். அதிர்ந்தான். அவன் காலுக்குக் கீழே தரையே இல்லை. இனம்புரியாத தவிப்பு. அனுபவித்திராத அச்சம். பற்றிக்கொண்ட பதைபதைப்பு.

கால்களை உதறிக் கொண்டு முன்னேகினான். எதுவோ இடற தலைகீழாகக் கவிழ்ந்தான். விழுந்தான். விழுந்த வேகத்தில் பாதாளத்தை நோக்கிப் பாய்வது புரிந்தது.

கீழே விழும் வேகத்தில் மூச்சு முட்டியது. கால நேரங்களை மறந்த மயக்க நிலை. திடீரென அச்சமூட்டும் ஓலம் அவன் செவிப்பறையைக் தட்டியது. தப்..தப்..தப்…தப்….மூளைக்குள்ளும் முரசு. கைகளைக் கூப்பி அழத் தொடங்கினான். சட்டென்று ஒரு வெளிச்சம். கடுங் குளிர்ச்சி. உடம்பை மூடிய குளுமை தாங்காமல் ஓங்கி அழுதான்.

“புத்த தேவா! புத்த தேவா! காப்பாற்றுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள். லோகப் பிரதீபா சரணம்! பத்மயானி சரணம்!”

”நெலும் மலக் வகே லஸ்சன லமயக் இப்பதிலா இன்னே!” குழந்தையைக் கையிலெடுத்த மருத்துச்சி பிரசவித்த தாயிடம் குழந்தையைக் காட்டினான். அதுவரை வலியிலும் வேதனையிலும் கத்தி அழுத அந்தத் தாயின் கண்களில் கண்ணீரும் மகிழ்ச்சியும் பொங்கியது.

பி.கு. ”நெலும் மலக் வகே லஸ்சன லமயக் இப்பதிலா இன்னே” என்பதற்குச் சிங்கள மொழியில் ”தாமரை போல அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது” என்று பொருள்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை and tagged , , , . Bookmark the permalink.

12 Responses to சங்கம் சரணம் கச்சாமி

 1. amas32 says:

  அதி அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். காலையில் ஒரு முறை அவசரமாகப் படித்தேன். இப்போ மறு முறை பொறுமையாக, ரசித்து. உண்மையும் கற்பனையுமாகப் பின்னிப் பிணைத்து, முடிவில் இருட்டறையான கருப் பையில் இருந்து சிங்களத்தில் பிறக்கும் குழந்தையுடன் முடித்திருப்பது வெகு அழகு!

  மறு பிறவியை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் 🙂

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிமா. கதையை ஒரு முறைக்கு இருமுறை படித்து ரசித்தமைக்கு என் நன்றியும் வணக்கங்களும் 😃

 2. அடடா.. போயும் போயும்.. சிங்களத்து மண்ணிலா பிறக்க வேண்டும் அவன்..!!
  ஓ.. கலிங்கத்தின் பிறவி பயனோ..!

  • GiRa ஜிரா says:

   அதே அதே. எந்த மண்ணில் பிறக்க வைக்கலாம் என்று யோசித்தேன். மகளை அனுப்பிவைத்த மண்ணுக்கே அனுப்பிவிட்டேன் 😃

 3. newton says:

  Very good historical story. The way written is inspiring.

 4. //எரியும் சிதையை நோக்கும் பார்வை. பட்டெனப் பொறி பறக்கும் சிக்கி முக்கி விழிகள். சூட்டுப் புழுதியிலும் மூடித் திறக்காத இமைகள். // கொஞ்சம் தட்டுதே!

  அருமையான ‘கதை’ மகள் யாராகப் பிறந்தாளாம்?

  • GiRa ஜிரா says:

   நன்றி டீச்சர். 🙂

   எது தட்டுதுன்னு சரியாப் புரியலையே. மூடித் திறக்காதங்குறதுக்கு இமைக்காதன்னு நான் பொருள் வெச்சிருந்தேன். நீங்க “மூடிய பிறகு திறக்காத விழிகள்”னு பொருள் படுத்திக்கிட்டீங்களா?

