பாபநாசத்துக்குத் தமிழ்ல என்ன?

பாபநாசம் படம் வந்தாலும் வந்தது….. இந்தக் கேள்வியும் நண்பர் விஜய் வழியா டிவிட்டர்ல வந்தது.

பாபநாசம் தமிழ்ப் பேரா?

சின்னவயசுல பலமுறை போன ஊர் தான். அப்பல்லாம் பாவநாசம்னுதான் சொல்லி வழக்கம். இப்பல்லாம் தமிழ் பாலிஷ்டு ஆயிருச்சு.

சரி. கதைக்கு வருவோம். பாபநாசம் தமிழா?

அது பெயர்ச்சொல், அதுனால தமிழ்னு எடுத்துக்கலாம்னு ஒரு கருத்து. ஏத்துக்கலாம். ஆனா அது காரணப் பெயர்ச் சொல். பாவம் நாசம் என்ற இரண்டு சொற்களால் அமைந்த சொல். பாவம் நாசமாகும் இடத்துக்குப் பாபநாசம்னு பேர்.

அந்த வகைல பாபம் நாசம் ரெண்டுமே தமிழ்ச் சொற்கள் கிடையாது.

அப்போ அதுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

தீவினையழித்தல் வினைகடிதல்னு
நானும் ரெண்டு மூனு பேர்கள யோசிச்சேன். பொருத்தமா இருந்தாலும் இலக்கியத்துல எதாச்சும் இருக்கான்னு தேடினேன்.

சங்க இலக்கியந்தானே இப்ப இருக்குறதுலயே பழசு. அதுல திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் தான் கடவுளைப் பத்திப் பேசும். திருமுருகாற்றுப்படை கொஞ்சம் பழசு. பரிபாடல்தான் சங்க இலக்கியத்திலேயே மிகப் புதிதான நூல். கிட்டத்தட்ட கடைச்சங்கம் முடியும் காலம்னு சொல்றாங்க.

திருமுருகாற்றுப்படைல தேடிய வரைக்கும் பாவம் புண்ணியமெல்லாம் கண்ணுல படல. கடவுள் கிட்ட வேண்டிக்கிறதும் எளிமையா இருந்துச்சு.

சரின்னு பரிபாடல் எடுத்துப் பாத்தேன். பரிபாடல்லதான் நிறைய புராணக்கதைகள் இலக்கியத்துல நுழைஞ்சது. அதுலயும் பாவம் புண்ணியம் தேடிப் பாத்தேன். கிடைக்கல. கடவுளைப் பாடிட்டு என்னதான் கேட்டாங்கன்னு தேடிப்பாத்தா…. நீங்களே படிச்சுப் பாருங்க கடுவன் இளவெயினனார் முருகன் கிட்ட கேட்டத

யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! – பரிபாடல் – கடுவன் இளவெயினனார்

பொன்னும் பொருளும் இன்பமும் அல்ல… உன் அருளும் அன்பும் அறமும் போதும்னு பாட்டு எழுதி வெச்சிருக்காரு. கொஞ்சம் கூடத் தன்னலமே இல்லாம இருந்திருக்காரே. சேச்சே!

சங்க நூல்களை ஏறக்கட்டியாச்சு. அடுத்து? சங்கம் மருவிய காலகட்டத்துலதான். இந்தக் கட்டத்துலதான் நிறைய மெய்யியல்(ஆன்மிகக்) கருத்துகள் நம்மூருக்கு வந்தது. சனாதனம் மட்டுமல்ல சமணமும் பௌத்தமும் செழித்திருந்த காலகட்டம் அது.

சிலப்பதிகாரத்தை எடுத்துப் பாக்கலாம். சிலர் சங்க இலக்கியத்துல தேடுறேன்னு சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களைத் தரவு கொடுப்பாங்க. நம்பாதீங்க. அதுக்கு அப்புறந்தான் இது.

சிலப்பதிகாரம்னதும் எனக்குத் தோன்றியது ரெண்டு கட்டங்கள். ஒன்னு கண்ணகியோட தோழி தேவந்தி கண்ணகிக்கு அறிவுரை சொல்ற இடம். இன்னொன்னு சாரணர்களைக் கோவலனும் கண்ணகியும் சந்திக்குமிடம். ஒவ்வொன்னாப் பாப்போம்.

