அல்லில் நேரும் மின்

Valliyur1Vampire Chronicles என்று Anne Rice எழுதிய ஆங்கிலத் தொடர் நாவல்கள் உண்டு. அதெல்லாம் ஒரு காலத்துல விழுந்து விழுந்து படிச்சிருக்கேன். அதுல வேம்பயர் கிட்ட மனிதன் ஒருத்தன் மாட்டிக்கிறான். அவனால தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு அந்த வேம்பயர் சொல்லும்,“Humans are so fragile. That is what I like about them.”

நம்ம அவ்வளவு பலவீனமானவர்களா? அது உண்மைதான்னு சொல்ற மாதிரி ஒரு அறிவியல் செய்தி. நம்முடைய விரல்களைக் கேரட்டைப் போல நறுக்குன்னு கடிச்சிறலாமாம். எத்தனையோ பொருட்களை தூக்கி நிமிர்த்தி வெச்ச நம்ம விரலுக்கு கேரட் அளவுக்குத்தான் வலிமையாம்.

இந்த உடம்பை வெச்சுக்கிட்டுதான் நாம இல்லாத ஆட்டமெல்லாம் ஆடுறோம்.

அல்லில் நேரு மினது தானும் அல்ல தாகிய உடல் மாயை
அல்லில் நேரும் மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை

இருட்டுல பளிச்சுன்னு ஒரு மின்னல் வரும். மின்னல் வந்த நொடியில் எல்லா எடத்துலயும் கண்ணைக் கூசுற வெளிச்சம் பரவும். ஆனா அதெல்லாம் ஒரு நொடிதான். மறுபடியும் இருட்டு வந்துரும்.

நாம உடலால அனுபவிக்கின்ற எல்லாமே அந்த மின்னலைப் போலத்தான். அந்த நேரத்துக்கு மட்டும் நல்லாருக்கும். ருசியாச் சாப்பிடனும்னு சாப்பாட்டுக்கடைக்குப் போறோம். வேண்டிய அளவுக்கு கைல காசும் இருக்கு. இருக்குற காசுக்கெல்லாம் சாப்பிட்டுக்கிட்டே இருக்கோமா? முடியாது. வயிறு நெறஞ்சதும் அதுக்கு மேல ஒரு பருக்கை கூட சாப்பிட மாட்டோம். அதையும் மீறி ஒரு உருண்டைச் சோற்றை உருட்டி உள்ள தள்ளினா? அது வரைக்கும் இன்பமா இருந்த சாப்பாடு துன்பமா மாறிடும்.

இத நீங்க எந்த உடலின்பத்துக்கும் சொல்லலாம். உடம்பால நாம அனுபவிக்கின்ற எதுவுமே நிலையில்லாதது. அளவு கொஞ்சம் கூடியதுமே திகட்டும். அதுனாலதான் அதையெல்லாம் மின்னலைப் போல அந்த நொடியில் வெளிச்சம் தந்துட்டுக் காணாமப் போற மாயைன்னு அருணகிரி சொல்றாரு.

கல்லில் னேரஅ வழிதோறுங் கையு நானு முலையலாமோ
கல்லில் நேர் அவ்வழி தோறும் கையும் நானும் உலையலாமோ

நல்லா யோசிச்சுப் பாத்தா… நம்மள வழிநடத்திக் கூட்டிட்டுப் போறதே இந்த உடல் மாயைதான். நாம செய்றது எல்லாமே இந்த உடம்பை எல்லா வகையிலும் திருப்திப் படுத்துறதுதான். இந்த உடம்பை மகிழ்விச்சா மனசு மகிழும். நம்ம வாழ்க்கைல பண்றதெல்லாமே அதுதான். அது மட்டுந்தான்.

அப்படி நம்ம போற வழி நல்ல வழியாவா இருக்கு? கல் நிறைஞ்ச பாதை மாதிரி எத்தனை தடங்கல்கள். அதுதான் கல்லில் நேர் அவ்வழி. கல் போல நிறைய தடங்கல்கள் உள்ள பாதையில் நம்மை உடல் மாயை கூட்டிக்கிட்டுப் போகுது.