   யாராப் பிறந்தாள்னு சொல்லலாம்னு நெனச்சேன். அப்புறம் வேண்டாம்னு விட்டுட்டேன். யார்னு வேணும்னாலும் எடுத்துக்கலாம் 🙂

 5. (தன்னளவில்) மிகவும் ஆழ்ந்து உணரப்பட்டு எழுதிய சிறுகதை-ன்னு நினைக்கிறேன்..

  ஆங்காங்கே அற்புதமா வந்திருக்கு.. (குறிப்பா புத்தரோடு பேசும் உரையாடல்களில் சில)
  “வரலாறு” என்பதை விட, “உணர்ச்சி” என்பதில் பாற்பட்டு நிற்கிறது இச்சிறுகதை.

  புதிதாய்ப் பிறந்துவிட்டு அசோக(ளு)க்கு வாழ்த்துக்கள்!

  “சாம்ராட் அசோகா” -ன்னு ஓர் இந்திப் படம் வந்துச்சி;
  (தமிழிலும் ஒலிக்கூட்டிய படம்-Dubbing); ஷாருக்கான், தல-அஜீத் இன்னும் பலர் நடிச்சிருப்பாங்க; கற்பனை கலந்த வரலாறு..

  அதே போல், இந்தக் கதையும்! வரலாறாய் இல்லாமல், (தன்னளவில் ஏற்பட்ட) உணர்ச்சியின் சிதறலாய்!
  குறிப்பாக, உவமைகள்= மனத்தின் மொழிகள்;

  //கூழைக் கொட்டிவிட்டு பானை காத்தவன் நான்
  பழுது எழுதிய ஓலையைத் திருத்துவார் யார்?
  ஆனால் உண்மையை மறைந்து ஒளிக்க முடியாத இடத்தில் பொய் சொல்லி என்ன பயன்?//

  அற்புதமான மொழி-உள்-உணர்ச்சி;
  கதையின் போக்கில் மட்டும் இன்னும் சற்றே மெருகேற்றி இருக்கலாம்.

  மதம் உதறி விட்ட பெளத்தத்தையும்,
  இன்னொரு மதம் ஆக்காமல்
  சிங்கள மண்ணில் மறு ஜனித்த பெண்ணே; மெய்யான “ஸங்க-மித்ரா”

  புதிய “அசோகள்” – அவளுக்கு வாழ்த்துக்கள்!

 6. பெளத்த வரலாற்று ஏடுகளில், ஒரு “நாடகத் தன்மை”யும் கலந்தே இருக்கும்;
  (பெளத்தர்கள் யாரேனும் இருப்பின், மன்னிக்க, தவறாகக் கொள்ள வேணாம்)

  நல்லதின் நல்லதைக் காட்ட, எதிரான தீயதை, “அதீதமாய்க்” காட்டல் என்பதொரு பாணி;
  அன்றைய பிராமண-வேத-ஹிந்து மதத்துக்கு எதிராய் நிற்கணும்-ன்னா, புராணப் பொய்களுக்கு ஈடு குடுக்க, இப்படியெல்லாம் செஞ்சா தான் முடியும் போல;

  *பெளத்தம் தழுவிய முன் = கொடூரன்
  *பெளத்தம் தழுவிய பின் = சாந்தன்
  அசோகரின் “எழுதப்பட்ட” வரலாறான அசோகவதானம்/ திவ்யவதானம் என்ற ஏடு முழுக்க இப்படித் தான் இருக்கும்!

  பின்பு சீனப் பயண வித்தகர் பாஹியான் (Fa-Hien) அதை மொழியாக்கி, பல அதீதங்களைக் களைந்தார்.
  வரலாற்று ஏட்டை மட்டுமே சொல்கிறேன்; பெளத்த சமய (அ) நெறி ஏடுகளில், இப்படி இல்லை; அவை புத்தபிரான் “மனத்துக்கு” உகந்தவை!

  மனம் > மதம்
  தத்தமது மார்க்கம், நிறுவனம்; அதைக் “காப்பாற்ற” வேணும் என்னும் போது தான், “மதம்” பிடிக்கிறது; பீடிக்கிறது…

  சங்கத் தமிழில் பெளத்தம் உண்டு (கடைச் சங்கம்)

  அசோகனின் அரசு எல்லை.. தமிழகத்துக்குள் மட்டும் வரவே இல்லை!
  கலிங்க-ஆந்திரத்தோடு நின்று விட்டது!
  (மெளரிய நாட்டின் தேர்கள், தமிழக மலைகளில் ஓடிய குறிப்பு – புறநானூற்றுப் பாடல்கள் உள!)