கணவற் கொருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக
(கனாத்திறம் உரைத்த காதை, புகார்க்காண்டம்)

புரியலையா? கணவனைப் பிரிஞ்சு துன்பப்படும் கண்ணகி கிட்ட தேவந்தி, “போன பிறப்பில் கண்ணகி கணவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு நோன்பைச் செய்யாம விட்டதால கணவனைப் பிரிய வேண்டியதாப் போச்சு. இப்ப சூரிய குண்டத்துலயும் சந்திர குண்டத்துலயும் குளிச்சு மன்மதன் கோட்டத்தில் போய்க் கும்பிட்டா நல்லது நடக்கும்னு” சொல்றா.

கணவற்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம் பிறப்பில், போய்க் கெடுக

இதுல போய்க் கெடுகன்னு சொல்றது வேறொன்னும் இல்ல. இப்பல்லாம் நம்ம “போய்த் தொலையட்டும்”னு சொல்றோமே. அதுதான். அந்தக் காலத்துலயே இப்படிச் சொல்ற பழக்கம் இருந்திருக்கு.

அந்தப் பாட்டிலும் புண்ணியம் பாவம் கிடைக்கல. அடுத்த காட்சிக்குப் போவோம்.

கவுந்தியடிகளோட சேர்ந்து கோவலனும் கண்ணகியும் மதுரையை நோக்கி வர்ராங்க. வழியில் சாரணர்கள்(சமண முனிவர்கள்) வர்ராங்க. கோவலனும் கண்ணகியும் இல்லறச் சமணர்கள். அதுனால சாரணர்களை வணங்குறாங்க. அப்போச் சொல்றாங்க சாரணர்கள்…

தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்
பண்டைத் தொல்வினை பாறுக வென்றே

“பண்டைத் தொல்வினை பாறுக” என்று சாரணர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள்.

அதாவது பழைய பாவங்கள் அழியட்டும்னு. பாவங்கள் நாசமாகட்டும்னு சொல்றதாகவும் வெச்சுக்கலாம்.

பாவத்துக்கு வினைன்னு யோசிச்சது சரியா இருக்குது. நாசத்துக்குப் பாறுன்னு பொருத்தமாவும் இருக்கு. சுருக்கமாகவும் இருக்கு.

பாறுதல்னா அழித்தல்னு பொருள். பாறுன்னு கழுகையும் சொல்றதுண்டு. இந்த எடத்துல அழித்தலைத்தான் குறிக்கும்.

ஆக… பாபநாசத்துக்குத் தமிழ்ல வினை பாறுதல்.

எனக்குத் தெரிஞ்சதச் சொல்லிட்டேன். ஒங்களுக்குத் தெரிஞ்சதச் சொல்லுங்க 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இலக்கியம், சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை and tagged , , , , . Bookmark the permalink.

14 Responses to பாபநாசத்துக்குத் தமிழ்ல என்ன?

 1. amas32 says:

  அருமை ஜிரா 🙂 பாபநாசம் பெயர்ச் சொல் வெச்சு ஒரு அழகான பதிவு 🙂 வினை பாறுதல் அழகான தமிழாக்கம் 🙂

  amas32

 2. அந்த காலத்துல யாரும் பாவம் செய்யல பாஸ்:)). சமஸ்கிரதம் வந்த பிறகுதான் பாவங்கள் நிறைய நடந்து அப்பறம்தான் இந்த வார்த்தைகள் வந்திருக்குமனு நெனைக்கிறேன் பாஸ் 🙂

 3. subbuthatha says:

  தீவினை அழிதல் என்றோ அல்லது
  நீங்கள் சொல்லியவாரோ இந்தப் படத்தின்
  தலைப்பு இருந்தால்
  என்னவா இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.

  யோசிக்கவே வேண்டாம்.
  முன்னாடி எல்லாம் படத்தின் கதை என்னன்னு தான்
  கமல் சார் படம் பார்க்கும்போது புரியாது.

  இப்ப , நீங்க சொல்றது போல தலைப்பு வச்சா,

  வேண்டாம் சார்.
  எங்க கமல் எத்தனையோ ரிஸ்க் எடுப்பார்.
  ஆனா இதை எடுக்க மாட்டார்.

  அப்படின்னு எனக்கு தோணுது.

  நான் ஒரு கமல் ரசிகன்.
  அம்மாவும் நீயே காலத்துலேந்து.

  சுப்பு தாத்தா.