அப்படிப்பட்ட வழியில போறதுனால நம்ம ஒழுக்கமும் நிம்மதியும் நம்ம விட்டுப் போகுது.

கை என்ற சொல்லுக்கு ஒழுக்கம்னு பொருள். கையறுநிலை, கைம்பெண் என்ற சொற்கள்ள இருக்கும் கையும் ஒழுக்கத்தைக் குறிக்கும். கையறு நிலைன்னா ஒழுக்கத்துக்கு உட்பட்ட எந்த நல்ல வகையிலும் உதவி செய்ய முடியாத நிலைன்னு பொருள்.

கல் நிறைந்த பாதையில் உடல் மாயை உந்தித் தள்ளும் போது ஒழுக்கத்தையும் நிம்மதியையும் இழுந்து நாங்கள்ளாம் வருத்தப்படலாமா முருகா?

சொல்லில் நேர்படு முதுசூரர் தொய்ய வூர்கெட விடும்வேலா
சொல்லில் நேர்படு(ம்) முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா

இந்த வரியைக் கொஞ்சம் ஆழமாப் பாக்கனும். மொதல்ல நேரடியான பொருளைச் சொல்லிட்டு அப்புறமா உட்பொருளைப் பாப்போம்.

அசுரர்கள் எல்லாம் சொல்லி வந்து சண்டை போட்ட போது அவர்களை வெற்றி கொண்ட வேலவனே!

இதுதான் எளிமையான பொருள். அத அப்படியே விட்டுட்டு ஆழமான பொருளுக்குப் போகலாம்.

உடல் மாயையால நிம்மதியும் ஒழுக்கமும் கெடுது. அப்ப என்ன பண்றோம்? நம்மையும் நம்ம கருத்தையும் நிலை நிறுத்தி வெற்றி பெற விரும்புறோம். அதுக்கான வழியா விவாதத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். அலுவலகத்துலயோ வீட்டுலயோ டிவிட்டர்லயோ பேசிப் பேசித்தானே நம்ம நிலையைத் தெளிவு படுத்துறோம்.

ஆனா அது பெரும்பாலும் விவாதமாத்தான் இருக்கும். அந்த விவாதம் இன்பமாவா இருக்கும்? அதுவும் துன்பம். சூர்னா துன்பம்னும் ஒரு பொருள் உண்டு. சொல்லிச் சொல்லி வார்த்தைகளால் நாம அடிச்சிக்கிறோமே… அதுதான் சொல்லில் நேர் படு முதுசூரர்.

அந்தத் துன்பம் போகனும்னா என்ன வேணும்? அறிவு வேணும்.

வேல் என்பது அறிவோட குறியீடு. அறிவு எப்படி இருக்கனும்? கூர்மையா இருக்கனும். அகலமா இருக்கனும். ஆழமாவும் இருக்கனும். வேலோட பண்புகள் என்ன? கூர்மையான நுனி. அகலமான இலை. ஆழமான தண்டு.

அந்த அறிவை ஆண்டவன் நமக்குக் குடுத்தா நம்ம துன்பங்கள் போகும். அதைத்தான் ஆண்டவன் நம்ம மேல வேலை விட்டா சூர் அழியும்னு அருணகிரி சொல்றாரு.

அருணகிரி மட்டுமில்ல. இளங்கோவடிகளும் “சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே”ன்னு சொல்றாரு. அதாவது ”பெரிய துன்பத்தை அழிக்கும் சுடர் விடும் இலையை உடைய வேலே” என்று பொருள். அறிவுச் சுடர்னு நம்மளும் சொல்றோமே.

ஆக.. உடல் மாயையால் நமக்குப் உண்டாகும் துன்பமும் ஒழுக்கக் கேடும் போகனும்னா.. அறிவு வேணும். அந்த அறிவைக் கொடு ஆண்டவனேன்னு முருகன் கிட்ட அருணகிரி கேக்குறாரு. நம்மளும் கேப்போமே. முருகன்னு இல்ல… எந்தப் பேர் நமக்குப் பிடிச்சிருக்கோ, அந்தப் பேரைச் சொல்லியே கேக்கலாம்.