  • இது, “கதை” தான் எனினும்,
   இங்கே, கதையை ஒட்டிய சிற்சில வரலாற்றுத் தகவல்கள் சொல்லிட, இசைவு தாருங்கள்; நன்றி!

   சண்டா அசோகா = வெறி பிடித்த அசோகன்;
   Hitler Torture Chamber போல் “சித்திரவதைக் கூடம்” என்பதெல்லாம் புனைவே:) வரலாற்று ஆதாரம் இல்லை!
   பெளத்தம் தழுவும் முன் கொடூரன்/ பெளத்தம் தழுவிய பின் சாந்தன் என்று காட்ட உருவான “கதைகள்” இவை:) புத்தபிரானுக்கே பொய்சொன்ன கதை:)

   திஷ்யா எ. திஷ்யரக்ஷா = அசோகனின் இளம் மனைவி.. என்பது உண்மையே!
   அசோகன் மகனான குனால் என்பவனின் கண்களை,
   அவன் போரில் வெற்றி கொண்ட நாட்டின் பரிசாக அனுப்பி வைக்குமாறு, ஓலை எழுதி, நயவஞ்சகமாய்ப் பறித்தாள் என்பதும் உண்மையே:(

   குனால் & காஞ்சனமாலா = பெருஞ் சோகத்திலும், கணவன் மனைவியுமாய்.. இசையும் காதலுமாய்!

   //மகாவீரரின் பாதங்களில் புத்த பெருமான் வணங்கி நிற்பது போன்ற ஓவியம்//

   அது மகாவீரர் அல்ல!
   நிர்-கிரந்த ஞாதி புத்ரர்! இவர் ஆசீவகர்

   ஆசீவகம் வேறு, சமணம் வேறு!
   ஆசீவகம் = சமண/ பெளத்தத்துக்கும் முந்தைய நெறி..

   பெளத்தன் ஆகிய பின்னும், அசோகன்… விடாமல் “மதம்” பிடித்துக் கொண்டிருத்தல்:(
   தனக்குப் பிடித்தமான சமயம், இன்னொரு சமயக் காலில் விழுவது போல் ஓவியமா? என்ற “மதம்” பிடித்துக் கொளல்!

   = இப்படி இருந்தால், உண்மையில் அது புத்தருக்குத் தான் வேதனை:(

   புத்தபிரான், மகாவீரர் = இருவருமே தாய் நெறியான ஆசீவகத்தில், மதிப்பு கொண்டே இருந்தனர்;
   வேத மதம், வேள்விச் சடங்குகள், சாதி மேலாண்மை, குலக் கல்வி= இவற்றையே எதிர்த்தனர்!

   பெளத்தம் தழுவும் முன் கொடூரன்/ பெளத்தம் தழுவிய பின் சாந்தன் என்று காட்ட உருவான “கதைகளால்”… பெளத்தமும் “மதம்” ஆகி, மூல தனமான புத்தரையே இழக்கும்:(

   பின்னாளில்..
   அப்படிப்பட்ட புத்தரையே, இன்னொரு விஷ்ணு “அவதாரம்” ஆக்கியது இன்னும் பெருங்கொடுமை!
   திரிபுராந்தகர்களை அழிக்க, “புத்த அவதாரம்” எடுத்து வேண்டுமென்றே குழப்பினார் என்றும், பின்னர் ஈஸ்வரன் திரிபுர சம்ஹாரம் செய்தார் என்றும் புராணம்..

   பெளத்த நெறியை, வேத மதம், “ஸ்வீகரித்துக்” கெடுத்த கதை..

   உங்கள் பதிவு, இவற்றுக்கு மாற்றாய், மனத்துக்கு இதமான ஆறுதல்!