 4. Kaarthik Arul says:

  Super GiRa

 5. ஒரு சினிமா……….. எவ்ளோ தமிழ் ஆராய்ச்சி செய்ய வச்சுருச்சுன்னு பார்த்தால்….. பாபநாசம் உண்மையாவே ஒருவெற்றிப்படமுன்னுதான் தோணுது! இதுவரை கண்ட சினிமாக்களைப் பார்த்த வினைகள் பாறட்டும்! ஆமென்.

 6. நை…
  நயி…
  நசிதல் நசுங்குதல் என பலவாறாக யோசித்துப் பார்த்தால் அதெல்லாம் சமய இலக்கியங்களில் வரும் சொல்லாடல்கள்.

  வினை என்ற சங்கத்தமிழ்ச் சொல் இன்றும் புழக்கத்தில் உள்ளதென அறிவோம். அதையே சரியாக பிடித்துவிட்டீர்.

  அற்றுப்போக…
  நாசமாக போக என்ற சொல்லுக்கு என தனியாக யோசிக்காமல்
  சிலம்பிலேயே வினையையடுத்த சொல்லாக “பாறுக” எடுத்தது சரியா…!?

  நாசம்
  நசித்தல்
  அழிதல்
  அழித்தல் என்ற சொல்லுக்கு நிகராக ஒற்றைச் சொல்லாக ஆனால் தனித்து இயங்க முடியா சொல்லாக இருப்பது இந்த பாறுக தான் போலும்.

  இளைப்பாறுக…
  பசியாறுக
  போல…. வினைப்பாறுக ..!

  பசியை… இளைப்பை… தவிப்பை…. அறுத்தெடுப்பது ஒழிப்பது போல
  பாவங்கள் எனும் வினையை அறுத்தெடுத்தல் ..!!

  “வினைப்பாறுக”.. பெயர்ச் சொல்லாக இல்லாமல் அருமையான கட்டளைச் சொல்லாக இருக்கிறது.

  • அறு எனும் வேர்ச்சொல்லில் பிறந்த விகுதி சொல்லாக இருப்பதனால் வேறேதும் சொற்கள் கிடைக்கின்றனவா என படித்துக்கொண்டிருக்கிறேன்.

 7. Anonymous says:

  நெஞ்சை அள்ளும் சிலம்பு!

  பலரும் கம்பனிடமே ஓடும் போக்கொழித்து,
  மெய்த் தமிழ் இளங்கோவின் சொல்லெடுத்துக் குடுத்தமைக்கு.. நனி மிகு நன்றி!

  பாப நாசம் = வினை பாறல்
  .. என்பது சரியே!

  ஆனால், பலருக்கும் உடனே புரியுமா? என்பது சற்று ஐயமே! தொல் பெருஞ்சொல்!
  இன்றைய வழக்குக்கு உகந்த “எளிய சொல்லே” இருக்கே?

  தாங்கள், அப்பர் பெருமானை எப்படி மறந்தீர்கள் என்பது என் பெரும் வியப்பு;
  அப்பர் பெருமானின் இயற் பெயரிலேயே, இந்தப் பாபநாசம் இருக்கே?
  = மருள் நீக்கியார்

  பாப நாசம் = மருள் நீக்கம்

  புண்யம்= அருள்
  பாபம்= மருள்

  பாப நாசம் = மருள் நீக்கம்

 8. Anonymous says:

  இனி சொல்லப் போவனவற்றை.. தமிழின் தகைமைக்காகச் சொல்வதாய் எடுத்துக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்; புரிதலுக்கு நன்றி

  “பாபம்” = இது சம்ஸ்கிருதச் சொல்லே! ஐயமில்லை!

  சுக துக்கே, சமே கிருத்வா
  லாபா லாபெள, ஜெயா ஜெயெள
  நைவம் “பாபம்” அவாப்ஸயஸி
  = இது பகவத் கீதை ஸ்லோகம்;
  =”பாபம்” என்றே பயின்று வரும்! இதன் ஒலிப்பு Paapam!

  ஆனால்…
  இது, தமிழ் மொழியில் இருந்து, சம்ஸ்கிருதம் “லவட்டிக்” கொண்ட சொல்!:(

  ** “பாவம்” என்ற சொல்= தமிழ்ச் சொல்லே!
  அதைப் “பாபம்” என்று ஆக்கி, மருட்டிக் கொண்டார்கள்;

  ** பாவி= என்பதும் தமிழ்ச் சொல்லே!
  அதைப் “பாபி” என்று ஆக்கிக் கொண்டார்கள்

  இதே போல், “அதிகாரம்”;
  தொல்காப்பியத்தில் வராத சொல்-அதிகாரமா? பொருள்-அதிகாரமா?
  இளங்கோ பாடாத சிலப்பு-அதிகாரமா?