வல்லி மார் இருபுறமாக வள்ளி யூருறை பெருமாளே
வல்லிமார் இருபுறமாக வள்ளியூர் உறை பெருமாளே

இரண்டு தேவியர்களையும் இருபுறமாகக் கொண்டு வள்ளியூரில் உறையும் பெருமாளே முருகா! மின்னலைப் போல நொடியில் தோன்றி மறையும் உடல் இன்பத்தை மட்டும் விரும்பி, நாங்கள்ளாம் போகாத வழியில் போய் துன்பப்படுகிறோம். அந்தத் துன்பங்கள் போக, அறிவைத் தந்தருள்வாய் முருகா!

அல்லில் நேரு மினது தானும் அல்ல தாகிய உடல் மாயை
கல்லில் னேரஅ வழிதோறுங் கையு நானு முலையலாமோ
சொல்லில் நேர்படு முதுசூரர் தொய்ய வூர்கெட விடும்வேலா
வல்லி மார் இருபுறமாக வள்ளி யூருறை பெருமாளே! – அருணகிரி

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to அல்லில் நேரும் மின்

 1. ” அதை எப்படிப் பட்ட பொருள்ல இன்னைக்குப் பயன்படுத்துறோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா திக்குன்னு இருக்கும். கணவனை இழந்த பெண் ஒழுக்கமா இருக்கனும்னு சொல்லாமச் சொல்லி இப்படியொரு வக்கிரமான பெயரை வெச்சிருக்கோம். ” இதை சொல்லாமல் தவிர்த்திருக்கலாமே. இந்த கட்டுரைல இதெல்லாம் எதுக்கு வரணும்? Why cant we make it a negative points free zone ? Just my opinion. 🙂 – t/r Mrs.PriyaSuresh

 2. amas32 says:

  வேல் பற்றிய விளக்கம் அருமை 🙂

  amas32

 3. வேல் விளக்கம் அருமை!

  // முருகன்னு இல்ல… எந்தப் பேர் நமக்குப் பிடிச்சிருக்கோ, அந்தப் பேரைச் சொல்லியே கேக்கலாம்.// இது ரொம்பவே பிடிச்சுருக்கு! இதுலே பழக்கமான பெயர், குடும்ப வழக்கமான பெயர் இப்படி ஒன்னு மனசுலே பச்சக்ன்னு ஒட்டிக்கிட்டு இருக்கும் பாருங்க…அதுதான் மொதல்லே வருது!

  முருகன் அருள் உங்களுக்கு நிறைய இருக்கு! நல்லா இருங்க.

 4. வள்ளியூர் = வள்ளி “ஊரும்” ஊர்..
  ஊர்வன போல் ஊர்ந்தாள், மனத்தால்! அவனுக்காகவே!

  பொதுவா, மனம் “பாயும்”! ஊராது..
  அலை “பாயும்” மனம் என்பார்கள்;
  வாயு வேகம், மனோ வேகம் என்பார்கள்; ஏன்-னா மனசின் வேகம் அப்படி!

  அப்படியான வேகமான மனசு, ஊர்ந்து ஊர்ந்து போச்சுன்னா நல்லாவா இருக்கும்?

  காதல் பாரம் மனசில் சுமந்து கொண்டு, உடலை இழுக்க முடியாமல் ஊர்ந்து கொண்டு போனவள் வள்ளி;
  (என்றேனும் ஒரு நாள்… தன் முருகன் கைதூக்கி விடுவான் எ. நினைப்பில்)

  அதான்..
  “வன்றக் குறவர் குன்றக் கறங்கில்,
  பொன்றக் காதல் வள்ளியூர் பாக்கம்”
  என்றது தமிழ் இலக்கியம்!