 7. தலைப்பு, நல்லதொரு தூண்டுதல்: “ஸங்கம்” சரணம் கச்சாமி;
  = இந்த “ஸங்கம்” (sangam) வேறு,
  = தமிழ்ச் “சங்கம்” (changam) வேறு:)

  ஸங்கம் = பிராகிருத மொழிச் சொல்; ஸங்கமம் = சம்ஸ்கிருதம்

  குழுவாகச் சேர்தல் = ஸங்கம்!
  புத்த பிக்குகள் குழுவாகச் சேர்ந்த அமைப்பு= ஸங்கம்

  *புத்தம் சரணம் கச்சாமி = புத்தரைச் சரணமாக (புகல்) அடைகின்றேன்
  *தம்மம் சரணம் கச்சாமி = புத்த தம்மம் (தர்மம்) புகல் அடைகின்றேன்
  *ஸங்கம் சரணம் கச்சாமி = புத்த ஸங்கத்தில், புகல் அடைகின்றேன்

  பாலி மொழியில் “ர்” சப்தம், ஊடு வராது;
  *தம்மம்= பிராகிருதம்; தர்மம்= சம்ஸ்கிருதம்

  அதே போல்..
  *தேவனாம்-பிய = பிராகிருதம்; தேவனாம்-ப்ரிய = சம்ஸ்கிருதம்
  *ஸங்கம் = பிராகிருத மொழிச் சொல்; ஸங்கமம் = சம்ஸ்கிருதம்

  தமிழ்ச் சொல் “சங்கம்” வேறு! (changam)
  changa tamizh!
  சங்கம் = “சங்கு” ஒலித்து ஒழுங்குறும் அவை;

  எப்படி விளக்கில் இருந்து பெறும் ஒளி, தெளிவைக் குடுப்பதால்= “விளக்கம்” என்று ஆகிறதோ..
  அப்படியே சங்கு ஒலித்து, ஒழுங்கு பெறும் சான்றோர் அவை (சபை) = “சங்கம்”

  தலைச் “சங்க” நாண் மதியம் என்ற ஊரே உண்டு, பூம்புகாருக்கு அடுத்து;

  அதனால், சங்கத் தமிழில் உள்ள “சங்கம்” எ. சொல்லே, “தமிழ் அல்ல” என்று குழம்பி விடக் கூடாது;
  ஒரு தொல்பெரும் மொழியின், தனித்த அடையாளமான “சங்கத் தமிழை” = இன்னொரு மொழிச்சொல்லால் (ஸங்கம்) ஆண்டாண்டு காலமாய்க் குறித்திட, தமிழ்ச் சான்றோர் ஒப்பார்..

  முதலில் இப்படிக் குழம்பிய மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களே, சங்கம்=மன்றம் என்றெல்லாம் மாற்றி, பின்பு தெளிந்து திருத்திக் கொண்டார்;

  தமிழ்-வடமொழி, “ஒன்றே போல் ஒலிக்கும்” சொற்கள் சிற்சில உண்டு; ஆனா வேறு வேறு!
  எ.கா: கந்தன் – ஸ்கந்தன்; அதே போல் சங்கம் – ஸங்கம்!

  *தமிழ்ச் சொல் கந்தன்= “கந்து” எனும் பற்றுக் கோடு/ நடுகல்
  *சம்ஸ்கிருத “ஸ்கந்தன்” = ஒன்றாய் இறுக்கிக் கட்டிய (6 faces tied in 1 body story)

  பின்னாள் மதக் கலப்பால்.. புத்தரை “ஸ்வீகரித்தது” போல், தமிழ் முருகனையும் “ஸ்வீகரித்து”…
  கந்தன்/ ஸ்கந்தன் = ஒரே தெய்வத்தைக் குறிக்கத் துவங்கி விட்டாலும்..
  இரண்டும் வெவ்வேறு சொற்கள்;

  அதே போல்..
  *தமிழில், “அமிழ்து”= இனிமை
  *சம்ஸ்கிருதத்தில், “அம்ருத்” (அ-மிருத்யு) = சாவு இல்லாத குடி-பானம், அம்ருதம்

  இப்படி…”ஒன்றே போல் ஒலிக்கும்”, வெவ்வேறு வேர்ச் சொற்கள்;
  அவ்வண்ணமே…
  *தமிழில் சங்கம்= சங்கு ஒலித்து ஒழுங்குறும் அவை
  *வடமொழி ஸங்கம் = குழுவாகச் சேர்தல்

  அதனால் துணிந்து சொல்லுவோம், “சங்கத்” தமிழ், தமிழே!
  Sangam சரணம் கச்சாமி:)
  Changa தமிழ் வாழ்க!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s