  ஆனால், “அதிகாரம்” = இந் நாளில், ஏதோ சம்ஸ்கிருதச் சொல் போல் “பாவ்லா” காட்டுது:(
  அதே போல் தான், “பாவம்” என்ற சொல்லும்!

  இங்கிருந்து சென்ற சொல்,
  “ஒரே எழுத்து” அசைத்துக் கொண்டு வந்து,
  நம்மிடமே “மேனா மினுக்குகின்றது”:(

  இது வடமொழி மக்களின், நெடு நாள் Technique;

  *மரைக் காடு (மான் காடு)
  = ஓரெழுத்து அசைத்து, மறைக் காடு ஆக்கி, “வேதாரண்யம்” ஆக்கும் Technique
  *அஞ்சொலாள்
  = ஓரெழுத்து அசைத்து, அஞ்சலாள் ஆக்கி, “அபயாம்பாள்” ஆக்கும் Technique

  பாவம் = பா + அவம்
  ** “அவம்” என்ற சொல் தீமையைக் குறித்த சொல்
  ** “பாதல்” = பரவுதல்
  பரவும் தீமையே = பாவம்!

  சில தரவுகளைக் காண்போம்..

  • Anonymous says:

   பாவம்:

   பகை, “பாவம்”, அச்சம், பழி, என இந் நான்கும்
   இகவாவாம் இல்லிறப்பான் கண்

   = இது “பாவம்” என்று பயிலும் திருக்குறள்!
   = திருக்குறளின் காலம், சிலப்பதிகாரத்துக்கும் முற்பட்ட ஒன்று!

   அழுக்காறு எனும் ஒரு “பாவி” – திருச்செற்றுத்
   தீயுழி உய்த்து விடும்!

   = இதுவும் திருக்குறளே!
   = அழுக்காறாமை அதிகாரம்; “பாவி” என்று பயின்று வரும்..

   இன்னும் பல குறட்பாக்கள் உண்டு;
   இன்மை எனவொரு “பாவி” – மறுமையும்
   இம்மையும் இன்றி வரும் ..ன்னும் ஐயன் பாடுவாரு!

   ஐயன் மட்டுமல்ல, தொல்காப்பிய உரையின் பால், பேராசிரியர் என்னும் முற்பட்ட உரையாளரும்..

   செங்காந்தள் கைகாட்டுங் காலஞ்
   சேட்சென்றார் வாரார்கொல் “பாவம்”

   என்று பாவம் எனுஞ் சொல் பற்றுவார், எழுத்ததிகாரத்தில்!

   அவ்வளவு ஏன்?.. நீங்கள் நன்குரைத்த இளங்கோ அடிகளும்..

   ஆவி குடிபோன அவ்வடிவம் – “பாவியேன்”
   காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
   கூடலான கூடு ஆயினான்.

   இது வழக்குரை காதையின் வெண்பா;

   சிலம்பில் வெண்பா என்பது பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்றொரு வழக்கு உளதால், இதைக் கருதாவிடினும்..
   இளங்கோவின் உடன் ஒத்த, சீத்தலைச் சாத்தனார்..

   பசிப்பிணி என்னும் “பாவி” – அது தீர்த்தோர்
   இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது

   என்ற மணிமேகலையின், மிகு பெரும் தமிழ் நெறி!

   இதற்கு மேல் பின்னாள் நூல்களுக்குச் செல்ல வேணாம்;
   சிலம்புக்கும் முந்திய குறள் ஒன்றே போதும்!

   பா + அவம் = பாவம்
   *பா-தல்= பரவுதல்
   *அவம்= தீவினை
   பரவும் தீய செயல்/தீ வினை = “பாவம்” என்று உரைத்தது ஆதித் தமிழ்!

   தவமும் தவம் உடையார்க்கு ஆகும் – “அவம்” அதனை
   அஃது இலார் மேற்கொள்வது.
   = இதுவும் திருக்குறளே! “அவம்” என்று பயிலும் குறள்!

 9. Anonymous says:

  “பாவம்”-ன்னா என்ன?