  “வள்ளியூர்” என்று ஊரை மட்டும் குறிக்கவில்லை; பாக்கம்-ன்னாலே ஊர் தானே? அப்பறம் என்ன ஊர்ப்-பாக்கம்?
  வினைத் தொகையா, வலி மிகாது, வள்ளியூர் பாக்கம்= வள்ளி “ஊரும்” பாக்கம்!

  மனசால், “ஊர்ந்து” வாழ்வது மிகவும் கடினம்!
  அப்படி ஊர்ந்து வாழ்ந்த வள்ளி வாழ்க! வள்ளியூர் வாழ்க!

  “வள்ளியூர்” = திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரிக்குப் பக்கத்துல தான்..
  திருக்குறுங்குடிப் பெருமாள் கோயிலுக்கு வெகு அருகில்! 15 mins by bus..

  நெல்லை-தூத்துக்குடி மாவட்டம்..
  குகைக் கோயில்-ன்னா.. “கழுகுமலை” தான் பலருக்கும் ஞாபகம் வரும்!
  ஆனா, வள்ளியூரும் = குகைக் கோயில் தான்!
  பலரும் அறிந்திராத அழகான-அமைதியான கோயில்;

  பெரிய குளம், பின்னாடி மலை,
  மலையைக் குடைந்து ஆலயம்,
  ஆலயத்துக்குள் ஏற நெட்டு நெட்டாய்ப் படிக்கட்டு.
  படிக்கட்டு சுடாமல் இருக்க, மேற்கூரை வெள்ளை மண்டபம்.

  திருக்குறுங்குடி போலவே..
  அகழ்வாராய்ச்சிகள் உள்ள தொன்மையான கோயில்= வள்ளியூர்; அதே அமைப்பு!

  தமிழ் முருகனுக்கு, பேரு மட்டும் “ஆனந்த கல்யாண சுப்ரமண்யர்”-ன்னு வச்சிட்டாங்க:(
  வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதால், அவளுக்காக, அவனை மன்னிச்சி விடறேன், இப்படியான வடமொழிப் பேருக்கு:)

  பன்னீர்த் திருமஞ்சனம் (அபிஷேகம்) மிகச் சிறப்பு;
  அப்படியே பன்னீர் வாசனையில் மணப்பான், மாப்பிள்ளை:)
  பன்னீர் வாசனையில் கலந்த அவன் ஆண்மை வாசம்.. முருகா!

 5. அல்லில் நேரும் மின்னல் வாழ்க்கை= அழகான விளக்கம்; நன்றி!

  அருணகிரிக்கும் நன்றி..
  இப்படித் தெரியாத சிறுச்சிறு ஊரையும், நடையாய் நடந்து, அன்னிக்கே youtube இல் ஏத்தி வைச்சது போல், திருப்புகழில் ஏத்தி வைச்சமைக்கு!

  //வள்ளி மார் இருபுறமாக வள்ளி யூருறை பெருமாளே//

  மன்னிக்கணும்; இது தகவற்பிழை-ன்னு நினைக்கிறேன்; (எதற்கும் சரிபார்த்து விடுங்கள்)
  அது “வள்ளிமார்” அன்று; “வல்லிமார்”

  “வல்லிமார்” இரு புறமாக, வள்ளியூர் உறை பெருமாளே -ன்னு தான் திருப்புகழில் வரும்!
  அல்லில் நேர்
  சொல்லி நேர்
  வல்லி மார் -ன்னு.. “ல்” எதுகை தான் பாடல் முழுதும்!

  வல்லிமார்= இரண்டு பெண்கள், இரு புறமாக…
  வள்ளிமார் = வள்ளி ஒருத்தி தான்; அவள் பன்மை ஆகாள்; அவளுக்கு ஈடு வேறு எவளும் இல்லை!

  • Still, I liked the gap u put between வள்ளி-மார்:)
   //வள்ளி மார் இரு புறமாக…. வள்ளி யூருறை பெருமாளே//

   I read this a bit romantically; he between her இரு புறமாக..
   Muruga, u are a bad boy, I say:)
   கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்…
   என்அவா இனிக்கும் என்னவா; முருகவா!

  • GiRa ஜிரா says:

   காப்பி பேஸ்ட் தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s