  *ஒரு செயலைச் செய்யறோம் (தெரிஞ்சோ/தெரியாமலோ)
  *அது பிறருக்குத் தீமை விளைவிக்குது
  *அதனால், “பாவம்” நமக்குச் சேருகிறது..

  ஆக..
  வினை = Cause
  பாவம் = Effect

  வினை-பாறல் -ன்னு சொல்லலாம் தான்
  ஆனா, அது Causeஐ மட்டுமே துடைக்கும்; Effectஐத் துடைக்காது;
  அதான், வினை / பாவம்.. என்று இரண்டையும் வகுத்த தமிழ் நெறி!

  “பாவம்” என்ற சொல், சங்கத் தமிழில் நேரடியா இல்லை!
  ஏன்?
  பா-ன்னு இருக்கு; அவம்-ன்னும் இருக்கு! ஆனா “பாவம்” இல்லை!
  ஏன்?

  ஏன்னா..
  சங்கத் தமிழ் = வாழ்வியல் / இயற்கை மட்டுமே சார்ந்தது;
  அகம் நிறைய; புறம் கம்மி தான்!
  (முதல்+இடை சங்கத் தமிழை மட்டுமே சொல்கிறேன்; புராண-புருடாணம் கலக்கத் துவங்கி விட்ட கடைச் சங்க காலத்தைச் சொல்லலை)

  இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால், தனியா “நீதி நூல்”-ன்னு ஒன்னு இல்ல!
  ஆங்காங்கு, “செவியறிவுறூஉ” -ன்னு எடுத்துச் சொன்னாலே, புரிஞ்சிக்குவாங்க; போதுமானதா இருந்தது.

  ஆனால், முல்லை-குறிஞ்சி மக்கள் பெயர்ந்து பெயர்ந்து, மருத நாகரிகம் தலைப்பட்ட போது,
  அகம் குறைந்து, புறம் அதிகம் தலையெடுக்கத் துவங்கிருச்சி;

  பாருங்க..
  *எட்டுத் தொகை = நிறைய அகம் தான் (இயற்கை/ காதல் சார்ந்து)
  *பின் வந்த பத்துப் பாட்டு = பலவும் புறம் (அரசன் சார்ந்து)
  *அடுத்துப் பின் வந்த கீழ்க் கணக்கு = நீதி நூலாவே போயிருச்சி

  முதலில் இயற்கையான சமூகம்
  பின்னர் பேரரசுச் சமுகம்/ புராணக் கலப்புகள்…
  பின்னர் “நீதி போதனை” துவங்கியாச்சி
  ஏன்னா புராணம் வந்த பின், Automaticஆ அறம் குறையுது:) “ஸ்வய நலம்” பெருக்கம் தான் காரணம்!

  அதான், “பாவம்”/தீ வினை பற்றியெல்லாம் சங்கத் தமிழில் அதிகம் இல்லை!
  பின்னரே, வாழ்வியல் மாற்றங்களுக்கேற்ப, “நெறிகள்” உருவாகின்றன!

  இந்த “நெறிகள்”= தமிழ் சார்ந்தவையா? சம்ஸ்கிருதக் கலவையா?

  • Anonymous says:

   “புண்யம்”= சொர்க்க லோகம்
   “பாபம்”= நரக லோகம்

   Type Type-ஆ “கர்மா”
   * ஸஞ்சித கர்மா= பல பிறவிகளின் பாவ மூட்டைகள்
   * பிராரப்த கர்மா= இந்தப் பிறவிக்கு ஒன்னைய நொங்கெடுக்கும், மூட்டையின் சிறு பகுதி
   * ஆகாமிய கர்மா = மொத்த மூட்டையில், மிச்சம் இருக்கும் குருமா, Sorry கர்மா:)

   இப்படியெல்லாம், தத்துவக் குப்பை/ வாய்ச் சவடால், தமிழ் நெறிகளில் இல்லை!

   வினை-பாவம் | அருள்-மருள்
   அவ்ளோ தான்…

   ஒரு வினை செஞ்சா, அதன் விளைவு, அவனவன் வாழ்வே!
   பூஜா, பெயர்ச்சி, பரிகாரம், ஹோமம்-ல்லாம் ஒன்னுமில்ல:)
   இஷ்ட தேவதா பரிகாரம் பண்ணி, செஞ்ச வினையை, Rubber வச்சி அழிச்சீற முடியாது!:)

   அதான் பா+அவம்!
   (தீ) வினை செய்யச் செய்ய..
   பரவும் தீமை; பாவும் அவம்= பாவம்!

   அதான், “வினையே= ஆடவர்க்கு உயிரே” என்றன தமிழ் நெறி நூல்கள்;
   “செம்மை இலார்க்குச், செய் தவம் உதவாது” = சிலப்பதிகாரம்!

   அதான், கண்ணகியின் பக்கத்து வீட்டு பார்ப்பனத் தோழி தேவந்தி..
   “வாடி, ஸோம குண்டம், சூர்ய குண்டம் பரிகாரம் பண்ணலாம்; உன் புருசன் உன் கிட்ட தானா வந்து வுழுவான்” -ன்னு கூப்பிட்ட போது…

   தமிழ் மறத்தியான கண்ணகி.. “அஃது எமக்குப் பீடு அன்று” -ன்னு பரிகாரம் செய்ய மறுக்குறா!
   – இதை ஏன் ராகவா, பதிவில், நீ வெட்ட வெளிச்சமா எடுத்துச் சொல்லலை?:(

   கணவன்/காதலன்.. அன்பால் வரணும்! காதலால் வரணும்!
   அவ மனசை “உணர்ந்து” வரணும்
   பரிகார பூஜையால், அன்பின்றி வருவது, யாருக்கென்ன பயன்?

   “செம்மை இலார்க்கு, செய் தவம் உதவாது” = சிலப்பதிகாரம்!

   இப்படி இருந்த தமிழ் நெறி = சுயநல Shortcut இல்லாதது;
   அதான், தமிழ் நெறி தோத்துப் போயிருச்சி:(

   ஹே தமிழ் ராஜன், பாண்டிய ராஜன்,
   போரில் நீ கொன்ன பாவம் தீரணுமா? பிரம்மஹத்தி புடிக்கக் கூடாதா?
   வா, ராஜசூய யாகம் பண்ணலாம்!

   *பெருவழுதி -> “பல்யாக சாலை”, முது குடுமிப் பெருவழுதி-யா மாறீனான்
   *பெருநற் கிள்ளி -> “ராச சூய யாகம்” வேட்ட பெருநற் கிள்ளி-யா மாறீனான்
   மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!

   எப்ப, தமிழ் மக்களுக்கு, “மதம்” பிடிக்கத் துவங்குச்சோ,
   அப்பவே சம்ஸ்கிருத நெறி வென்று..
   இன்னும் நம்மை ஆண்டு கொண்டு வருகிறது!

   “மனம்” போயி, “மதம்” ஆளுது..

   பா+அவம் = பாவம்
   பரவும் தீச்செயல்; அதைப் பரவாது.. கொஞ்சம் கொஞ்சமாக் கொறைச்சிக்கிட்டாலே,
   பரவும் தீ-ஆசையைக் கொஞ்சம் கொஞ்சமாக் கொறைச்சிக்கிட்டாலே..

   பா+அவம் = “பாவம்” நம்மை அண்டாது!

   நனி மிகு நன்றி!

 10. Anonymous says:

  தமிழ்ச் சொல்லான “பாவம்”;
  அதைப் “பாபம்” என்ற திருட்டுச் சொல்லோடு குழப்பிக் கொள்ளாமல்..

  “பாப” நாஸம்
  = மருள் நீக்கம்
  = பாவ நீக்கம்
  = வினை பாறுதல்

  என்றே கொள்க!
  மேலும் நுண்மாண் நுழை புலத்துக்கு, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வேர்ச்சொல் ஆராய்ச்சி (அ) மா. இராசமாணிக்கனார் நூலினைக் காண்க! நன்றி..

  பகை, “பாவம்”, அச்சம், பழி – என இந் நான்கும்
  இகவாவாம் இல்லிறப்பான் கண்!

  “பாபம்” என்செய்யும்? “கர்மா” தான் என்செய்யும்?

  ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
  தீது புரியாத தெய்வமே – நீதி
  தழைக்கின்ற போரூர் தனி முதலே, நாயேன்
  பிழைக்கின்ற வாறுநீ பேசு!

 11. psankar says:

  நல்ல பதிவு. நல்ல பின்னூட்டங்கள் 🙂 தீ, தீபம் என்ற சொல்லின் தமிழ் வேரினை எடுத்தியம்பிய முருகனார் பாவம் என்ற சொல்லையும் விளக்கியதை அறியும் பேறு பெற்றேன். நன்றி 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s